முகப்புவிமர்சனம்

அறம் திரைப்பட விமர்சனம் - Aramm Movie Review

  | Monday, November 20, 2017

Rating:

அறம் திரைப்பட விமர்சனம் - Aramm Movie Review
 • பிரிவுவகை:
  சோஷியல் டிராமா
 • நடிகர்கள்:
  நயன்தாரா, விக்னேஷ் – ரமேஷ், வேல ராமமூர்த்தி
 • இயக்குனர்:
  கோபி நயினார்
 • தயாரிப்பாளர்:
  KJR ஸ்டுடியோஸ்
 • எழுதியவர்:
  கோபி நயினார்
 • பாடல்கள்:
  ஜிப்ரான்

2014ஆம் ஆண்டில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளியான 'கத்தி' திரைப்படத்தின் கதை தன்னுடையது தான் என்றும், முருகதாஸ் தன்னை நம்பவைத்து ஏமாற்றிவிட்டார் என்றும் படம் வெளியாவதற்கு பல மாதங்கள் முன்பிருந்தே ஆதாரங்களோடு போராடி வந்தவர் கோபி நயினார். அந்த பிரச்சினை முடிந்து, பல பெரிய நடிகர்களிடம் தன்னுடைய 'அறம்' திரைப்பட கதையை சொன்னார் கோபி. எந்த பெரிய நடிகர்களுமே அந்த கதையில் நடிக்க தயாராக இல்லாதபொழுது, அந்த கதை மிகவும் பிடித்துப் போய் நடிப்பது மட்டுமில்லாமல் தானே தயாரிக்கவும் முன்வந்தார் நயன்தாரா. 2016ஆம் ஆண்டு மே மாதம் தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு, மிக வேகமாக அடுத்தடுத்து நடத்தி முடிக்கப்பட்டது. தண்ணீர் பிரச்சினையை பிரதானமாக கொண்ட திரைப்படம் என்பதால், வெயிலும் தண்ணீர் பஞ்சமும் அதிகம் காணப்படும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு மிகச்சிறிய கிராமத்தில் கடும் வெயிலில் படப்பிடிப்பு நடத்தி முடிக்கப்பட்டது.

நீர் வளம் இல்லாமல் எந்த விவசாயமுமே செய்ய முடியாமல், குடிக்க தண்ணீர் கிடைக்கக் கூட தினம் தினம் பல மைல்கள் குடத்துடன் செல்லும் நிலையில் இருக்கும் ஒரு கிராமம். நிலையான வேலை என எதுவும் இல்லாமல் பெயிண்ட் அடிப்பது, சங்கு பொறுக்குவது என ஏதாவது ஒரு வேலையை தினமும் செய்து வாழ்க்கையை ஓட்டி வரும் ஒரு குடும்பத்தை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் தொடங்குகிறது 'அறம்'. ஆழ்துளை கிணற்று குழியில் தவறி விழும் அவர்களது குழந்தையையும், அந்த குழந்தையைக் காப்பாற்ற அரசும் அதிகாரிகளும் என்னென்ன செய்கிறார்கள் என்பதையும், அந்த பிரச்சினைக்கு தீர்வு காண்வதில் மாவட்ட ஆட்சியர் மதிவதனியின் (நயன்தாரா) பங்கு என்ன என்பதையும், அந்த குழந்தையை காப்பாற்ற முடிந்ததா இல்லையா என்பதையும் சுற்றி நடக்கிறது 'அறம்' திரைப்படத்தின் கதை.

மழை இல்லாத பொழுது கூட தண்ணீர் தட்டுப்பாட்டை பார்க்காத மக்கள், தண்ணீர் பாட்டில் வந்த பிறகுதான் குடிநீருக்கு பிச்சை எடுக்கும் நிலை வந்தது என்பதை நெற்றிப்பொட்டில் அடித்தாற்போல் சொல்வதில் தொடங்கி, இது வரை எந்த சினிமாவிலுமே விரிவாக பேசப்படாத ஆழ்துளை கிணறு அவலங்களைக் கதையாக கொண்டு படமெடுத்தது வரை தன் முதல் படத்திலேயே தான் ஒரு சமூக அக்கறையுள்ள படைப்பாளி என்பதை பதிவு செய்த விதத்தில் நம் மரியாதைக்கு சொந்தக்காரர் ஆகிறார் இயக்குனர் கோபி நயினார். 'சமூகத்தை பிரதிபலிக்காத எந்தவொரு சினிமாவும், சினிமாவே அல்ல' என்பதை தீர்க்கமாக நம்பும் சமூக ஆர்வலரும் இயக்குனருமான கோபி, நேர்மையான கதை சொல்லல் மூலம் ஒவ்வொரு காட்சியிலுமே பார்வையாளர்களின் புருவம் உயர செய்கிறார். சரியான சாலைகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இல்லாத எண்ணற்ற கிராமங்களைக் கொண்ட நாட்டில், எத்தனை ராக்கெட்களை விண்ணில் செலுத்தினாலும் அது மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தப்போவதில்லை என்பதை உரக்க சொல்கிறது 'அறம்'. ஒவ்வொரு கிராமத்திலும், சேரியிலும், குடிசையிலும் தன் கனவுகளைத் தொலைத்த ஒரு 'ஒலிம்பிக்' வீரன் இருக்கிறான், கிராம மக்களுக்கு நடக்கும் எந்த கஷ்டங்களைப் பற்றியோ அவர்களது மரணத்தைப் பற்றியோ ஊடகங்களுக்கும் அரசுக்கும் கவலையில்லை என்பது உள்ளிட்ட பல கசப்பான உண்மைகளையும் சொல்கிறது இத்திரைப்படம்.

சரியாக இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் இத்திரைப்படத்தில், எங்குமே திரைக்கதையில் எந்த இடத்திலுமே அலுப்பு ஏற்படவில்லை. முதல் பாதி முழுக்க பரபரவென நகரும் திரைப்படம், இடைவேளையில் நம்மை நிலைகுலைய செய்கிறது. இரண்டாம் பாதி சற்றே மெதுவாக ரொம்பவே உணர்ச்சிப்பூர்வமாகவே நகர்ந்தாலும் பொழுதுபோக்கு அம்சங்களுக்கு இடம் ஏதுமில்லாமல் போனாலும் கூட, இறுதி வரை ரசிகர்களை கதையுடன் இறுகப்பிடித்து இழுத்து செல்கிறார் இயக்குனர்.

இது உண்மைச் சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்பதால், படத்தில் வரும் ஒவ்வொரு காட்சியுமே 'அந்த குழந்தைக்கு என்ன ஆகுமோ' என்கிற பயத்தை நமக்குள் கடத்தி செல்கிறது. கிட்டத்தட்ட 400 குழந்தைகள் இது போன்ற குழிகளில் (700 அடி குழிகளில் கூட) விழுந்திருக்கின்றன என்கிற தகவலும் பதைபதைக்க வைக்கிறது. 'மூச்சு விட முடியுதா? வேர்க்குதா? புழுக்கமா இருக்கா?' என்று கேட்கையில் 'ஒண்ணுக்கு வருது... ஜட்டியை அவுக்கணுமே, அம்மா திட்டுமே' என குழந்தை பதில் சொல்வது 'ஒண்ணுக்கு இருந்துட்டேன்' என அப்பாவியாக சிரிப்பது போன்ற நெகிழ்ச்சியான காட்சிகளும் ஆங்காங்கே உண்டு. 'வண்டியில காலி குடம் தெரியுது.. அது தெரியாம போட்டோ எடுத்து அனுப்பு', 'அரசாங்கம் ராக்கெட் விடுறதுல, நமக்கு என்ன பெருமை', 'விண்வெளிக்கு நொடிக்கு 7கி.மீ. வேகத்துல போக முடிஞ்ச நம்மளால, 90 அடி ஆழத்துல விழுந்த குழந்தையை காப்பாத்த முடியல', 'இந்தியா வல்லரசு ஆனதும் வாங்குன நவீன மெஷின் இதுதான்பா' என்பது போல படம் முழுக்க அரசை நேரடியாகவே தைரியமாக விமர்சிக்கும் பல வசனங்கள் உண்டு.

படத்தின் முதல் காட்சியில், பவர் பாலிடிக்ஸ் மற்றும் ஜனநாயக விரோதம் குறித்து நயன்தாராவுக்கும் அவரது உயர் அதிகாரிக்கும் நடக்கும் வாக்குவாதத்தில் தொடங்கி படம் முழுக்க வசனங்கள் வெகுவாக ஈர்க்கிறது. 'அதிகாரிங்க என்ன வேலை பாக்குறாங்கன்னு, மக்கள்கிட்ட போனாதான் தெரியும்', 'தாகம் எடுத்து சாகுறதை தடுக்க மருந்து எதுவும் இருக்கா?', 'மக்களுக்கு எது தேவையோ அதை தான் சட்டம் ஆக்கணுமே தவிர, சட்டத்தை உருவாக்கிட்டு அதுக்குள்ள மக்களை அடைக்கக்கூடாது', 'ஓட்டு கேட்டு வரும்போது தூரம் தெரியாது, எங்களுக்கு ஏதாச்சும் பிரச்சினைன்னு வரும்போதுதான் தூரமெல்லாம் தெரியும்', 'பொதுமக்கள் எதுக்கு நமக்கு மரியாதை குடுக்கணும்? நாம மரியாதை குடுத்தா, அவங்களும் குடுப்பாங்க' என ஒவ்வொரு வசனமுமே அரங்கில் கைத்தட்டல் பெறுகிறது. அதே சமயம், வசனங்கள் மிகச்சிறப்பாக இருந்தாலும் கூட, பல இடங்களில் வசனங்கள் மூலமாகவே எல்லாவற்றையும் பார்வையாளனுக்கு சொல்வது ஒரு குறையாகவே தெரிந்தது. தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி காட்சிகளைக் காட்டி அதன் மூலம் சில கருத்துக்களைப் பதிவு செய்வது ஆரம்பத்தில் சில காட்சிகளில் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அடிக்கடி அதையே செய்வது ஒரு கட்டத்திற்கு மேல் உறுத்தலாகவே தெரிந்தது.

கதை படத்தின் நாயகியை சுற்றி நகராமல் மையப் பிரச்சினையை சுற்றியே நடப்பதால், நடிப்பதற்கு மிகப்பெரிய அளவில் ஸ்கோப் ஏதும் இல்லாவிடினும் கூட தான் திரையில் தோன்றும் ஒவ்வொரு காட்சியிலும் அப்லாஸ் அள்ளுகிறார் நயன்தாரா. முதல் காட்சியிலிருந்தே, நம் கண்களுக்கு மாவட்ட ஆட்சியர் மதிவதனியாக மட்டுமே தெரியுமளவிற்கு அந்த பாத்திரத்தில் அவ்வளவு பாந்தமாக பொருந்தியிருந்தார். இது போன்ற படங்களைப் பார்க்கையில் தான், 'லேடி சூப்பர்ஸ்டார்' என்கிற பட்டத்திற்கு அவர் எந்தளவிற்கு தகுதியானவர் என்பது நினைவுக்கு வருகிறது. சிறுமியின் தாய் தந்தையர் ஆக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த ராமச்சந்திரன், சுனு லஷ்மி மிகச்சிறப்பாக நடித்திருந்தார்கள். மற்ற துணை கதாபாத்திரங்களில் நடித்திருந்த 'காக்கா முட்டை' ரமேஷ் மற்றும் விக்னேஷ், வினோதினி வைத்யநாதன், வேலா ராமமூர்த்தி, பழனி பட்டாளம் உள்ளிட்ட அனைவருமே தங்கள் பங்கினை குறைவின்றி செய்துள்ளனர். ஜிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் 'அறம்' திரைப்படத்தின் மிகப்பெரிய பலம்; படத்தின் தீம் மியூசிக், படம் முடிந்து வீடு திரும்பியும் இன்னமும் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. ஓம் பிரகாஷ் அவர்களின் ஒளிப்பதிவும், ரூபனின் படத்தொகுப்பும் படத்தின் நேர்த்தியான கதையோட்டத்திற்கு வலு சேர்த்துள்ளது

ஒரு சில குறைகளையும், இரண்டாம் பாதியில் இருந்த சிறு தடுமாற்றத்தையும் தவிர்த்து பார்த்தால், 'அறம்' இந்த ஆண்டின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்று!

கண்டிப்பாக, திரையரங்கில் கண்டு ரசிக்க வேண்டிய தரமான திரைப்படம்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்