முகப்புவிமர்சனம்

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்பட விமர்சனம் - Bhaskar Oru rascal Movie Review

  | Friday, May 18, 2018

Rating:

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ திரைப்பட விமர்சனம் - Bhaskar Oru rascal Movie Review
 • பிரிவுவகை:
  காமெடி டிராமா
 • நடிகர்கள்:
  அரவிந்த் சாமி, அமலா பால், பேபி நைநிகா, மாஸ்டர் ராகவன், சூரி, ரோபோ ஷங்கர், ரமேஷ் கண்ணா
 • இயக்குனர்:
  சித்திக்
 • தயாரிப்பாளர்:
  ஹர்ஷினி மூவீஸ்
 • எழுதியவர்:
  சித்திக்
 • பாடல்கள்:
  அம்ரீஷ்

இளைஞர்களுக்கும் ஃபேமிலி ஆடியன்ஸிற்கும் பிடித்தாற்போல ஜனரஞ்சகமான நகைச்சுவை பொழுதுப்போக்கு திரைப்படங்கள் எடுப்பதும், தொடர்ந்து அவற்றை வெற்றிப்படங்களாக கொடுப்பதும் சாதாரண விஷயமல்ல. அந்த வகையில், தென்னிந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் சித்திக். 1980களின் தொடக்கத்தில் இவர் இயக்கிய சில அட்டகாசமான காமெடி திரைப்படங்கள் தான் மலையாள சினிமாவின் காமெடி படங்களுக்கெல்லாம் டிரெண்ட்செட்டராகவே இருந்தது என்று கூட சொல்லலாம். ‘ஃப்ரண்ட்ஸ்’, ‘காவலன்’, ‘எங்கள் அண்ணா’, ‘அரங்கேற்ற வேளை’, ‘வியட்நாம் காலனி’ ஆகியவை தமிழ் சினிமாவில் இவர் இயக்கத்திலும் / எழுத்திலும் உருவான திரைப்படங்கள் ஆகும். இவரது இயக்கத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015ஆம் ஆண்டில் வெளியான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ திரைப்படமே, தற்பொழுது தமிழில் அரவிந்த்சாமி, அமலா பால் நடிப்பில் ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ என்கிற பெயரில் ரீமேக் ஆகியுள்ளது.

அடிதடி, கட்டப்பாஞ்சாயத்து என சுற்றிக்கொண்டிருக்கும் அரவிந்த்சாமியால் தனது தாயில்லா பிள்ளைக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. தனது மகனின் கோடை விடுமுறையில் அவனோடு நெருங்கி பழகலாம் என நினைக்கையில், அவனுக்கு தன்னையும் தன் முரட்டு சுபாவத்தையும் பிடிக்கவில்லை என தெரிகிறது. தன் கணவனின் மரணத்திற்கு பிறகு தனது ஒரே மகளுடன் வாழ்ந்து வரும் அமலா பாலுக்கும், சமூகத்தால் சில பிரச்சினைகள் தொடர்ந்து வருகிறது. நெருங்கிய நண்பர்களான இவர்கள் இருவரது பிள்ளைகளுக்கும், அரவிந்த்சாமியும் அமலா பாலும் மறுமணம் செய்துகொண்டால் தங்களுக்கு ஒரு அன்பான அப்பா, அம்மா கிடைப்பார்கள் என்கிற ஆசை ஏற்படுகிறது. முதலில் குழந்தைகளுக்காக மட்டுமே ஒப்புக்கொள்ளும் அரவிந்த்சாமி மற்றும் அமலா பால், நாளடைவில் நிஜமாகவே ஒருவரையொருவர் விரும்ப தொடங்குகின்றனர். இந்நிலையில், அமலா பாலின் கணவன் திடீரென உயிரோடு வந்து நிற்கிறான். அமலா பால் யார்? அவரது கணவன் யார்? அமலா பாலும், அரவிந்த்சாமியும் இணைந்தார்களா என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்கிறது படத்தின் இரண்டாம் பாதி.

சித்திக் அவர்களின் காமெடி + சென்டிமெண்ட் என்கிற வழக்கமான ஸ்டைலில் தொடங்குகிறது முதல் பாதி. கிட்டத்தட்ட முதல் ஒரு மணிநேரம் வரை சற்றே ரசிக்கும்படி நகரும் திரைப்படம், அமலா பாலின் ஃபிளாஷ்பேக் தொடங்கிய நொடியிலிருந்து ஒட்டுமொத்தமாக தடம் புரள்கிறது. இரண்டாம் பாதி முழுக்கவே ஏனோ தானோவென்று, எந்த நோக்கமுமில்லாமல் நகர்கிறது. அமலா பாலின் கணவர் கதாபாத்திரத்திற்கான தேர்வும், வில்லனாக வரும் நடிகர் சித்திக்கின் தமிழ் டப்பிங் குரலுமே, ஏதோ ஒரு டப்பிங் ஹிந்தி சீரியல் பார்க்கும் உணர்வை ஏற்படுத்துகிறது.

வழக்கமாக, சித்திக் அவர்களது படங்களில் வயிறு குலுங்க சிரிக்கவைக்கும் காமெடி காட்சிகளும் ரொம்பவே இயல்பான சென்டிமெண்ட் காட்சிகளும் இடம்பெறும். ஆனால், இந்த படத்தில் அது இரண்டுமே கொஞ்சம் கூட எடுபடவில்லை. ரோபோ ஷங்கர், பரோட்டா சூரி, ரமேஷ் கண்ணா கூட்டணி சில காட்சிகளில் மட்டுமே சிரிக்க வைத்தும் பல காட்சிகளில் கடுப்பேற்றவும் செய்கிறார்கள். ரமேஷ் கண்ணா எழுதியுள்ள வசனங்கள் எல்லாமே ரொம்ப பழைய எஸ்.எம்.எஸ் ஜோக்குகளாகவும், வாட்ஸப் ஃபார்வார்ட் ஜோக்குகளாகவுமே இருப்பது இன்னும் கொடுமை. முதல் பாதியில் ஆங்காங்கே சில சென்டிமெண்ட் காட்சிகள் ஓகேவாக இருந்தாலும், அதன் பின் வரும் எமோஷனல் காட்சிகள் எல்லாமே மிகவும் நாடகத்தனமாகவே இருக்கிறது.

மொத்த படத்தையும் ஓரளவுக்கு காப்பாற்றுவது, அரவிந்த்சாமி அவர்களின் நடிப்பும் பேபி நைனிகாவும் மாஸ்டர் ராகவனும் மட்டுமே. வயதுக்கு மீறிய பக்குவத்துடன் குழந்தைகள் பேசுவது ரொம்பவே செயற்கையாக இருந்தாலும் கூட, இரு குழந்தைகளின் துறு துறு சேஷ்டைகளையும் மழலை பேச்சையும் பார்த்துக்கொண்டிருப்பதே இனிமையாகத்தான் இருக்கிறது. கோபக்கார பாஸ்கராக பிரித்து மேய்ந்திருக்கிறார் அரவிந்த்சாமி. தனக்கு பாடம் எடுக்கும் தன் மகனிடம் ‘மேனர்ஸ்’ கற்றுக்கொள்வது, தன் மகனுக்கு தன்னை பிடிக்கவில்லையோ என நினைத்து கலங்குவது, ஹெலிகாப்டர் கிடைக்காததால் ஆம்புலன்ஸில் செல்வது, ‘உன் சல்மான் கான் போட்டா ஸ்டைலு, நான் போட்டா நல்லா இல்லையோ?’ என தன் மகனிடம் கோபித்து கொள்வது, நாசாரிடம் ‘போன வாரம் உங்களுக்கு கலக்குச்சே, அப்போ நான் கேட்டேனா’ என அப்பாவியான தொனியில் கேட்டு காமெடியில் அசத்துவது, ‘உன் அம்மா மாதிரி யாருமே வரமாட்டாங்கடா’ என மகனிடம் ஆறுதல் சொல்வது என தனியாளாக மொத்த படத்தையும் காப்பாற்ற முயன்றிருக்கிறார். நடிப்பதற்கு ஓரளவு ஸ்கோப் இருந்தாலும் கூட, அமலா பால் எங்குமே பெரிதாக சோபிக்கவில்லை. வில்லன் சித்திக்கும், அஃப்தாபும் ஏதோ காமெடியன்கள் போலவே படம் நெடுக வலம் வருகிறார்கள்.

கிளைமாக்ஸில் வரும் சண்டைக்காட்சியில் கூட பார்வையாளர்களுக்கு பதட்டம் ஏற்படுவதற்கு பதில், சிரிப்பே வருகிறது. அந்தளவிற்கு மோசமான சண்டைக்காட்சியமைப்பு, எடிட்டிங் மற்றும் VFX. படத்தின் பாடல்கள் எதுவுமே மனதில் நிற்கவே இல்லை, பின்னணி இசையும் மிகப்பெரிய மைனஸாகவே இருந்தது.

மலையாளத்தில் வெளியான பொழுதே சுமார் படம் என்று மட்டுமே பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ திரைப்படத்தை, தமிழில் எந்த நம்பிக்கையில் ரீமேக் செய்தார்கள் (இன்னும் மோசமாக) என தெரியவில்லை.

‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ – படு சுமாரான ஒரு காமெடி டிராமா திரைப்படம்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்