தெறி, மெர்சல் படங்களை தொடர்ந்து அட்லி – விஜய் மீண்டும் கூட்டணி அமைத்திருக்கிறார்கள். இந்த படம் விஜய்யின் 63 படம் என்பதால் பெயர் வைக்காத இந்த படத்தை தளபதி 63 என்று அழைக்கிறார்கள்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பென்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 100 குழந்தைகளுடன் விஜய்யின் அறிமுக பாடலை படக்குழு படமாக்கியுள்ளது, என படக்குழுவுக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகி இருந்தது. இதனால் இவர் பயிற்சி கொடுக்கும் குழந்தைகளோடு அவர் இந்த பாடலுக்கு ஆடினார் என்று சிலர் கூறுகின்றனர். மேலும் குழந்தைகளிடத்திலும் விஜய்க்கு செல்வாக்கு இருப்பதால், சுமார் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகளை விஜய்யின் அறிமுக பாடலில் ஆட வைக்க அட்லி முடிவு செய்தாராம். மேலும் அந்த பாடல் சிறப்பாக வந்திருப்பதாகவும், பாடல் காட்சிகள் எடுக்கப்பட்ட பிறகு, குழந்தைகளுடன் விஜய் சிறிது நேரத்தை செலவிட்டதாகவும், அவர்களுடன் செல்ஃபி எடுத்ததாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.
ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.