முகப்புகோலிவுட்

தல அஜித்தின் 'விவேகம்' - ரசிகர்களின் எதிர்பார்ப்பும், திரைக்கதை சறுக்கலும்!

  | August 27, 2017 13:15 IST
Vivegam Movie Review

துனுக்குகள்

  • தமிழ் சினிமாவில் மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று
  • அஜித்தின் கேரியரிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவான திரைப்படம்
  • டீசர் மற்றும் பாடல்கள் வெளியீட்டிற்கு பின் எதிர்பார்ப்பு இன்னும் கூடியது
விவேகம்’ திரைப்படத்தில் எதெல்லாம் சரியாக அமையவில்லை?!

இந்த வருடம் தமிழ் சினிமாவில் மிக அதிகமாக எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று – நடிகர் அஜித்தின் ‘விவேகம்’ திரைப்படம். கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் நடித்து வெளிவரும் திரைப்படம், ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ மற்றும் நடிகர் அஜித்தின் கேரியரிலேயே மிக அதிக பொருட்செலவில் உருவான திரைப்படம், ‘வீரம்’ மற்றும் ‘வேதாளம்’ திரைப்படங்களுக்குப் பிறகு இயக்குனர் சிவாவோடு நடிகர் அஜித் இணையும் மூன்றாவது திரைப்படம் என பல விதமான எதிர்பார்ப்புகளுக்கிடையே தயாரான இத்திரைப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியீட்டிற்கு பின் படத்தின் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்கு கூடியது. இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை வெளியான ‘விவேகம்’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் பத்திரிக்கைகளிடையே பல்வேறு தரபட்ட விமர்சனங்களைப் பெற்றுள்ளது. படத்தைப் பார்த்தவர்களில் பலரும் ‘சுமார் படம்’ என்றும் ‘எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை’ என்றும் கூற என்ன காரணம், ‘விவேகம்’ திரைப்படத்தில் என்னென்ன பிரச்சினைகள் இருந்தது என்பது குறித்தும் விரிவாக பேசுவதே இப்பதிவின் நோக்கம்.

(இப்பதிவில் ‘விவேகம்’ திரைப்படம் பற்றிய சில spoiler இருப்பதால், படத்தைப் பார்த்தவர்கள் மட்டும் தொடர்ந்து படிக்கவும்)
படத்தில் பல ப்ளஸ் பாயிண்டுகள் இருந்தாலும், திரைக்கதையில் சில முக்கியமான குறைகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதுதான் இங்கு பிரச்சினை. கண்டிப்பாக, ‘விவேகம்’ ஒரு முறை பார்க்கக்கூடிய கமர்ஷியல் எண்டர்டெயினர் தான். சிலர் மொத்தமாக வெறுத்து ஒதுக்கிய அளவுக்கெல்லாம் மோசமான படம் இல்லவே இல்லை. படத்தின் முதல் காட்சியில் தொடங்கி இவ்வளவு எனர்ஜியோடு இருக்கும் அஜித்தை, சண்டைக்காட்சிகளில் இத்தனை வேகமான அஜித்தை கடந்த 10 ஆண்டுகளில் எந்த திரைப்படத்திலும் ரசிகர்கள் பார்க்கவில்லை. அட்டகாசமான ஸ்டண்ட் காட்சிகளாகட்டும், அருமையான ஒளிப்பதிவு மற்றும் இசை ஆகட்டும், ஸ்பை த்ரில்லர் ஜானரை சேர்ந்த படமென்பதால் பல சமீபத்திய நவீன தொழில்நுட்ப வளர்ச்சிகளை கதைக்கேற்ப பயன்படுத்தியதாகட்டும், இலுமினாட்டி சொசைட்டியைப் பற்றி தமிழ் சினிமாவில் முதல்முறையாக பேசியதாகட்டும், Morse Code போன்ற விஷயங்களை நம் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தி அதை கதையில் சரியாக பொருத்திய விதமாக இருக்கட்டும் – படம் முழுக்க பல இடங்களில் கவனம் ஈர்க்கிறார் இயக்குனர் சிவா.

இதையெல்லாம் தாண்டி ‘விவேகம்’ படம் எதனால் இத்தனை மாறுபட்ட விமர்சனங்களைப் பெற்றுள்ளது என்பதற்கான காரணங்கள் கீழே:

1) திரைப்பட ரிலீஸூக்கு முந்தைய அதீத விளம்பரங்கள்

பொதுவாகவே எந்த படமாக இருந்தாலும் ரிலீஸூக்கு முன்னர் அதிக விளம்பரங்களோ அல்லது இயக்குனர், தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அதிக பேட்டிகளோ படத்தைப் பற்றிய அதிக புகழ்ச்சியோ இருந்தால், அது அந்த படத்தின் வெற்றிக்கு ரொம்பவே எதிராக அமையும் (3 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான ‘அஞ்சான்’, சென்ற ஆண்டில் வெளியான ‘கபாலி’ போன்ற படங்களுக்கு இது நடந்துள்ளது). ஒரு வேளை படம் நன்றாக இருந்தாலுமே கூட, படத்தைப் பார்த்து முடித்து வெளியே வரும் ரசிகனை ‘நல்லாதான் இருக்கு, ஆனா இதுக்கா அவ்ளோ பில்டப் குடுத்தீங்க?’ என கேட்கவைக்கக் கூடும்.

‘விவேகம்’ படத்தின் பிரத்தியேக பேட்டிகளில் இத்திரைப்படத்தின் இயக்குனர் உள்ளிட்ட பலரும் ‘விவேகம் ஒரு சர்வதேச தரத்திலான படமாக உருவாகியிருக்கு. இது மாதிரி ஒரு படம் இதுக்கு முன்னாடி வந்ததே இல்லைன்னு கூட சொல்லலாம்’ என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி பயன்படுத்தியதே கூட இப்படத்திற்கு எதிராக அமைந்திருக்கக் கூடும்.

2. பொறுமையை சோதிக்கும் இரண்டாம் பாதியும், கடைசி 40 நிமிடங்களும்

முதல் பாதி முழுக்க மிக வேகமாகவும் சுவாரஸ்யமாகவும் நகரும் திரைக்கதை, அதற்கு முற்றிலும் நேர்மாறாக இரண்டாம் பாதியில் ரொம்பவே மெதுவாக அயர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக நகர்கிறது. ‘எனக்கு துரோகம் பண்ணிட்டாங்க, என்னை முதுகுல குத்திட்டாங்க’ என சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லிக்கொண்டே இருக்கும் ஹீரோவும் அவருக்கு எந்த வகையிலும் ஈடாகாத ஒரு வில்லனும், ரசிக்க வைக்காத பஞ்ச் வசனங்களும், பார்த்து பார்த்து சலித்துப் போன காட்சிகளும் என நகரும் இரண்டாம் பாதி வழக்கம் போல கிளைமாக்ஸில் வில்லனுடன் மோதும் ஒரு சண்டைக் காட்சிக்குப் பின் கடைசி 10 வினாடிகளில் செயற்கைக்கோளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதோடு முடிகிறது (அந்த சண்டைக்காட்சியில் அஜித் தன் சட்டையைக் கழட்டி நின்று, வெறும் உடம்போடு சண்டை போடுவதைத் தவிர வேறெந்த சிறப்பும் இல்லை).

யாழினியை அஜய் குமார் காப்பாற்றும் காட்சி வரை ஓரளவு நன்றாகவே நகரும் திரைப்படம், அதற்கு பின்னர் தான் முற்றிலுமாக தடுமாறுகிறது. இரண்டாம் பாதியில் வரும் ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி இருந்தாலும் கூட, அவையெல்லாம் ஒரு படமாக அல்லாமல் தனித்தனி காட்சிகளாக மட்டுமே ரசிக்கும்படி உள்ளது. நம்பியார் காலத்து வில்லன் ஸ்டைலில் கிளைமாக்ஸில் ஹீரோவின் மனைவியை கடத்தி வைத்து மிரட்டுவதும், ‘வெறியேற விதிமாற’ பாடல் பயன்படுத்தப்பட்ட விதமும் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

3) லாஜிக் குறைகளும், அதை மீறிய சுவாரஸ்ய குறைவும்

கமர்ஷியல் சினிமாக்கள் என்றாலே லாஜிக் மீறல்களும் குறைகளும் இருக்கும், அதிலும் பெரிய ஹீரோக்களின் மாஸ் படங்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இத்தகைய லாஜிக் மீறல்கள் திரைக்கதையில் சுவாரஸ்யத்தை கூட்டும்பட்சத்தில், இவை இயக்குனருக்கோ / எழுத்தாளருக்கோ உள்ள சுதந்திரமாகவே ரசிக்கப்படும். ஆனால், அப்படியல்லாமல் இந்த லாஜிக் குறைகள் எந்த சுவாரஸ்யத்தையும் ஏற்படுத்தாவிடினோ அல்லது மிக அபத்தமாகவோ இருப்பின் (உதாரணம் - ‘லிங்கா’ பட கிளைமாக்ஸ், ‘குருவி’ படத்தின் இடைவேளை காட்சி), அவை ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்படாது. இந்த இரண்டுமே ‘விவேகம்’ படத்தில் ஆங்காங்கே உள்ளது. படம் ஆரம்பித்த ஐந்து நிமிடங்களில், ஹீரோ தன் கைத் துப்பாக்கியால் ஒரு ஹெலிகாப்டரை சுடுகிறார். இது போல சில காட்சிகளை அவ்வப்பொழுது காண நேர்கிறது.

80 நாடுகளால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு FBI, CIA, INTERPOL என எல்லா நாட்டு போலீஸாலும் தேடப்பட்டு வரும் ஒருவன், யார் கையிலும் சிக்காமல் தான் செய்ய நினைப்பதை எல்லாம் உடனுக்குடன் செய்து முடிப்பதை எல்லாம் என்னவென சொல்வது? ‘ஜேம்ஸ் பாண்ட்’, ‘மிஷன் இம்பாஸிபிள்’ போன்ற ரகசிய உளவாளிகள் பற்றிய ஹாலிவுட் படங்களிலும் இதே போல ஆயிரம் லாஜிக் பிரச்சினைகள் இருக்குமென்றாலும் கூட அதை மறக்கடிக்கும் வகையில் திரைக்கதையை வேறு விதத்தில் சுவாரஸ்யப்படுத்திவிடுவர். அது நடக்காததே ‘விவேகம்’ திரைப்படத்தின் இரண்டாம் பாதியின் மிகப்பெரிய மைனஸ்.

4) வலுவில்லாத வில்லன் கதாபாத்திரம்

இப்படத்தின் மிகப்பெரிய மைன்ஸ் பாயிண்ட்டே, படம் பார்த்த பெரும்பான்மையானோரால் வெறுக்கப்பட்ட விவேக் ஓபராயின் ஆர்யான் கதாபாத்திரமே. பொதுவாக ஒரு கமர்ஷியல் படத்தில், ஹீரோவை யாரேனும் தேவையில்லாமல் புகழ்வதே சலிப்பை ஏற்படுத்தும். அதை செய்வதே வில்லனாக இருந்தால், எவ்வளவு கடுப்படிக்கும்? ஒரு சிறந்த வில்லன் அல்லது ஹீரோவை எதிர்க்கும் கதாபாத்திரத்தைக் கொண்ட கதையில் தான், சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கும். அப்படியொரு திரைப்படமே காலம் கடந்தும் பேசப்படும், ரசிகர்களால் கொண்டாடப்படும் (உதாரணம் – படையப்பா, துப்பாக்கி, தனி ஒருவன், பாட்ஷா, வாலி).

‘விவேகம்’ திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்திக்கு படம் முழுக்க ஒரேயொரு வேலை மட்டும் தான் இருக்கிறது – காட்சிக்கு காட்சிக்கு, வார்த்தைக்கு வார்த்தை ஹீரோவை புகழ்ந்து கொண்டே இருப்பதுதான் அது. ஒவ்வொரு முறையும் ‘That’s my friend for you.. Well played, நண்பா.. Smart move, நண்பா.. Brilliant move, நண்பா.. நண்பா.. நண்பா.. நண்பா.. நண்பா..’ என அவர் சொல்ல சொல்ல நாம் கடுப்பாவது மட்டும் தான் மிச்சம். இந்த கதாபாத்திரத்திற்கு தேவையான முக்கியத்துவத்தை அளித்து இருந்தாலே, ‘விவேகம்’ திரைப்படத்தின் தரம் இன்னும் பல மடங்கு கூடியிருக்கும்.

5) உப்பு சப்பில்லாத வசனங்கள்:

‘பயத்துக்கு பாஷை இல்லை’, ‘ஜெயிக்குறதுக்கு முன்னாடி கொண்டாடுறதும், ஜெயிச்ச பின்னாடி அடுறதும் சரியில்ல’ என இத்திரைப்படத்தில் ஆங்காங்கே சில நல்ல வசனங்கள் பளிச்சிட்டாலும், பெரும்பாலும் படம் முழுக்க வரும் வசனங்கள் அனைத்துமே படு சுமார் தான்.

‘அவன் போராடாம போகவும் மாட்டான், சாகவும் மாட்டான்’, ‘இது வரைக்கும் சாவோட மட்டும்தான் சண்டை போட்டுட்டு இருந்த, இனிமே நேரத்தோடயும் சண்டை போடணும்’ என முக்கால்வாசி வசனங்கள் ஹீரோவை புகழும் வசனங்களாவே எழுதப்பட்டுள்ளது. அது போக, ‘அவரு கூட உழைச்ச உனக்கே இவ்வளவு திமிருன்னா, அவரு கூட பொழைச்ச எனக்கு எவ்வளவு திமிரு இருக்கும்’ என்பது போன்ற ரைமிங்கான வசனங்களை கேட்கையில், திரையரங்கில் படம் பார்க்கும் எவராலும் சிரிப்பைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லை.

6) அளவுக்கு மீறினால், ஆக்ஷனும் நஞ்சு:

அறிமுகக் காட்சி, அல்பேனியன் கேங்கோடு நடக்கும் சண்டை, பைக் சேஸ், நடாஷாவைக் காப்பாற்ற நடக்கும் துப்பாக்கிச் சண்டை, Tunnel சண்டைக் காட்சி, கிளைமாக்ஸ் என படம் முழுக்க அஜித் ரசிகர்கள் கொண்டாடும்படி இருக்க வேண்டுமென, ஏகப்பட்ட சண்டைக்காட்சிகளை வைத்துள்ளார் சிவா. ஆனால், அவையெல்லாம் ரொம்பவே அருமையாக படமாக்கப்பட்டிருந்தாலும் கூட, தொடர்ந்து கதாநாயகன் சண்டைப் போட்டுக்கொண்டே இருப்பதையும் துப்பாக்கிகளை வைத்து சுட்டுக்கொண்டே இருப்பதையும் பார்க்கையில், சில சண்டைக் காட்சிகள் அயர்ச்சியையே ஏற்படுத்துகிறது.

7) நாடகத்தனமான கணவன்-மனைவி காட்சிகள்:

யாழினி என்கிற ஹீரோயினின் கதாபாத்திரம் வெறும் பாடல்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் பொம்மை போல் அல்லாமல், கதை நகரவும் பெரிதளவில் உதவியுள்ளது. ‘எல்லா பொண்ணுங்களும் தன் புருஷன் 6 மணிக்கு வீட்டுக்கு வந்திடுவாரான்னு காத்திருப்பாங்க... நான் என் புருஷன் உயிரோட வந்திடுவாரான்னு காத்திருப்பேன்... பயத்துக்கும், பெருமைக்கும் நடுவுல தவிச்சிட்டு இருக்கேன்’, ‘இதுவரைக்கும் உங்களுக்கு கைட் பண்ணவங்கள்லாம் இது வெறும் வேலையாத்தான் பார்த்துருப்பாங்க, நான் வாழ்க்கையா பார்க்குறேன்’ போன்ற வசனங்களின் மூலம் யாழினியின் கதாபாத்திரத்தையும், அஜய் குமாருடனான காதலையும் ஆழமாக பதிய வைக்கிறார் இயக்குனர்.

இடைவேளை காட்சியில் ‘வரேன்மா’ என ஹீரோ போனில் அலறுவது என ஆக்ஷன் காட்சிகளில் ஆங்காங்கே கணவன்-மனைவி சென்டிமெண்ட் எமோஷனை சரியாக பயன்படுத்தி இருந்தாலும் கூட, பைக் சேஸுக்கு நடுவே மனைவியிடம் பேசுவது, கிளைமாக்ஸ் சண்டைக்காட்சியில் யாழினி பாடுவது உட்பட சில முக்கிய காட்சிகளில் ரொம்பவே நாடத்தனமாக தெரிகிறது.

மேற்கூறிய இந்த குறைகளே, ‘விவேகம்’ படத்தினைப் பார்த்த பெரும்பான்மை மக்கள் கூறிய மைனஸ் பாய்ண்ட்களாகும். அவற்றை திருத்தியிருந்தாலோ அல்லது சற்றே மாற்றி அமைத்திருந்தாலோ, ரசிகர்களிடையே ‘விவேகம்’ இன்னும் பெரிய பாஸிட்டிவ்வான தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்