விளம்பரம்
முகப்புகோலிவுட்

ஸ்டீரியோ-டைப் எண்ணங்களை உடைத்தெறியும் 'கருத்தவன்லாம் கலீஜாம்'!

  | September 07, 2017 16:19 IST
Velaikkaran Songs

துனுக்குகள்

  • இனவெறி, நிறம் சார்ந்த எண்ணங்களை உடைத்தெறிகிறது இந்த பாடல்
  • சமகால பொருளாதார அரசியலை நுண்ணிப்பாக பேசுகின்றது இந்த பாடல்
  • உழைக்கும் வர்க்கத்தை பற்றிய பதிவாக உருவாகியுள்ளது வேலைக்காரன் பாடல்
இயக்குனர் மோகன் ராஜாவின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'வேலைக்காரன்' திரைப்படத்தில் இருந்து, சமீபத்தில் அனிருத் இசையில் வெளியான 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் பெரிய ஹிட் ஆகியுள்ளது. YouTubeல் வெளியான 2, 3 நாட்களிலேயே 20 லட்சம் பேரால் கேட்கப்பட்டு வைரல் ஆன இப்பாடல், எப்.எம். ரேடியோக்களிலும் தொடர்ந்து ரசிகர்களால் விரும்பி கேட்கப்பட்டு வருகிறது.

பாடலின் ட்யூனை மட்டும் கேட்கையில், அனிருத் இசையில் இதற்கு முன்னர் வெளியாகி ஹிட்டான 'ஆலுமா டோலுமா', 'மாரி தர லோக்கல்', 'ராயபுரம் பீட்டர்' போன்ற குத்துப் பாடல்களை நினைவுபடுத்தினாலும் கூட, இந்த 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் வெறுமனே ஒரு சாதாரண குத்துப்பாடலாகவோ, ஹீரோ அறிமுகப் பாடலாகவோ அல்லது கதாநாயக துதி பாடும் பாடலாகவோ மட்டும் நின்றுவிடவில்லை. பொதுவாகவே, அனிருத் இசையில் வெளியாகும் பாடல்கள் மிகப்பெரிய அளவில் ஹிட்டாகவும், குழந்தைகள் முதற்கொண்டு ரசித்து ஆடவும் முக்கிய காரணம் - அவரது பாடல்களின் உற்சாகமூட்டக்கூடிய வகையிலான peppy ட்யூன்களும் ரொம்பவே எளிமையான பாடல் வரிகளும்தான். அப்படியாக இந்த 'கருத்தவன்லாம் கலீஜாம்' பாடல் வரிகள், இப்படத்தின் 'வேலைக்காரன்' என்கிற தலைப்பிற்கும் கதைக்கும் சம்பந்தம் உடையதாக தெரிகிறது.

இந்த பாடல் முழுக்கவே உழைக்கும் சமுதாயத்தைப் பற்றியும், கீழ்த்தட்டு மக்களைப் பற்றியும், சென்னையிலுள்ள குப்பங்களில் வசிப்பவர்களை பற்றியும் பேசப்பட்டுள்ளது. காலம் காலமாக அவர்கள் மீது நாம் வைக்கும் பொதுவான 'ஸ்டீரியோ-டைப்' குற்றச்சாட்டுகளை எல்லாம், பொய் என ரொம்ப உரக்க சொல்கிறது இப்பாடல். அப்படி சொல்வதையும் கூட சீரியஸாக எல்லாம் சொல்லாமல், ரொம்பவே ஜாலியான பாடல் வரிகள் மூலம் எல்லோரையும் சென்றடையும் வகையில் சொல்லியிருக்கிறார்கள் இயக்குனர் மோகன் ராஜாவும், பாடலாசிரியர் விவேகாவும்.
'கருத்தவன்லாம் கலீஜாம், கெளப்பிவிட்டாங்க.. அந்த கருத்தை மாத்து, கொய்யால' என முதல் வரியிலேயே இனவெறி, நிறம் சார்ந்த ஓரவஞ்சனை பற்றி பேசி சிக்ஸர் அடிக்கிறார்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் கூட கறுப்பர்களை ஒதுக்குவதும், மட்டும்தட்டுவதும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. வட இந்தியர்கள் தெற்கே இருப்பவர்களை 'காலா' என் அழைப்பதும், கறுப்பாக இருப்பவர்களெல்லாம் 'மதராஸி' என்ற முடிவுக்கு வருவதும், பொதுவாகவே நம் எல்லோருக்கும் கறுப்பாக இருப்பவர்கள் மீதான சிறு அவநம்பிக்கையையும் மிகச்சரியாக சாடுகிறது இந்த வரிகள். 'உழைச்சவன்லாம் நம்மாளு, ஒதுங்கி நிக்காத' என தொடர்கிறது அடுத்தடுத்த வரிகள்.

'தாஜ்மஹால் கட்டினது கொத்துனாரு, ஷாஜஹான் கிட்ட சொன்னாக் கூட ஒத்துப்பாரு', 'நெட்டுக்குத்தா நிக்குதப்பா ஷாப்பிங் மாலு, அதை நிக்க வெச்ச கொம்பன் எங்க குப்பம் ஆளு', 'இந்த நகரம் இப்போ தான் மாநகர் ஆச்சு, இது மாற முழு காரணமே நாம அண்ணாச்சி' என அவர்கள் உழைப்பை வேடிக்கையாக சொல்லிக்கொண்டே போகும் பாடல் வரிகளுக்கிடையே 'சென்னையோட அன்னை, நம்ம குப்பம் தானே' 'ஊருக்கு சொந்தக்காரன், ஊருக்கு வெளியே நின்னான்... பேருக்கு சென்னைக்காரன், ஏதேதோ சட்டம் பண்ணான்' போன்ற வரிகள் பேசும் உண்மை சற்றே கலக்கத்தையும் ஏற்படுத்துகிறது. எத்தனை தலைமுறைகள் ஆனாலும் உழைப்பாளி, உழைப்பாளியாகவே இருக்கிறான். இந்த மாநகரம் எவ்வளவு வளர்ந்தாலும் கூட, சென்னையின் பூர்வக்குடி மக்களுள் பலர் இன்னும் சேரிகளிலும், குப்பைகளிலுமே இருக்கின்றனர். அயலார்கள் பலர் வந்து இங்கே குடியேறுவதால் நகரத்தின் எல்லை நீண்டுகொண்டே போகப் போக, இந்த உழைக்கும் வர்க்கமும் நகரத்தை விட்டு வெளியே போய்க்கொண்டே இருக்கிறது என சமகால பொருளாதார அரசியலையும் நுட்பமாக பேசுகிறது இப்பாடல்.

'தனி ஒருவன்' என்கிற அற்புதமான கமர்ஷியல் திரைப்படத்திற்கு பிறகு, இயக்குனர் மோகன் ராஜா இந்த படத்திலும் பல சமுதாய பிரச்சினைகளையும் பேசியிருப்பார் என தோன்றுகிறது. போஸ்டர், டீசர் மற்றும் இப்பாடலைப் பார்க்கையில் முதாளித்துவக் கொள்கைகளாலும் கார்ப்பரேட் அரசியலாலும், உழைக்கும் கீழ்த்தட்டு வர்க்கம் போலியான வாக்குறுதிகளால் எந்தளவிற்கு வஞ்சிக்கப்படுகிறார்கள் என்பதை பற்றி பேசும் படமாக 'வேலைக்காரன்' இருக்கும் என கணிக்க முடிகிறது. மிகப்பெரிய ரசிகர் வட்டத்தைக் கொண்ட சிவகார்த்திகேயன், தொடர்ந்து பல படங்களில் 'இந்த பொண்ணுங்களே இப்படித்தான் புரிஞ்சு போச்சுடா', 'போ போ போ', 'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா', 'டாவுயா காவியா' என பெண்களைக் குறை சொல்வது அல்லது திட்டுவதைப் போலான பாடல்களில் தோன்றினார்; அவற்றையெல்லாம் முற்றிலும் தவிர்த்து, இது போன்ற நல்ல பாடல்களுக்கு இடம் கொடுத்தால் இன்னும் பெரிய உயரம் தொடுவார்.

பாடலாசிரியர் விவேகா மற்றும் இசையமைப்பாளர் அனிருத் அவர்களுக்கு வாழ்த்துக்கள்!

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்