முகப்புவிமர்சனம்

KGF விமர்சனம் – ’லாஜிக் இல்லா மேஜிக்’ மரண மாஸ் படம்! - K.G.F: Chapter 1 Movie Review

  | Tuesday, January 08, 2019

Rating:

KGF விமர்சனம் – ’லாஜிக் இல்லா மேஜிக்’ மரண மாஸ் படம்! - K.G.F: Chapter 1 Movie Review
 • பிரிவுவகை:
  ஆக்‌ஷன் டிராமா
 • நடிகர்கள்:
  யஷ், ஸ்ரீநிதி செட்டி, தமன்னா
 • இயக்குனர்:
  பிரஷாந்த் நீலு

அப்பா பெயர் தெரியாத தாயின் அரவணைப்பில் மட்டும் வளரும் ராக்கியை (யாஷ்), சிறு வயது முதலே வறுமை வாட்டியெடுக்கிறது. ராக்கியின் தாய், 25 வயது ஆகும்போதே இறந்து விடுகிறாள். சாகப்போகும் நேரத்தில் ராக்கியிடம், ‘பணம் நிம்மதியா வாழ்றதை உறுதி செய்யும்னு, எல்லாம் நினைக்கிறாங்க… ஆனா, பணம் இல்லைன்னா நிம்மதியா சாகக் கூட முடியாது… நீ எப்படி பிழைப்பேன்னு எனக்குத் தெரியாது. ஆனா, பெரிய பணக்காரன் ஆகணும்’ என்று சத்தியம் வாங்குகிறாள்.

தாய் இறந்த சில நாட்களிலேயே, அதிகாரம்தான் பணத்தைத் தேடித் தரும் என்பதை ராக்கி உணர்கிறான். அதை நோக்கி ஓட ஆரம்பிக்கிறான். ஓடும் வழியில் யார் குறுக்கே நின்றாலும் வெட்டு ஒன்று, துண்டு ரெண்டுதான்.

இப்படி இலக்கையடையத் துடிக்கும் ராக்கிக்கு, கோலாரில் தங்க சுரங்கம் வைத்திருக்கும் கருடனை, அவன் இடத்திலேயே சென்று கொலை செய்ய சந்தர்ப்பம் கிடைக்கிறது. ராக்கி, கருடனைக் கொள்கிறானா, அவனைக் கொன்ற பிறகு ராக்கியின் வாழ்க்கையில் விதி எப்படி விளையாடும் என்பது தான், ’ஒன் மேன் ஆர்மி’ KGF: Chapter 1-ன் கதை.

லூசியா, யூ-டர்ன், திதி என்று கன்னட சினிமாவின் அடுத்தப் பாய்ச்சல், இந்தியாவைத் தாண்டியும் உணரத் தொடங்கியுள்ள நிலையில், தரமான தொழில்நுட்ப உதவிகளோடு உள்ளூர் சினிமா ரசிகர்களுக்கு படையலாக்கப்பட்டிருக்கிறது KGF.

முரட்டு உடம்பும், அடர் முடியும், கூரான பார்வையும் கொண்டு, ராக்கி கேரக்டரில் கச்சிதமாக பொருந்திப் போயுள்ளார் யாஷ். படம் முழுக்க யாரையாவது (சில நேரங்களில் ஒரு கும்பலையே) வெளுத்து வாங்கிக் கொண்டே இருக்கிறார். அப்படியும், அதை நம்ப முடிகிறது.

உண்மையாகவே ஒரு புரஃப்ஷனல் ரவுடி போலத்தான் இருக்கிறார் யாஷ். அடுத்தடுத்த KGF பாகங்களில் அவரின் மார்க்கெட் உயரும் என்பதில் சந்தேகம் வேண்டாம். கன்னட திரைத் துறையையும் தாண்டி, அவர் வளர்வார் என்பது நிச்சயம்.

பல ஆண்டுகள், ஒரு மரண மாஸ் கேங்ஸ்டர் படத்தை எடுக்க வேண்டும் என்ற ஆசை இயக்குநர் பிரஷாந்த் நீலுக்கு இருந்திருக்கும் போல. சீனுக்கு சீன், டீடெயிலிங். திரைக்கதையில் அதிகம் கவனம் செலுத்துவதை விட, மேக்கிங்கில் கட் அண்டு ரைட்டாக இருந்துள்ளார். அது இந்தப் படத்துக்கு கை கொடுத்துள்ளது. 30 – 40 ஆண்டுகளுக்கு முன்னர் நடக்கும் கதை என்பதை நம்பவைக்க இன்னும் எஃபர்ட் போட்டிருக்கலாம் பிரஷாந்த்.

தமன்னாவின் ஒரு குத்துப் பாட்டு, ‘இந்த ரணகளத்திலையும் கிளுகிளுப்பு’ என்ற வகையில் கடந்துபோகிறது. தனது முதல் சீனிலேயே, நடு ரோட்டில் நின்று மது குடிக்கும் ஹீரோயின் ஸ்ரீநிதி செட்டிக்கு, அதற்குப் பிறகு படத்தில் பெரிய வேலை இல்லை. நன்றாக போகும் படத்தில், எதற்கு தேவையில்லாமல் ரொமான்டிக் சீன்கள் என்ற எரிச்சல், ஸ்ரீநிதியின் மீதான எரிச்சலாகவும் மாறுகிறது.

இயக்குநருக்கு இணையாக இரண்டு பேரை இந்தப் படத்தில் பாராட்டியே ஆக வேண்டும். ஒருவர் படத்தின் எடிட்டர் ஸ்ரீகாந்த். மான்டாஜ் வகை கதை சொல்லலில், புகுந்து விளையாடியிருக்கிறார். இரண்டரை மணி நேரம் ஓடும் படம், ஒரு இடத்தில் கூட சலிப்புத் தட்டவில்லை. ஸ்ரீகாந்தின் வேலை, அந்த அளவுக்கு ஷார்ப்பாக இருக்கிறது. இரண்டாவது, ஒளிப்பதிவாளர் புவான் கவுடா. ஆரம்ப காட்சி முதல் க்ளைமாக்ஸ் வரை ஃப்ரேமுக்கு ஃப்ரேம் அதிக மெனக்கெடல். ஒரு கேங்ஸ்டர் படத்துக்கு எப்படி ஒளிப்பதிவு இருக்க வேண்டும் என்பதற்கு KGF நல்ல உதாரணம். படத்தின் பெரும்பான்மை காட்சியில் வரும் மஞ்சள் டோன், ஒரு ராவான ஃபீலை கொடுக்கிறது. ஒரு லாஜிக்கையும் பார்க்காமல், மேஜிக்கை எதிர்பார்த்து மட்டும் படம் பார்த்தால், அட்டகாசமான திரையனுபவம் KGF-ல் நிச்சயம். இனி சீரிஸாக வரப்போகும் KGF-ன் முதல் பாகமே அந்தர் மாஸ் காட்டியிருப்பதால், அடுத்தடுத்த பாகங்கள் மரண மாஸாக இருக்கும் என்பது திம்மம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்