முகப்புவிமர்சனம்

குலேபகாவலி திரைப்பட விமர்சனம் - Gulaebaghavali Movie Review

  | Friday, January 12, 2018

Rating:

குலேபகாவலி திரைப்பட விமர்சனம் - Gulaebaghavali Movie Review
 • பிரிவுவகை:
  அட்வென்ட்சர் காமெடி
 • நடிகர்கள்:
  பிரபு தேவா, ஹன்ஷிகா, ரேவதி, ராம்தாஸ், ஆனந்தராஜ், யோகி பாபு
 • இயக்குனர்:
  கல்யாண்
 • தயாரிப்பாளர்:
  ‘KJR ஸ்டுடியோஸ்’
 • எழுதியவர்:
  கல்யாண்
 • பாடல்கள்:
  விவேக் – மெர்வின்

கடந்த 15 ஆண்டுகளாக டோலிவுட், கோலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் ஒரு கமர்ஷியல் இயக்குனராக வலம் வந்து கொண்டிருந்த நடிகர் மற்றும் நடன இயக்குனர் பிரபுதேவா 2016ஆம் ஆண்டில் வெளியான 'தேவி' திரைப்படத்தின் வெற்றிக்கு பின் மீண்டும் முழுநேர நடிகராக ஆகிவிட்டார். 'சார்லி சாப்ளின் - பார்ட் 2', 'யங் மங் சங்', 'கமோஷி', 'மெர்குரி', 'லக்ஷ்மி' உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் பிரபுதேவா அவர்கள், அறிமுக இயக்குனர் கல்யாண் இயக்கத்தில் நடித்து இன்று பொங்கல் வெளியீடாக வந்திருக்கும் திரைப்படம் 'குலேபகாவலி'.

பிரிட்டிஷ் காலத்தில் மண்ணுக்குள் புதைத்து வைக்கப்பட்ட ஒரு வைர புதையலை தேடி எடுக்க செல்லும் ஒரு கும்பலையும், அந்த கும்பலில் இருக்கும் ஹீரோவின் காதல் பிரச்சினையையும் சுற்றி நகர்கிறது அறிமுக இயக்குனர் கல்யாணின் 'குலேபகாவலி'. படம் தொடங்கிய முதல் 5 நிமிடத்தில் வரும் அந்த பிரிட்டிஷ் காலத்து காட்சிகள், படத்தின் மீது ஒரு வித எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது. 'ஒரு நல்ல அட்வென்ட்சர் காமெடி படமாக இருக்கும் போலிருக்கிறது' என்கிற ஆர்வத்தில் நிமிர்ந்து உட்கார்ந்தால், படத்தின் இறுதி வரை எந்தவொரு சுவாரஸ்யமான அட்வென்ட்சரும் வரவில்லை சொல்லிக்கொள்ளும்படியாக நல்ல நகைச்சுவை காட்சிகளும் வரவில்லை. தேவையே இல்லாத ஸ்லோ-மோஷன் பில்டப்புடன் வரும் ஹீரோவின் அறிமுகக் காட்சியை பார்த்த மாத்திரத்திலேயே, படத்தின் மீது ஒரு அவநம்பிக்கை ஏற்படுவது உண்மை; அதுவே இறுதி வரையிலும் தொடர்கிறது.

புதையல் தேடலை சுற்றி நடக்கும் ஒரு நகைச்சுவை படத்தை கொடுக்க நினைத்துள்ள இயக்குனர் கல்யாண், திரைக்கதைக்கோ காட்சியமைப்புகளுக்கோ பெரிதாக எந்த மெனக்கெடலும் எடுத்துக்கொண்டதாக தெரியவில்லை. பிரபுதேவாவும் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமும் இருக்கிறார்கள், அதுவே போதும் என நினைத்துவிட்டாரா என தெரியவில்லை. பிரபுதேவா போன்ற ஒரு ஸ்டார் நாயகன் இருக்கையில், 'தேவி' போன்றதொரு ஜாலியான எண்டர்டெயினராகவோ அல்லது அவரது காமெடி திறனை முழுமையாக பயன்படுத்தியிருக்கும் வகையிலான ஒரு படமாகவோ இருக்கும் என நினைத்து சென்றால், பெரிதளவில் ஏமாற்றமடைவீர்கள்.

படத்தில் உள்ள எண்ணற்ற கதாபாத்திரங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதிலேயே, முதல் பாதி முழுக்க செலவாகிவிடுகிறது. அவற்றில், ரேவதியின் கதாபாத்திரத்தின் அறிமுகத்தை தவிர வேறு எதுவுமே கொஞ்சம் கூட ஈர்க்கவில்லை; ரேவதியின் கேரக்டர் கூட போகப் போக சுவாரஸ்யம் இழந்து சலிப்புடனே நகர்கிறது. படம் முழுக்கவே, கதையில் எங்குமே ஒரு தொடர்ச்சியோ அல்லது பாத்திரப் படைப்புகளில் ஒரு சீரான நிலைத்தன்மையோ இல்லை. கதை சொல்லலில், அத்தனை தடுமாற்றம். 'படம் எதை நோக்கி நகர்கிறது?' என்கிற கேள்வி, ஒரு கட்டத்திற்கு மேல் 'எதற்காக நகர்கிறது?' என கேட்குமளவிற்கு மோசமடைகிறது.

ஒட்டுமொத்த படத்தில், அதிகபட்சம் 4 காட்சிகளில் கூட சிரிப்பு வரவில்லை. மொட்டை ராஜேந்திரனின் அம்மா செண்டிமெண்ட் காட்சிகளும், 'நான் எத்தனை பேரை போட்டிருக்கேன் தெரியுமா' என மன்சூர் அலிகான் பேசும் காட்சிகளை தவிர வேறெந்த காட்சிகளுமே குறிப்பிட்டு சொல்லும்படி இல்லை. படத்தின் முதல் பாதியுடன் ஒப்பிடுகையில், இரண்டாம் பாதியை கொஞ்சமாவது சகித்துக் கொள்ள முடிந்தது. மொத்த படமுமே 2 மணி நேரம் தான் ஓடினாலும் கூட, இடைவேளை வரையிலுமே இரண்டு படம் பார்த்த உணர்வைத் தருமளவிற்கு சோர்வடைய செய்தது முதல் பாதி.

படத்திலேயே ரசிகர்களை அதிகம் வெறுப்பேற்றியவர்கள் ஹீரோயின் ஹன்சிகாவும், போலீஸாக வரும் சத்யனும் தான். சத்யன் வரும் எல்லா காட்சிகளுமே, சிரிப்புக்கு பதிலாக கோபத்தை தூண்டும் வகையிலேயே இருந்தன. பார்க்கும் எல்லோரிடமும் ஏமாறும் அந்த போலீஸ் கதாபாத்திரமும், அவர் நடிப்பும் தேமே என்றிருந்தது. இந்த கதையின்படி ஹீரோ பிரபுதேவாவிற்கே பெரிதாக எந்த வேலையும் இல்லாதபொழுது, பாடலுக்காக மட்டும் ஹன்சிகா கதாபாத்திரத்தை வைத்திருந்தது கொடுமை. அதிலும், அந்த 'நிர்வாண பூஜை' காட்சி, தங்கை செண்டிமெண்ட் காட்சிகள் எல்லாம் ரொம்பவே பொறுமையை சோதித்தன. அது போக, படம் முழுக்க 10 நிமிடத்திற்கு ஒரு முறை யாருக்காவது ஒரு ஃபிளாஷ்பேக் எதற்காகவாவது ஒரு ஃபிளாஷ்பேக் வந்துகொண்டே இருக்கிறது - முனீஸ்காந்த் மற்றும் சத்யனின் சிறுவயது ஃபிளாஷ்பேக், 10 நாட்களுக்கு முன்னால் யோகி பாபு என்ன செய்துகொண்டிருந்தார் என காட்டிட ஒரு ஃபிளாஷ்பேக், பஞ்சாயத்தில் இருந்து ஹன்சிகாவை ரேவதி காப்பாற்றிய ஃபிளாஷ்பேக், ஏன் ஹன்சிகா எல்லோரையும் ஏமாற்றினார் என்பதற்கு ஒரு ஃபிளாஷ்பேக், கடைசியில் ரேவதிக்கு எப்படி பணம் கிடைத்தது என்றொரு ஃபிளாஷ்பேக் என படம் முழுக்க ஒரு 372 ஃபிளாஷ்பேக் வந்து போகிறது.

'குலேபகாவலி' படத்தின் பெரிய பலம் (படத்திலுள்ள ஒரேயொரு பலம் என்றே கூட சொல்லலாம்) - விவேக் மெர்வின் இசையில் உருவான இப்படத்தின் பாடல்களும், பின்னணி இசையும். படம் வெளிவருவதற்கு முன்பே, பெரிய ஹிட்டான பாடல்களே இப்படத்திற்கு நல்ல விளம்பரத்தை தேடித்தந்தது என்று சொல்லலாம். ஆனால், விஷுவலாக எந்த பாடலுமே சரியாக பயன்படுத்தப்படவில்லை (கதைக்கு வலு சேர்க்கவில்லை) என்பது ஒரு பெரிய மைனஸ். முதல் பாடலில் பிரபுதேவாவின் கிளாஸான நடனத்தை ரசிக்க முடிந்தது என்றாலும் கூட, எந்த பாடலுமே சரியான சூழலில் பொறுத்தப்படவில்லை. ஹீரோ-ஹீரோயின் காதலுக்கு எந்தவித முக்கியத்துவமும் இல்லாத ஒரு படத்தில் 'சேராமல் போனால்' போல ஒரு அட்டகாசாமான மெலடியை அனாயசமாக வீணடித்திருக்கிறார்கள். அதிலும், அந்த பாடலில் வரும் VFX எல்லாம் படு மோசமாக குழந்தைத்தனமாக இருந்தது. விவேக் மெர்வினின் பின்னணி இசை, ஒவ்வொரு காட்சியிலுமே பலம் சேர்த்தது.

'குலேபகாவலி' எடுபடாமல் போனதற்கு முக்கிய காரணம், படத்தில் ஒவ்வொரு கேரக்டரும் அடிக்கும் ஜோக்கிற்கு அவர்கள் மட்டுமே விழுந்து விழுந்து சிரித்துக் கொள்கிறார்கள். 'இப்படி fastஆ வந்து, wasteஆ போய்ட்டியே' போன்ற மொக்கையான வசனங்கள், மேலும் சோகம் சேர்த்தது. யோகி பாபு, ராமதாஸ் (முனீஸ்காந்த்), மன்சூர் அலிகான், ஆனந்த ராஜ், சத்யன், 'மொட்டை' ராஜேந்திரன் என மிகப்பெரிய நகைச்சுவை நடிகர்கள் கூட்டமே இருந்தும் கூட, எவராலுமே ரசிகர்களை சிரிக்க வைக்க முடியாதபடியான வலுவில்லாத ஸ்க்ரிப்ட் ஆக இருந்தது 'குலேபகாவலி'.

2018 புத்தாண்டின் ‘மோசமான படங்கள் / மொக்கைப் படங்கள்’ பட்டியலை, ரிப்பன் வெட்டி திறந்து வைத்துள்ளது இந்த 'குலேபகாவலி'!

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்