முகப்புவிமர்சனம்

சென்னையில் ஒரு நாள் 2 திரைப்பட விமர்சனம் - Chennaiyil Oru Naal 2 movie review

  | Monday, November 20, 2017

Rating:

சென்னையில் ஒரு நாள் 2 திரைப்பட விமர்சனம் - Chennaiyil Oru Naal 2 movie review
 • பிரிவுவகை:
  க்ரைம் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  சரத்குமார், சுஹாசினி, நெப்போலியன்
 • இயக்குனர்:
  ஜே பி ஆர்
 • தயாரிப்பாளர்:
  ராம் மோகன்
 • எழுதியவர்:
  ராஜேஷ் குமார்
 • பாடல்கள்:
  ஜேக்ஸ் பிஜோய்

2008ஆம் ஆண்டு, வாகன விபத்தில் இறந்த சென்னையை சேர்ந்த ஹிதேந்திரன் என்கிற சிறுவனின் உடலுறுப்புகளை டிராபிக்கிற்கு நடுவே 50 கிலோமீட்டர் கடந்து சென்று சேர்த்த பரபரப்பான சம்பவத்தை மையமாக வைத்து 2011ஆம் ஆண்டில் மலையாளத்தில் 'டிராஃபிக்' என்கிற திரைப்படம் உருவானது. நடிகர் கமலஹாசன் தயாரிப்பில் தமிழில் ரீமேக் ஆகவிருந்த இத்திரைப்படம், பின்னர் ராதிகா சரத்குமார் தயாரிப்பில் உருவானது. 'சென்னையில் ஒரு நாள்' என்கிற பெயரில் 2013இல் வெளியாகி வெற்றி பெற்ற இத்திரைப்படத்தில் நடிகர் சரத்குமார் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். தற்பொழுது 4 ஆண்டுகள் கழித்து, அறிமுக இயக்குனர் JPR இயக்கத்தில் சரத்குமாரே நடித்து இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 'சிங்கம்', 'வேலையில்லா பட்டதாரி', 'முனி', 'பில்லா', 'சென்னை 600028', 'பசங்க', 'அரண்மனை', 'பீட்சா', 'கோ', 'ஜித்தன்', 'ஜெய் ஹிந்த்', 'நான் அவன் இல்லை' என எத்தனையோ படங்களின் அடுத்தடுத்த பாகங்கள் எடுக்கப்பட்டிருந்தாலும் கூட, அவற்றில் பாதி படங்கள் கூட வெற்றி பெறவில்லை. அடுத்த 2 ஆண்டுகளில் 'சாமி 2', 'எந்திரன் 2', 'இந்தியன் 2', 'திருட்டுப் பயலே 2' 'சதுரங்க வேட்டை 2' 'மாரி 2' உட்பட 15 படங்களின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது. அதிலும் 'சென்னை 600028', 'சிங்கம்' போன்ற ஒரு சில படங்களில்தான் கதாபாத்திரங்களும், கதையின் தொடர்ச்சியும் சீராக இருந்திருக்கின்றது; இது போன்ற ஒன்றிரண்டு படங்களில் தான் sequelக்கான தேவையும் ஸ்கோப்பும் கூட இருந்திருக்கிறது. மற்ற எல்லா படங்களுமே முதல் பாகம் வெற்றியடைந்ததால் மட்டுமே அல்லது கதை பஞ்சத்தாலோதான் எடுக்கப்பட்டிருக்கின்றன என சொன்னால் அது மிகையாகாது. 'முனி', 'அரண்மனை' போன்ற பெரும்பாலான திரைப்படங்களில் கதை என எதுவுமே இன்றி, முந்தைய பாகத்தில் வந்த காட்சிகளையே எடுத்து வைத்து 'பொழுதுபோக்கு' என்கிற பெயரில் லாபம் பார்த்தனர். 'சென்னையில் ஒரு நாள் - பார்ட் 2' திரைப்படம், இவற்றில் எந்த வகையில் சேர்கிறது? தொடர்ந்து படியுங்கள்.

இப்படத்தின் போஸ்டர்களில் 'சென்னையில் ஒரு நாள் - பார்ட் 2' என்கிற பெயருக்கு கீழே 'This time at Coimbatore' என்கிற கேப்ஷனை பார்க்கையிலேயே, நகைக்காமல் இருக்க முடியவில்லை; கதை கோவையில் நடக்கிறதென்றால் 'கோயம்புத்தூரில் ஒரு நாள்' என்றே பெயர் வைத்திருக்கலாமே என்கிற கேள்வியும் எழாமல் இல்லை. ஆனால், 2013ஆம் ஆண்டு வெளியான 'சென்னையில் ஒரு நாள்' படத்தின் கதையுடன் எந்த சம்பந்தமும் இல்லாத இப்படத்திற்கு இப்படி பெயரிட ஒரே காரணம் 'இரண்டாம் பாகம்' என சொல்லி எளிதாக விளம்பரம் செய்திட மட்டுமே!

எழுத்தாளர் ராஜேஷ் குமார் அவர்களின் க்ரைம் த்ரில்லர் நாவலை தழுவி இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தளவிற்கு மோசமாக ஒரு ராஜேஷ் குமார் நாவலை படமாக்கவே முடியாது என்றே சொல்லுமளவிற்கு இப்படத்தின் காட்சியமைப்பும் மேக்கிங்கும் இருக்கிறது. இந்தளவிற்கு சுவாரஸ்யமே இல்லாத, தூக்கத்தை வரவழைக்கிற ஒரு த்ரில்லர் திரைப்படத்தை சமீபத்தில் பார்த்திடவும் இல்லை. ஒன்றே முக்கால் மணி நேரத்திற்கும் குறைவாகவே ஓடும் இத்திரைப்படம் முடிவதற்குள், அரை நாளை கடந்ததைப் போலானதொரு பெரும் அயர்ச்சி ஏற்படுகிறது. ஒரு க்ரைம் த்ரில்லர் என்றால் எந்தளவிற்கு பரபரப்பாக இருக்க வேண்டுமோ, அதற்கு நேர்மாறாக இப்படத்தில் இருக்கும் ஒரேயொரு காட்சி கூட பார்வையாளர்களை சுவாரஸ்யப்படுத்தவோ, பதட்டமடையவோ அல்லது இறுக்கமாக்கவோ செய்திடாமல் தேமே என நகர்கிறது.

இன்னும் சொல்லப்போனால், இப்படத்தைப் பார்க்கையில் ஒரு திரைப்படத்தை பார்க்கிறோம் என்கிற உணர்வே எங்கும் ஏற்படவில்லை. 100 நிமிடங்கள் ஓடக்கூடிய ஒரு மட்டமான குறும்படத்தையோ, சீரியலையோ பார்க்கும் உணர்வு மட்டுமே ஏற்பட்டது. அந்தளவிற்கு படம் முழுக்க எடிட்டிங், ஒளிப்பதிவு, நடிப்பு, திரைக்கதை என எல்லா விஷயத்திலுமே ஒரு மெத்தனப்போக்கே காணப்பட்டது.

டைட்டில் கார்டிலும் ஆங்காங்கே ஒரு சில காட்சிகளிலும் ஜேம்ஸ் பாண்ட், MI ஏஜென்ட் பாணியில் வரும் அனிமேஷன் பகுதிகளில் தொடங்கி, படமெங்கும் அமெச்சூர்னஸ் நிரம்பிக் கிடக்கிறது. ஃபுட்டேஜ் பற்றாக்குறையால் பல காட்சிகள் ஸ்லோ மோஷனில் காட்டப்படுவதையும், அந்த ஸ்லோ மோஷனிலேயே பின்னணியில் டப்பிங் வசனங்கள் நிரப்பப்பட்டதையும் பார்க்க ரொம்பவே திராபையாக இருந்தது. இத்திரைப்படம் எவ்வளவு சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கும் என்பதை, ஒவ்வொரு ஃப்ரேமுமே திரையில் அப்பட்டமாக காட்டிக்கொண்டேயிருந்தது. திருமண நிச்சயதார்த்தம் நடக்கும் வீட்டில் வெறும் 4 பேர் மட்டுமே அமர்ந்திருப்பதையும், போலீஸாகவும் டாக்டராகவும் மற்ற கதாபாத்திரங்களிலும் வரும் கொஞ்சமும் கூட நடிக்கவே தெரியாத துணை நடிகர்களையும் எல்லாம் பார்க்கும்பொழுது குறும்படங்களில் கூட இதை விட அதிக மெனக்கெடல் இருக்குமே என்றே தோன்றியது.

சமீபத்தில் வந்த தமிழ் திரைப்படங்களில் இந்த படமளவிற்கு வேறு எந்த படத்திலும் போலீஸ் அதிகாரிகளை இவ்வளவு மொக்கையாக காட்டியிருப்பார்களா என தெரியவில்லை. படம் தொடங்கிய சில நிமிடங்களில் ஒரு முக்கிய பிரச்சினையை பற்றி கமிஷனர் அலுவலகத்தில் காவல் அதிகாரிகள் ஆலோசிப்பதைப் போல ஒரு காட்சி வருகிறது, அந்த காட்சியில் அவர்கள் பேசுவதைப் பார்த்தால் ஏதோ நண்பர்கள் எல்லாம் ஜாலியாக பேசிக்கொண்டிருப்பதைப் போல் உள்ளது. இது போதாதென நடிகர் நெப்போலியன் வேறு அவ்வப்பொழுது தோன்றி, சம்பந்தமே இல்லாமல் ஏதாவது அரைகுறை ஆங்கிலத்தில் சரத்குமாரிடம் பேசி செல்கிறார். கமிஷனர் என சொல்லிக்கொண்டு, ஒரு கான்ஸ்டபிள் அளவுக்கு கூட யோசிக்காமல் தலையாட்டும் பொம்மை போல் காட்டப்பட்டுள்ளார். போலீஸ் அதிகாரியான ஹீரோவின் வீட்டிற்கு இரண்டு முறை மிரட்டல் கடிதமும் தொலைபேசி அழைப்பும் வந்தும் கூட, ஒரு சாதாரண போலீஸ் பாதுகாப்பு கூட போடாமல் இருக்குமளவிற்கு தான் இப்படத்திலுள்ள எல்லா போலீஸ் அதிகாரிகளுமே டம்மியாக உள்ளனர். இப்படத்தின் மற்றுமொரு மிகப்பெரிய மைனஸ் - வசனங்கள். காட்சிகளை சுவாரஸ்யப்படுத்தாமல், பாத்திரங்களுக்கு வலு சேர்க்காமல் இப்படத்தின் வசனங்கள் எல்லாம் நம்மை கடுப்பாக்க மட்டுமே செய்கின்றன. அதிலும் மிக முக்கியமாக, ஜோக்கடிக்கிறேன் என்கிற பெயரில் சீரியஸ் காட்சிகளிலும் 'முனீஸ்காந்த்' ராமதாஸ் செய்யும் கொடுமைகளைத்தான் தாங்க முடியவில்லை; அவரையும் படம் முழுக்கவே வீணடித்திருக்கிறார்கள். பாசிட்டிவ் விஷயம் என சொல்ல எதுவுமே இல்லை என்றாலும் கூட, ஒட்டுமொத்தமாக இப்படத்தில் ஆறுதல் அளிக்கும் ஒரே விஷயம் ஜேக்ஸ் பிஜாயின் பின்னணி இசை மட்டுமே.

'அன்பானவன் அசாராதவன் அடங்காதவன்', 'கதாநாயகன்', 'மொட்ட சிவா கெட்ட சிவா' போன்ற இவ்வருடத்தின் படு மோசமான திரைப்படங்களின் பட்டியலில் 'சென்னையில் ஒரு நாள் - பார்ட் 2' சுலபமாக இடம்பிடித்து விடுகிறது. க்ளைமாக்சில் 'சென்னையில் ஒரு நாள் - பார்ட் 3' வர வாய்ப்புண்டு என்பதைப் போல் படத்தை முடிக்கையில் தான், இன்னும் அதிக பயம் ஏற்படுகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்