முகப்புவிமர்சனம்

இப்படை வெல்லும் திரைப்பட விமர்சனம் - Ippadai Vellum Movie Review

  | Monday, November 20, 2017

Rating:

இப்படை வெல்லும் திரைப்பட விமர்சனம் - Ippadai Vellum Movie Review
 • பிரிவுவகை:
  ஆக்ஷன் காமெடி
 • நடிகர்கள்:
  உதயநிதி ஸ்டாலின், மஞ்சிமா மோகன், ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி
 • இயக்குனர்:
  கௌரவ் நாராயணன்
 • தயாரிப்பாளர்:
  லைகா புரொடக்ஷன்ஸ்
 • எழுதியவர்:
  கௌரவ் நாராயணன்
 • பாடல்கள்:
  இமான்

‘தூங்கா நகரம்’, ‘சிகரம் தொடு’ என வித்தியாசமான கதைக்களங்களில் த்ரில்லர் படங்களை இயக்கிய இயக்குனரின் திரைப்படம் என்கிற நம்பிக்கை ஒரு புறம் இருந்தாலும் கூட ‘சரவணன் இருக்க பயமேன்’, ‘பொதுவாக எம்மனசு தங்கம்’ என சமீபத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த பாடாவதி படங்களின் வரிசையில் சேர்ந்துவிடுமோ என்கிற தயக்கத்துடனே சென்ற திரைப்படம் இயக்குனர் கௌரவ் நாராயணனின் ‘இப்படை வெல்லும்’. டிரைலரும் கூட சுமாராகவே இருந்ததால், படத்தின் மேல் பெரிய நம்பிக்கை ஏதும் ஏற்படவில்லை. ஆனால், எதிர்பார்த்து சென்றதை விட திரைப்படம் சுவாரஸ்யமாகவே இருந்தது.

தன் கனவு வீட்டை கட்டி முடிக்க வேண்டும் மற்றும் தான் காதலித்த பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்கிற எளிய கனவுகளோடு வாழும் நடுத்தர வர்க்கத்து இளைஞன் மதுசூதனன் (உதயநிதி ஸ்டாலின்) வாழ்க்கையிலும், தன் மனைவியின் தலைப்பிரசவத்தின் பொழுது அவளருகில் இருக்க வேண்டுமென ஊருக்கு கிளம்பிக்கொண்டிருக்கும் ஒருவன் (சூரி) வாழ்க்கையிலும் குறிக்கிடும் ஒரு பயங்கரவாதியால் பெரும் குழப்பம் ஏற்படுகிறது. தங்களைக் காப்பாற்றிக்கொள்ளவும், நிரபராதி என நிரூபிக்கவும் அந்த தீவிரவாதியை தடுக்க நினைக்கும் இந்த எளியவர் படையின் போராட்டமே ‘இப்படை வெல்லும்’.

பெரும்பாலும், கதையைவிட்டு விலகி செல்லாத கமர்ஷியல் அம்சங்களுடன் கூடிய ஒரு ஆக்ஷன் காமெடி திரைப்படத்தைக் கொடுக்க முயற்சித்துள்ளார் கௌரவ் நாராயணன். படத்தின் முதல் காட்சியில் ஒட்டுதாடியுடன் டேனியல் பாலாஜியை பார்த்த மாத்திரத்திலேயே படத்தின் மீதான நம்பகத்தன்மை அடி வாங்கினாலும் கூட, ‘A communication without any communication’ என்கிற Draft message ஐடியா, வரிசையாக குண்டு வைக்கும் டேனியல் பாலாஜி, ரொம்பவே யதார்த்தமான உதயநிதி ஸ்டாலினின் அறிமுக காட்சி (ஒரு பிரபல ஹாலிவுட் படத்தினை ஞாபப்படுத்துகிறது என்பது வேறு விஷயம்) என அடுத்தடுத்த காட்சிகளிலேயே நிமிர்ந்து உட்கார வைக்கிறார் இயக்குனர்.

முதல் பாதியிலும் சரி, இரண்டாம் பாதியிலும் சரி (கடைசி அரைமணி நேரத்திற்கும் முன் ஏற்படும் சிறு தொய்வை தவிர) பெரிதாக எந்த காட்சிகளிலுமே ரசிகர்களுக்கு அயர்ச்சி ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார் இயக்குனர். படம் முழுக்க நிறைய இடங்களில் லாஜிக் மீறல்கள் அதிகமாகவே இருந்தாலும் கூட (சில மிக முக்கிய காட்சிகளில் கூட லாஜிக் உதாசீனப்படுத்தப்பட்டுள்ளது - பஸ்ஸிற்குள் ஐந்தாறு போலீஸ் இருக்கும்பொழுது உதயநிதியும் சூரியும் ரொம்ப சாதாரணமாக தப்பிப்பது போன்ற காட்சிகள்), திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்திட இயக்குனர் எடுத்துள்ள சிரத்தை நன்றாகவே தெரிகிறது. அந்த மெனக்கெடல்களை எல்லாம் மேக்கிங்கிலும், ஸ்க்ரிப்ட்டில் உள்ள ஒரு விஷயத்தை பிழையில்லாமல் காட்சி வடிவமாக திரைக்கு கொண்டு வருவதிலும் இன்னும் அதிகமாக காட்டியிருந்தால் ‘இப்படை வெல்லும்’ இன்னும் பெரிதாக ஜெயித்திட வாய்ப்பிருந்திருக்கும்.

படம் முழுக்கவே சீரியஸான காட்சிகளில் காமெடியை புகுத்தியிருப்பது ஆங்காங்கே மிகச்சரியாக அமைந்திருந்தாலும், பல காட்சிகளில் குறையாகவே தெரிந்தது. சில முக்கிய காட்சிகளிலும் கூட நகைச்சுவை திணிக்கப்பட்டிருப்பது, போலீஸ் கதாபாத்திரங்களை ஜோக்கர் போலவே காட்டியது. மஞ்சிமா மோகனின் தோழி ‘என்னோட ஃபிளாட் ஃப்ரீயா இருக்கு’ என சொல்லும்பொழுதே அது வில்லன் இருக்கும் அதே அடுக்குமாடி குடியிருப்பாகத்தான் இருக்கும் என்றும், டப்பிங் ஆர்டிஸ்ட்டாக சூரியைக் காட்டும்பொழுதும் சரி, குழந்தைகள் மற்ற வீட்டுக் கதவுகளை அடிக்கடி தட்டுவார்கள் என சொல்லும்பொழுதும் சரி இந்த விஷயங்கள் எல்லாம் திரைக்கதையில் பின்னால் எந்த மாதிரி பயன்படுத்தப்படப் போகிறது என மிக சுலபமாக கணிக்கும்படியே இருந்தது. அதே போல, பல கதாபாத்திரங்களின் கதைகளை ஒரு புள்ளியில் இணைத்திடும் இந்த கதையில் பல விஷயங்கள் தொடர்ந்து ‘தற்செயலாகவே’ நடந்து கொண்டிருப்பதும் ஒரு அளவிற்கு மேல் அலுப்படைய செய்தது. பாஸ்வேர்டை கண்டுபிடிக்கும் காட்சியில் ரொம்பவே சப்பையாக ஒரு ட்விஸ்டை வைத்து முடித்ததைப் போல, ஆங்காங்கே சில முக்கிய காட்சிகள் வலுவில்லாமல் இருந்தது.

‘தெருவுக்கு 4 இஞ்சீனியர் இருக்கான், கொத்தனார் கிடைக்குறது தான் குதிரைக்கொம்பா இருக்கு’ என்பது போன்ற இயல்பான, ரசிக்கத்தக்க வசனங்கள் படம் முழுக்க இல்லாததும் ஒரு குறையே. பல காட்சிகளில் எதுகை-மோனை வசனங்கள் மட்டுமே நிரம்பி கிடந்தது. சூரிக்கு ஏற்படும் ‘ஞாபக மறதி’ படத்தின் நீளத்தை அதிகரிக்க செய்ததைத் தவிர, வேறு எந்த வகையிலும் கதையில் சுவாரஸ்யம் சேர்க்கவில்லை; தன் மனைவியைப் பார்த்து கர்ப்பிணி பெண்ணுக்கு இருக்கை கிடைக்கவில்லையே என சொல்லும் காட்சி மட்டும் அற்புதமாக இருந்தது. பாடல்கள் எதுவுமே மனதில் நிற்காவிடினும் கூட, வெளிநாட்டில் வரும் ஒரேயொரு டூயட் பாடல் தவிர வேறெந்த பாடலும் உறுத்தலாக இருக்கவில்லை என்பது பெரிய ஆறுதல்.

ராதிகா சரத்குமார், உதயநிதி ஸ்டாலின், டேனியல் பாலாஜி, சூரி, மஞ்சிமா மோகன், ஆர்.கே.சுரேஷ், கௌரவ் நாராயணன், ஸ்ரீமன் என படத்தில் பெரிய பட்டாளமே நடித்திருந்தாலும் கூட பெரிதாக சொல்லிக்கொள்ளுமளவிற்கு எந்த நடிகருக்குமே நடிக்க ஸ்கோப் இருக்கவில்லை. ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளது. டி.இமானின் பின்னணி இசை ‘விஸ்வரூபம்’ திரைப்படத்தில் வரும் பின்னணி இசையை நினைவுபடுத்தியிருந்தால் மட்டும் பரவாயில்லை, ‘விஸ்வரூபம்’ பின்னணி இசையை அப்படியே மறுபதிப்பு செய்ததைப் போலவே இருந்தது.

மேக்கிங்கிலும், காட்சியமைப்பிலும் இன்னும் பல மடங்கு கவனம் செலுத்தியிருக்கலாம் என்பது குறையாக இருந்தாலும் கூட, இரண்டே கால் மணி நேரம் தொய்வில்லாமல் நகரும் ‘இப்படை வெல்லும்’ திரைப்படத்தை நிச்சயமாக ஒரு முறை கண்டுகளிக்கலாம்.

- ரஹ்மான்
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்