முகப்புகோலிவுட்

"என்னோட வெற்றிக்குப் பின்னாடி நிறைய அவமானங்கள்தான் இருக்கு" விஜயின் மரண மாஸ் பயணம்

  | June 22, 2018 11:13 IST
Thalapathy Vijay

துனுக்குகள்

  • தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோ விஜய்
  • தனக்கென மிகப் பெரிய ரசிகர் வட்டம் கொண்டவர்
  • அவரது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை கீழே
விஜய்... இவர் எவ்வளவு பெரிய ஹீரோ தெரியுமா, இவர் எத்தனை படங்கள் நடித்தார் தெரியுமா, இவர் சந்தித்த கஷ்டங்கள் தெரியுமா? இப்படி நூறு கட்டுரைகளையாவது கடந்து வந்திருப்பீர்கள். நேற்று விஜய் ரசிகர் ஆனவருக்குக் கூட அவரைப் பற்றி பலதும் தெரிந்தே இருக்கும். ஆனால், அவருக்குப் பின்னால் இருக்கும் மாஸ் ஹீரோ பிம்பம் உருவானதும், அந்த இடத்திற்கு அவர் வந்த விதமும் மிக சுவாரஸ்யமானது. விஜயின் பிறந்தநாளான இன்று அந்த மாஸ் பற்றி பேசலாம் என்று தோன்றியது. வாருங்கள், `விஜய் டூ தளபதி விஜய்' ட்ரான்ஸ்ஃபர்மேஷன் பற்றிப் பார்க்கலாம்.
 
vijay

ஆத்மார்த்தமான நடிப்பை வழங்குவதோ, உடலை வருத்தி உருவத்தை மாற்றி நடிப்பதோ எவ்வளவு சிரமமோ, அதே அளவு சிரமம்தான் ஒரு மாஸ் ஹீரோவாக எழுந்து வருவதும் நிலைத்து நிற்பதும். என்னதான் உலகசினிமா, மாற்றுசினிமா, புதியஅலை சினிமா பற்றிய தேடல் அதிகம் இருந்தாலும், மாஸ் படங்களுக்கான எதிர்ப்பார்ப்பு இருக்கவே செய்கிறது. மாஸ் படமோ, வழிந்து உருக்கும் காதல் படமோ, நாலு பாட்டு ரெண்டு ஃபைட்டு என டெம்ப்ளேட் படமோ... ஒரு வகையில் ரசிகர்களை எந்த பயமுறுத்தலும் இல்லாமல் சினிமா நோக்கி வரவேற்கும் அமைப்புதான். இலக்கியத்துக்குள் நுழையும் போது சுஜாதா எழுத்துகள் உங்களுக்கு ஒரு சொகுசான பாதையை ஏற்படுத்தித் தருவது போன்றது. இப்போது மறுபடி விஜய்க்கு வருவோம். மாஸ் ஹீரோ பற்றி பேசிக் கொண்டிருந்தோம்... அப்படி ஒரு மாஸ் ஹீரோவாக விஜய் வந்தது, நின்றது, வென்றதுமான கதை மெர்சலானது.

சினிமா சும்மா இல்லை, வந்தவர் எல்லோருக்கும் கால்மேல் கால்போட்டு உட்காரும் வாய்ப்பை வழங்கிவிடாது. சிலருக்கு சிம்மாசனம் கிடைக்கும், சிலர் அட்மாஸ்பியரில் நின்று பின் தனக்கென வாய்ப்பை பெற்றுக் கொள்வார்கள், சிலர் கடைசி வரை கனவுகளுடன் தேங்கிவிடுவார்கள். அந்தவகையில் விஜய் நிறையவே அதிர்ஷ்டசாலிதான். அப்பா எஸ்.ஏ.சி இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து முகத்தை பதிவு செய்திருந்தார். இந்த வகை அறிமுகம் அதன் பின் பலருக்கும் கிடைத்தது. அதில் எத்தனை பேர் ஜொலித்தார்கள் என்பதில்தான் விஜய் தனித்து நிற்கிறார்.
 
vijay

`நாளைய தீர்ப்பு' வரும் போது அவர் எதிர்கொண்ட விமர்சனங்கள் பற்றி நாம் அறிந்ததே. வேறொரு நடிகர் முதல் படத்திற்கு அத்தனை சுடுவார்த்தைகளைக் கேட்டிருந்தால் வேண்டாம் என ஓடியிருக்கக் கூடும். அதை எதிர்கொண்டதும், `ஐயோ வேணாம்' என ஒதுங்காமல் அடுத்த படம் நடித்ததும் அப்போது விஜய் எடுத்த தைரியமான முடிவு. "எல்லாரோட வெற்றிக்குப் பின்னாடியும் ஒரு பொண்ணு இருப்பாங்கனு சொல்லுவாங்க. ஆனா, என்னோட வெற்றிக்குப் பின்னாடி நிறைய அவமானங்கள்தான் இருக்கு" என விஜய் ஒரு மேடையில் சொன்னது நினைவில் இருக்கலாம். அந்த அவமானங்கள் எல்லாவற்றையும் தூக்கி எரிந்து, மெர்சல் நாயகனாக வளர்ந்தவர் விஜய்.

முதல் பட வரவேற்பு சரியாக இல்லை... அதன் பின் விஜயகாந்த் உடன் நடித்த `செந்தூரப்பாண்டி' மூலம் பெரிய அளவில் ரசிகர்களுக்கு அறிமுகமாகிறார் விஜய். இப்போதும் அந்தப் படம் மூலம், தான் பட்டிதொட்டி எங்கும் சென்றடைந்ததை வெளிப்படையாக ஒப்புக் கொள்வார். இங்கிருந்து பல படங்கள் எஸ்.ஏ.சியுடன் பயணம் இடையில் ஜானகி சௌந்தர் இயக்கத்தில், அஜித் உடன் `ராஜாவின் பார்வையிலே' என சென்ற ட்ராவல் `பூவே உனக்காக' படத்தில் மிகப் பெரிய ஹிட்டை சந்திக்கிறது. மேலும் `லவ் டுடே', `காதலுக்கு மரியாதை', `குஷி', `ஃப்ரெண்ட்ஸ்' என தனக்கான ஆடியன்ஸைப் பிடித்திருந்தார். இந்தப் படங்களுக்கு இடையில் விஜய் நடித்த `ப்ரியமுடன்' மிக முக்கியமான படம் என்பேன். காரணம், தான் வளர்ந்து வரும் காலத்திலேயே, நெகட்டிவ் கதாபாத்திரத்தில், முக்கியமாக க்ளைமாக்ஸில் இறந்து போவது போல் நடித்தது என அதற்கு முன் தனக்கு ஏற்பட்டிருந்த இமேஜை உடைத்தது கவனிக்கத்தக்கது. ஆனால், இந்தப் படங்கள் எதுவும் அவரது மாஸ் இமேஜை உருவாக்கவில்லை. அவை செய்ததெல்லாம் ரசிகர்கள் மனதில் விஜய்க்கான அடித்தளம் அமைத்ததுதான். விஜய் படம் என்றால் பார்க்கலாம், நிச்சயம் பொழுதுபோக்கை தரும் என்கிற நம்பிக்கையை அளித்தன.
 
vijay

ரொமான்ஸ் வரும், காமெடி இயல்பாக வரும், டான்ஸ் பற்றி சொல்லவே தேவை இல்லை, இனி மீதம் இருப்பது தன்னை ஆக்ஷன் ஹீரோவாக மக்களை ஏற்றுக் கொள்ள செய்ய வேண்டும் அவ்வளவுதான். முந்தைய படங்களில் அங்கொன்று இங்கொன்றுமாய் ஆக்ஷன் (சண்டைக்காட்சி) செய்திருந்தாலும், நாயக சாகசத்தை அது எந்தவிதத்திலும் ஆதரிக்காததாகவே இருந்தது. `பகவதி', `திருமலை' என பொறியாய் எழுந்தது `கில்லி'யில் பற்றிக்கொண்டது... மாஸ். அதன் பின் `அவன அடி தலைவா' என ரசிகர்களே திரையைப் பார்த்து கத்த துவங்கினார்கள். அதுதான் மாஸ் ஹீரோவுக்கான கிராமர். ரஜினி `சூப்பர்ஸ்டார்' ஆன பிறகு ஒவ்வொரு பட வெளியீட்டுக்கும், ஒரு திருவிழா கொண்டாட்டத்தின் மனநிலையில்தான் தயாராவார்கள் ரசிகர்கள். அவர் பெயர் திரையில் வந்தாலே அலறுவார்கள், படம் முழுக்க அவர் இருக்கிறார் என்கிற ஒற்றைக் காரணமே போதும் என இருப்பார்கள். காரணம் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களை நெருங்கி பின் அவர்கள் வாழ்க்கையில் ஒருவராக கலப்பதுதான். அதுவேதான் விஜய் செய்ததும்.
 
vijay

இங்கு இன்னொரு விஷயமும் இருக்கிறது. எப்போதும் ஒரு மாஸ் ஹீரோ + ஒரு க்ளாஸ் ஹீரோ என்பதுதான் சினிமா வழங்கும் சமகால காம்போ. எம்.ஜி.ஆர் மாஸ் என்றால், சிவாஜி க்ளாஸ். ரஜினி மாஸ் என்றால், கமல் க்ளாஸ். ஆனால், விஜய் - அஜித் பொறுத்தவரை இருவருமே மாஸ். வரவேற்பு, ரசிகர் பட்டாளம், பெரிய ஓப்பனிங், விஜய் பற்றி எழுதினால் அஜித்தையும், அஜித் பற்றி எழுதினால் விஜயையும் குறிப்பிடாமல் எழுத முடியாது என்பது வரை பல விஷயங்கள் முன்னே வந்து நின்றது. தங்களை தனித்துக் காட்டவேண்டிய நிர்பந்தம் இருவருக்குமே ஏற்பட்டது. அதிலிருந்து இருவரும் தங்களுக்கான கதைத் தேர்வுகளில் தனித்துவமாக இருந்தனர். விஜய் `காதலுக்கு மரியாதை' போல ரொமான்ஸ் என்றால், அஜித்துக்கு `காதல் கோட்டை' போன்ற ரொமான்ஸ், விஜய்க்கு `துப்பாக்கி' மாஸ் என்றால், அஜித்துக்கு `மங்காத்தா' போன்ற மாஸ். இவர் நடித்த படத்தில் அவரைப் பொருத்திப் பார்க்கும் அவசியம் ஏற்படாத அளவுக்கு, தங்கள் படங்களின் ஸ்பெசிஃபிகேஷன்களில் கவனமாக இருந்தார்கள். எனவே விஜய் - அஜித் இருவரும் தங்கள் மாஸ் விஷயத்தில் எந்த மோதலும் இன்றி தங்களுக்கென தனிக் பரப்புகளை உருவாக்கிக் கொண்டார்கள்.
தனியாக பாதை அமைத்துப் போனாலும் பிறகு ஒரு சமயத்தில், விஜய் மீது பெரிய குற்றச்சாட்டு இருந்தது. நிறைய ரீமேக் படங்களில் நடிக்கிறார் என்று. `அனியத்திப்பிராவு' பட தமிழ் ரீமேக் `காதலுக்கு மரியாதை' படம்தான் விஜய் நடித்த முதல் ரீமேக் படம். நினைத்தேன் வந்தாய், ஃப்ரெண்ட்ஸ், பத்ரி, யூத், வசீகரா, கில்லி, சச்சின், ஆதி, போக்கிரி, காவலன், நண்பன் என பனிரெண்டு படங்கள் ரீமேக் செய்திருக்கிறார்தான். எனக்குத் தெரிந்து ரீமேக் செய்த படங்களில் முக்கால்வாசி படங்கள் ஹிட்டானது விஜய்க்கு மட்டும்தான். கில்லியின் ஹிட்டெல்லாம் வேற லெவல். விஜய்க்குள் ஒன்று இருக்கிறது, அந்த வசீகரம் காட்சிக்குத் தேவையான துறுதுறுப்பு. அதுதான் ரீமேக் என்பதையும் மறந்து நம்மை விஜய்யுடன் ஒன்ற வைக்கிறது. `பூவே உனக்காக' ஆரம்பித்து `தெறி' வரை விஜயிடம் இருந்தும் ரீமேக்கிற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட படங்களும் ஏராளம் உண்டு. எனவே ஒரிஜினலோ, ரீமேக்கோ, புது இயக்குநரோ, பெரிய இயக்குநரோ எல்லாவற்றிலும் விஜயின் உழைப்பு ஒன்றுதான். அதுதான் அவரது வெற்றிக்கான காரணங்களில் ஒன்றும் கூட.
 
vijay

'படம் நல்லாருக்கா, காசு வந்துச்சா போயிட்டே இரு. நடிப்பு பத்திலாம் கேக்காத' இதுமாதிரி சிந்தனைகள் விஜய்க்கு கிடையாது. முன்பு ஒரு பத்தியில் விஜய் மாஸ் படங்கள் பற்றி பார்த்தோமல்லவா, அந்த படங்களுக்கு இடையில் காதலுக்கு மரியாதை போன்ற மென்மையான விஜயை ஆடியன்ஸ் மிஸ் பண்ணக்கூடாது என்கிற எண்ணத்தின் வெளிப்பாடுதான் 'சச்சின்', 'காவலன்', 'நண்பன்' எனச் சொல்வேன். ரஜினி போல 'முள்ளும் மலரும்', 'ஜானி' எல்லாம் விஜய் கொடுத்துவிடவில்லைதான். ஆனால், விஜய்யால் ஏதோ ஒரு காட்சியில் உங்களை கலங்கடிக்க முடிந்து, உங்களை சிரிக்க வைக்க முடிந்தது, அவரது கோபம் உங்களுக்கும் வந்தது. மாஸ் தவிர்த்து இந்த நடிப்பை செலுத்தி பிரமாதமான கலைஞனாக வெளிப்படும் கதை கிடைத்தால், படம் அமைந்தால், அவருக்குள் நீங்கள் கேட்கும் நடிப்பு இருப்பதை உணர்வீர்கள் என நம்புகிறேன். ஆனால், இப்போதைக்கு நடிப்பை கலை ரீதியாக கொடுக்க நிறைய பேர் கிளம்பி வந்திருக்கிறார்கள். விக்ரம், தனுஷ், விஜய் சேதுபதி என நம்பிக்கையாகத் துவங்கும் அந்தப் பட்டியலில் நிறைய பேர் இருக்கிறார்கள். ஆனால், விஜய் போன்ற கம்ப்ளீட் என்டர்டெயின்மென்ட் கொடுக்கும் ஆட்களுக்குதான் பஞ்சம். அங்கு வருவதற்கான படிகளில் சிவாகார்த்திகேயன் நடக்கத் துவங்கியிருப்பதை உணரமுடிகிறது. அதற்குப் பின் ஒருவர் வருவதற்கு இன்னும் எத்தனை வருடங்கள் ஆகுமோ தெரியவில்லை. எல்லாவற்றையும் தாண்டி சினிமா அலாதியான பொழுதுபோக்கு இல்லையா? அதைக் கொடுத்த, இவ்வளவு போட்டிகளுக்கு மத்தியில் தொடர்ந்து கொடுத்துக் கொண்டிருக்கும் விஜய் சிறப்பான கலைஞன் என்று நிம்மதியாக சொல்ல முடிகிறது.

விஜயை ரசிப்பவர்களின் எண்ணிக்கை என்பது, விஜய் ரசிகர்களைவிடவும் அதிகம். இந்தக் காரணம்தான் இப்போதும் அவர் ட்ரெண்டில் நிலைத்திருக்க காரணம். முக்கியமாக குழந்தைகள், பெண்கள் இரண்டு கூட்டமும் ஆதரவு இருப்பது சூப்பர் ஸ்டார் இடத்துக்கான தகுதி. விஜயின் வசனங்களை ஒப்பிக்கும் குழந்தைகள், விஜய்ணா என அழைக்கும் பெண்கள் இரண்டும் அவருக்கு உண்டு. கூடவே ரசிகர் கூட்டமும் ஏராளம். இது எல்லாம் ஒரே இரவில் நடந்துவிடவில்லை. யாருக்கும் நடக்காதும் கூட. ஆனால், மிகப் பொறுமையாக, ஒவ்வொரு படமாய் தன் இலக்குக்கு என்னென்ன தேவையோ அதை எல்லாம் சேர்த்து, அதை பார்வையாளர்களுக்கு கொடுத்து அவர்களை தன் ரசிகர்களாக்கி மாஸ் ஹீரோவாய் உருவெடுத்தது நிற்பதும், அதைத் தக்க வைத்திருப்பதும் அசாத்தியமானது. நீங்கள் இன்னும் இன்னும் அசத்துங்கள் விஜய்!

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்