முகப்புவிமர்சனம்

அவள் திரைப்பட விமர்சனம் - Aval Movie Review

  | Monday, November 20, 2017

Rating:

அவள் திரைப்பட விமர்சனம் - Aval Movie Review
 • பிரிவுவகை:
  ஹாரர் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  சித்தார்த், ஆண்ட்ரியா
 • இயக்குனர்:
  மிலிந்த் ராவ்
 • தயாரிப்பாளர்:
  ஏடாகி பிக்சர்ஸ், வியாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ்
 • எழுதியவர்:
  மிலிந்த் ராவ்
 • பாடல்கள்:
  கிரிஷ்

‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘உதயம் NH4’, ‘ஜிகர்தண்டா’, ‘ஜில் ஜங் ஜக்’ என தொடர்ந்து அறிமுக இயக்குனர்கள் மற்றும் வளர்ந்து வரும் இயக்குனர்களின் கதைகளுக்கும் ‘காவியத்தலைவன்’, ‘எனக்குள் ஒருவன்’ போன்ற வித்தியாசமான முயற்சிகளுக்கும் முக்கியத்துவம் கொடுப்பவர் நடிகர் சித்தார்த். மிலிந்த் ராவ் இயக்கத்தில் இவர் நடித்து தயாரித்து இன்று வெளியாகியிருக்கும் ‘அவள்’ திரைப்படம் ‘இந்திய சினிமாவிலேயே இதுவரை கண்டிடாத அளவிற்கு பயமுறுத்தக்கூடிய பேய் படம்’ என்றும் ‘ஆங்கில சினிமாக்களுக்கு இணையான திகில் திரைப்படம்’ என்றும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. உண்மையிலேயே, அந்த விளம்பரங்களுக்கு எல்லாம் நியாயம் செய்யும் வகையில் ‘அவள்’ திரைப்படம் சுவாரஸ்யமாக இருக்கிறதா? தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்.

காதல் திருமணம் செய்து சந்தோஷமாக வாழ்ந்து வரும் டாக்டர் கிருஷ்ணகுமார் (சித்தார்த்) மற்றும் லக்ஷ்மி (ஆண்ட்ரியா) தம்பதியின் பக்கத்து வீட்டில் குடியேறுகிறார்கள் பால் (அதுல் குல்கர்னி) மற்றும் குடும்பத்தினர். பால் அவர்களின் வீட்டில் நடக்கும் சில அமானுஷ்யமான சம்பவங்களால், கிருஷ்ணகுமார் வீட்டிலும் அமைதி குலைகிறது. தொடர்ந்து நடக்கும் துர்சம்பவங்களால் பதற்றம் அதிகரிக்கும் நேரத்தில், கிருஷ்ணகுமார் மற்றும் பால் தங்கள் குடும்பத்தினரை காப்பாற்றினார்களா இல்லையா என்பதே ‘அவள்’ திரைப்படத்தின் கதை.

ஒரு நேர்மையான, சுவாரஸ்யமான திகில் திரைப்படத்தை கொடுக்க முயற்சித்துள்ளார் இயக்குனர் மிலிந்த் ராவ். ஒரு நல்ல திகில் திரைப்படத்திற்கு என்ன தேவையோ, அந்த விஷயங்களுக்கு மட்டும் தனது ஸ்க்ரிப்டில் இடமளித்து தேவையில்லாத கமர்ஷியல் அம்சங்களை முற்றிலும் தவிர்த்துள்ளார். தேவைக்கு அதிகமாக ரொமான்ஸ் காட்சிகளை வைக்காமல், தேவையே இல்லாத பாடல் காட்சிகளில் நேரத்தை வீணடிக்காமல், தமிழ் சினிமா பார்த்து சலித்த ‘ஹாரர் காமெடி’ பாணியை பின்பற்றி காமெடி டிராக் வைக்காமல் இருந்ததே மிகப்பெரிய ஆறுதல். படம் ஓடக்கூடிய இரண்டே கால் மணிநேரமும், கதையிலிருந்து எங்கும் விலகாதிருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்திருக்கின்றனர்.

ஒரு திகில் படத்திலோ அல்லது பேய் படத்திலோ ஒரு சினிமா ரசிகன் எதிர்பார்ப்பது, அத்திரைப்படம் எவ்வளவு திகிலாக இருக்கின்றது என்பதையே. அந்த வகையில், ‘அவள்’ திரைப்படம் பல இடங்களில் நம்மை மிரள வைக்கிறது. ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் ஒரு முறையோ அல்லது இருபது நிமிடத்திற்கு ஒரு முறையோ, அரங்கையே அதிர செய்வதைப் போல் ஒரு திகில் காட்சி இருக்கிறது. படம் தொடங்கிய முதல் 20 நிமிடங்களில் வரும் சில வலிந்து திணிக்கப்பட்ட திகில் காட்சிகள், ஒரு சில இடங்களில் தேவையே இல்லாமல் சத்தமான பின்னணி இசை மூலம் பார்வையாளர்களை பயமுறுத்த நினைப்பது (பந்தினால் கண்ணாடி உடையும் காட்சி, கிரிஷ்ஷை ஜெனி பின்னாலிருந்து அழைக்கும் காட்சி), நீளமான ஒரு காட்சியை வைத்துவிட்டு கனவு என சொல்வது (இன்னும் எத்தனை ஆண்டுகளுக்கு நமது பேய் படங்களில் இப்படிப்பட்ட காட்சிகள் வருமோ?) போன்ற விஷயங்களைத் தாண்டி, நம்மை பதற்றமடைய செய்யும் அளவிற்கு பல பயங்கரமான காட்சிகள் இப்படத்தில் உண்டு; இதுவே இப்படத்தின் வெற்றியையும் ஊர்ஜிதம் செய்கிறது. இரண்டாம் பாதியில் வரும் ஒரு மூளை அறுவை சிகிச்சை காட்சியை குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும், அதே போல ஜெனி கிணற்றில் குதிக்கும் காட்சி, நடு இரவில் பியானோ சத்தம் கேட்கும் காட்சி, தனக்கு என்ன நடந்ததென ஜெனி டாக்டரிடம் விவரிக்கும் காட்சி, இடைவேளை காட்சி, வீட்டில் இருக்கும் பணிப்பெண் மரணமடையும் காட்சி என படம் நெடுக பீதியைக் கிளப்பும் பல காட்சிகள் உண்டு.

‘அவள்’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம், கதையின் ஓட்டத்திற்கு எக்கச்சக்கமாக வலு சேர்க்கும் டெக்னிக்கல் அம்சங்கள். ஷ்ரேயாஸ் கிருஷ்ணாவின் அபாரமான ஒளிப்பதிவும், லாரன்ஸ் கிஷோரின் படத்தொகுப்பும், விஷ்ணு கோவிந்த்-ஸ்ரீ சங்கர்-விஜய் ரத்தினம் ஆகியோரின் ஒலி வடிவமைப்பும், கிரீஷ் கோபாலகிருஷ்ணனின் பின்னணி இசையும் நிஜமாகவே ஒரு ஆங்கில திரைப்படம் பார்ப்பதற்கு நிகரான ஒரு உணர்வை தருகின்றன. கலை இயக்கம், ஒப்பனை உள்ளிட்ட மற்ற அனைத்து துறையினருமே கூட குறிப்பிட்டு சொல்லும்படியான வகையில், படத்தின் தரத்திற்காக உழைத்துள்ளனர். படத்தின் நடிகர், நடிகையர் தேர்வும் மிகச் சிறப்பாக இருந்தது. சித்தார்த், ஆண்ட்ரியாவின் கெமிஸ்ட்ரியும் சின்ன சின்ன ஊடல்களும் அவர்களை நிஜ கணவன்-மனைவியைப் போலவே காட்டியது. ஆனால், ரொமான்ஸ் காட்சிகளையும் கடைசி அரைமணி நேரத்தையும் தாண்டி வேறெங்கும் அதிகம் நடிக்க ஸ்கோப் இல்லாத இவர்கள் இருவரையும் ஓவர்டேக் செய்து முந்துவது துணை கதாபாத்திரங்களில் வரும் அனிஷா விக்டர், சுரேஷ், அதுல் குல்கர்னி ஆகியோரே.

பேய் திரைப்படங்கள் என்றாலே ஒரு குறிப்பிட்ட ஃபார்முலாவிற்குள்தான் இருக்கவேண்டும் என்கிற எழுதப்படாத விதிக்கு எவ்வகையிலும் விலகி நிற்காமல், எல்லா பேய் படங்களிலும் வரும் எல்லா வழக்கமான விஷயங்களும் இந்த படத்திலும் உண்டு; அதை சொன்ன விதத்தில் மட்டும் கொஞ்சம் மாறுபட முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், படத்தில் எந்தவொரு திருப்பமும் ட்விஸ்டும் புதிதாகவோ அல்லது கணிக்க முடியாதபடியோ இல்லாததால் திகில் காட்சிகள் மட்டுமே இப்படத்தின் பலம் என சொல்லவேண்டியிருக்கிறது. முடிந்தளவிற்கு பார்வையாளர்களை புத்திசாலிகளாக நினைத்து தங்கள் படத்தை அணுக வேண்டும் என முயற்சித்திருந்தாலும், ஜெனியின் அறையை நோட்டமிடும் டாக்டரின் எண்ணங்களுக்கு சப்டைட்டில் போடுவது, இரண்டு முறை வசனங்களில் சொன்ன ஒரு கருத்தை கடைசியில் தனியாக ஒரு ஸ்லைட் ஆக வேறு போடுவது என ஆங்காங்கே spoon-feed செய்தும் இருக்கிறார்கள். எந்த ஹாலிவுட் திரைப்படத்தில் இருந்தும் காட்சிகளை வைக்காவிடினும் கூட, பல இடங்களில் சமீபத்திய ஹாலிவுட் திகில் திரைப்படங்களின் தாக்கம் சற்று அதிகமாகவே தெரிகிறது.

பொதுவாக, இது போன்ற ஹாரர் திரைப்படங்களில் பேயாக திரியும் ஆத்மாக்களின் நோக்கம் என்ன, அவற்றை ஹீரோவும் உடனிருப்பவர்களும் எப்படி கையாளப் போகிறார்கள் என்கிற விஷயமே மற்ற பேய் படங்களில் இருந்து தனித்து காட்டும். அந்த வகையில், இப்படத்தில் வரும் ஃபிளாஷ்பேக்கோ அல்லது படத்தின் கிளைமாக்ஸோ பெரிதாக ஈர்க்கவில்லை. முக்கியமாக, ரொம்பவே இழுக்கப்பட்டு சுவாரஸ்யமின்றி சொல்லப்பட்ட கிளைமாக்ஸ் பெரிதளவில் ஏமாற்றமளித்தது; அந்த கிளைமாக்ஸினாலேயே இத்திரைப்படம் வழக்கமான ஒரு பேய் படத்தைப் பார்க்கும் உணர்வையும் தந்தது. ஆனால், அதையும் தாண்டி கிளைமாக்ஸிற்கு பின் வரும் கிரிஷ்ஷின் மகனை காட்டும் காட்சியில் இயக்குனரின் டச் ‘நறுக்’ என இருந்தது! அதே போல இன்னும் போல காட்சிகள் படம் முழுக்க இருந்திருந்தால், இன்னும் அதிகம் பாராட்டியிருக்கக்கூடிய படமாக அமைந்திருக்கும்.

ஒரு சில வழக்கமான காட்சிகளை தவிர்த்து, திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் ‘யாவரும் நலம்’, ‘பீட்சா’ போல மிகச்சிறந்த ஒரு திகில் திரைப்படமாக அமைந்திருக்கும் ‘அவள்’! இருப்பினும், குறைகளையும் தாண்டி நம்மை பல காட்சிகளில் பயமுறுத்தி இருக்கைகளில் இறுதி வரை கட்டிப்போட்டத்தில் ஜெயிக்கிறது மிலிந்த் ராவின் ‘அவள்’.


 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்