முகப்புவிமர்சனம்

'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' விமர்சனம் - Echarikkai Idhu Manithargal Nadamadum Idam Movie Review

  | Saturday, August 25, 2018

Rating:

'எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்' விமர்சனம் - Echarikkai Idhu Manithargal Nadamadum Idam Movie Review
  • பிரிவுவகை:
    த்ரில்லர்
  • நடிகர்கள்:
    கிஷோர், சத்யராஜ், விவேக் ராஜகோபால், வரலட்சுமி, யோகிபாபு
  • இயக்குனர்:
    சர்ஜுன்
  • தயாரிப்பாளர்:
    சுந்தர் அண்ணாமலை
  • எழுதியவர்:
    சர்ஜுன்
  • பாடல்கள்:
    சுந்தரமூர்த்தி

ஒரு கடத்தலை மையமாக வைத்து ஒருநாளுக்குள் நடக்கும் த்ரில் ஆட்டம்தான் `எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்'

டேவிட் (கிஷோர்) தாமஸ் (விவேக் ராஜகோபால்) இருவரை மையப்படுத்தி துவங்குகிறது கதை. தாமஸின் அப்பா குடிக்க காசு தராததால் மனைவியைக் கொன்றுவிடுகிறார். தன் அக்காவைக் கொன்றதை அறிந்ததும் தாமஸின் அப்பாவைக் கொன்றுவிடுகிறான் டேவிட். இந்த ஒருநாளால் குடும்பத்தை இழக்கும் இருவரின் பாதையும் மாறுகிறது. தாமஸ் திருடனாக சுற்றிக் கொண்டிருக்கையில், ஜெயிலில் இருந்து விடுதலையாகி வருகிறான் டேவிட். எப்படியாவது பெரிய விஷயம் ஏதாவது செய்து பணம் சம்பாதிக்க ஆசைப்படும் தாமஸுக்கு கடத்தல் ஐடியா கொடுக்கிறான் டேவிட். அப்படி அவர்கள் கடத்தும் நபர்தான் ஸ்வேதா (வரலட்சுமி). எட்டு கோடி பணயத்தொகை கேட்கப்பட, ஸ்வேதாவின் தந்தை, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி நடராஜிடம் (சத்யராஜ்) உதவி கேட்டு செல்கிறார். பின்னர் என்ன நடக்கிறது என்பதை சொல்கிறது படம்.

`லட்சுமி', `மா' என இரண்டு குறும்படங்கள் மூலம் மிகப் பிரபலமான இயக்குநராகிவிட்டார் சர்ஜுன். அந்தக் குறும்படங்கள் படங்கள் ஏற்படுத்திய கவனத்தை இந்தத் திரைப்படமும் உண்டாக்குகிறதா?

படத்தில் நடித்திருக்கும் கிஷோர், சத்யராஜ் இருவரின் நடிப்பு மிக இயல்பு. சொல்லப்போனால் ஒருகட்டத்துக்கு மேல் படத்தின் சுவாரஸ்யத்தை இருவரும் தங்கள் தோள்களுக்கு ஏற்றிக் கொள்கிறார்கள். வரலட்சுமியைக் கடத்திய பின் பக்காவாக திட்டம் போட்ட பின்னும் எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்கிற பதற்றத்தை முகத்தில் வைத்துக் கொண்டே இருக்கிறார் கிஷோர். அது காட்சிகளிலும் பிரதிபலிக்கிறது. சத்யராஜ் கதாபாத்திரம் ஒருகட்டத்துக்கு மேல் எடுக்கும் முடிவின் நியாயம் அவரின் நடிப்பிலும் இருக்கிறது. குழந்தைக்காகப் பதறுவது, ஒரு அனுபவம் வாய்ந்த காவலதிகாரியின் நிதானம் எல்லாமும் அத்தனை சுலபமாக அவருக்கு வசப்பட்டிருக்கிறது. மற்றபடி விவேக் ராஜகோபால், வரலட்சுமி தங்களுடைய வேலையை சரியாக முடிக்கிறார்கள். `ஆங்கிலோ இந்தியன்' யோகிபாபுவின் காமெடி அலப்பறைகள் இன்னும் கொஞ்சம் இருந்திருக்கலாம். ஆனால், படத்தின் ஸ்திரத்தன்மை கெட்டுவிடும் என இயக்குநர் அதைத் தவிர்த்திருப்பது புரிகிறது.

பணம் தான் வாழ்க்கை என சிலர் எடுக்கும் முடிவுகள்தான் படத்தின் மையம். ஆரம்பத்தில் பணத்திற்காக தன் மனைவியைக் கொல்கிறான் கணவன். அந்தக் கொலைக்கு டேவிட் பழிவாங்க, தாமஸ் - டேவிட் இருவரின் வாழ்க்கையும் திசை மாறுகிறது. அதன் பின் பணத்திற்காக ஒரு கடத்தல், இந்த முறை பணம் டேவிட் - தாமஸ் - ஸ்வேதா என மூவரின் வாழ்க்கையிலும் ஒரு சூதாட்டம் ஆடுகிறது. இன்னொரு பக்கம் அதே பணம் ஒரு பாசமான தந்தையின் நிலைப்பாட்டை மாற்றுகிறது. இப்படி பணத்தால் சிதறும் சில மனிதர்களைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு கதை பண்ணியிருக்கும் சர்ஜுனின் முயற்சி புதிதானது, சுவாரஸ்யமானதும் கூட. ஆனால் சில லாஜிக் விஷயங்களை ட்யூன் செய்திருந்தால் இன்னும் சிறப்பான படமாக வந்திருக்கும். டேவிட்டுக்கு தாமஸ் மேல் அவ்வளவு அக்கறை என்றால், வரலட்சுமியிடம் எதற்காக ஒரு மைன்ட் கேம் ஆட வேண்டும்? வரலட்சுமிக்கும் அவளுடைய அப்பாவுக்கும் அப்படி என்னதான் பிரச்சனை? தாமஸ் கதாபாத்திரத்தின் நோக்கம் பணமா? காதலா? பகையா?, கடத்தி வைத்திருக்கும் இடத்தில் எதற்கு ஒரு டூயட்? என சில விஷயங்களில் கவனம் செலுத்தி தெளிவாக கதை சொல்லி, பரபரப்பைக் கூட்டியிருந்தால் விறுவிறு த்ரில்லராக இருந்திருக்கும் படம். சுந்தர மூர்த்தியின் இசையும், சுதர்சன் ஸ்ரீனிவாசனின் ஒளிப்பதிவும் படத்துக்கு வலு சேர்க்கிறது. "சின்ன தப்பு நடந்தாலும் உன்னோட காலண்டர்ல பத்து வருஷம் காணமா போயிடும்" என சர்ஜுனின் சில வசனங்கள் கச்சிதமாக இருந்து.

நல்ல களம் எடுத்துக் கொண்டது போல, சுவாரஸ்யமாகவும் உருவாகியிருந்தால் பளிச்சென கவனிக்கப்பட்டிருக்கும் இந்த எச்சரிக்கை.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்