முகப்புவிமர்சனம்

ஒரு ஏழைத்தாய்க்குப் பிறந்த கஞ்ச டானின் கதை - 'ஜுங்கா' விமர்சனம் - Junga Movie Review

  | Friday, July 27, 2018

Rating:

ஒரு ஏழைத்தாய்க்குப் பிறந்த கஞ்ச டானின் கதை - 'ஜுங்கா' விமர்சனம் - Junga Movie Review
 • பிரிவுவகை:
  டார்க் காமெடி
 • நடிகர்கள்:
  விஜய் சேதுபதி, சயிஷா, யோகிபாபு, சரண்யா, சுரேஷ் சந்திர மேனன்
 • இயக்குனர்:
  கோகுல்
 • தயாரிப்பாளர்:
  விஜய் சேதுபதி, அருண்பாண்டியன்
 • எழுதியவர்:
  கோகுல்
 • பாடல்கள்:
  சித்தார்த் விபின்

பரம்பரை கேங்ஸ்டர்களான தாத்தா, அப்பா இழந்த சொத்தை மீட்க, கேங்ஸ்டர் ஆகும் ஒரு கஞ்சன் `ஜுங்கா'வின் கதைதான் படம். 

ஊரில் கௌரவமாக கண்டக்டர் வேலை பார்க்கும் ஜுங்காவுக்கு (விஜய் சேதுபதி), தான் ஒரு டான் வம்சாவளி என்றும், தாத்தா லிங்கா, அப்பா ரங்கா இருவரும் கேங்ஸ்டராக இருந்து பந்தாவாக செலவழித்து குடும்ப சொத்தை எல்லாம் அழித்ததும் தெரியவருகிறது. அப்பா, தாத்தா போல இல்லாமல் ஒரு கஞ்ச டானாக இருந்து இழந்த சொத்தை மீட்க, `அசிஸ்டென்ட் டான்' யோயோவுடன் (யோகிபாபு) சென்னை வருகிறார். அந்த ஏழைத்தாய்க்குப் பிறந்த கஞ்ச டானின் முக்கிய குறிக்கோள் பூர்வீக சொத்தான சினிமா பேரடைஸ் தியேட்டரை மீட்பது. அதற்கான முயற்சிகளில் இருக்கும் போது செட்டியாரால் (சுரேஷ் சந்திர மேனன்) அவமானபடுத்தப்படுகிறார். ஆனாலும் தான் கொண்ட கொள்கையில் ஜெயிக்க பாரீஸ் செல்கிறார். எதற்காக பாரீஸ் செல்கிறார்?, தன் தியேட்டரை மீட்கிறாரா விஜய் சேதுபதி? என சில கேள்விகளுக்கு பின் பாதி படம் விடைசொல்கிறார் இயக்குநர் கோகுல்.

சிறையில் இருந்து என்கௌண்டார் செய்வதற்காக விஜய் சேதுபதி அழைத்துச் செல்லப்படுவதில் இருந்து துவங்குகிறது படம். மெல்ல மெல்ல காமெடிப் படமாக உருவெடுத்து இடையில் நிறைய ஸ்பூஃப் காட்சிகளும் இடம்பெறுகிறது. ஜுங்கா என எதற்காகப் பெயர்? டானின் முதல் காதல் எதனால் பிரிகிறது? வாழ்ந்து கெட்ட டானை காட்ஃபாதார் பிரதிபலிப்பாக கிண்டல் செய்வது, `பொயட்டு' தினேஷை (அது அவ்வளவு பெரிய காமெடி இல்லையே) கூப்பிட்டு வைத்து அசிங்கப்படுத்துவது, குருவி சேர்ப்பது போல் சேர்த்த பணம் எல்லாம் செலவானதும் அழுவது எனப் படத்துக்குள் நிறைய பகடி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால், அதில் எவை எல்லாம் வேலைக்காகிறது என்பதில் பெரிய கேள்வி எழுகிறது.

விஜய் சேதுபதியின் கதாபாத்திர வடிவமைப்புதான் படத்தில் மிகப் பெரும் பலம். கொலைக்காக செல்லும் போது ஜீப்பை ஷேர் ஆட்டோவாக்குவது, `அவன் 20வது மாடியில இருக்கான்னா எதுக்குடா புல்லட்ட வேஸ்ட் பண்ற' என கஞ்சம் பிடிப்பது, ஃப்ளைட்டில் புளியோதரை விற்பது என அவர் செய்யும் பல சேட்டைகள் ரகளை. யோகி பாபுவின் கவுண்டர்கள் சில இடங்களில் சிரிப்பை வரவழைக்கிறது. "உனக்கு உங்கப்பா ஏன் ஜுங்கானு பேரு வெச்சாரு தெரியுமா' என விஜய் சேதுபதி மாடுலேஷனிலேயே பேசிக் காட்டும் இடத்தில் சரண்யா பொன்வண்ணன் அசத்தல். சயிஷா படம் முழுக்க அழகாக இருக்கிறார். கேமியோ ரோலில் வந்தாலும் மடோனா கவனிக்க வைக்கிறார். என்ன இருந்தாலும் சீனியர் சீனியர்தான் என்பது போல் காட்ஃபாதர் ஸ்பூஃபில் நடித்திருக்கும் ராதாரவி அசத்துகிறார். மற்றபடி மொட்டை ராஜேந்திரன், சுரேஷ் சந்திர மேனன் போன்ற பாத்திரங்கள் மிகவும் வழக்கமான பாத்திரங்கள்தான். படத்தின் மிகப் பெரிய பிரச்சனை காமெடிக்குத் தேவையான அத்தனை சூழலும் இருந்தும் அதை சுவாரஸ்யமான காட்சிகளாய் மாற்றாததுதான். மிகச் சில காட்சிகளைத் தவிர மற்ற காட்சிகளில் காமெடி பெரிதாக எடுபடவில்லை. ஒரு காமெடி காட்சி மெல்ல மெல்ல வளர்ந்து வரும் அதற்கு சிரிக்கத் தயாராகும் போது அடுத்த காட்சிக்கு நகர்கிறது. எந்தக் காமெடியும் முழுமையாக இல்லாதது போன்ற உணர்வு. மெதுவாக படத்தில் உண்டாகும் காமெடிகள் வேலை செய்ய ஆரம்பித்து சுரேஷ் மேனன் - விஜய் சேதுபதியின் முதல் சந்திப்பு சமயத்தில் பயங்கர உச்சத்துக்கு செல்லும். பிறகு மெல்ல மெல்ல குறைய ஆரம்பிக்கும் சுவாரஸ்யம் இரண்டாம் பாதியில் மிகவும் பலவீனமாகிறது. 

என்னதான் காமெடிப் படம் என்றாலும் இடையில் "ஏழை எல்லாம் கொளுத்தனும்னு சொல்ற, அந்த ஏழைக்குதான ஒரு ரூபாய்க்கு ஷாம்ப்பு வித்து கோடீஸ்வரனா இருக்க" என்பது, "கெடூரமா ரேப் பண்ணவனுக்கு சாவும் கொடூரமாதான் இருக்கணும்" எனச் சின்னதாக சமூக அக்கறை பேசியதற்கு பாராட்டுகள். "ஃப்ளைட்ட ஹைஜாக் பண்றதைப் பார்த்திருக்கேன். ஆனா, ஃப்ளைட்ல இருக்கறதை எல்லாம் ஹைஜாக் பண்றதை இப்பதாண்டா பாக்கறேன்", "ஒரு டான் டாவடிச்சா என்ன ஆகும்ன்றதுக்கு நான்தான் உதாரணம்" போன்ற கதையுடன் ஒட்டிய காமெடி வசனங்கள் இன்னும் கொஞ்சம் இருந்திருந்தால் படம் சுவாரஸ்யமாக இருந்திருக்கும். ஆனால் படம் முழுக்க சவச்சவச்சவ என  டயர்ட் ஆக்கும் படியான வசனங்கள் மட்டும் நிறைந்திருப்பது சோகம். படம் முழுக்க விஜய் சேதுபதியின் கஞ்சதனக் காமெடிகளை மையப்படுத்தியே செல்வது ஓகேதான். ஆனால், மற்ற காட்சிகளில் உள்ள காமெடிகளிலும் கவனமாக வேலை செய்திருக்கலாம். பாடல்களில் பெரிதாக ஒன்றும் கவரவில்லை என்றாலும் பின்னணி இசையில் படத்துக்கு வலு சேர்க்க முயற்சித்திருக்கிறார் சித்தார்த் விபின். பாரீஸ் சேசிங், பாடல்கள், சண்டைக் காட்சிகள் என எல்லாவற்றிலும் படத்திற்கு ரிச் லுக் கொடுக்கிறது டட்லியின் ஒளிப்பதிவு. 

கஞ்ச டானின் கதையை, கஞ்சம் இல்லாமல் தாராளமான காமெடிப் படமாக கொடுத்திருந்தால் மனதில் ஃபார்ம் ஆகியிருப்பான் இந்த ஜுங்கா. முழுமையான டார்க் காமெடி ஒர்க் அவுட்டாகவில்லை என்றாலும், ஜாலியாக சிரித்துவருவதற்கு ஜுங்காவுடன் ஒரு ட்ரிப் அடிக்கலாம்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்