முகப்புவிமர்சனம்

"இயல்பாய் ஒரு ரீயூனியன்... அழகாய் ஒரு காதல் கதை!" - `96 விமர்சனம்' - 96 Movie Review

  | Friday, October 05, 2018

Rating:

 • பிரிவுவகை:
  ரொமாண்டிக் ட்ராமா
 • நடிகர்கள்:
  விஜய் சேதுபதி, த்ரிஷா, தேவதர்ஷினி, பகவதி பெருமாள், ஆதித்யா, கெளரி, நியதி
 • இயக்குனர்:
  பிரேம்குமார்
 • தயாரிப்பாளர்:
  எஸ்.நந்தகோபால்
 • எழுதியவர்:
  பிரேம்குமார்
 • பாடல்கள்:
  கோவிந்த் வசந்தா

22 வருடங்கள் கழித்து நிகழும் பள்ளி நண்பர்களின் ரீயூனியனும், அதற்குள் சொல்லப்படும் ஒரு அழகான காதல் கதையும்தான் படம்.

ட்ராவல் போட்டோகிராஃபர் ராமச்சந்திரன் (விஜய் சேதுபதி) திடீரென தனது சொந்த ஊரான தஞ்சாவூருக்கு வந்து, தான் படித்த பள்ளிக்கு சென்று பார்வையிடுவதில் துவங்குகிறது கதை. பழைய நண்பர்களின் நினைவு வர எல்லோருக்கு அழைத்துப் பேசுகிறார் விஜய். இன்ஸ்டண்டாக ஒரு ரீயூனியன் திட்டமிடப்படுகிறது. தேவதர்ஷினி, பகவதி பெருமாள், முருகதாஸ் ஆகியோர் அந்த நிகழ்வை ஒருங்கிணைக்க, பல நண்பர்கள் வந்து சேர்கிறார்கள். செல்ஃபீக்கள், சண்டைகள், அழுகைகள், நல விசாரிப்புகள் என நீள்கிறது அந்த சந்திப்பு. இறுதியாக வருகிறார் ஜானகிதேவி (எ) ஜானு (த்ரிஷா). ராம் - ஜானு இருவரும் பள்ளிப் பருவ காதலர்கள். பள்ளியில் பிரிந்த காதலர்கள் பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கும் போது என்ன நிகழ்கிறது என்பதை மிக அழகாக, அழுத்தமாகச் சொல்கிறது படம்.

அரையடி மர ஸ்கேல், சட்டையில் ஒட்டிக் கொள்ளும் அயர்ன் ஸ்டிக்கர், தூர்தர்ஷன், சில இளையராஜா பாடல்கள் இன்னும் பல நாஸ்டால்ஜியா விஷயங்களை வைத்து நகரும் அந்த பள்ளிக்கூடக் காட்சிகள் அத்தனை உயிர்ப்புடன் இருக்கிறது. அறிமுகப் படத்திலேயே அழுத்தமான என்ட்ரி கொடுத்திருக்கிறார் இயக்குநர் பிரேம்குமார். வெல்கம் & வாழ்த்துகள் சார்!

முழுக்க முழுக்க பார்வையாளர்களை நம்பியே எடுக்கப்பட்டிருக்கும் கதை என்றுதான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு காட்சியும் ஏதோ இடத்தில் பார்வையாளனுக்கு கனெக்ட் ஆகும், ரசிப்பார்கள், தங்களைப் பெருத்திக்கொண்டு சிலிர்ப்பார்கள், கலங்குவார்கள், என விரிகிறது படம். அது நிறையவே ஒர்க் அவுட் ஆகியும் இருக்கிறது. அதற்கு மிக முக்கியமான காரணம் படத்தில் நடித்த நடிகர்கள், குறிப்பாக அந்தந்த நடிகர்களின் ஜூனியர் வெர்ஷனாக நடித்தவர்கள். சிறுவயது விஜய் சேதுபதியாக ஆதித்யா பாஸ்கர், த்ரிஷாவாக கெளரி ஜி கிருஷ்ணா, தேவதர்ஷினியாக நியதி, பகவதி பெருமாளாக சூர்யா, `ஆடுகளம்' முருகதாஸாக கௌதம் என ஒவ்வொருவரின் தேர்வும் நடிப்பும் கச்சிதம். மிகக் குறிப்பாக கெளரி தமிழ் சினிமாவுக்கு பளீர் வரவு. குட்டிக் குட்டி ரியாக்ஷன்கள், ஆதித்யாவிடம் பேசுவது, அவருக்காக கலங்குவது என சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். போலவே, ஆதித்யா பாஸ்கரும் விஜய் சேதுபதியின் மினி வெர்ஷனாக சிறப்பான நடிப்பை வழங்குகிறார். கௌரியிடம் என்ன பேச எனத் தெரியாமல் குனிந்த தலையாக நிற்பது, அவர் வரவுக்காக காத்திருப்பது என அசத்துகிறார். அடித்தளமாக இருக்கும் இவர்களின் நடிப்பு சரியாக நமக்கு படிபடுவதால் நிகழகாலத்தில் காண்பிக்கும் ஒவ்வொரு காட்சியும் நமக்கு சரியான பாதிப்பை உண்டாக்குகிறது.

விஜய் சேதுபதி த்ரிஷாவை பார்ப்பதற்கும் முன்பாக ஜானு என்ற பெயர் கேட்டதும் உறைந்து போகும் காட்சி, அவரை சந்தித்த பின் படபடப்பாய் நிற்பது, காரில் பேசும் போது கலங்கிப் போய் பார்க்கும் பார்வை என மிரட்டியிருக்கிறார். த்ரிஷாவின் நடிப்புக்கு நிறையவே இடம் கொடுத்திருக்கிறது கதை. இடைவேளைக்குப் பிறகான படம், அதிகப்படியாக இந்த இருவரை சார்ந்துதான் நகர்கிறது. அவர்களுக்குள் நடக்கும் உரையாடல், தன் வாழ்க்கையை பற்றிக் த்ரிஷா கூறுவது, க்ளைமாக்ஸ் நெருங்கும் வேளையில் நடப்பது எல்லாமும் த்ரிஷாவின் நடிப்பால் மிக அழகாகிறது. அவருக்கு டப்பிங் பேசியிருக்கும் சின்மயி குரலும் அத்தனை பொருத்தம். தேவதர்ஷினி கதாபாத்திரமும் அவரது நடிப்பும் படத்தின் இன்னொரு க்யூட். சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் ஜனகராஜ் நடிப்பு மிகச் சிறப்பு.

படத்தின் சிறப்பாய் நான் உணர்வது, எதை வசனங்கள் மூலம் கடத்தலாம் எதைக் காட்சிகள் மூலம் முன் நிறுத்தலாம் என்பதில் இருந்த தெளிவு. இன்னொன்று பாடல்களைப் படத்தில் பயன்படுத்தியிருந்த விதம். ஜானுவைப் பார்த்ததும் ராமுக்கு படபடக்கிறது என்பதை அந்த லப் டப் சத்தத்தைத் விட எந்த வசனமும் எந்த பின்னணி இசையும் கடத்திவிட முடியாது. அதுமாதிரி படத்தில் பல காட்சிகள் மனதுக்கு நெருக்கமாக உள்ளது.

முழுக்க முழுக்க உணர்வுகளைக் கடத்துவதிலேயே கவனம் செலுத்தியிருப்பதால் இடைவேளைக்குப் பிறகான காட்சிகள் சின்ன அயர்ச்சியைத் தருகிறது. ஆனாலும், அதைத் தாண்டி படம் தரும் ஒரு லைவ் உணர்வு அவற்றை எல்லாம் மறக்கச்செய்கிறது. படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரங்களும் பேசிக்கொள்ளும் வசனங்களிலும் எந்த செயற்கைத் தனமும் இல்லாததும் கூடுதல் சிறப்பு. மகேந்திரன் ஜெயராஜு - சண்முக சுந்தரம் இருவரின் ஒளிப்பதிவு படத்தின் தன்மையை அப்படியே கடத்தியிருக்கிறது. கோவிந்த் வசந்தாவின் பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்திற்கு மிகப்பெரிய தெம்பாய் நிற்கிறது. சில இடங்களில் மௌனமாய், சில இடங்களில் மெலிதாய் எவ்வளவு தேவையோ அதை மட்டும் கொடுத்திருக்கிறார்.

ஒரு படமாக இது எவ்வளவு தூரம் வரவேற்கப்படும் என்பதை விட, உணர்வுகளாய், காதலாய், பிரிவாய், மறுபடி நிகழும் சந்திப்பின் மகிழ்வாய், மீண்டும் நிகழும் ஒரு பிரிவாய் உங்களுக்குள்ளேயே அசைபோட பல விஷயங்கள் உள்ளே நிறைய இருக்கிறது. நம்முடைய நண்பர்கள், பழைய காதல் என படம் கடத்த நினைக்கும் விஷயங்கள் எல்லாம் மிகச் சரியாக படத்தில் அமர்ந்திருக்கிறது. ஒரு படம் என்பதை விட நிச்சயம் ஒரு அனுபவமாய் மனதில் இதமாக பதியும் இந்த 96.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்