முகப்புகோலிவுட்

யாரும் அறிந்திடாத உலகநாயகனின் திறமை - மனம்திறக்கும் விசில் சிங்கர் லியோனார்ட் மேயர்

  | June 27, 2017 20:30 IST
Whistle Blowers

துனுக்குகள்

  • மற்ற இசை கருவிகளுக்கு உள்ள மரியாதை விசில் கலைக்கும் கிடைக்கவேண்டும்
  • மிக விரைவாகவே நான்கு மொழிகளில் பணிபுரிந்துவிட்டேன்
  • தமிழ் சினிமாவில் விசில் கலைஞர்களின் எண்ணிக்கை மிகக்குறைவு
வாழ்க்கையை முதலீடு செய்து, கனவுகளை சுமந்து தனக்கான அங்கீகாரம் என்றாவது ஒரு நாள் கதவை தட்டிவிடாதா? என்ற எண்ணத்துடன் பயணிக்கும் மனிதர்கள் பலர். அவர்களை, நம் கண்கள் அறியவிட்டாலும் அந்த கோடம்பாக்கம் தினந்தினம் கண்டுகொண்டுதான் இருக்கின்றது. சினிமாவை பொறுத்தவரை கனவுகளின் கதவுகள் குறிப்பிட்ட எல்லைகளால் என்றுமே சுருங்கியதில்லை, இங்கு பல கதவுகள் உள்ளது அவற்றில் தனக்கான கதவினை சரியான திறவுகோல்கொண்டு திறப்பவன் நிச்சயம் வெற்றிபெறுவான். அவ்வகையில் ஒரு வித்தியாச திறமையின் மூலம் தனக்கான அங்கீகாரத்தை நோக்கி பயணம் செய்துகொண்டிருக்கும் ஒரு கலைஞனை பற்றிய ஒரு வித்தியாசமான தொகுப்பு தான் இன்றைய இன்சைட் கோலிவுட்.

நாம் இருந்த இடத்திலிருந்தே நம் நினைவுகளை மீட்டெடுக்கும் ஒரே ஆயுதம் இசை மட்டுமே. இசை என்பது பலவிதமான கருவிகளின் மூலம் உருவாகும் ஒரு சப்த அமைப்பு அது பயன்படுத்தப்படும் கருவிகளை பொறுத்து அழகிய மாற்றம் பெரும். எந்த ஒரு கருவியையும் பயன்படுத்தாமல் நம் உடலில் உள்ள உறுப்புகளை மட்டுமே பயன்படுத்தியும் இசையினை உருவாக்கமுடியும் அவற்றில் மிக முக்கியமான ஒன்று "விசில்", இன்றளவும் ஸ்பெயினில் உள்ள "லா கோமேரா" என்ற தீவில் விசில் சத்தத்தினை தகவல் தொடர்பிற்கு பயன்படுத்திவருகின்றனர். விசில் சத்தத்தினை திரைப்பட இசையில் பயன்படுத்தும் கலாச்சாரம் தொடக்க காலத்திலிருந்தே இருந்து வந்தாலும் இன்றளவும் அதற்க்கான அங்கீகாரம் சரியான அளவில் வழங்கப்படவில்லை என்று தன்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தியபடி நமக்கு பேட்டி அளித்தார் விசில் கலைஞர்களில் ஒருவரான லியோனார்டு மேயர்.

தற்பொழுதைய தமிழ் திரையுலகிலுள்ள வெகுசில விசில் கலைஞர்களில் ஒருவராகவும், இன்றளவும் பலரது கைபேசியின் காலர் ரிங் டோனை அலங்கரித்துக்கொண்டிருக்கும் அதே கண்கள் திரைப்படத்தின் "அடியே நீ கொலைகாரி" என்ற பாடலின் விசில் சத்தத்தின் சொந்தக்காரருமான லியோனார்டு மேயருடன் ஒரு சின்ன மீட்டிங்.

"விசில் சிங்கிங்" எப்போதிருந்து தொடங்குனீங்க லியோனார்ட்?

"நான் என் ஸ்கூல்ல சிக்ஸ்த் ஸ்டாண்டர்ட் படிக்கும் போது விசிலிங் ஸ்டார்ட் பண்ணேன். இப்போ கிட்டத்தட்ட 13 வருஷம் முடிச்சுருச்சு." எப்படி இந்த விஷயத்தை தொடங்குனீங்கன்னு நியாபகம் இருக்கா என்று நாம் கேட்டதும், "நல்லாவே நியாபகம் இருக்கு, நான் சின்ன வயசுல இருந்தே விசில் பண்ணிகிட்டே இருப்பேன். எங்க ஸ்கூல்ல ஒருநாள் ஆண்டிறுதி போட்டிநடந்தது. நான் எதாவது வித்தியாசமா பண்ணலான்னு விசிலயே ஆங்கில பாடல் பாடுனேன். அப்போ தெரியாம பண்ண விஷயம் இன்னைக்கு என்னோட வாழ்க்கையா வந்து நிக்குது. எனக்குள்ள விளையாட்ட இருந்த திறமைய என் வாழ்க்கை மாத்துனதுக்கு முக்கிய காரணம் என்னோட ஃப்ரெண்ட்ஸ் ஜோன்ஸ், பிரசாந்த், என்னோட மியூசிக் டீச்சர் டேனி சார் தான்." என்று சிரித்தபடியே பதிலளித்தார்.

எங்க விசிலயே எதாவது பாடி காட்டுங்க? நாங்களும் கேட்டுக்கொள்கிறோம் என்றதும், பாட ஆரம்பித்தவர் என்ன பாடல் வேண்டுமென்று கேட்டு, கேட்டு போதும் என்று கூறும் வரை பாடிக்கொண்டே இருந்தார். அந்த வீடியோ இணைப்பு கீழே இணைக்கப்பட்டுள்ளது.
 

நீங்க எப்பொழுதிருந்து திரைப்படங்களில் பணிபுரிய ஆரம்பித்தீர்கள் லியோனார்ட்?

நான் சென்னை லொயோலால பி.ஏ. ஹிஸ்டரி படிச்சுட்டு ஜெட் ஏர்வேஸ்ல ஒர்க் பண்ணிட்டு இருந்தேன். அப்பப்போ என்னுடைய நண்பர் குணாவோட குறும்படங்கள்ல விசில் சிங்கிங் பண்ணிக்கிட்டு இருந்தேன். அத பாத்துட்டுதான் மியூசிக் டைரக்டர் விஷால் சந்திரசேகர் ஜில் ஜங் ஜக் படத்துல என்ன அறிமுக படுத்தினார். அப்போ வர நான் ஜெட் ஏர்வேஸ்ல தான் ஒர்க் பண்ணிக்கிட்டு இருந்தேன். ஜெட் ஏர்வேஸ்ல ஒர்க் பண்ணிகிட்டே மியூசிக் சைடு என்னால கவனம் செலுத்தமுடியால. அப்போ தான் மியூசிக் டைரக்டர் ஜிப்ரான் சாரோட அறிமுகம் கிடைச்சது. அவர் ஆபீஸ்லயே ஒர்க் பண்ண ஆரம்பிச்சேன். அவரோட அதே கண்கள் படத்துல என்ன விசில் சிங்கிங் பண்ணவச்சாரு. அதே கண்கள் படத்துக்கு ரெக்கார்டிங் முடிச்சுட்டேன். முதல்ல வெளியான டீஸர்ல விசில் தான் மேஜரா இருக்கும், அத சார் என்கிட்டே சொல்லவே இல்ல, வெளியானதுக்கு அப்புறம் தான் எனக்கே தெரியும். அது எனக்கு ரொம்பவே சர்ப்ரைஸா இருந்தது. அந்த விசிலும் செம ஹிட். இப்போ வர நிறைய பேர் அந்த பாடலை ரிங் டோனா வச்சுருக்காங்க. அது ரொம்பவே சந்தோசமா இருக்கு. எல்லாத்துக்கும் ஜிப்ரான் சார் தான் காரணம். எனக்கு அடுத்து அடுத்து வாய்ப்புகள் கிடைப்பதற்கு முக்கிய காரணம் ஜிப்ரான் சார் தான்.

குறிப்பிட்ட ஒரு சில படங்களில் அதிலும் குறிப்பாக ஒரு சில பாடல்களில் மட்டுமே விசில் இடம்பெறுகின்றது. அதனை எப்படி பார்க்கின்றீர்கள்?
 
whistle singer leonard meyer

"இந்த விஷயத்துனாலதான் இந்த ஆர்ட் மேல யாரும் இம்பார்ட்டன்ஸ் குடுக்கமாற்றங்க. ஆனா அதே கண்கள் படத்துல என்னோட விசில் சிங்கிங் பாத்துட்டு எனக்கு அடுத்தடுத்த நிறைய வாய்ப்புகள் கிடைச்சது. ரீசெண்டா வெளியான ரங்கூன் படத்துலயும் நான் விசில் சிங்கிங் பண்ணிருக்கேன். மாயவன், மகளிர் மட்டும், தெலுகுல இரண்டு படம், மலையாளத்துல குயின், கன்னடத்துல ஒருசில படங்கள்னு இப்பவரா கிட்டத்தட்ட பத்து படங்களுக்கு மேல விசில் சிங்கிங் பண்ணிட்டேன். இண்டஸ்ட்ரிக்கு வந்த கொஞ்ச நாள்யே நாலு மொழிலயும் பாடிட்டேன். காரணம், விசில் சிங்கிங்க்கு மொழி ஒரு தடையா இருக்காது. நம்ம ஆர்ட் மேல நமக்கே நம்பிக்கை இல்லனா, அது வளரலேன்னு சொல்றதுக்கு நமக்கு எந்த உரிமையும் இல்ல சரிதானே" என்று தன்னுடைய நிலைப்பாட்டினை ஆணித்தனமாக பதிவு செய்தார் லியோனார்ட்

தற்போதைய சினிமாத்துறையில் உங்கள் திறமைக்கு சரியான அங்கீகாரம் வழங்கப்படுகின்றதா ?

வாய்ப்புகள் அதிகம் கிடைக்குது. ஆனால், பாராட்டுகள் என்பது ரொம்பவே கம்மி தான். ஒரு கலைஞனுக்கு கிடைக்கும் பாராட்டு தான் அவனுக்கு ஊக்கமளிக்கும். அது இந்த ஆர்ட்க்கு ரொம்பவே கம்மி தான். அதுக்கு முக்கிய காரணம் பாடல்ல இடம்பெற்ற சின்ன ஒரு ஆர்ட் தான் இந்த விசில்." என்று சிரித்தபடி, "ரொம்ப சீக்கிரமே இந்த ஆர்ட்க்கும் ஒரு முக்கியத்துவம் கிடைக்கும், எப்படி இசை கருவிகள் ஒவ்வொன்னுக்கும் ஒரு முக்கியத்துவம் இருக்கோ அதே மாதிரி விசிலுக்கும் கண்டிப்பா முக்கியத்துவம் கிடைக்கும். உங்களுக்கு ஒன்னு தெரியுமா உலகநாயகன் கமல்ஹாசன் சார் ரொம்ப அழகாவே விசில் சிங்கிங் பண்ணுவாரு. விஸ்வரூபம் படத்தின் அடுத்த பார்டோட மியூசிக் விஷயமா ஸ்டுடியோ வந்தப்ப அவர கவனிச்சுட்டே இருந்தேன். அவர் அப்பப்ப சும்மாவே விசில் பண்ணிட்டே தான் இருப்பார்"

உங்க வீட்ல, உங்க நண்பர்கள் உங்களோட இந்த வித்தியாசமான திறமையை பார்த்து வியந்தது உண்டா?

"கண்டிப்பா.... தொடக்கத்துல நான் சரியான வழில தான் போறேனான்னு அவங்களுக்கு கொஞ்சம் சந்தேகம். ஆனால், இப்ப படங்கள்ல பண்றத பாத்ததும் எல்லாரும் ரொம்பவே ஹாப்பினு தான் சொல்லணும். என்னோட பேமலி ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் நான் விசில் சிங்கிங் ஸ்டார்ட் பண்ணப்ப நக்கல் பண்ணாங்க, அதே ஆட்கள் எல்லாரும் இப்ப என்ன அடிக்கடி விசில் சிங்கிங் பண்ணச்சொல்லி ரசிக்கிறாங்க. என்னோட வீட்ல என் தம்பிகள் இப்பயே விசில் சிங்கிங் பழக ஆரம்பிச்சுட்டாங்க. இதுவே என்னோட வெற்றியா பாக்குறேன். இன்னும் போகவேண்டிய தூரம் அதிகம் இருக்கு. ஒரு ஹாலிவுட் படவாய்ப்பு வந்திருக்கு என்னோட விசில் சத்தத்தை சீக்கிரமே ஹாலிவுட் படங்கள்ல நீங்க நிச்சயம் பார்க்கலாம்" என்று ஒரு கலையின் நம்பிக்கை நாயகனாக நம்மிடமிருந்து விடைபெற்றார் லியோனார்ட் மேயர்.

வாழ்த்துக்கள் பாஸ்! கண்டிப்பா உங்க விசில் சத்தம் உலகமுழுக்க கேக்கும்.

 

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்