முகப்புவிமர்சனம்

'இரும்புத்திரை' திரைப்பட விமர்சனம் - Irumbu Thirai Movie Review

  | Friday, May 11, 2018

Rating:

'இரும்புத்திரை' திரைப்பட விமர்சனம் - Irumbu Thirai Movie Review
 • பிரிவுவகை:
  ஆக்ஷன் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  விஷால், சமந்தா, அர்ஜுன்
 • இயக்குனர்:
  p.s மித்ரன்
 • தயாரிப்பாளர்:
  விஷால்
 • எழுதியவர்:
  p.s மித்ரன்
 • பாடல்கள்:
  யுவன் ஷங்கர் ராஜா

அறிமுக இயக்குனர் P.S.மித்ரன் இயக்கத்தில் விஷால், சமந்தா மற்றும் அர்ஜுன் நடிப்பில் கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் தயாரிப்பில் இருந்த 'இரும்புத்திரை' திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. டிரைலர் மற்றும் ப்ரோமோக்கள் மூலம் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், முதல் பாதியை மட்டும் திரையிட்டு காண்பித்த புதுமையான பத்திரிக்கையாளர் சிறப்புக்காட்சி மூலம் ஊடகங்களிடமும் நல்ல விமர்சனத்தை பெற்றிருந்தது 'இரும்புத்திரை'.

ராணுவ அதிகாரியாக பயிற்சியில் இருக்கும் கதிரவன் (விஷால்) தன் கண்முன் எங்கே தவறு எங்கு அநியாயம் நடந்தாலும் அடிதடியில் இறங்குவதாலும், தன் கோபத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவிப்பதாலும் மருத்துவ ஆலோசனைக்காக ரதி தேவியை (சமந்தா) சந்திக்க பரிந்துரைக்கபடுகிறார். அதே சமயத்தில், ஒரு ஹேக்கர் கும்பல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மக்களின் வங்கிக்கணக்குகளில் ஊடுருவி லட்சம் லட்சமாக பணத்தைத் திருடிக்கொண்டிருக்கிறது. ஒரு சமயத்தில் அவர்களால் கதிரவனும் பாதிக்கப்படவே, அவர்களை துரத்தி செல்கிறான். அந்த தேடல் White Devil (அர்ஜுன்) என்கிற சைபர் க்ரைம் கும்பலின் தலைவனை நோக்கி செல்கிறது.

யாராலும் பிடிக்க முடியாத, ஆனால் எல்லோரையுமே கண்காணிக்கக்கூடிய அளவிற்கு தொழில்நுட்ப முன்னேற்றங்களை தன் விரல் நுனியில் வைத்திருக்கும் White Devil. காவல் துறை அதிகாரியிடமே பணத்தை திருடிவிட்டு அந்த அதிகாரியையே மிரட்டுமளவிற்கு எவராலும் நெருங்க முடியாத உயரத்தில் இருக்கும் வில்லன்! மறுபுறம், பயிற்சியில் இருக்கும் நேர்மையான, எளிதில் எதற்கும் கோபமடையக்கூடிய இளம் ராணுவ அதிகாரியான கதாநாயகன். ஆன்லைன் மோசடிகள் பற்றிய கதைக்களம். இப்படிப்பட்ட ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையில், சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாத வகையில் விறுவிறுப்பான திரைக்கதையுடன் இறங்கி அடித்திருக்கிறார் அறிமுக இயக்குனர் மித்ரன்.

ஆரம்பத்தில், விஷாலின் அறிமுகக்காட்சியியை அடுத்து வரும் 20-30 நிமிடங்கள் சற்று மந்தமாகவே நகர்கிறது. சிரிப்பை வரவழைக்க தவறும் பார் காமெடி, ராணுவ பயிற்சி தள காமெடிகள், அவசியமின்றி வரும் ஒரு ஹீரோ அறிமுகப்பாடல், அதற்கடுத்து உடனேயே ஹீரோயினின் அறிமுகம், ரொமான்ஸ் டிராக் என படம் நகர்ந்துகொண்டிருக்கவே, அதற்கடுத்த சில நிமிடங்களிலேயே படம் வேகமெடுத்து மிகவும் விறுவிறுப்பாக நேர்க்கோட்டில் பயணிக்க தொடங்கிவிடுகிறது. அதன் பின் வந்த காதல் காட்சிகள் கூட ரசிக்கும்படி இருந்தது. வில்லனும், நாயகனும் சந்திக்கும் முதல் புள்ளிதான், இடைவேளை காட்சி. ஹீரோவும் வில்லனும் பேசும் தொலைபேசி உரையாடலுடன் முதல் பாதி முடிய, இரண்டாம் பாதி எவ்வளவு பரபரப்பாய் இருக்குமோ என்கிற எதிர்பார்ப்பை கிளப்புகிறார்கள்.

பொதுவாக, இது போன்ற படங்களில் ஹீரோவுடைய பிரச்சினையில் பார்வையாளர்களாகிய நாமும் தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தால், ஆக்ஷன் காட்சிகளும் சரி எமோஷனல் காட்சிகளும் சரி இன்னும் சிறப்பாக இருக்கும். அந்த வகையில், சாமானியர்கள் கடன் வாங்குவதில் உள்ள சிக்கல்கள் முதல் நடுத்தர வர்க்க மக்களின் பல பிரச்சினைகளை பற்றி பேசியிருக்கிறது இப்படம். அது போக, வங்கியிலிருந்து வரும் SMSகளை ப்ளாக் செய்வது, மொபைல் appகள், பேஸ்புக் விளம்பரங்கள், ஜெராக்ஸ் கடைக்காரர்கள் விற்கும் தகவல்கள், Boarding Passகளை அலட்சியமாக தூக்கியெறிவது பற்றியெல்லாம் மிகவும் விரிவாக ஆய்வு செய்து காட்சிகள் அமைத்திருக்கிறார்கள். சமீபத்தில் நடந்த ஆதார் கார்டு தகவல் கசிவு மற்றும் Facebook Cambridge Analytica மோசடி பற்றியும் கூட பேசி பயமுறுத்துகிறார்கள்.

இடைவேளை காட்சி, ரிட்சி ஸ்ட்ரீட் சுரங்கப்பாதையில் வரும் சண்டைக்காட்சி, ரயில்வே ஸ்டேஷன் சிவப்புக்குடை காட்சி, சமந்தா கடத்தப்படும் காட்சி என ஹீரோ-வில்லன் மோதிக்கொள்ளும் எல்லா காட்சிகளுமே பரபரவென டென்ஷன் ஏற்றுகிறது. ஹீரோவை மாஸாக காட்டுவதற்காக அவ்வளவு கில்லாடியான வில்லனை கிளைமாக்ஸில் திடீரென முட்டாளாக்கிவிட்டு, சற்றே அவசரமாக படத்தை முடிப்பது மட்டும் வழக்கமான கோலிவுட் ஸ்டைல் ஃபார்முலா. செண்டிமெண்ட் காட்சிகள் எல்லாமே, முடிந்தவரை சினிமாத்தனங்கள் இல்லாமல் இயல்பாக அமைந்துள்ளன. சமந்தா விஷாலுக்கு அறிவுரை கூறுவது, விஷால் தன் தங்கையிடம் பேசி மனம் மாறுவது, டெல்லி கணேஷ் வரும் எமோஷனல் காட்சி என எல்லாமே மிக அழகாக கையாளப்பட்டிருந்தது. 'காசு இல்லாதவன் 10 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணா, 4ரூபாய் டாக்ஸ் பிடிக்குறான். காசு இருக்குறவன் 500 ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணா, ஃபுல் டாக்டைம்ன்னு குடுக்குறான்' 'கொடுத்த கடனை இப்படி தப்பான முறையில கேட்குறது கூட பரவாயில்லை.. ஆனா, போன் பண்ணி போன் பண்ணி அந்த கடனை எங்களை வாங்க வைக்குறதே நீங்கதானேடா' போன்ற வசனங்கள் கவனம் ஈர்க்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் பின்னணி இசையும், ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவும் 'இரும்புத்திரை' படத்திற்கு பெரும்பலம் சேர்த்திருக்கிறது; படத்தின் தரத்தையே பல மடங்கு உயர்த்திக் காட்டிட பெரிதும் உதவியிருக்கிறது. கதையின் சீரான ஓட்டத்தை கெடுத்துவிடக்கூடாது என்பதற்காக 'Angry Bird' 'அழகே அழகே' என இரு பாடல்களை வெட்டியெறிந்த எடிட்டர் ரூபன் மற்றும் இயக்குனரை பாராட்டத்தான் வேண்டும்.

'உன் மாச சம்பளத்துல பத்தாயிரம், பத்தாயிரமா காலி பண்றேன் பாக்குறியா?' 'என்னை பொறுத்தவரைக்கும், நீ வெறும் நம்பர்.. நம்பரா மட்டும் இருந்தா, பிரச்சினையில்ல.. ஆள் ஆகணும்ன்னு நினைக்காத' என மிரட்டும் White Devil ஆக வரும் 'ஆக்ஷன் கிங்'தான் 'மேன் ஆஃப் தி மேட்ச்'. ​லிஃப்ட்டில் விஷால் துப்பாக்கியை எடுத்து நீட்டுகையில் ரொம்ப கூலாக ரியாக்ட் செய்வது, இறுதியில் எல்லாவற்றையும் இழந்த பின்பும் நிதானமாக நிற்பது வரை காட்சிக்கு காட்சி அர்ஜுன் கைதட்டல்களை அள்ளுகிறார். இது போன்ற எமோஷனல் ஆக்ஷன் த்ரில்லர்கள் என்றால், விஷாலுக்கு அல்வா சாப்பிடுவது போல என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஆக்ஷன், ரொமான்ஸ், செண்டிமெண்ட் என எல்லா ஏரியாவிலும் ஈஸியாக பாஸ்மார்க் வாங்குகிறார் விஷால். அழகு பொம்மையாக உலாவரும் சமந்தாவிற்கு முதல் பாதியில் மட்டுமே முக்கியத்துவம் இருக்கிறது. மூத்த நடிகர் டெல்லி கணேஷ் அவர்களின் கேரியரில் இது குறிப்பிடத்தக்க ஒரு வேடம் என்றே சொல்லுமளவிற்கு பிரித்து மேய்ந்திருக்கிறார். அப்பாவி கிராமத்துக்காரராகவும், கடன் வாங்கி தவித்து மானம் மரியாதை இழந்தவராகவும், 'உங்களை அடிச்சிருவேனோன்னு பயமா இருக்கு' என விஷால் சொல்லும் காட்சியிலும், காமெடி காட்சிகளிலும் நம் நினைவில் நிற்கிறார். ரோபோ ஷங்கரின் காமெடி, ஆங்காங்கே அரங்கை சிரிப்பலையில் ஆழ்த்துகிறது.

'இரும்புத்திரை' - திரையரங்கில் தவறவிடக்கூடாத ஒரு தரமான பொழுதுபோக்கு திரைப்படம்! ஸ்மார்ட் ஃபோன்கள் மற்றும் சமூகவலைதளங்களின் பயன்பாட்டில் கவனம் தேவை என்கிற அச்சத்தை நம்முள் ஏற்படுத்துவதே இப்படத்தின் வெற்றி!

 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்