முகப்புவிமர்சனம்

"முதல் பாகத்தின் அதகளம் இதிலும் தொடர்கிறதா?" - `கோலி சோடா 2' விமர்சனம் - goli soda 2 movie review

  | Thursday, June 14, 2018

Rating:

 • பிரிவுவகை:
  ஆக்ஷன் ட்ராமா
 • நடிகர்கள்:
  சமுத்திரக்கனி, சுபிக்ஷா, செம்பன் வினோத், பரத் சீனி, இசக்கி பரத், வினோத், க்ருஷா, கௌதம் மேனன்
 • இயக்குனர்:
  விஜய் மில்டன்
 • தயாரிப்பாளர்:
  பரத் சீனி
 • எழுதியவர்:
  அருண் பாலாஜி, தேசிங் பெரியசாமி, விஜய் மில்டன்
 • பாடல்கள்:
  அச்சு

முன் பின் அறிமுகம் இல்லாத மூவரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடும் ஒரு பிரச்சனை, அதை அவர்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைச் சொல்கிறது `கோலி சோடா 2'.

துறைமுகம் தில்லையிடம் (செம்பன் வினோத்) அடியாளாக இருக்கும் பரத் சீனி, அந்தக் கூட்டத்திலிருந்து வெளியேறி தன் காதலியுடன் கௌரவமான வாழ்க்கையை வாழ நினைக்கிறான். ஆட்டோ ஓட்டும் இசக்கி பரத், அடுத்து கார் வாங்கி ஓட்டுவது, தன்னை சுற்றியுள்ளவர்களுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருவது என கனவுடன் கடுமையாக உழைக்கிறான். பேஸ்கட் பால் போட்டியில் ஜெயித்தால், ஹோட்டல் வேலையில் இருந்து முன்னேறி கம்பெனி வேலை கிடைக்கும் எனப் போராடுகிறான் வினோத். இவர்கள் மூவருக்கும் ஒருவரை ஒருவர் தெரியாது. இவர்கள் மூவருக்கும் தெரிந்தவர் சமுத்திரக்கனி. அவர்களை சரியான வழிகாட்டி நகர்த்துகிறார். வாழ்க்கையில் எப்படியாவது முன்னேறிவிடுவோம் என நினைக்கும் மூவருக்கும், முட்டுக்கட்டை விழுகிறது. அது என்ன? எதனால்? அதை எப்படி சரி செய்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.

தனக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள நினைக்கும் சாமானியனின் போராட்டம்தான் களம். `கோலி சோடா'வின் முதல் பாகத்தின் எசன்ஸை இதிலும் உணர முடிகிறது. தொடர்ந்து கீழே இருப்பவர்கள் துரத்தப்படுவதும், ஒடுக்கப்படுவதும் என சகஜமாக இருக்கும் சமூக நிலையை ஒட்டி கதை எழுதியிருக்கிறார் அருண் பாலாஜி. முதலாளிகளின் சுகவாழ்க்கைக்கு ஆதாரமாகா இருக்கும் பற்சக்கரங்களாக தொழிலாளிகள், தேய்மானம் ஆவதற்குள் எப்படியாவது முன்னேறிவிடத் துடிக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான ஆட்டத்தை முடிந்த வரை சுவாரஸ்யமாக காட்சிப்படுத்தியிருக்கிறார் விஜய் மில்டன்.

காதலிக்காக தன் வாழ்க்கையை சீர் செய்ய நினைக்கும் காதலன், எஞ்சியிருக்கும் மனிதாபிமானத்தைக் கொண்டு போராடும் சாமான்யன் என நடிக்க நல்ல வாய்ப்பு இருக்கும் கதாபாத்திரம் பரத் சீனிக்கு. முடிந்த வரை அதை சிறப்பாக செய்தும் இருக்கிறார். ஆட்டோவில் சர்வ வசதிகளும் வைத்துக் கொண்டு வாழ்க்கையையும் அதைப் போன்றே மாற்ற நினைக்கும் கதாபாத்திரம் இசக்கி பரத்துக்கு. கொஞ்சம் செயற்கைத்தனமும், படபடப்பும் இருக்கிறது, அதைக் குறைத்துக் கொண்டிருக்கலாம். காதலுக்கும், வேலைக்கும் சேர்த்துப் போராட வேண்டிய நடிப்பில் கொஞ்சம் முறையாக நடிக்க முயன்றிருக்கிறார் வினோத். கதாநாயகிகளில் க்ருஷாவை விட சுபிக்ஷா கவனிக்க வைக்கிறார். கூடவே ரேகாவும், ரோகிணியும் கூட சிறப்பான நடிப்பையே கொடுக்கிறார்கள். விழுந்து விழுந்து மற்றவர்களுக்கு உதவுவதும், மூத்தவருடன் சியர்ஸ் சொல்வதும் மட்டுமே தனது வாழ்க்கையாக கொண்ட `தொண்டன்' சமுத்திரக்கனிக்கு இந்தப் படத்தில் வசனக்கள் குறைவு என்பது பெரிய ஆறுதலாய் இருந்தது. முடிந்தவரை தனது நடிப்பில் போலி தெரிந்துவிடக் கூடாது என அவர் முயற்சித்தாலும், அவரது ஒட்டுதாடி போல் கதாபாத்திரத்திலும் நம்பகத்தன்மை இல்லை. அதனாலேயே, அவரது பாத்திரம் அழுத்தமாக மனதில் பதியாமல் துருத்திக் கொண்டிருக்கிறது. செம்பன் வினோத் மலையாளத்தில் ஒரு நடிப்புக் கொம்பனாய் அசத்தல் செய்பவர். அவரைக் கூட்டிவந்து "டேய் நானெல்லாம்..." எனப் பிஸ்தாகாட்டும் பாத்திரத்தில் நடிக்க வைப்பதும், க்ளைமாக்ஸில் இரத்தம் ஒழுக அடிவாங்க வைப்பதும் ஆரோக்யமானதாக இல்லை. ஆனாலும், நடிப்பில் எந்தக் குறையும் வைக்காமல் மிரட்டியிருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட டப்பிங் குரல் கொஞ்சமும் பொருத்தமாய் இல்லை. இன்னொரு இரண்டு அலப்பறை ரௌடிகளாய் வரும் சரவண சுப்பையா, ஸ்டண்ட் சிவா ஒப்புக்கு ஒன்றை நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். கௌரவத் தோற்றத்தில் மிகச் சில காட்சிகளிலேயே வருகிறார் கௌதம் வாசுதேவ் மேனன். கௌதம் மாதிரி கௌதம் மாதிரி என நினைத்து, விஜய் மில்டன் எழுதியதால், அந்தப் பாத்திரம் மட்டும் அவ்வளவு கச்சிதம். ஆனால், அந்தப் பாத்திரத்தால் கதையில் ஒன்றும் நடக்கவில்லை என்பதுதான் சோகம்.

"இந்த சமூகமே ஒரு சிஸ்டம். இங்க உங்கள மாதிரி சின்ன சக்கரம் ஒழுங்கா ஓடினாதான், எங்கள மாதிரி பெரிய சக்கரம் எல்லாம் நிம்மதியா இருக்க முடியும்", "எல்லாமே ரொம்ப சரியா இருந்தா, ஏதோ தப்பு இருக்குமோனு பயமா இருக்கு", "ஏழ்மைய ஒழிக்கிறேன்னு சொல்லிட்டு, ஏழைகளதான ஒழிக்கிறாங்க" என விஜய் மில்டனின் சில வசனக்கள் கவனிக்கும் படி இருந்தது. இந்த அழுத்தம் படத்தின் திரைக்கதையில் இருந்திருக்க வேண்டுமே என்று தோன்றியது. மீண்டும் அடையாள பிரச்சனையை, அதிகாரம், ஜாதி, மனிதம் என்ற அபாயமான விஷயங்களோடு மோதவிடும் போது, அது நடக்கும் களம் வலிமையானதாக இருக்க வேண்டும்தானே. ஆனால் இங்கு, "அவன போடணும்", "என்ன ஏன் இப்பிடிப் படைச்ச", "ஏன்டா எங்கள முன்னேற விடல" என வெற்றுக் கூச்சல்கள் நிறைந்த சண்டைகள் மட்டுமே நடக்கிறது. அந்த மூவருக்கும் என்ன பிரச்சனை ஏற்படப் போகிறது என்பதை ஒரு வித பதைபதைப்பு ஏற்படுத்தி சொன்ன விதத்தில் முதல்பாதி சுவாரஸ்யம். ஆனால், அதன் பின் செயலாக எதுவும் நடக்காமல், நீர்த்துப் போன வசனக்கள் மட்டுமே இருப்பதால் கொஞ்சம் தள்ளாடுகிறது படம்.

படத்தை மிக சகஜமாக பார்க்க வைப்பதில் விஜய் மில்டனின் ஒளிப்பதிவு முக்கியக் காரணம். சுப்ரீம் சுந்தரின் சண்டைக் காட்சிகளும் மிரட்டலாய் இருந்தது. குறிப்பாக அந்த கட்சி அலுவலகத்தில் நடக்கும் அந்த சண்டைக் காட்சி அத்தனை லைவ்லி. அச்சுவின் பின்னணி இசை தடதடப்பைக் கூட்டுகிறது. மூன்று பேரின் பிரச்சனையையும் பிணைத்து சொல்லி இடைவேளைக் காட்சி வரும் அந்த செக்மென்ட், படத்தில் தீபக் எடிட்டிங் நன்றாக இருந்தது என்பதற்கு ஒரு உதாரணம்.

ஒரு கதை சொல்லி உட்கார வைத்துவிட்டு, பின்பு கதையோடு ஒட்டி பயணம் நகராமல் கொஞ்சம் மாஸ், புரட்சி, கடத்தல் என நகரும் இரண்டாம் பாதி நம்பகத்தன்மையை சோதிக்கிறது. முன்பின் தெரியாத மூவர், அவர்கள் மூவரும் ஒரே பிரச்சனையின் கீழ் பாதிப்படைவதும், ஒன்று சேர்ந்து எதிர்ப்பதுமாக படத்தின் ஒன்லைனில் இருந்த சுவாரஸ்யம், படம் முழுக்க இருக்கிறதா எனக் கேட்டால், அது மிஸ்ஸிங்தான்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்