முகப்புவிமர்சனம்

`6 அத்தியாயம்' விமர்சனம் - 6 Athiyayam Movie Review

  | Friday, February 23, 2018

Rating:

`6 அத்தியாயம்' விமர்சனம் - 6 Athiyayam Movie Review
 • பிரிவுவகை:
  ஹாரர் ஆந்தாலாஜி
 • நடிகர்கள்:
  தமன் குமார், ஸ்டேன்லி, பாப் சுரேஷ், பேபி சாதன்யா, பசங்க கிஷோர், மது ஸ்ரீ, சஞ்சீவ், விஷ்ணு, வினோத் கிஷன்
 • இயக்குனர்:
  கேபிள் ஷங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன்
 • தயாரிப்பாளர்:
  ஆஸ்கி மீடியா ஹட்
 • எழுதியவர்:
  கேபிள் ஷங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன்
 • பாடல்கள்:
  ஸ்லிபர்ன், ஜோஷ்வா, தாஜ் நூர், சதீஷ் குமார், ஜோ ஃப்ராங்க்ளின், சாம்.சி.எஸ்

தமிழில் ஆந்தாலஜி சினிமாக்கள் விரல் விட்டு எண்ணிவிடும் அளவிலேயே வந்திருக்கிறது. 'அம்புலி' ஹரி ஷங்கர் - ஹரீஷ் நாராயணன் இயக்கத்தில் முதன்முறையாக வந்த ஆந்தாலஜி படம் 'ஆ', கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் வந்த 'பென்ச் டாக்கீஸ்', 'அவியல்' மற்றும் சென்ற வருடம் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் வெளியான 'சோலோ', தியாகராஜன் குமரராஜா இயக்கத்தில் வர இருக்கும் 'சூப்பர் டீலெக்ஸ்' என ஒவ்வொரு ஆந்தாலஜி முயற்சியும் குறிப்பிட வேண்டியவையே. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகியிருக்கும் '6 அத்தியாயம்' ஆந்தாலஜி படமும் கவனத்துக்குரிய முயற்சிதான். பேய்தான் ஆறு குறும்படங்களுக்கும் கரு. அந்தப் படங்களும் அதன் கதைச் சுருக்கமும் இதோ...

அத்தியாயம் ஒன்று: சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ படங்கள், காமிக்ஸ் மீது பைத்தியமாய் இருக்கும் ஒருவன் தானும் ஒரு சூப்பர் ஹீரோ என நம்புகிறான். பல ஆபத்துகளில் இருந்து மக்களைக் காப்பாற்றி இருப்பதாகவும் சொல்லி, "இதை சொன்னா என்னைய பைத்தியம்னு சொல்லி உங்ககிட்ட அனுப்பிட்டாங்க" என மனநல மருத்துவரிடம் புலம்புகிறான். முதலில் அவனை காமெடியாய் பார்த்து நக்கலாய் கேள்வி கேட்கும் மருத்துவர், ஒரு கட்டத்தில் நம்பிக்கை கொள்கிறார். கூடவே அவனை சோதிக்க டெஸ்ட் வைக்கிறார். அது என்ன என்பது இந்த சூப்பர் ஹீரோவின் கதை.


அத்தியாயம் இரண்டு: இனி தொடரும்

ஹைஃபையான இளைஞன் ஒருவன் தனியாய் ஒரு வீட்டில் வசிக்கிறான். அவனைப் பார்க்கும் போதெல்லாம் சிறுமி ஒருத்தி பயந்து ஒளிகிறாள், அவ்வப்போது பயமுறுத்தவும் செய்கிறாள். இதைப் பார்க்கும் பெண் ஒருத்தி, அந்த சிறுமியிடம், "ஏன் இப்படி செய்யிற... என்ன பிரச்னை உனக்கு?" என உண்மை கேட்டறிந்து அதிர்கிறாள். அது என்ன உண்மை, அதன் விளைவு என்ன என்பதே கதை.

அத்தியாயம் மூன்று: மிசை

மிக சோகமாய் வீட்டிற்கு வந்து அமர்கிறான் அந்த இளைஞன். அவனது இரு நண்பர்களும் வீட்டுக்கு வர, அவர்கள் கண்ணில் பட கூச்சப்பட்டு ஒளிகிறான். அந்த சமயத்தில், அவனது அறைத் தோழர்கள் அவனைப் பற்றியும், அவனின் காதலி பற்றியும் பேசுவதைக் கேட்கிறான். கூடவே அவன் புத்தகத்தில் மறைத்து வைத்திருந்த காதலி புகைப்படத்தை எடுத்து முத்தம் கொடுக்கிறார்கள் இருவரும். கோபமாகி இருவரையும் தாக்க, அவன் கத்தி எடுக்கும்போது, அந்த வீட்டுக்கு வருகிறாள் அவனது காதலி. பிறகு என்ன ஆகிறது என்பது மீதிக் கதை.

அத்தியாயம் நான்கு: அனாமிகா

வெகுநாள் அழைத்ததன் பேரில், தன் மாமா வீட்டுக்குச் செல்கிறான் ஒரு இளைஞன். ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருக்கிறது அந்த வீடு. மேலும் அந்த வீட்டில் ஒரு பெண் தூக்கு மாட்டி இறந்ததாக சொல்லி கூடுதல் பீதியைக் கிளப்புகிறார் அவனது மாமா. ஏற்கெனவே பயந்து நடுங்கும் அவனை அந்த வீட்டில் தனியாக விட்டுவிட்டு அவசர வேலையாக வெளியே கிளம்புகிறார். அந்த இரவு தரும் அதிர்ச்சிகள், அமானுஷ்யங்கள் என அவன் சந்திக்கும் எல்லாமும்தான் மீதிக்கதை.

அத்தியாயம் ஐந்து: சூப் பாய் சுப்பிரமணி

எந்தப் பெண்ணிடமும் தன்னால் நெருங்க முடியவில்லை. காதலித்த பெண், வீட்டில் பார்த்த பெண் என யாராக இருந்தாலும் `அது' என்னை வினோதமாக டார்ச்சர் செய்து அவர்களிடமிருந்து பிரித்துவிடுகிறது என்கிற பிரச்சனையோடு ஒரு மாந்த்ரீகரை சந்திக்கிறான் அந்த இளைஞன். இந்தப் பிரச்சனை எதனால், அதை மாந்த்ரீகர் சரி செய்தாரா என்பதுதான் இப்படத்தின் கதை.

அத்தியாயம் ஆறு: சித்திரம் கொல்லுதடி

ஓவியரான அந்த இளைஞனுக்கு, வெளிநாட்டில் இருந்து தனித்தன்மையுடன் ஒரு பெண்ணின் ஓவியம் வரையச் சொல்லி ஆர்டர் வருகிறது. எந்த ஓவியத்துக்கும் ரெஃபரன்ஸாக புத்தகங்களை நாடும் பழக்கமுள்ள இளைஞன் அவன். இந்தப் பெண்ணின் ஓவியத்துக்காக புத்தகங்கள் சேகரிக்கும் போது `கோகிலா' என்கிற புத்தகமும் சேர்ந்து வருகிறது. அதில் வர்ணிக்கப்பட்டிருக்கும் கோகிலா என்கிற பெண்ணை மாடலாக வைத்து வரையத் துவங்குகிறான் அவன். புத்தகத்தில் அவளது கண் பற்றிய வர்ணனை பக்கங்கள் இல்லாததால், கண் மட்டும் வரையாமல் நிற்கிறது அந்த ஓவியம். மீதிப் புத்தகத்தைத் தேடி செல்லும் அவன் என்ன ஆகிறான் என்பதுதான் கதை.

இப்படி ஆறு குறும்படங்களையும் கேபிள் ஷங்கர், சங்கர் தியாகராஜன், அஜயன் பாலா, சுரேஷ், லோகேஷ், ஸ்ரீதர் வெங்கடேசன் ஆகியோர் இயக்கியிருக்கிறார்கள். பேய் என்கிற ஒரு களத்தை எடுத்துக் கொண்டு அதற்கு கதை அமைத்து வெவ்வேறு உணர்வுகளைப் பிரதிபலிக்கும் ஆறு குறும்படங்கள் என்பது நல்ல யோசனைதான். ஆனால், முதல் நான்கு படங்களைப் பொறுத்தவரை பெரிய சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதும், தரத்தில் கொஞ்சம் காம்ப்ரமைஸ் ஆகியிருப்பதும் உறுத்தல். கடைசி இரண்டு படங்கள் நிச்சயம் பொழுதுப்போக்கிற்கு கேரண்டி. லோகேஷ் இயக்கத்தில் உருவான `சூப் பாய் சுப்பிரமணி' காமெடியில் ஈர்க்கிறது, அதே நேரம் கொஞ்சம் இரட்டை அர்த்த வசனங்கள் குறைத்து தரமான காமெடிகளை வைத்திருக்கலாம் எனத் தோன்றியது. ஸ்ரீதர் வெங்கடேசன் இயக்கியிருக்கும் `சித்திரம் கொல்லுதடி' படம் உருவாக்கத்திலும், படம் கொடுத்த திகிலிலும் முழு திரைப்படமாக உருவாக்கலாம் என்கிற அளவிற்கு சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு குறும்பட நடித்தவர்களும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். எல்லாப் படங்களையும் ப்ரீ க்ளைமாக்ஸ் வரை திரையிட்டு, ஆறு க்ளைமாக்ஸையும் கடைசியில் திரையிடும் ஐடியா அத்தனை சுவாரஸ்யமானதாக இல்லை என்பதும் குறிப்பிட வேண்டியது.

கடைசி இரண்டு படங்களில் இருந்த சுவாரஸ்யமும் தரமும் மற்ற படங்களில் இருந்திருந்தால் சுவாரஸ்யமான ஆந்தாலாஜி படமாக இருந்திருக்கும். இருந்தாலும் தமிழில் அரிதாக முன்னெடுக்கப்படும் முயற்சிகளின் படி `6 அத்தியாயம்' வரவேற்கப்பட வேண்டிய முயற்சிதான்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்