முகப்புவிமர்சனம்

Adult காமெடியா? Porn மூவியா? – 'இருட்டு அறையில் முரட்டு குத்து' விமர்சனம் - Iruttu Araiyil Murattu Kuththu movie review

  | Saturday, May 05, 2018

Rating:

Adult காமெடியா? Porn மூவியா? – 'இருட்டு அறையில் முரட்டு குத்து' விமர்சனம் - Iruttu Araiyil Murattu Kuththu movie review
 • பிரிவுவகை:
  அடல்ட் ஹாரர் காமெடி
 • நடிகர்கள்:
  கெளதம் கார்த்திக், வைபவி சாண்டில்யா, சந்திரிகா ரவி, யாஷிகா ஆனந்த், மொட்ட ராஜேந்திரன், கருணாகரன், சாரா, பாலசரவணன்
 • இயக்குனர்:
  சந்தோஷ்.பி.ஜெயக்குமார்
 • தயாரிப்பாளர்:
  BLUE GHOST பிக்சர்ஸ்
 • எழுதியவர்:
  சந்தோஷ்.பி.ஜெயக்குமார்
 • பாடல்கள்:
  பாலமுரளி பாலு

சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் வெற்றியடைந்த ‘ஹர ஹர மஹாதேவகி’ திரைப்படத்தை இயக்கிய சந்தோஷ் ஜெயகுமாரின் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் இரண்டாவது திரைப்படம் ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’. படத்தின் டைட்டிலும், டைட்டில் logoவில் இருந்த படங்களுமே தொடக்கத்திலேயே பெரும் சர்ச்சைக்குள்ளாகின. அடுத்தடுத்து வந்த டீசர், ப்ரோமோக்கள், விளம்பரங்கள் என எல்லாமே அதே ரீதியில் இருந்ததால் ஊடகங்களால் விமர்சிக்கப்படவே, சமீபத்தில் நடந்த பிரஸ்மீட் ஒன்றில் பேசிய இயக்குனர் ‘நம் சினிமாத்துறையில் Adult காமெடி படம் என்றாலே, Porn மூவி என்கிற எண்ணம் இருக்கிறது. நான் எடுத்திருப்பது Adult காமெடி’ என சொன்னார். ஆனால், படம் பார்த்து முடித்து அரங்கை விட்டு வெளியே வருகையில் உண்மையில் இது என்ன படம் என்பது உங்களுக்கே தெரியும்.

நாயகன் வீராவிற்கு (கௌதம் கார்த்திக்) அவனது பெற்றோர்கள் நீண்ட நாட்களாக பெண் பார்த்து வருகிறார்கள். ஆனால், பல கேர்ள் ஃப்ரெண்ட்களுடன் ஊர் சுற்றியவன் என்கிற காரணத்தால், எல்லா பெண்களும் அவனை நிராகரிக்கிறார்கள். இச்சமயத்தில், அவனை சந்திக்கும் நாயகி தென்றல் (வைபவி) பல பெண்களை காதலித்த அவனது அனுபவத்தையே ஒரு பிளஸ்ஸாக பார்க்கிறாள். அவனை திருமணம் செய்துகொள்வது குறித்து முடிவெடுக்க, அவனுடன் ஒரு வாரம் பழகிப் பார்க்க ஒரு டிரிப் செல்ல வேண்டுமென சொல்கிறாள். வீரா, தென்றல் மற்றும் அவர்களது நண்பர்களுடன் பாங்காங்கிற்கு வருகிறார்கள். இவர்கள் உடலுறவு வைத்துக்கொள்ளலாம் என நினைக்கும்பொழுதெல்லாம் ஏதோவொரு தடங்கல் வந்துகொண்டே இருக்கிறது. ஓரிரு நாட்களில், அந்த வீட்டில் ஒரு பெண் பேய் இருக்கிறதென்பது என்பதையும், செக்ஸ் இன்பத்தையே தன் வாழ்வின் மிகப்பெரிய குறிக்கோளாய் வைத்திருந்த அந்த பெண் திடீரென எதையுமே அனுபவிக்காமல் இறந்துவிட்டதால் 25 ஆண்டுகளாக கன்னி கழியாத virgin ஆண்களுக்காக பேயாக காத்திருக்கிறாள் என்பதையும் அறிந்து கொள்கிறார்கள். அந்த வீட்டைவிட்டு வெளியே செல்லவிடாமல் அவர்களை அந்த பேய் தடுக்க, அவர்கள் தப்பித்தார்களா இல்லையா என்பதே இப்படத்தின் கதை.

‘Great Grand Masti’ என்கிற பாலிவுட் படத்தின் கதையையும், ‘Handjob Cabin’ என்கிற parody டிரைலர் ஐடியாவையும் தழுவி எழுதப்பட்டுள்ள ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ திரைப்படத்தின் காட்சியமைப்புகளில் மருந்துக்கு கூட எந்தவித சிரத்தையோ அல்லது கிரியேடிவிட்டியோ தெரியவில்லை. Adult காமெடி என்கிற பெயரில் எவ்வளவு கொச்சையாக படமெடுத்தாலும் பார்க்க பெரும் கூட்டமிருக்கிறது என்கிற நம்பிக்கையில் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள் என தெரிகிறது. படத்தின் டைட்டில், ‘அழுக்கு ஜட்டி’ அமுதவல்லி என பேயை அறிமுகப்படுத்தி வெளிவந்த ஒரு போஸ்டர், ‘ஒரு மாசமா போடல, ஓட்டை மூடிக்கிச்சு’ என்ற வசனத்துடன் sneak peak ப்ரோமோ என படத்தின் எல்லாவித விளம்பரங்களுமே அவ்வாறே இருந்தது. திரையரங்கில் படம் தொடங்குவதற்கு முன் ‘கையையும் வாயையும் துடைக்க tissue எடுத்துக்கொள்ளுங்கள்’ என சொல்லும் Disclaimer அறிவிப்பு கூட முகம் சுளிக்க வைக்கும் வகையிலேயே இருந்தது.

நாயகியின் தந்தையின் அறிமுகக்காட்சி காமெடிகளில் தொடங்கி, நாயகனை அடைய துடிக்கும் காவ்யா சம்பந்தப்பட்ட காட்சிகள், இரண்டாம் பாதியில் வரும் சர்ச் ஃபாதர் மற்றும் சிஸ்டர் காமெடி, அவர்களது அஜீரண கோளாறு காமெடிகள், Gay காமெடி, பாட்டில் விளையாட்டு காமெடி என எல்லாமே ரசனையற்றவையாகவும் மலிவான தரத்திலுமே இருந்தன. இவ்வளவு வெளிப்படையாகவும், desperate ஆக முயற்சித்தும் கூட இயக்குனரால் ஒரு நல்ல முழுநீள பொழுதுபோக்கு திரைப்படத்தை கொடுக்க முடியவில்லை. இது போக, பாரில் குடித்துவிட்டு காசு தராமல் ‘சா பூ த்ரீ’ போட்டு விளையாடி ஏமாற்றுவது, ‘பிக் பாஸ்’ வாய்ஸ் ஓவர் ஸ்டைலில் காட்சிகளை விளக்குவதாக கழுத்தையறுப்பது என இன்னொரு பக்கம் சாதாரண காட்சிகளிலும் கடுப்பேற்றுகிறார்கள்.

சென்னை கிழக்குகடற்கரை சாலையில் உள்ள பங்களாவை, பாங்காங்க் என அழகாக காட்டியிருந்த VFX துறையின் முயற்சிகள் பாராட்டத்தக்கது. படத்தின் பாடல்கள் எதுவுமே ரசிக்கும்படி இல்லாவிட்டாலும், பின்னணி இசை படத்திற்கு பலமாக இருந்தது. படத்திற்கு படம் அழகாகிக் கொண்டே போகும் கௌதம் கார்த்திக், இந்த படத்தில் இன்னும் ரொம்பவே ஹேண்ட்ஸம்மாக தெரிகிறார். ஆனால், இக்கதையில் ஹீரோவுக்கு பெரிதாக ஒரு வேலையும் இல்லாததால் பெரிய நடிகர் பட்டாளத்திடையே ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட் போல மட்டுமே உலவிக்கொண்டிருக்கிறார். ஆங்காங்கே படத்தில் ஓரிரு காட்சிகளில் சிரிப்பு வருவதற்கு முக்கிய காரணமாக இருக்கிறார் ஷா ரா.

கடந்த சில வருடங்களில் Adult Comedy என்கிற பெயரில் வெளியான மற்ற அரைவேக்காட்டு படங்களைப் போலவே, இந்த படத்திலும் எல்லா ஆண்களும் பெண்களும் செக்ஸ் ஒன்றையே தங்கள் வாழ்வின் மிக உயரிய லட்சியமாக வைத்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். அதிலும், கவர்ச்சி பொம்மைகளாக வருவதைத் தாண்டி ஆண்களின் போகப்பொருளாக மட்டுமே இப்படத்தின் எல்லா பெண் கதாபாத்திரங்களும் உலவுகின்றன. ஒரு வாரம் பழகி நாயகனுடன் உடலுறவு வைத்துக்கொண்டு பின்னர் ஓகே சொல்கிறேன் என சொல்லும் கதாநாயகி, தினமும் சரக்கு வாங்கி கொடுக்கிறேன் என சொன்னதும் காதலை ஏற்கும் காவ்யா, தனது பாய்ஃப்ரெண்டின் நண்பனை அடைய பாங்காங்க் செல்வது, சமையல்காரியாக வரும் மதுமிதா முன்பின் தெரியாத ஒரு ஆளை பார்த்த சில நிமிடத்திலேயே அவனுடன் உடலுறவு கொள்ள சம்மதிப்பது, கிளைமாக்ஸில் வரும் சாமியாரின் சிஷ்யை, இவ்வளவு ஏன் பேயை கவர்ச்சியாக காட்டியது வரை எல்லாமே அப்படித்தான் இருக்கிறது. ஏதாவது படம் எடுத்து, எப்படியாவது காசு பார்த்தால் போதும் என்பது ஒன்று மட்டுமே படக்குழுவினரின் எண்ணமாக இருந்திருப்பது தெரிகிறது. இதெல்லாம் போக, ஓரினச்சேர்க்கையாளர்களை கிண்டல் செய்தே தனியாக ஒரு காமெடி டிராக் வைத்திருப்பதெல்லாம் மிக மோசமாக இருந்தது. ‘ஆரண்ய காண்டம்’ போன்ற ஒரு தரமான படத்தில் 52 இடத்தில் ‘கட்’ செய்யவேண்டும் என்றும், மேலும் பல சிறந்த படைப்புகளுக்கும் ஆயிரம் நிபந்தனைகள் போடும் சென்ஸார் அமைப்பு இப்படிப்பட்ட படங்களை எல்லாம் ராஜமரியாதையோடு எளிதில் வெளிவர செய்வது என்ன மாதிரியான தணிக்கை முறையோ தெரியவில்லை!

‘வெளிநாடுகளைப் போல நம் நாட்டிலும் நிறைய Adult காமெடி படங்கள் வெளியாக வேண்டும்’ என இப்படத்தின் இயக்குனர் கூறியிருந்தார். Adult காமெடி திரைப்படங்கள் வெளிவருவதில் எந்த தவறுமில்லை. ஆனால், தொடர்ந்து ‘த்ரிஷா இல்லைன்னா நயன்தாரா’ ‘ஹர ஹர மஹாதேவகி’ ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ போன்ற அரைவேக்காட்டு Adult காமெடி படங்கள் வருவதுதான் ஆபத்து. சொல்லப்போனால், பேயை கூட இவ்வளவு கிளாமராக காட்டி பார்வையாளர்களை seduce செய்து கைதட்டல்கள் அள்ளும் இப்படத்தை ஒரு semi-porn மூவி என்றுதான் சொல்லவேண்டும். ஓரளவுக்கு சீரான செக்ஸ் கல்வியும், முறைப்படுத்தப்பட்ட பாலியல் வியாபாரமும், சமூகத்தின் எல்லா தளங்களிலும் பெண்களுக்கு சம உரிமை அளிக்க முனைந்திடும் சித்தாந்தங்களும் கொண்ட அமெரிக்கா போன்ற ஒரு வளர்ந்த நாட்டில் Adult காமெடி படங்கள் வெறும் பொழுதுபோக்காக மட்டுமே எடுத்துக்கொள்ளும் பக்குவம் நிறையவே உண்டு. ஆனால், Sexual Poverty நிரம்பிக் கிடக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் இது போன்ற அரைகுறை புரிதலுடைய படங்கள் பெண்கள் மீதான இழிவான பார்வைக்கும், மேலும் பல பாலியல் வன்கொடுமைகளுக்கும் மட்டுமே வழிவகுக்கும் என்பதே உண்மை.

இது போன்ற குப்பைப் படங்களை விமர்சகர்கள் எவ்வளவு கழுவி ஊற்றினாலும் கூட, பதின்வயது பார்வையாளர்களிடமுள்ள அதீத வரவேற்பால் இந்த படம் பெரிய ஹிட்டாகி, மேலும் பல முரட்டுக்குத்துகள் வெளிவரத்தான் போகிறது என்பதில் மாற்று கருத்தில்லை. ‘18+ இண்டர்வியூ’, ‘18+ ரிவ்யூ’ என்றெல்லாம் தலைப்புகள் இட்டு ஊடகங்களும் தொடர்ந்து இப்படத்தை அதே பாணியில் விளம்பரபடுத்துவது இன்னும் கேவலம்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்