முகப்புவிமர்சனம்

அரசியல் கதைக்களம் தினேஷுக்கு கைகொடுக்கிறதா? - `அண்ணனுக்கு ஜே' விமர்சனம் - Annanukku Jai Movie Review

  | Saturday, September 01, 2018

Rating:

அரசியல் கதைக்களம் தினேஷுக்கு கைகொடுக்கிறதா? - `அண்ணனுக்கு ஜே' விமர்சனம் - Annanukku Jai Movie Review
 • பிரிவுவகை:
  பொலிடிகல் காமெடி
 • நடிகர்கள்:
  தினேஷ், ராதாரவி, மஹிமா நம்பியார், மயில்சாமி, தினா, ஹரி கிருஷ்ணன்
 • இயக்குனர்:
  ராஜ்குமார்
 • தயாரிப்பாளர்:
  வெற்றிமாறன்
 • எழுதியவர்:
  ராஜ்குமார்
 • பாடல்கள்:
  அரோல் கொரேலி

சாதா சேகர், `மட்ட' சேகர் ஆவதற்கு போடும் திட்டங்களும், அதற்குப் பின் நடக்கும் லோக்கல் கைகளின் சூழ்ச்சியும் தான் `அண்ணனுக்கு ஜே'

திருவள்ளூர் முல்லை நகர் ஏரியாவில் ஜாலியான பையன் சேகர் (தினேஷ்). புல் டைமாக குடி - நண்பர்கள், பார்ட் டைமாக காதல் என இருக்கிறார். அவரது அப்பா முருகேசன் (மயில்சாமி) கள்ளுக்கடை வைத்து பிழைப்பு நடத்திவருகிறார். அந்த கடையால் லோக்கல் கை செல்வாவின் (தீனா) ஒயின் ஷாப் வியாபாரம் படுத்துவிடுகிறது. தன்னுடைய செல்வாக்கைப் பயன்படுத்தி மயில்சாமியை காவல்நிலையத்தில் வைத்து மகன் தினேஷ் முன்னாலேயே அடித்து அவமானப்படுத்தி, அவரது தொழிலையும் முடக்குகிறான். இதற்குப் பழிவாங்க தன் தந்தைக்கும் கட்சிப் பதவி பெற்றுத்தர கிளம்பும் தினேஷ் பெரிய சிக்கலில் மாட்டிக் கொள்கிறார். அது என்ன சிக்கல்? அதை எப்படி சரி செய்கிறார்? பிறகு என்ன ஆகிறது? என்பதை எல்லாம் நிறைய காமெடி சேர்த்து சொல்கிறது படம்.

இரு வேறு கட்சிகளுக்குள் நடக்கும் போஸ்டர் சண்டைகள் ஆரம்பித்து கூட்டணி வரை எல்லாவற்றிலும் அடிமட்ட தொண்டர்கள் எப்படியான நிலையில் இருக்கிறார்கள் என்பதை மிக எளிமையாக சொன்னதும், அதை எந்த விதத்திலும் சலிப்படைவைக்காமல் காமெடி கலந்து சொன்ன விதத்திலும் கவர்கிறார் அறிமுக இயக்குநர் ராஜ்குமார். வருக.. வருக...!

மட்ட சேகராய் தினேஷ் பக்கா பொருத்தம். கொஞ்சம் `அட்டக்கத்தி' தீனா கதாபாத்திரத்தின் சுவடுகள் தெரிந்தாலும் அது ரசிக்கும் படி இருப்பதால் எந்த தொந்தரவும் இல்லாமல் பார்க்க முடிகிறது. மஹிமாவைப் பார்க்க அவர் வீட்டுக்கு சென்று மாட்டிக் கொண்டதும் "ரெண்டா நம்பர் வீடு இதானங்க?" என சமாளிப்பது, கடன் வாங்கி செலவழித்து பேனர் வைத்து வீணானதும் காட்டும் சின்ன கலக்கம், பின்பு பயத்தை உள்ளே வைத்துக் கொண்டு ஊரையே அலறவிடும் சவுண்டு பார்ட்டியாக மாறுவது என தனது பங்கை மிக சிறப்பாக செய்திருக்கிறார் தினேஷ். மேக்கப் குறைவாக இயல்பான அழகு + தினேஷை பின்னாலேயே சுத்தவிட்டு கதறவிடும் ஹீரோயினாக மஹிமா நம்பியார் கச்சிதம். சாதகமாக பேசுவது போலவே சண்டைமூட்டிவிட்டு லாபம் சம்பாதிக்கும் கட்சி ஆளாக ராதாரவி அசத்தல். மேடையில் தினேஷுடன் பேசிவிட்டு அவர் சென்றதும் முகத்தில் காட்டும் அந்த சிடுசிடுப்பு எனப் பல இடங்களின் மிக இயல்பாக ஸ்கோர் செய்கிறார் மனிதர். மயில்சாமிக்கு தமிழ் சினிமாவில் முதல் முறையாக நடிக்க வாய்ப்பளித்திருக்கும் ஒரு வேடம். எந்த இடத்திலும் துளியும் காமெடி செய்யாமல், தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிக பக்காவாக செய்திருக்கிறார். "கடைசி வரை எனக்கு ஒரு அடையாளம் கிடைக்காம போயிடுச்சே சேகரு" என புலம்பும் இடம் காமெடி படத்திற்குள்ளும் ஒரு அழுத்தமான எமோஷனை பதிவு செய்கிறது. புல்லட்டில் பந்தாவாக வரும் தீனா கதாபாத்திரத்தின் நடிப்பும் சிறப்பு. குறிப்பிட்ட ஒரு இடத்தில் அவர் சொல்லும் நிகழ்ந்த கதை குபீர் சிரிப்புக்கு கேரண்டி. தினேஷின் நண்பராக வரும் ஹரி கிருஷ்ணன் கதாபாத்திரமும் நகைச்சுவைக்கு கை கொடுத்திருக்கிறது.

"இதென்ன இஞ்சினியரிங் சீட்டா கேட்ட உடனே எல்லாருக்கும் கொடுக்கறதுக்கு. அரசியல்டா", "நிதானமா இருக்கும் போது என்ன வேணா செய்யலாம். ஆனா, குடிச்சிருக்கும் போது நிதானமாத்தான் இருக்கணும்" என இடையிடையே வரும் வசனங்களும் படத்தின் சுவாரஸ்யத்திற்கு கை கொடுக்கிறது. அரோல் கொரேலி பின்னணி இசையும் பாடல்களும் பின்னணி இசையும் படத்திற்கு மிகப் பொருத்தமாக இசைந்திருக்கிறது. கிடைக்கும் இடங்கள், பொருட்களை வைத்து ஒரு கட்சி மாநாடு, ஆஃபீஸ் என நம்மை படத்துடன் ஒன்ற வைத்திருக்கிறது மாயப்பாண்டியின் கலை இயக்கமும், விஷ்ணுரங்கசாமியின் ஒளிப்பதிவும். முதல் பாதி படத்தில் தினேஷின் கெட்டப்பில் சின்ன சொதப்பல் இருப்பது, ஒரு அந்தஸ்துக்கு தினேஷ் வந்த பின் அதற்குப் பிறகு சொல்ல எதுவும் இல்லாமல் படத்தை சட்டென முடிப்பது, எளிமையாகவே படத்தை நகர்த்துவதும், ஒரு திருப்பத்துக்குப் பிறகு தினேஷின் ட்ரான்ஸ்பர்மேஷன் அதை கண்டு எல்லோரும் பயப்படுவது நம்பும்படியாக இல்லாதது என சின்னச் சின்ன குறைகள் என சொல்லலாம். ஆனால், அரசியல் கட்சிகள், அதற்காக கண்மூடித்தனமாக வேலை செய்யும் தொண்டர்கள், அவர்களை மேலே இருப்பவர்கள் எப்படி எல்லாம் தங்களுக்குத் தகுந்த படி சுழற்றி ஆடுகிறார்கள் என்பதை எல்லாம் மிக எளிமையாக சொன்ன விதம் பலமாக நிற்கிறது.

ஒட்டு மொத்தமாக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போகும் ஆடியன்ஸோ, காமெடியை மட்டும் எதிர்பார்த்து போகும் ஆடியன்ஸோ இருவரையும் நல்ல என்டர்டெய்ன்மென்ட் கொடுத்து வழியனுப்புகிறது `அண்ணனுக்கு ஜே'

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்