முகப்புகோலிவுட்

ஆண்டாளின் புகழ்பாட நான் ஆசைப்பட்டது தவறா? - வைரமுத்து

  | January 21, 2018 11:25 IST
Vairamuthu Controversy

துனுக்குகள்

  • ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில் வைரமுத்து கலந்து கொண்டு பேசியிருந்தார்
  • வைரமுத்துவின் கருத்திற்கு பலர் எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணமுள்ளனர்
  • இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்
‘கவிப்பேரரசு’ வைரமுத்து சமீபத்தில் ஶ்ரீவில்லிபுத்தூரில் நடந்த ஆண்டாள் குறித்த கருத்தரங்கத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது, வைரமுத்து பேசிய சில கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து வைரமுத்துவின் கருத்திற்கு பலர் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்த வண்ணமுள்ளனர். இந்நிலையில், இது குறித்து வைரமுத்து தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது “ஆண்டாளின் புகழ்பாட நான் ஆசைப்பட்டது தவறா? 3 மாதங்கள் ஆண்டாளை நான் ஆராய்ச்சி செய்து, ஆய்வுக்கட்டுரைகளை திரட்டியது பிழையா?

ராஜபாளையத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் அவள் பிறந்த மண்ணில் அந்த கட்டுரையை நான் ஆசை ஆசையாக ஓசையோடு அரங்கேற்றியது தவறா? நான் ஆண்டாளை பற்றி மட்டும் ஏன் கட்டுரை எழுதுகிறேன்? என்று நீங்கள் கேட்கலாம். இது ஆண்டாளை பற்றி மட்டும் எழுதப்பட்ட கட்டுரை அல்ல. 3000 ஆண்டு நீண்டு பறந்து விரிந்து கிடக்கும் தமிழ் பெருவழியில் யார் யார் தடம் சமைத்தவர்களோ, அவர்களை எல்லாம் இந்த புதிய தலைமுறைக்கு, இணைய தலைமுறைக்கு, இளைய தலைமுறைக்கு ஆற்றுப்படுத்த ஆசைப்பட்டேன்.
 
தேவதாசி என்ற சொல்லில் தேவ என்ற வார்த்தையை ரகசியமாக கத்தரித்தார்கள். வைரமுத்து ஆண்டாளை தாசி என்று சொல்லி விட்டான் என்று முதல் செய்தி பரவுகிறது. அதை மேலும் பரப்பியவர்கள், தாசி என்பதை திரித்து வேசி என்று பரப்புகிறார்கள். இப்படிப்பட்ட கூட்டத்தில் நான் தமிழ் வளர்க்க வேண்டுமே என்று வெட்கப் படுகிறேன். நான் உயர்வாக சொன்னதை, தாழ்வாக சொன்னதாக சித்தரித்து திரித்து காட்டுவது எந்த வகையில் நியாயம் என்று கேட்கிறேன். இதனால் எனக்கு நேர்ந்த இழிவுகள் அதிகம். ஒருவேளை யாருடைய மனமாவது புண்பட்டிருந்தால் வருந்துகிறேன் என்று கேட்டது என்னுடைய மனிதாபிமானம். என் தமிழால் யாரும் புண்பட்டு விடக்கூடாது என்று புண்பட்ட மனதோடு வருத்தமும் தெரிவித்து விட்டேன்” என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்