முகப்புவிமர்சனம்

எப்படி இருக்கிறது சசிக்குமாரின் பழிக்குப் பழி வதம்? - அசுரவதம் விமர்சனம் - Asuravadham Movie Review

  | Friday, June 29, 2018

Rating:

எப்படி இருக்கிறது சசிக்குமாரின் பழிக்குப் பழி வதம்? - அசுரவதம் விமர்சனம் - Asuravadham Movie Review
 • பிரிவுவகை:
  ரிவென்ஞ் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  சசிக்குமார், வசுமித்ரா, நந்திதா, ஷீலா, ராஜசிம்மன், ஸ்ரீஜித் ரவி
 • இயக்குனர்:
  மருதுபாண்டியன்
 • தயாரிப்பாளர்:
  லீலா லலித்குமார்
 • எழுதியவர்:
  மருதுபாண்டியன்
 • பாடல்கள்:
  கோவிந்த்

வழக்கமான பழிக்குப்பழி கதையை, வழக்கத்துக்கு மாறான விதத்தில் சொல்லும் படமே `அசுரவதம்'

மளிகைக் கடை உரிமையாளர் சமயன் (வசுமித்ரா). ஏற்பட்ட வாக்குவாதத்தால் கோவித்துக் கொண்டு அப்பா வீட்டிலிருக்கிறாள் அவரின் மனைவி. இந்த சமயத்தில் வருகிறது ஒரு மொபைல் அழைப்பு. "என்ன பதட்டமா இருக்கியா, கவலைப்படாத எல்லாம் ஒரு வாரத்துக்குதான். அதுக்குப் பிறகு நீ உயிரோடயே இருக்கமாட்ட" என மிரட்டுகிறது மொபைலில் ஒலிக்கும் ஆண் குரல். அந்தக் குரல் சரவணனுடையது (சசிக்குமார்). கடைக்கு சென்றால் எதிரில் நிற்கிறார், நடந்தால் பின் தொடர்கிறார், ஓடினால் துரத்துகிறார், பாதுக்காப்புக்கு ஆட்கள் அழைத்து வந்தாலும் துப்பாக்கியோடு எதிர்த்து நிற்பது என வசுமித்ராவை விடாமல் துரத்துகிறார் சசிக்குமார். எதற்காக இந்த துரத்தல், ஏன் இத்தனை ஆவேசம், என்ன நடக்கிறது? என்பதை ஆற அமர வைத்து கதையாக விவரிக்கிறது 'அசுரவதம்'.

'சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது' படம் மூலமே நம்பிக்கயான அறிமுகம் கொடுத்தார் இயக்குநர் மருதுபாண்டியன். முதல் படத்தில் சில எளிய மனிதர்களின் வாழ்க்கையை சென்னையின் பிணைப்போடு காட்டியவர், இந்தமுறை கையில் எடுத்திருப்பது குரூர மனித புத்தியின் வக்கிரத்தையும், அதன் விளைவுகளையும். அடிக்கடி செய்திதாள்களில் பார்த்து கடக்கும் செய்திதான். என்றாலும் அதை மிக கனமாக கொடுத்து இன்னும் கொஞ்சம் ஜாக்கிரதை ஏற்படுத்த முயற்சித்திருக்கிறார்.

வசுமித்ராவுக்கு வரும் மிஸ்டுகாலில் இருந்து படம் துவங்கும் போதே ஒரு படபடப்பும் துவங்குகிறது. சசிக்குமார் இத்தனையும் செய்ய ஒரு வலுவான ஃப்ளாஷ்பேக் இருக்கிறது எனப் புரிந்து கொள்ள முடிந்தாலும் கூட, ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கிய படியே கதை நகர்த்தியிருப்பது சிறப்பு. தேவை இல்லாமல் பாடல்களோ, அனாவசிய காட்சிகள் எல்லாவற்றையும் தவிர்த்துவிட்டு கதை சொல்லியிருக்கும் விதமும் நன்று. தொடர்ந்து சினிமாவில் சொல்லப்பட்டுக் கொண்டிருக்கும் எல்லா கதைகளும் மிகப் பழசுதான். நமக்குத் தெரியாதது என்று ஒன்றும் இல்லை. ஆனால், கதை சொல்லும் விதம்தான் ஒரு படத்தை மிக சுவாரஸ்யமாக்குகிறது. அந்த விதத்தில்தான் அசுரவதம் ஒரு நல்ல சினிமாவாக முன்னே நிற்கிறது. ஆரம்பத்திலேயே வில்லன் யார், ஹீரோ யார் என சொல்லப்பட்டுவிடுகிறது. அதன் பின் எல்லாம் துரத்தல்கள் மட்டும்தான். உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஒருவனை ஓடவிட்டு அடிப்பதன் வலி அப்படியே பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

சசிக்குமார் இந்த சாயலில் சில படங்கள் செய்திருந்தாலும், இந்தக் கதாபாத்திரம் கொஞ்சம் புதிதாக இருக்கிறது. அழுத்தமாக இருக்கிறார், மிகக் குறைவாகப் பேசுகிறார், நடிப்பின் மூலம் உணர்வுகளைக் கடத்த முயற்சிக்கிறார் என நடிகராக இது நல்ல நகர்வு. குறிப்பிட்ட ஓர் காட்சியில் வசுமித்ரா சொல்வதைக் கேட்டு அதிர்ச்சியோடு ஒரு பார்வை கொடுப்பார், நடிகராக சசிக்குமாருக்கு இது நல்ல படம் எனச் சொல்ல அந்த ஒருகாட்சி போதும். வசுமித்ரா நடிப்பில் குதித்து விளையாடுவதற்கு நிறையவே ஸ்கோப் உள்ள படம். அதை தீவிரமாகவும் பயன்படுத்தியிருக்கிறார். சசிக்குமாருக்கு பயந்து இயற்கை உபாதைக்கு செல்லும் போது கூட துணைக்கு ஆள் அழைத்து செல்வது, யார்ரா நீ... யார்ரா நீ எனப் புலம்புவது, பிறகு கோபத்தில் "அவன பிடிச்சி தலைய வெட்டி..." என சீறுவதுமாய் பலமான நடிப்பை வழங்கியிருக்கிறார். ராஜசிம்மன், ஸ்ரீஜித் ரவி, நந்திதா ஸ்வாதி, ஷீலா, பவித்ராவாக நடித்த சிறுமி என முக்கிய பாத்திரங்கள் அத்தனையும் முழுமையான நடிப்பையே கொடுத்திருக்கிறார்கள்.

சசிக்குமார் - வசுமித்ரா எல்லாம் இல்லை நான் கலக்கிருக்கேன் பாருங்க என பளிச்சிடுகிறார் ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர். நிறைய இருட்டு காட்சிகள் உண்டு, கொடைக்கானலின் குளுமையும் உண்டு, காய்ந்த புல்லும், புழுதியும் மட்டும் இருக்கும் இடமும் உண்டு. ஆனால், எல்லாவற்றிலும் கதிர் காட்டியிருக்கும் நிறம் ஒரு பதற்றத்தை உண்டு பண்ணுகிறது. கோவிந்த் மேனன் பின்னணி இசை வசுமித்ராவின் பயத்தை பார்வையாளர்களுக்கும் கடத்துகிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டி இன்னொன்று திலீப் சுப்பராயணின் சண்டைக்காட்சிகள். அதிலும் லாட்ஜ் காரிடார் ஒன்றில் அமைக்கப்பட்டிருக்கும் சண்டைக்காட்சி அத்தனை மிரட்டல். இதுவரை ஒழுங்கே இல்லாமல் காட்சி படுத்தப்பட்டுக் கொண்டிருந்த ஒரு விஷயம் இந்தப் படத்தில் காட்சியாக அமைக்கப்பட்டுள்ள விதம் அவ்வளவு அழகு.

குறைகள் இல்லாமல் இல்லை. சசிக்குமார் துரத்துவதன் எண்ணம் புரிந்து விடுகிறது, பயமும் வந்துவிடுகிறது. அதன் பின்னும் ஸ்லோமோஷனில் நடந்து வந்து "நான் யாருன்னு உன் பொண்டாட்டியக் கேளு" என்பது கொஞ்சம் இழுவையாக இருக்கிறது. இதை எல்லாம் எதற்காக சசி செய்கிறார் எனத் தெரிந்து கொண்ட பிறகு, சரி கொஞ்சம் சீக்கிரம் படத்தை முடிங்கப்பா என அலுப்பு வருவதை தடுக்க முடியவில்லை. முதல் பாதியில் இருந்த அழுத்தம் இரண்டாம் பாதியில் மிகவும் குறைவு. சின்னச் சின்ன குறைகளை தவிர்த்துவிட்டு பார்த்தால், நிச்சயம் உங்களைக் கவரும் இந்த `அசுரவதம்'.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்