முகப்புவிமர்சனம்

பலூன் திரைப்பட விமர்சனம் - Balloon Movie Review

  | Saturday, December 30, 2017

Rating:

பலூன் திரைப்பட விமர்சனம் - Balloon Movie Review
 • பிரிவுவகை:
  ஹாரர் காமெடி த்ரில்லர்
 • நடிகர்கள்:
  ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு
 • இயக்குனர்:
  சினிஷ்
 • தயாரிப்பாளர்:
  திலிப் சுப்பாராயன்
 • எழுதியவர்:
  சினிஷ்
 • பாடல்கள்:
  யுவன் ஷங்கர் ராஜா

பிரபல ஸ்டண்ட் டைரக்டர் திலீப் சுப்பராயன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் சினிஷ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர், யோகி பாபு நடிப்பில் வெளியாகியிருக்கும் திகில் காமெடி திரைப்படம் ‘பலூன்’.

நடிப்பு, காமெடி, ஆக்ஷன் என எல்லா திறமைகளும் இருந்தும் கூட, தொடர்ந்து சுமாரான படங்களில் நடித்ததாலும் மோசமான ஸ்க்ரிப்ட்களை தேர்ந்தெடுத்ததாலும், சினிமாத்துறையில் தனக்கென ஒரு நிலையான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருபவர் நடிகர் ஜெய். பொதுவாக இது போன்ற சூழ்நிலைகளில், எப்படியாவது ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் ஈஸியாக ஒரு ஹிட் கொடுக்க வேண்டும் என பெரும்பாலான நடிகர்கள் செய்யும் காரியம் – தொடர்ந்து 2, 3 காமெடி படங்களில் நடிப்பது அல்லது பேய் படங்களில் நடிப்பது. அதையே, நடிகர் ஜெய்யும் செய்துள்ளார். பேய் படத்தில் நடிக்க நினைத்தது தவறல்ல, ஆனால் அடித்து துவைத்து பல முறை பார்த்து அலுத்தும், வெறுத்தும் போன ஒரு கதையை தேர்ந்தெடுத்துள்ளார் நடிகர் ஜெய்.

பல ஆண்டுகளாய் யாருமே நுழைந்திடாத ஒரு பாழடைந்த பழைய வீடு, அந்த வீட்டிலுள்ள அமானுஷ்யமும் அதனால் நடக்கும் துர்சம்பவங்களால் பாதிக்கப்படும் ஹீரோவும் அவரது குடும்பமும், யார் அந்த பேய், பேயாக வந்திருக்கும் அந்த ஆத்மாவுக்கு என்ன ஆனது, அதற்கு என்ன வேண்டும், அந்த பேயின் ஃபிளாஷ்பேக், அதற்கு பின் அந்த பேயின் கதையை கேட்டு மனமுருகும் ஹீரோ அந்த பேய் சார்பாக தான் போய் பழிவாங்குவது அல்லது அந்த பேயை விரட்ட முயற்சிப்பது என ‘சந்திரமுகி’, ‘முனி’, ‘காஞ்சனா’, ‘அரண்மனை’ என பல நூறு முறை நாம் சலிக்க சலிக்க பார்த்து தீர்த்த அதே டெம்ப்ளேட் கதை சொல்லல். மருந்துக்கு கூட எதையும் புதிதாக முயற்சி செய்துவிட யோசிக்கக்கூடாது என சத்தியம் செய்திருப்பார்கள் போல. அந்தளவிற்கு பழைய திரைக்கதை மற்றும் வழக்கமான காட்சிகள். சரி, ஃபிளாஷ்பேக்கில் ஏதாவது புதிதாக சொல்லியிருப்பார்கள் என காத்திருந்தால் அதிலும் கூட அப்படி எதுவுமே இல்லை; ஃபிளாஷ்பேக்கில் வரும் கதாபாத்திரங்களின் மரணம் கூட, சமீபத்தில் வந்த ‘அரண்மனை 2’ படத்தை நினைவுபடுத்தியது.

படத்தில் ஒரேயொரு திகில் காட்சி கூட, படம் பார்க்கும் ரசிகர்களை எங்குமே பயமுறுத்தவே இல்லை. சொல்லப்போனால், இயக்குனர் எங்குமே ரசிகர்களை திகிலடைய செய்ய முயற்சிக்க கூட இல்லை. திடீரென விளக்குகளை அணைப்பது, திடீர் திடீரென சத்தங்கள் எழுப்புவது, பேய்களை காட்டிவிட்டு கனவு என சொல்வது என 1990கள் பாணியிலேயே தான் ரசிகர்களை பயமுறுத்த முயற்சித்திருக்கிறார்கள்.

முதல் பாதியில் வரும் ஒரு சில ரசிக்கத்தக்க காமெடி காட்சிகள் மட்டுமே, ஓரளவிற்கு படத்தைக் காப்பாற்றுகிறது. பப்புவாக நடித்திருக்கும் சிறுவனின் சேட்டைகளும், நடிப்பும் மக்களின் கைத்தட்டல்களை பெறுகிறது. யோகி பாபு தோன்றும் எல்லா காட்சிகளிலுமே தனது டைமிங் காமெடி மூலம் அரங்கில் சிரிப்பலைகளை ஏற்படுத்துகிறார். அதே சமயம், ஏதோ மொத்த படமுமே யோகி பாபுவைத்தான் நம்பி இருப்பதைப் போல எல்லா காட்சிகளிலுமே அவரை மட்டுமே பக்கம் பக்கமாக பேசவைத்திருப்பதும் ஒரு கட்டத்திற்கு மேல் சோர்வடைய செய்கிறது; பேய் வந்தாலும் காமெடி பண்ணுவது, சீரியஸான எமோஷனல் காட்சிகளிலும் காமெடி பண்ணுவது என தொடர்ந்து முதல் பாதி முழுக்க அவர் மீது மட்டுமே கவனம் இருந்ததும், சில முக்கிய காட்சிகளில் சம்பந்தமே இல்லாமல் ‘தெறிக்க விடலாமா’ வசனத்தையும் ‘மங்காத்தா’ தீம் மியூசிக்கையும் பயன்படுத்துவது, பட ரிலீஸிற்கு முன் கடைசி நிமிடத்தில் கம்போஸ் செய்யப்பட்ட ‘பிக் பாஸ்’ ஓவியாவின் புகழை பிரதிபலிக்கும் வகையிலான ‘ஷட் அப் பண்ணுங்க’ பாடல் வெளியீடு எல்லாம் இயக்குனருக்கு தன் கதை மீது இல்லாத நம்பிக்கையின்மையையே காட்டுகிறது. இடைவேளை வரையிலுமே கதையை நோக்கி பெரிதாக நகராத ‘பலூன்’, இரண்டாம் பாதியிலும் அதே வேகத்திலேயே நகர்கிறது. திரைக்கதை அங்கும் இங்கும் அலைபாய்ந்து ஒரு வழியாக ஃபிளாஷ்பேக் தொடங்குவதற்குள், நமக்கு அயர்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது. வில்லனின் கதாபாத்திரமும், வில்லன் காட்டப்பட்ட விதமும் அவர் தோன்றும் காட்சிகளும் ரொம்பவே நாடகத்தனமாக இருந்ததும் மிகப்பெரிய மைனஸ்.

ஜெய், அஞ்சலி, ஜனனி ஐயர் மூவருக்குமே நடிப்பதற்கோ எமோட் செய்வதற்கோ பெரிய ஸ்கோப் ஏதும் இல்லாவிடினும் கூட, மூன்று பேருமே தங்களது பங்கினை சிறப்பாக செய்துள்ளனர். யோகி பாபு, கார்த்திக் யோகி, பப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் சிறுவன் என மற்ற துணை நடிகர்களும் குறைகளின்றி நடித்திருக்கின்றனர். ஆர்.சரவணனின் ஒளிப்பதிவு, ‘பலூன்’ திரைப்படத்தின் மிகப்பெரிய பலம்; ஒரு திகில் படத்திற்கு தேவையான பக்காவான மூடினை செட் செய்கிறது அவரது ஒளிப்பதிவு. படத்தின் டைட்டில் கார்டில் இயக்குனரின் பெயரை எல்லாம் போட்டுவிட்டு, அதற்கு பின் இறுதியாக ‘யுவன் ஷங்கர் ராஜா மியூசிக்கல்’ என போட்டு யுவனை கௌரவிக்கிறார்கள், அவரது ரசிகர்களும் அதைப் பார்த்து ஆர்ப்பரிக்கிறார்கள். ஆனால், அதற்கு சிறிதும் நியாயம் செய்யாமல் போகிறது பாடல்கள். ஒரே ஒரு பாடல் கூட ரசிக்கும்படியோ, மனதில் நிற்கும்படியோ இல்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றம்; பின்னணி இசையில் கதைக்கேற்றவாறு தன் பங்கினை சிறப்பாக செய்துள்ளார் யுவன்.

மொத்தத்தில், ‘எவ்வளவு பழைய கதையாக இருந்தாலும் சரி, எத்தனை முறை பார்த்து சலித்த காட்சிகளாக இருந்தாலும் சரி... காமெடி பேய் படங்கள் என்றால் பார்ப்பேன்’ என சொல்பவர்களுக்கு மட்டுமே இந்த காற்று நிறையாத பலூனை பரிந்துரைக்கலாம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்