முகப்புகோலிவுட்

தமிழ் சினிமாவின் இந்த பெண் கதாபாத்திரங்களை மறக்க முடியாது! #HappyWomen'sday

  | March 08, 2018 14:07 IST
Womens Day 2018

துனுக்குகள்

  • பல பெண் கதாபாத்திரங்கள் இப்போது வரவேற்பு பெறுகிறது
  • சமீபத்தில் வெளியான அறம், அருவி போன்றவை உதாரணங்கள்
  • மகளிர் தின ஸ்பெஷலாக அந்தப் பட்டியல் இதோ
ஹீரோ இன்ட்ரோ சீன், புகழ்ந்து பாடும் பாடல், மாஸ் என ஒரு ஹீரோவுக்கென உருவாகும் படங்கள் இப்போதும் உண்டு. சில நேரங்களில் இதிலிருந்து மாறுபட்டு பலமான பெண் கதாபாத்திரங்கள் எழுதப்படும் போதும், திரைப்படத்தில் பார்த்து அனுபவிக்கும் போதும் ஒருவித சமநிலை உண்டாகும். கதையின் தன்மை பொறுத்து, பெரிய ஹீரோ படங்களில் கூட ஒளிரும் பெண் கதாபாத்திரங்களும் நிறைய உண்டு. 2000க்கு பின்பு இப்படியான உருவாக்கத்தில் வந்த 25 கதாபாத்திரங்களை மகளிர் தின சிறப்பு தொகுப்பாக இங்கு பட்டியலிட்டிருக்கிறோம். 

அலைபாயுதே சக்தி (2000) 
 
alaipayuthey

சக்தியிடம் இருந்தெல்லாம் தவிப்பு. அவளின் கண்களில் இருந்த தவிப்பை அத்தனை சுலபமாக மறந்துவிட முடியாது. பிரிவில், சின்னச் சின்ன சண்டைகள், கோபம் எல்லாவற்றிலும் அவளிடம் இருந்த தவிப்பு நமக்கு ஒரு வித அழுத்தத்தைக் கொடுத்தது. இப்போதும் "சக்தி உன்ன நான் லவ் பண்ணல..." என வசனம் நினைவில் வரும் போதெல்லாம் கூடவே சேர்ந்து மனதில் வந்து போகும் சக்தியின் புன்னகையை எப்படி மறக்க முடியும்.

ரிதம் சித்ரா (2000)
 
rhythm

சித்ராவுக்குள் எப்போதும் ஒரு குழந்தைத்தனம் இருந்தது. அதை படத்தில் அதிகம் பார்த்திருக்க முடியாது. கணவனுடன் தொலைபேசியில் பேசும் போது...  
ஸ்ரீகாந்த்: இன்ஃபேக்ட், நீ இன்னும் என்ன லவ் பன்றியானே தெரியல

சித்ரா: 

ஸ்ரீகாந்த்: என்ன சத்ததையே காணோம்

சித்ரா: தலைய ஆட்டுனேன் (சிரிக்கிறாள்)

இப்படி குட்டிக் குட்டிக் குழந்தைத்தனம் பிறகு எப்போதும் வெளிப்படுத்த முடியாத படி ஒரு குழந்தைக்கு அம்மாவாக மாற வேண்டியதாகிறது. இரண்டாவதாக வரும் காதலையும் மறைத்துக் கொண்டு, இருக்கிற சூழலையும் ஏற்றுக் கொள்ளமுடியாமல் ஒருவித அமைதியிலே இருப்பார். அதுதான் அவரது கதாபாத்திரத்தை அழுத்தமானதாக மாற்றும். 

7ஜி அனிதா (2004) 
 
7g rainbow colony

அனிதா நமக்குப் பிடிக்க ரியாலிட்டி காரணமாக இருக்கலாம். அது போன்ற அனிதாவின் நட்புக்காக, அன்புக்காக பலசமயம் நாம் ஏங்கியிருக்கலாம். அப்பாவை தப்பாக பேசும் ஹீரோவை பார்த்து "இத்தன நாளா உனக்கு தேவையான எல்லாத்தையும் செஞ்ச உன் அப்பாவையே திட்டுறியே, இப்போதான் உனக்கு என்னையவே தெரியும், என்ன நீ எப்பிடி நல்லா பாத்துப்பனு நம்பறது?" கேட்கும் கேள்வி அனிதா கதாபாத்திரத்தின் தன்மையை விளக்கும். 

ஆட்டோகிராஃப் திவ்யா (2004) 
 
autograph

திவ்யா ஒரு நல்ல தோழி. சோர்ந்து போகும் போது ஆறுதலாக, வெற்றியின் போது தடுமாறமால் வழி நடத்தும் ஒரு தோழி அவள். ஆணும் பெண்ணும் இணைந்து பழகும் நட்பை எப்படி அணுகுவது, மற்றவர்கள் அதை தப்பாக பார்க்கும் போது எப்படி எதிர்கொள்வது என சில விஷயங்களை சொல்லிவிட்டுப் போனதால் திவ்யா தவிர்க்க முடியாதவள்.

கஜினி கல்பனா (2005) 
 
ghajini

கல்பனாவின் குறும்பு, அவளின் பொய்கள், படபட பேச்சு மிக எளிமையாக எல்லோரையும் கவர்ந்தது. "ஆக்ட்சுவலி மும்பை எர்போர்ட்லதான் அவனப் பாத்தேன். `ஹாய்' அப்பிடின்னான்..." என அவள் பேச ஆரம்பித்தால் குறுக்கிட்டு பேசாமல், நின்று கவனிக்க வைக்கும் வசீகரம் அவளிடம் இருந்தது. 

மொழி அர்ச்சனா (2007)
 
mozhi

மௌனம். அர்ச்சனாவின் மௌனம் பேசும் வார்த்தைகள் எல்லாம் வேறு வகை. ஜோதிகா பொறுத்தவரை அவரின் ஜெனி, மாயா, கங்கா, குந்தவை தொடங்கி சமீபத்தில் வந்த நாச்சியார் வரை பல கதாபாத்திரங்களும் கவனிக்கத் தக்கதுதான். இதிலிருந்து அர்ச்சனா மட்டும் அப்படியே தனித்து ஒளிரும். மாற்றுத்திறனாளியாக அவள் வெறுப்புகள் பற்றி பேசுவது, அதிர்வுகளின் வழி இசையை உணர்வது, கடைசியில் காதலை வெளிப்படுத்தும் விதம் என ஒவ்வொன்றிலும் ஒரு ஓவியத்தின் பாவத்தை வெளிப்படுத்தியிருப்பாள் அர்ச்சனா.

கற்றது தமிழ் ஆனந்தி (2007) 
 
kattradhu thamizh

பிரபா மீது அளவற்ற காதலில் இருப்பதும், கட்டுப்பாடுகளைக் கடந்து வெளிவர முடியாமல் திணறுவதுமாய் ஆனந்தியின் தவிப்புகள் அதிகம். பிரபாவின் காதலுக்கு நியாயம் செய்வதாய் அவளின் அன்பும் அதிகமாய் இருக்கும். அவளின் இயலாமை, பிரபாவுக்கு எழுதும் கடிதம், "நிஜமாதான் சொல்றியா?" எல்லாமும் இன்னும் பலவருடங்களுக்கு அவளை மறக்க முடியாததாய் செய்துவிட்டது.

பருத்திவீரன் முத்தழகு (2007) 
 
paruthiveeran

முரட்டுத்தனமான அன்பு முத்தழகுடையது. `காக்க காக்க' படத்தின் மாயா போலதான் நாயகனுக்கு தன் காதலைப் புரிய வைக்க முயற்சி செய்வாள். ஆனால், இவளின் செயல்கள் கொஞ்சம் ஆச்சர்யப்படுத்தும். விரட்டியடிப்பது, இறுதிக் காட்சியில் பார்ப்பவர்களைக் கலங்கடிப்பது என ப்ரியாமணிக்கு ஆயுசுக்குமான கதாபாத்திரம் இது.

சந்தோஷ் சுப்ரமணியம் ஹாசினி (2008) 
 
santosh subramaniam

ஹாசினியின் துறுதுறுப்பு மற்றும் குழந்தைத்தனத்தை ரசிக்காமல் இருக்க முடியாது. ஜெனிலியா `பொம்மரில்லு'வில் நடத்திய அதே மாயாஜாலத்தை திருப்பி எடுத்து வந்து தமிழிலும் நிகழ்த்திய விதம் ஆச்சர்யம் தரும். முட்டுனா கொம்பு முளைக்கும், அந்த எறும்பு பொய் சொல்லிருச்சு எனும் போது நம்மை சிரிக்க வைப்பவர், பின்பு கலங்கவும் வைப்பாள். 

மதராசப்பட்டிணம் எமி (2010)
 
madrasapattinam

எமிக்கும் இது போன்ற பாத்திரம் மறுபடி நிகழ்வது கஷ்டம்தான். ஒரு இந்தியனைப் பார்த்து காதல் கொள்வதும், கலாச்சார வேறுபாடுகள் பார்த்து ரசிப்பதும், மறாந்துட்டியா எனப் பேசும் தமிழும் என எமியின் கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிக நெருக்கமாக ஆனது. 

விண்ணைத்தாண்டி வருவாயா ஜெஸ்ஸி (2010)
 
vtv

ஜெஸ்ஸி கதாபாத்திரம் எப்போதும் மறக்க முடியாதுதான். அவளின் புன்னகைகள், காதல், அழுகை, அவள் கொடுக்கும் வலி என எல்லாமும் அழகானது. ஜெஸ்ஸியின் அழகு அவள் குழப்பமானவள், புரிந்து கொள்ள முடியாதவள் என்பதுதான். 

ஆரண்ய காண்டம் சுப்பு (2011)
 
aaranya kaandam

படத்தின் மொத்த கதையையும் குலைத்துப் போடும் கதாபாத்திரம் சுப்பு. அடிவாங்கி அழுது கொண்டே, பின்னாலேயே தப்பிப்பதற்கான திட்டத்தையும் போட்டுக் கொண்டிருப்பார். குறிப்பாக சப்பை கதாபாத்திரத்தை மூளைச் சலவை செய்யும் இடத்தில் படத்தின் ஹீரோவாக மாறும் சுப்பு, பணப்பையை தூக்கிக் கொண்டு போகும் போது மறக்க முடியாத கதாபாத்திரப்பட்டியலில் சேர்ந்துவிடுவார்.

வானம் சரோஜா (2011)
 
vaanam

சரோஜாவுக்குள் இருக்கும் மனிதம் படத்தில் கவனிக்க வேண்டியது. வேறு ஊருக்கு வந்து பணம் சம்பாதிக்க திட்டமிடும் சரோஜாவின் வாழ்க்கை சில திருப்பங்களை சந்திக்கும். கடைசியில் அந்த மருத்துவமனையில் தன் தோழியை காக்க மருத்துவரிடம் கலங்க்குமிடம் நம்மையும் கலங்க வைக்கும்.

நீதானே என் பொன்வசந்தம் நித்யா (2012)
 
neethane en ponvasantham

நித்யாவின் மூன்று பருவங்களும் நம்மை கவரும். ஒவ்வொரு முறையும் வருண் தன்னைக் கைவிடும் போது ஏங்குவது, கடைசியில் வருண் தேடிவரும் போது, "உன்னோட குட்டி குட்டி பாக்ஸ் எல்லாம் டிக் போட்டு இப்போ அதில் என் பேர் வந்திருக்கு" என கேள்வி கேட்டு திணரடிப்பாள். இறுதியில் தன் மீதுள்ள குறைகளை உணர்ந்து, வருணிடம் அழும் போது, மனதில் நின்றுவிடுவாள்.

நேரம் வேணி (2013) 
 
neeram

நஸ்ரியாவை எனும் ஒரு நாயகியை அடையாளம் காட்டியதற்காகவே வேணி கதாபாத்திரம் மறக்க முடியாததாய்விடுகிறது. மற்றபடி வேணியின் இயல்புகள் அத்தனையும் மிக உண்மையாய் இருப்பது, அவளின் எளிமை நம்மையும் கவர்வது எல்லாமே அனிச்சையாக நடந்துவிடும்.

விடியும் முன் ரேகா (2013) 
 
vidiyum mun

இங்கு மீண்டும் ஒரு மனிதத்தை பிரதிபலிக்கும் கதாபாத்திரம். ஒரு சிறுமியை மிருகத்தின் விருந்துக்காக தயார் செய்கிறோம் என்கிற குற்ற உணர்ச்சியில் குறுக்குவதும், இது எதுவுமே தெரியாமல் தன் சிறுமி பருவத்து குறும்புகளுடன் இருக்கும் அவளைப் பார்த்து இரக்கம் கொள்வதுமாய் நம்மை அச்சர்யப்படுத்துவாள் ரேகா.

காக்கா முட்டை ஐஸ்வர்யா ராஜேஷ் (2014) 
 
kaaka muttai

படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரத்திற்குப் பெயர் கிடையாது. ஆனால், இது அவரது பெயரை சொல்லவைக்கும் படமாய் மாற்றியிருப்பார் ஐஸ்வர்யா. இரண்டு சிறுவர்களுக்கு தாயாக அவர் திரையில் வரும் எந்த ஒரு காட்சியும் நடிகையை காட்டாமல், கதாபாத்திரத்தையே காட்டும். இயல்பு, எதார்த்தம் என இரண்டையும் மனதில் வைத்து அவர் வெளிப்படுத்தும் ஒவ்வொரு உணர்வும் துல்லியமாய் இருக்கும்.

ஓ காதல் கண்மணி தாரா (2015) 
 
o kadhal kanmani

தாரா மிக சாதரணமாக ஆதியுடன் உறவை துவங்கிவிட்டாலும், அதன் பின் வரும் குழப்பங்களை எதிர்கொள்வாள். பொண்ணுபாக்க வேணாமா என ஆதியை சீண்டுவது, பிரிந்துவிட்டும் முடிவு எடுப்பது, ஆனால் பிரிய மனம் இல்லாமல் தவிப்பது என ஒவ்வொரு காட்சியிலும் ஏதாவது செய்து கொண்டே இருப்பாள் தாரா.

கபாலி குமுதவள்ளி (2016)
 
kabali

கபாலிக்கான கோபத்தின் தீ குமுதவள்ளி. பல ஆண்டுகள் கழித்து கணவனை சந்தித்ததும் வெடித்து அழும் காட்சி நமக்கு சிலிர்ப்பைத் தரும். ஒரு குழந்தை போல் நடந்து கொள்ளும் கணவனை தாயாய் கண்டிப்பது, குழப்பத்தில் இருக்கும் அவனை தெளிவுபடுத்துவது என குமுதவள்ளியின் கதாபாத்திரம் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ப அழகு.

இறுதிச்சுற்று மதி (2016) 
 
irudhi suttru

மதியும் மறக்க முடியாதவள். முதலில் வேண்டா வெறுப்பாக பயிற்சிக்கு செல்வது, பிறகு  ஆற்றல், கோபம் இரண்டையும் திறமையாக மாற்றிக் கொள்ளப் போராடுவது, அவளுக்கு ஏற்படும் காதல் என எல்லாவற்றிலும் ஆச்சர்யப்படுத்தினாள் இந்த சண்டைக்காரி.

அதே கண்கள் வசுந்தரா (2017)
 
adhe kangal

வசுந்தராவைப் பார்க்கும் யாருக்கும் அவளை ஒரு திருடியாக நம்புவது கடினம். மிக அமைதியாக அன்பாக பழகி, பின்பு தன் தந்திர ரூபத்தை வெளிப்படுத்துவதில் நம்மை மிரட்டுவாள். தமிழ் சினிமாவின் பக்கங்களில் இவளின் தந்திர விழிகளுக்கும் கண்டிப்பாக முக்கிய இடம் உண்டு.

தரமணி ஆல்தியா (2017)
 
taramani

ஆல்தியாவுக்கு பிரபு மேல் உண்டாகும் காதல், கணவனின் பாலியல் மனநிலை புரிந்து அவனை மிக இலகுவாக கையாள்வது, தன்னை தனியே அழைத்து பேசும் உயர் அதிகாரியை கையாளும் விதம், மகனிடம் தன் காதலனை அறிமுகப்படுத்துவது என ஒவ்வொன்றிலும் தமிழ் சினிமாவில் தான் முக்கியமான கதாபாத்திரம் என உணர்த்துவாள்.

அறம் மதிவதனி (2017)
 
aramm

இது போன்ற கதாபாத்திரங்களில் நாயகர்களைப் பார்த்து சலித்த நமக்கு, அங்கு ஒரு பெண் கதாபாத்திரம் பார்த்ததே முக்கியமான வியப்புதான். அது எழுதப்பட்ட விதம், அவளின் செயல்கள், அதிகாரத்தில் இறந்தாலும் பெண் என்பதால் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதம் எல்லாமே ரசிக்க வைத்தது, ஆச்சர்யப்படுத்தியது.

அருவி (2017)
 
aruvi

அருவி கதாபாத்திரம்  குறித்து புதிதாக ஒன்றும் சொல்ல முடியாது என நினைக்கிறேன். ஆனால், ஒன்று மட்டும் சொல்ல முடியும். தமிழில் அதிக கொந்தளிப்பை ஏற்படுத்திய கதாபாத்திரமாக இது இருந்தது. அவளின் கேள்விகள், அவளின் கோபங்கள், இறுதியில் தனக்கான மனிதர்களிடம் இருந்து அவள் பெற்ற கதகதப்பு எல்லாம் நமக்கானதாகவும் இருந்தது.

நாச்சியார்  அரசி (2018)
 
naachiyaar ivana

அரசி கதாபாத்திரத்தின் தவிப்புதான் படத்தை நகர்த்தி செல்லும். அவளின் காதல், பிரிவு, குழந்தையை கையில் ஏந்திய படி மீண்டும் காதலனை சந்திப்பது என அவளின் பயணம் மொத்தமும் கதையாய் விரியும். இந்தப் பாத்திரத்திற்கான மிகச் சரியான நியாயத்தை செய்திருப்பார் இவானா.

    விளம்பரம்
    விளம்பரம்
    விளம்பரம்