முகப்புகோலிவுட்

‘காலா’ திரைப்படத்தின் கிளைமாக்ஸ் புரியவில்லையா உங்களுக்கு?

  | June 10, 2018 12:35 IST
Kaala Movie Scenes

துனுக்குகள்

  • ஒரு நடிகனாக ரஞ்சித்திடம் தன்னை முழுமையாக ஒப்படைத்திருக்கிறார் ரஜினி
  • மரணத்தை மறைமுகமாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்
  • 100 காலாக்கள் வருவார்கள் என்பதையே ரஞ்சித் காட்ட நினைத்துள்ளார்
ஒடுக்கப்பட்ட மக்களின் நில உரிமை பற்றி பேசும் ‘காலா’ குறைகளே இல்லாத திரைப்படம் இல்லை என்றாலும் கூட, இன்றைய சூழலில் தவிர்க்கப்படக்கூடாத ஒரு மிக முக்கியமான திரைப்படம்.

(படம் குறித்த சில ஸ்பாய்லர்கள் இப்பதிவில் இருப்பதால், படம் பார்த்தவர்கள் மட்டும் மேற்கொண்டு படிக்கவும்)

‘காலா’ திரைப்படத்தின் முதல் காட்சி. புற்றுக்குள் இருக்கும் பாம்பை எடுத்து முத்தம் கொடுக்கவில்லை. வில்லனின் அடியாளை அடித்து பறக்கவிட்டு, தனது ஷூவினால் காலுக்கு அடியில் புயல் கிளப்பவில்லை. ஸ்லோ மோஷனில் கேமராவை பார்த்து ரசிகர்களுக்கு கண்ணடித்து வணக்கம் சொல்லவில்லை. சிறுவர்களுடன் கிரிக்கெட் விளையாடிக்கொண்டு இருக்கிறார் கரிகாலன் (எ) ரஜினிகாந்த். அதுவும், க்ளீன் போல்ட் ஆகிறார். வேறு ஏதாவது படமாக இருந்திருந்தால், அதே பந்து செவ்வாய் கிரகத்தில் தரை இறங்கியிருக்கக்கூடும்.
ஒரு நடிகனாக இயக்குனர் ரஞ்சித்திடம் தன்னை முழுமையாக ஒப்படைத்திருக்கிறார் ரஜினிகாந்த். ஒட்டுமொத்தமாகவே, ‘காலா’ ரஞ்சித்தின் படமாக மட்டும் இருந்திட அனுமதித்தற்கே ரஜினி அவர்களுக்கு ஒரு சல்யூட். ஹூமா குரேஷி மற்றும் ஈஸ்வரி ராவ் உடனான ரொமான்ஸ் காட்சிகளில் பட்டையை கிளப்பியிருக்கிறார். ‘காப்பியில ஏன் சர்க்கரை அதிகமா போடல’ என மனைவியிடம் கேட்பது, ‘செல்விக்கு என்னால ஒரு சின்ன அளவு கூட தப்பு நினைக்கமுடியாது’ என கலங்குவது, ‘குமாரு, சார் யாரு?’ என நக்கலடிப்பது, ‘முடிஞ்சா, என் முதுகுல குத்திக்கோ’ என சவால் விடுவது, அவ்வப்பொழுது ஹிந்தியிலும் மராத்தியிலும் பஞ்ச் அடிப்பது என ஒவ்வொரு காட்சியிலும் அசத்தியிருக்கிறார் ‘சூப்பர் ஸ்டார்’. ரஜினி அவர்களது கேரியரில் ‘முள்ளும் மலரும்’, ‘தளபதி’ திரைப்படங்களுக்கு பிறகு அவரது நடிப்புத் திறனை முழுமையாக வெளிப்படுத்தியிருக்கும் திரைப்படங்கள் ‘கபாலி’ மற்றும் ‘காலா’ என்றே கூறலாம்.

‘காலா’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலமே, அதன் வலுவான பாத்திரப் படைப்புகளும் அந்த பாத்திரங்களுக்கான நடிகர் தேர்வும்தான். ‘நான் நெல்லைக்கு போறேன். டிக்கெட்டை போடு’ என அதட்டும் செல்வியாக ஈஸ்வரி ராவ் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ‘ஏதாச்சும் புதுசா சொல்லு, காலா... நான் செத்தா, 6 அடியில தான் புதைப்பாங்க... மேல போறப்போ, எதையும் எடுத்துட்டு போகமுடியாதுன்னு எனக்கு தெரியாதா?’ என கேட்கும் ஹரிதேவ் அபயங்கர் ஆக நானா படேகர். வியாபார நிர்வாகத்தை மட்டும் பார்த்துக்கொள்ளும் மூத்த மகன், ‘வன்முறை மூலமே தீர்வு கிடைக்கும்’ என தன் தந்தையை போலவே செயல்படும் செல்வம், படித்து முன்னேறிவிட்டதால் தாராவியை விட்டு போக நினைக்கும் மூன்றாவது மகன், போராட்டங்களே உரிமைகளை கேட்கும் முறை என நம்பும் லெனின் என காலாவின் 4 மகன்களின் பாத்திரங்களில் தொடங்கி, சின்ன சின்ன பாத்திரங்களும் மனதில் நிற்கின்றன. ஆடை அவிழ்க்கப்பட்ட பின்னரும் தன் ஆடையை கையில் எடுக்காமல் லத்தியை எடுத்து அடிக்கும் புயல், ‘Nana... Please don’t kill him, he is a nice person’ என சொல்லும் ஹரி தேவ்வின் பேத்தி, அரசாங்கத்தை எதிர்த்து பேசும் போலீஸ் கான்ஸ்டபிள் என இன்னும் பல கதாபாத்திரங்களை சொல்லலாம்.

‘நீங்கள்லாம் எங்களை கொஞ்சம் நஞ்சம் மதிச்சு வெச்சிருக்கீங்கன்னா, அது ஏழைங்களுக்கு சாதகமா சில சட்டங்கள் இருக்கிறதாலதான்... இல்லாட்டி, எப்பவோ எங்களை ஏழு கடலுக்கு அந்த பக்கம் தூக்கி எறிஞ்சிருக்க மாட்டீங்க’, ‘நீ குடுக்குறதை வாங்கிட்டு, ஊத்துறதை குடிச்சுட்டு நான் இருக்கணும். எதிர்த்து என்னன்னு கேட்டா, சேரியில இருக்குறவனுக்கு திமிரைப் பாருன்னு சொல்லுவ’, ‘பணம் வந்துட்டா ரௌடி எல்லாம் வள்ளல் ஆயிடுவானா?’, ‘எல்லாத்துக்கும் private, privateன்னா அரசாங்கம் எதுக்கு? அரசாங்கத்துக்கு கிட்ட காசு இல்லைன்னு மட்டும் சொல்லாதீங்க’, ‘என்னோட உரிமைதான் என் சுயநலம்’, ‘நிலம் உனக்கு அதிகாரம், எங்களுக்கு வாழ்க்கை’ போன்ற வசனங்கள் படம் முழுக்க நறுக்! அதிலும், ‘எங்ககிட்ட இருந்து எங்க நிலத்தை பிடுங்குறதுதான் உன் வளர்ச்சின்னா, உன்னை மட்டுமில்ல உன் கடவுளையும் எதிர்ப்பேன்’ என்பது போன்ற வசனத்தையெல்லாம் ரஜினி வாயாலேயே பேச வைத்தது எல்லாம் பட்டாசாக இருந்தது.

இரண்டாம் பாதியில் சில குறிப்பிடத்தக்க குறைகள் இருக்கத்தான் செய்கிறது. குப்பம் தீ வைப்பு காட்சிகளும், போராட்ட காட்சிகளும் சற்றே வழக்கமான பாணியிலேயே இருந்தது. ஜல்லிக்கட்டு போராட்ட சம்பவங்களை நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த அரை மணிநேரம் தொய்வடைய செய்ய்ஜ்ம் வகையிலேயே இருந்தது. பொதுவாக, வளர்ந்து வரும் இயக்குனர்களின் மூன்றாவது அல்லது நான்காவது படங்களில் அவர்களையும் அறியாமல் ஒரு pattern உருவாகிவிடும். அதில் அவர்கள் சிக்கிக்கொள்ளும் பட்சத்தில், அதிலிருந்து மீண்டுவருவது மிக கடினம். சிலர் அதை இயக்குனரின் ஸ்டைல் என கூறினாலும், அதை கிளிஷே என்று கூறுவதே சரியாக இருக்கும். உதாரணத்திற்கு, ரஞ்சித் படங்களில் ஒரு சந்தோஷமான உரையாடலுக்கு இடையில் ஹீரோவுக்கு நெருங்கியவர்கள் கொல்லப்படும் காட்சி (‘மெட்ராஸ்’ படத்தில் நீதிமன்ற வளாகத்தில் அன்பு கொல்லப்படும் காட்சி, ‘காலா’ படத்தில் காரை லாரியால் அடிக்கும் காட்சி) இருக்கும். ஹீரோவின் கோபத்தையும், பழிவாங்கும் குணத்தையும் மாற்றி அவனை சாந்தப்படுத்தி நல்வழியில் செலுத்தும் ஹீரோயின் (‘மெட்ராஸ்’ கலையரசி, ‘கபாலி’ குமுதவள்ளி, ‘காலா’ செல்வி). ‘ஹிப் ஹாப்’ நடனமாடி ராப் பாடும் இளைஞர் கூட்டம் முதல் இன்னும் பல விஷயங்கள். இவையெல்லாம் அடுத்தடுத்த படங்களிலும் தொடர்ந்தால், அது கண்டிப்பாக பார்வையாளர்களுக்கு அயர்ச்சியை அளிக்கலாம்.

தமிழ் சினிமா மட்டுமல்ல எல்லா மொழி சினிமாக்களிலுமே, அதீத சமூக அக்கறை கொண்ட இயக்குனர்கள், சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்த சிந்தனைகளை பிரதிபலிக்கும் படங்களை எடுக்கும் படைப்பாளிகள் எல்லோருமே ஒரு கட்டத்திற்கு மேல் சுவாரஸ்யமான படங்களை தர தவறியவர்களாகவோ, டாக்குமெண்டரி டைப் படங்களை இயக்குபவர்களாகவோ மாறியிருக்கின்றனர். அதற்கு உதாரணமாக எஸ்.பி.ஜனநாதன், கரு.பழனியப்பன், மணிவண்ணன் உள்ளிட்ட பலரை சொல்லலாம். ஒரு காலத்தில், அட்டகாசமான படத்தை கொடுத்துவிட்டு ‘புறம்போக்கு’ ‘சிவப்பதிகாரம்’ போன்ற படங்களை இயக்கியதை சொல்லலாம். திரைமொழியில் கதை சொல்வதை தாண்டி இவர்கள் படங்களில் ஒரு பிரச்சார நெடி அதிகரித்து போவதால், ரசிகர்களிடையே இவர்களது திரைப்படங்கள் தோற்றுப்போகும். அதற்கு விதிவிலக்காக பாலாஜி சக்திவேல், வெற்றிமாறன், பா.ரஞ்சித், ‘காக்கா முட்டை’ மணிகண்டன் போன்ற ஒரு சிலரே இருக்கின்றனர். இந்த பட்டியலில் இயக்குனர் ரஞ்சித் அவர்கள் நிலைத்திட, தனது அடுத்தடுத்த படைப்புகளில் நிச்சயமாக சில கிளிஷேக்களை உடைத்தெறிந்து வெளியே வரவேண்டிய அவசியம் இருக்கிறது.

இப்பொழுது, தலைப்பில் உள்ள கேள்விக்கு வருவோம். ‘காலா’ படம் பார்த்த பலருக்கு படத்தின் கிளைமாக்ஸ் புரியவில்லை என தெரிகிறது. ஒரு தீ விபத்தில் இறப்பதை போல காட்டப்படும் ரஜினி, மீண்டும் உயிருடன் வந்து நிற்கிறார். எது நிஜம்? ஒரு வேளை, ரஜினி சாகவில்லையென்றால் அது எப்படி சாத்தியம்? லாஜிக் இடிக்கிறதே? என பல கேள்விகளுடனே ரசிகர்கள் அரங்கை விட்டு வெளியேறுகின்றனர். உண்மையில், கிளைமாக்ஸில் என்னதான் ஆச்சு? ஆம், காலா இறந்துதான் போய்விட்டார். இதயத்தில் சுடப்படும் கரிகாலன் அங்கு நடக்கும் தீவிபத்தில் அந்த இடத்திலேயே இறக்கிறார். ஆனால், தாராவி மக்கள் அந்த மரணத்தை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். காலா இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறார்கள். காலாவின் இடத்தில் இருந்து, தாராவிக்குள் மீண்டும் வரும் ஹரிதேவ் தாதாவை அம்மக்களே தண்டிக்கிறார்கள். மக்களுக்காக போராடும் வேங்கையன், கரிகாலன் போன்ற எளிய தலைவர்களை இங்கிருக்கும் அரசியல் சக்திகள் நீண்ட காலம் விட்டுவைப்பதில்லை. காலா இறந்துவிட்டாலும், அவனது போராட்டம் முடிந்துவிடவில்லை. ஒரு காலா கொல்லப்பட்டால், 100 காலாக்கள் வருவார்கள் என்பதையே இயக்குனர் ரஞ்சித் காட்ட நினைத்துள்ளார். இப்படத்தின் கிளைமாக்ஸில் காலா இறக்காமல் போயிருந்தால்தான், அது அபத்தமாக இருந்திருக்கும். ஆனால் ரஜினி போன்றதொரு சூப்பர் ஸ்டார் நடித்திருப்பதால், அதை நேரடியாக காட்ட முடியவில்லை. அவரது ரசிகர்கள் ஏமாற்றமடைவதற்கோ படம் தோல்வியடைவதற்கோ காரணமாக இருக்கலாம் என்பதால் ‘கபாலி’ திரைப்படத்தின் கிளைமாக்ஸைப் போலவே, இந்த படத்திலும் ஹீரோவின் மரணத்தை மறைமுகமாகவே காட்டியிருக்கிறார் இயக்குனர் ரஞ்சித்!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்