முகப்புவிமர்சனம்

ஆர்யாவுக்கு கை கொடுக்கிறதா இந்த ரீமேக்? - 'கஜினிகாந்த்' விமர்சனம் - Ghajinikanth Movie Review

  | Friday, August 03, 2018

Rating:

ஆர்யாவுக்கு கை கொடுக்கிறதா இந்த ரீமேக்? - 'கஜினிகாந்த்' விமர்சனம் - Ghajinikanth Movie Review
 • பிரிவுவகை:
  காமெடி
 • நடிகர்கள்:
  ஆர்யா, சயிஷா, நரேன், சம்பத், லிஜிஸ், சதீஷ், கருணாகரன்
 • இயக்குனர்:
  சந்தோஷ் பி ஜெயக்குமார்
 • தயாரிப்பாளர்:
  ஞானவேல் ராஜா
 • எழுதியவர்:
  மாருதி தசாரி
 • பாடல்கள்:
  பாலமுரளி பாலு

ஊரெல்லாம் பெண் தேடியும் ரஜினிகாந்திற்கு (ஆர்யா) பெண் கிடைக்கவில்லை. காரணம் அவரது வினோதமான ஞாபக மறதி (ஒரு வேலையை செய்து கொண்டிருக்கும் போது இன்னொரு விஷயத்தின் மீது கவனம் சென்றால், செய்து கொண்டிருந்த பழைய விஷயத்தை மறந்துவிடுவார்). எப்படியாவது இதை சமாளித்து கல்யாணம் செய்து வைக்க பல முயற்சிகளை செய்கிறார்கள் ஆர்யாவின் பெற்றோர். கடைசி முயற்சியாக சம்பத்தின் மகளை மணம்முடிக்க எடுக்கும் முயற்சியும் தோல்வியடைகிறது. அந்த சமயத்தில் ஆர்யாவின் கண்ணில்படுகிறார் சயிஷா. கண்டதும் காதல்... பார்த்ததும் பாடல்... என ஆரம்பிக்கிறது. ஞாபக மறதியை சமாளித்து தன் காதலில் ஜெயித்தானா இந்த கஜினிகாந்த்? என்பதை நகைச்சுவையாக சொல்ல பயங்கரமாக முயற்சிக்கிறது படம்.

2015ல் தெலுங்கில் நானி - லாவண்யா திரிபாதி நடித்து வெளியாகி பம்பர் ஹிட்டடித்த `பலே பலே மகாடிவோய்' படத்தின் தமிழில் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் சந்தோஷ். ஆனால், ஒரிஜினலில் கைகூடிய காமெடியை தமிழிலும் கொண்டு வந்திருக்கிறார்களா என்பது மட்டும் கேள்விக்குறி.

ஞாபக மறதியில் பைக்கையே பிச்சை போடுவது, ப்ரெபோஸ் பண்ண வேண்டியதை மறந்துவிட்டு கேரம் ஆடுவது, நண்பனை சிக்கவைத்துவிட்டு காய்கறி வியாபாரியுடன் உதவிக்கு செல்வது என காமெடியில் புகுந்து விளையாட வேண்டிய கதாபாத்திரம் ஆர்யாவுக்கு. ஆனால், பாஸ் என்கிற பாஸ்கரன், வி.எஸ்.ஓ.பி பட ரேஞ்சிலேயே இந்தப் படத்தையும் டீல் செய்து அதைக் கோட்டைவிடுகிறார். பிரமாதமான நடிப்பு ஒன்றும் தேவை இல்லைதான். ஆனால், கதாபாத்திரத்திற்குத் தேவையானது என்று ஒன்று இருக்கிறதுதானே. சிரிக்க வைக்கறது சீரியஸான விஷயம் பாஸ், கொஞ்சம் மெனக்கெடலாம். ஆர்யா எதை சமாளித்தாலும் அதை உண்மை என நம்பி `தெய்வமே எங்கையோ போயிட்டீங்க' என்கிற ஃபீல் மட்டுமே கொடுக்க வேண்டிய வேலை ஹீரோயின் சயிஷாவுக்கு. நடிப்பில் பெரிதாக கவரவில்லை என்றாலும் படம் முழுக்க அழகாக வந்து செல்கிறார். நடனத்தில் வெளுத்து வாங்குகிறார். சம்பத், நரேன், லிஜிஷ் ஆகியோர் தங்களுடைய கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி என சதீஷ், கருணாகரன், `மொட்டை' ராஜேந்திரன் ஆகியோர் செய்யும் எல்லாவற்றுக்கும் சிரிப்புக்கு பதில் வெறுப்புதான் வருகிறது.

படத்தின் மிகப் பெரிய பலவீனம், தெலுங்கு படத்தை அப்படியே ரீமேக் செய்வதில் காட்டிய ஆர்வத்தை படத்தின் நகைச்சுவையில் காட்டாதது. சந்தோஷ் தன் மேல் விழுந்த `ஏ'டாகூட இமேஜை மாற்ற முயற்சி செய்திருக்கிறார். ஓரிரண்டு இடங்களைத் தவிர இரட்டை அர்த்த நகைச்சுவையைத் தவிர்த்திருக்கிறார். அதோடு சேர்த்து ஒரிஜினல் படத்தில் இருந்த நகைச்சுவை உணர்வையும் குறைத்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும் உருவாக வேண்டிய நகைச்சுவை, சுவாரஸ்யமற்ற நடிப்பு, பிளாஸ்டிக்கான ரியாக்ஷன்களால் மிஸ்ஸாகிறது. காமெடி படம் என்றால் படத்தில் காமெடி இருக்க வேண்டும். ஹெல்த் அட்வைசரியை, ராஜேந்திரனின் கரகரக் குரலில் வாசிக்க வைப்பதுதான் காமெடி என இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களா இயக்குநரே? சின்ன லாஜிக்தான். மூன்று வருடத்திற்கு முன் கூகுள் மேப்ஸ் அவ்வளவு பிரபலம் இல்லை. ஆனால், இப்போது பக்கத்தில் இருக்கும் டீக்கடையை கூட மேப்ஸில் தேடுவது, லைவ் லொகேஷன் என டெக்னாலஜியே முன்னேறிவிட்டது. ஆனால், அந்தப் படத்தில் இருக்கிறது என்பதற்காக இதிலும் திருப்பதி ட்ராவல் காட்சியை ஒரு அப்டேட்டும் இல்லாமல் அப்படியே வைத்திருக்கிறீர்கள். ஹீரோவுக்கு மட்டும்தானே மறதி பிரச்சனை?

ஹீரோவின் அப்பா ரஜினி ரசிகர் அதனால் அவர் ரெஃபரன்ஸ் ஓகே, கேரம் காட்சியில் `வசூல்ராஜா' ரெஃபரன்ஸ் கூட ஓகே. ஆனால் விவேகம், சூர்யாவின் சொடக்கு மேல சொடக்கு, பாகுபலி என எதற்கு இத்தனை ரெஃபரன்ஸ். மற்ற ஹீரோக்கள் கோவித்துக் கொள்வார்கள் என்றா? இல்லை இந்தப் படத்தை எல்லாம் ஆடியன்ஸ் மறந்திருப்பார்கள் என்றா? மறுபடி கேட்கிறேன்... ஹீரோவுக்கு மட்டும்தானே மறதி பிரச்சனை? பாலமுரளி பாலு இசையில் பாடல்கள் எல்லாம் சுமார்ரகம்தான். ஆர்யாவுக்கு கொடுக்கும் மாஸ் பின்னணி இசையும் இரைச்சலாகவே இருக்கிறது. படத்தை மிகவும் எனர்ஜியான ஒன்றாக கொடுக்க கலர்ஃபுல்லாக வேலை செய்திருகிறது பல்லுவின் ஒளிப்பதிவு.

தெலுங்குப் படத்தை தமிழிலும் அப்படியே கொண்டு வர முயற்சித்தது போல, அதிலிருந்த காமெடிகளையும் தமிழில் கொண்டு வர தீவிரமாக முயற்சித்திருந்தால் செம என்டெர்டெய்ன்மென்ட் படமாக வென்றிருப்பான் இந்த கஜினிகாந்த்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்