விளம்பரம்
முகப்புகோலிவுட்

கடின உழைப்பால் உச்சம் தொட்ட விக்ரமுக்கு ஹேப்பி பர்த்டே

  | April 17, 2017 12:52 IST
Vikram Birthday Special

துனுக்குகள்

  • ஏப்ரல் 17, 1966-ஆம் ஆண்டு கென்னடி ஜான் விக்டராக பிறந்த விக்ரம்
  • விக்ரமின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த படம் ‘சேது’
  • ‘பிதாமகன்’ படத்திற்காக விக்ரம் தேசிய விருது பெற்றார்
சினிமாவில் ஒரு கதாபாத்திரமாகவே உருவெடுக்க தன் உடம்பை வருத்திக் கொள்ளவும் தயங்காத நடிகர் ‘சியான்’ விக்ரம். ஏப்ரல் 17, 1966-ஆம் ஆண்டு கென்னடி ஜான் விக்டராக பிறந்த விக்ரம் தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து தனக்கென ஒரு ஹிட் ஃபார்முலா வைத்து வலம் வருகிறார். இவர் ஹீரோவாக ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலமாக 1990-ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதற்கு பிறகு பத்து ஆண்டுகளாக அவர் நடித்த பல படங்கள் தோல்வியே சந்தித்தன. ஆனால், விடா முயற்சியாக பல சவால்களையும், அவமானங்களையும் எதிர்த்து நின்று போராடினார். அதற்கு பரிசாக 1999-ஆம் ஆண்டு பாலாவின் இயக்கத்தில் வெளியான ‘சேது’ படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது. அதுமட்டுமின்றி ஸ்பெஷல் அவார்டாக ஃபிலிம்ஃபேர் விருதும் ‘சேது’ படத்தில் நடித்தற்காக கிடைத்தது.

‘சேது’வால் வெற்றியின் படிக்கெட்டில் விக்ரம் அடியெடுத்து வைக்க, அதனைத் தொடர்ந்து வெளியான ‘தில், காசி, ஜெமினி, தூள்’ என அனைத்துமே மெகா ஹிட் படங்கள் லிஸ்டில் இணைந்தது. ஆரம்ப காலகட்டத்தில் ஹீரோவான பிறகும் ‘அமராவதி’யில் அஜித்துக்கு, ‘காதலன்’ படத்தில் பிரபு தேவாவுக்கு என பல படங்களின் ஹீரோக்களுக்கு பின்னணி குரலும் கொடுத்துள்ளார் விக்ரம்.
‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்தே தான் நடிக்க மிஸ் செய்துவிட்டதாக கூறி பாராட்டிய கதாபாத்திரம் தான் ‘சாமி’ படத்தில் விக்ரம் நடித்த ஆறுச்சாமி கேரக்டர். பாலாவின் ‘பிதாமகன்’யில் விக்ரமுக்கு நிகர் யாரும் இல்லை என்று தன் நடிப்பால் நிரூபித்தார். அதற்கு தேசிய விருது அங்கீகாரமும் கிடைத்து மேலும் விக்ரமுக்கு பூஸ்ட் ஏத்தியது.

ஷங்கரின் ‘அந்நியன்’ படத்தில் அம்பி, ரெமோ, அந்நியன் என மூன்று கேரக்டர்களிலும் வித்தியாசம் காண்பித்து நடித்து அசத்தினார். இதற்கு சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருது வழங்கப்பட்டது. இயக்குநர் ஏ.எல்.விஜய்யின் ‘தெய்வத்திருமகள்’ படத்தில் கிருஷ்ணா கதாபாத்திரமாகவே வாழ்ந்து நம்மை கண் கலங்க வைத்தார் விக்ரம்.

இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்ட இயக்கத்தில் உருவான ‘ஐ’ படத்திற்காக விக்ரம் ஏற்றுக்கொண்ட சிரமங்கள் பல. இந்த அளவிற்கு ஒரு ஹீரோவால் தன்னை வருத்திக்கொண்டு ஒரு படத்தில் நடிக்க முடியுமா என்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார். பொதுவாக விக்ரம் மாதக்கணக்கில் நிறைய மெனக்கெடலிட்டு ஒரு படம் நடித்த பிறகு ரிலாக்ஸாக குறுகிய காலகட்டத்தில் உருவாகும் படத்தில் நடிப்பார். ஆனால், நிச்சயம் அந்த மாதிரி படங்களிலும் தனது நடிப்பிற்கு தீனி போடும் கதாபாத்திரங்கள் கொண்ட கதைகளையே தேர்வு செய்து நடிப்பார்.

தற்போது, கெளதம் மேனனின் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் செம ஸ்டைலிஷாகவும், ‘வாலு’ விஜய் சந்தரின் ‘ஸ்கெட்ச்’ படத்தில் செம மாஸாகவும் நடித்து வருகிறார் விக்ரம். இதனையடுத்து ஹரியின் பரபர திரைக்கதையில் உருவாகவிருக்கும் ‘சாமி’ படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்கவுள்ளார். கடின உழைப்பால் உச்சம் தொட்ட நடிகர் விக்ரமுக்கு 51-வது பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்