முகப்புவிமர்சனம்

சீரியல் கில்லர் அனுராக் VS சிபிஐ நயன்தாரா - `இமைக்கா நொடிகள்' விமர்சனம் - Imaikkaa Nodigal movie review

  | Friday, August 31, 2018

Rating:

சீரியல் கில்லர் அனுராக் VS சிபிஐ நயன்தாரா - `இமைக்கா நொடிகள்' விமர்சனம் - Imaikkaa Nodigal movie review
 • பிரிவுவகை:
  த்ரில்லர்
 • நடிகர்கள்:
  நயன்தாரா, அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா
 • இயக்குனர்:
  அஜய் ஞானமுத்து
 • தயாரிப்பாளர்:
  சி.ஜே.ஜெயக்குமார்
 • எழுதியவர்:
  அஜய் ஞானமுத்து, பட்டுக்கோட்டை பிரபாகர்
 • பாடல்கள்:
  `ஹிப் ஹாப்' ஆதி

சீரியல் கில்லர் ருத்ரா - சிபிஐ அதிகாரி அஞ்சலிக்கு இடையே நடக்கும் தட தட சேஸ் - ரேஸ் ஆட்டம்தான் `இமைக்கா நொடிகள்'.

பெங்களூர் நகரில் திடீர்ன ஒரு கடத்தலும், பின்னர் ஒரு கொலையும் நடக்கிறது. அது ஐந்து வருடங்களுக்கு முன்பு நடந்த சீரியல் கொலைகளுடன் ஒத்துப் போகிறது. கூடவே அந்தக் கொலைகளை செய்த ருத்ரா (அனுராக் காஷ்யப்), கொலைகள் தொடரும் எனவும், முடிந்தால் இதைத் தடுத்துப் பார் எனவும் சிபிஐ அதிகாரி அஞ்சலி விக்ரமாதித்யனுக்கு (நயன்தாரா) சவால் விடுகிறார். ஒரு கட்டத்தில் இந்த க்ரைம் ஆட்டத்துக்குள் நயன்தாராவின் தம்பி அதர்வா, அதர்வாவின் காதலி ராஷி கண்ணா எல்லோரும் சிக்குகிறார்கள். யார் அந்த ருத்ரா? எதற்காக இதை எல்லாம் செய்கிறான்? நயன்தாரா இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சரி செய்தாரா? என கண் இமைக்க விடாமல் பரபரப்பாக சொல்ல முயற்சிக்கிறது படம்.

படம் ஆரம்பித்ததில் இருந்தே தொற்றிக் கொள்ளும் பரபரப்பை கடைசி வரை தக்க வைத்துக் கொள்ள நிறைய மெனக்கெட்திருக்கிறார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. இத்தனைக்கும் படத்தின் நீளம் கிட்டத்தட்ட மூன்று மணிநேரம். ஆனால், எங்கேயும் சுவாரஸ்யம் குறைந்துவிடாமல் கதையை முடிந்த அளவு விறுவிறுப்புடன் சொல்லியதற்கு வாழ்த்துகள்.

சிபிஐ அதிகாரி அஞ்சலியாக வரும் நயன்தாரா கதாபாத்திரம்தான் படத்தின் மையம். அதை உணர்ந்து அந்த கணத்தை கச்சிதமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். இறுக்கமான முகத்துடன் வருவதாகட்டும், மகளிடம் "பாய் சொல்லிட்டுப் போடி" எனக் கேட்பதாக்கட்டும், நீண்ட நாளுக்குப் பின் அதர்வாவைப் பார்த்து மன்னிப்பு கேட்பதாகட்டும் எல்லாவற்றிலும் லேடிசூப்பர்ஸ்டாரின் ட்ரேட் மார்க் முத்திரை அழுத்தமாக பதிகிறது. ஆனால், க்ளைமாக்ஸ் தவிர பெரிய புத்திசாலித்தனமான நடவடிக்கை எதுவும் எடுக்காமல் "அந்த வீடியோ ப்ளே பண்ணுங்க", "அந்த கால ட்ரேஸ் பண்ணுங்க", "பிங்கர் ப்ரின்ட் கிடைக்குதா பாருங்க" என கட்டளைகள் மட்டுமே இட்டுக் கொண்டிருப்பது கொஞ்சம் உறுத்தல். சந்தேகமே இல்லாமல் அனுராக் காஷ்யப்பின் தமிழ் என்ட்ரிக்கு தியேட்டரே அதிர்கிறது. ருத்ராவாக ருத்ரதாண்டவம் ஆடுவதற்கான முகபாவங்கள் எல்லாம் மிக இயல்பாக வருகிறது அனுராகிற்கு. அதற்கு மகிழ் திருமேனியின் குரலும் பலம் சேர்த்திருக்கிறது. ஆனால், ஒரு சைக்கோ வில்லன் என்றால் சாதாரணமாகவே பேசமாட்டாரா என்ன? "நா இப்போ உன்ன கொல்லப் போறேன்", "நான் கார்ல பாம் வெச்சிருக்கேன்", "நான் சாப்டுகிட்டிருக்கேன்" என ஒரு மாடுலேஷனிலேயே பேசுவது சலிப்பு. அதர்வாவுக்கு படத்தின் இரண்டாம் பாதியில்தான் கொஞ்சம் நடிப்பு வேலை வருகிறது அதைக் கச்சிதமாக செய்திருக்கிறார். ராஷி கண்ணாவின் கதாபாத்திற்கு படத்தில் பெரிதாக வேலை இல்லை, எனவே அவரின் நடிப்பு பற்றியும் பெரிதாக கவனிக்க அவசியம் இல்லாமல் போகிறது. விஜய் சேதுபதியின் சில நிமிட வருகை படத்தின் சுவாரஸ்யமான ஒன்று. மிக சுலபமாக ரசிகர்களை ஈர்த்துவிடுகிறார் மனிதர். நயன்தாராவின் மகளாக நடித்திருக்கும் மானஸ்வினி செம க்யூட். ஆனால் அதிகபிரசங்கி வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

படத்தின் பெரிய குறை அதர்வா - ராஷி கண்ணா இடையேயான காதல் காட்சிகள்தான். பார்த்ததும் காதல், செயற்கையான உரையாடல்கள், லவ்வுக்கு ஒரு பாடல், ப்ரேக்கப்புக்கு ஒரு பாடல் என படத்தைதான் அது நிறையவே நீளமாக்குகிறது. தொடர்ந்து பல படங்களில் டெக்னிகல் என சொல்லிவிட்டால் எல்லாம் சாத்தியம் என்ற மனநிலைக்கு தயாராக்குவது நடந்து வருகிறது. அனுராகால் எல்லாவற்றையும் ஹேக் செய்ய முடிகிறது. ஷெர்லாக் ஹோல்ம்ஸ் போல் எல்லோருக்கும் ஒரே நொடியில் மெசேஜ் அனுப்ப முடிகிறது. கூடவே அத்தனை போராடி கண்டுபிடிக்க முடியாத ஒரு குற்றவாளியை மிக எளிதாக அதர்வா கண்டுபிடிக்கிறார் என்பதிலும் நம்பகத்தன்மை குறைவாகவே உள்ளது. படத்திற்குள் நிகழும் சம்பவங்களுக்கான காரணங்கள் சொல்லப்பட்டாலும் அது அத்தனை அழுத்தமாக இல்லாததால் எமோஷனலாக கனெக்ட் ஆகாமல் போகிறது. ஆனாலும் படத்தை கடைசி வரை தாங்கிப்பிடிப்பது படத்தின் பரபர நகர்வு மட்டுமே. ஹிப் ஹாப் ஆதியின் பின்னணி இசை படத்தின் த்ரில் மோடுக்கு வலு சேர்க்கிறது. விளம்பர இடைவெளி, நீயும் நானும் போன்ற பாடல்கள் கேட்க நன்றாக இருந்தாலும், ஏற்கனவே கேட்டது போன்ற உணர்வையே தருகிறது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு படத்திற்கான பரபர டோனைக் கொடுத்திருக்கிறது. படத்தின் நீளத்தையும் தாண்டி த்ரில் டெம்போ எந்த இடத்திலும் குறையாமல் பார்த்துக் கொள்கிறது புவன் ஸ்ரீனிவாசன் படத்தொகுப்பு.

லாஜிக், நம்பகத்தன்மை எல்லாம் எதிர்பார்க்காமால் ஒரு த்ரில்லர் படமாகப் பார்த்தால் நிச்சயம் `இமைக்கா நொடிகள்' ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்தான். படத்தின் தேவை இல்லாத ரொமான்ஸ், பார் சாங் என சிலவற்றைத் தவிர்த்து, இன்னும் சுறுசுறுப்பான ஆட்டமாக்கி இருந்தால் நிஜமாகவே தியேட்டரிலும் `இமைக்கா நொடிகள்' நிகழ்ந்திருக்கும்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்