முகப்புகோலிவுட்

“அஜித் சாருக்கு படம் பண்ணனும்ன்னு யோசிச்சாலே, ஆயிரம் கதைகள் தோணும்” – இயக்குனர் மோகன் ராஜா

  | January 05, 2018 17:43 IST
Mohan Raja

துனுக்குகள்

  • விஜய் சார் அவர்கள் தன்னுடைய படங்களை மிகச்சரியாக திட்டமிடக்கூடிய ஒருவர்
  • அஜித் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைச்சா, ரொம்ப சந்தோஷமாக செய்வேன்
  • விஜய் சார் கூட படம் பண்ணனும்ங்கிற எண்ணம் எனக்கு இல்லாத நாளே இல்லை
‘வேலைக்காரன்’ திரைப்பட இயக்குனர் மோகன் ராஜா அவர்கள் NDTV தமிழ் சினிமாவிற்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் உடன் பணிபுரிய இருக்கும் தனது அடுத்தடுத்த படங்களைப் பற்றியும் நடிகர் விஜய்யுடனான தனது நட்பை பற்றியும் கூறியுள்ளார்.

“வேலாயுதம் திரைப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் விஜய் சாரோடு இணைந்து ஒரு படம் பண்ணப் போகிறீர்களாமே?” என்கிற கேள்விக்கு, “விஜய் சார் அவர்கள் தன்னுடைய படங்களை மிகச்சரியாக திட்டமிடக்கூடிய ஒருவர். தனது அடுத்தடுத்த படங்களை வரிசையாக பிளான் பண்ணக்கூடியவர். எங்கள் இருவருக்குள் நேரம் ஒத்துவராததால் மட்டுமே, எங்களது அடுத்த படத்தை ஆரம்பிக்க முடியவில்லை.

சினிமா உலகில், எனது நண்பர் வட்டம் மிகவும் குறுகிய வட்டம் தான். விஜய் சார் எனக்கு மிகவும் நெருக்கமான ஒருத்தர். நான் விஜய் அவர்கள் வீட்டில் பல நாட்கள் சங்கீதா அக்கா கையால் சாப்பிட்டிருக்கிறேன். பல விஷயங்கள் பெர்சனலாகவும் பேசியிருக்கிறோம். ‘தனி ஒருவன்’ முடிஞ்சு ரிலீஸான முதல் ஃபோன் கால், எனக்கு விஜய் சார்கிட்ட இருந்துதான் வந்தது. என் வளர்ச்சியில் நிறைய அக்கறை உண்டு அவருக்கு. வேலாயுதம் படப்பிடிப்பின் பொழுதே பல முறை ‘நீங்க பெரிய பெரிய நடிகர்கள் கூட படம் பண்ணனும், அப்போ தான் எனக்கு சந்தோஷம்’ என ஊக்கப்படுத்துவார். அவருக்கு என் மேல ஒரு மிகப்பெரிய பிடித்தம் இருக்குன்னு தெரியும். ஒரு உண்மையை சொல்லணும்ன்னா, நான் எப்போவுமே என்னோட ஸ்க்ரிப்ட்களை எழுதி முடித்ததும் ஒரு நண்பரா விஜய் சாரிடம் கொடுத்து அவருடைய கருத்தை கேட்பதுண்டு. ‘தனி ஒருவன்’ ஸ்க்ரிப்ட்டை எழுதி முடித்ததும், அவரிடம் சொல்லியிருக்கிறேன் ‘நல்லா இருக்கு, பண்ணுங்க’ என்றார். ‘வேலைக்காரன்’ ஸ்க்ரிப்ட்டை எழுதி முடித்ததும், அவரிடம் சொல்லியிருக்கிறேன். அவரை மனதில் வைத்து ஒரு கதையை எழுதி, அதையும் அவரிடம் சொல்லியிருந்தேன். அவருக்கு அது மிகவும் பிடித்திருந்தது. நான் அவரிடம் சொன்ன கதை, அவருக்கு பரிபூரணமாக பொருந்தும். விஜய் சார் கூட படம் பண்ணனும்ங்கிற எண்ணம் எனக்கு இல்லாத நாளே இல்லை. எங்கள் இருவருக்கும் நேரம் அமையும்பொழுது, அடுத்த படம் ஆரம்பிக்கும்” என்றார்.
 

“நடிகர் அஜித் அவர்களுடன் பணிபுரியும் வாய்ப்பு உள்ளதா?” என்கிற கேள்விக்கு, “அஜித் அவர்கள் தனி ஒருவன் படம் பார்த்துவிட்டு எனது தம்பி ஜெயம் ரவியிடம், ‘இவ்ளோ திறமையை வெச்சுக்கிட்டு, இத்தனை நாளா உங்க அண்ணன் ஊரையும் ஏமாத்திட்டு தன்னையும் ஏமாத்திட்டு இருந்திருக்கான்ல’ என சந்தோஷமாக கூறியுள்ளார். அந்த வார்த்தையே எனக்கு மிகவும் பெருமையான ஒரு உணர்வை தந்தது. இவ்வளவு மாஸ் மற்றும் ரசிகர்கள் இருக்கக்கூடிய அஜித் சார் போன்ற ஒருவரோடு பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தால், அது ஒரு புதுவிதமான கதை மற்றும் களத்தை expose செய்ய ஊக்கப்படுத்தும். அஜித் போன்ற ஒரு நடிகரை யாருக்குத்தான் பிடிக்காது? அவருக்கு படம் பண்ணனும்ன்னு யோசிச்சாலே, ஆயிரம் கதைகள் மைண்ட்ல கொட்டும். ஒரு ரசிகனாக, அவரை நிறையவே ரசித்திருக்கிறேன். சித்தார்த் அபிமன்யு கதாபாத்திரத்தை உருவாக்கும்பொழுது கூட, என் மனதில் அஜித் சார் வந்து போனதுண்டு.
சமீபத்தில் கூட என்னை அணுகிய ஒரு தயாரிப்பாளர், ‘அஜித் சாருடன் ஒரு படம் பண்ணலாமா’ என கேட்டார். அஜித் சாருடன் பணிபுரியும் வாய்ப்பு கிடைச்சா, ரொம்ப சந்தோஷமாக செய்வேன். அவரோடு பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை எனக்கும் உண்டு, அதற்கும் ஒரு நேரம் வரும்” என பதிலளித்தார் இயக்குனர் மோகன் ராஜா.

மேலும், 2010ஆம் ஆண்டில் சென்னை பின்னி மில்லில் ‘மங்காத்தா’ மற்றும் ‘வேலாயுதம்’ திரைப்படங்களின் படப்பிடிப்பு அருகருகே நடந்து கொண்டிருந்தபொழுது, நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் சந்தித்து நட்பு பாராட்டியது, இரண்டு படங்களின் குழுவினருக்கும் அஜித் அவர்களின் கையாலேயே பிரியாணி சமைத்து கொடுத்தது, பதிலுக்கு நடிகர் விஜய் அவர்கள் ஒரு கை கடிகாரத்தை பரிசளித்தது போன்ற தனது அழகான நினைவுகளையும் பகிர்ந்து கொண்டார்.
 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்