முகப்புவிமர்சனம்

"நிலம் எங்கள் உரிமை" காலா பேசும் அரசியல் என்ன? - காலா விமர்சனம் - Kaala Movie Review

  | Thursday, June 07, 2018

Rating:

 • பிரிவுவகை:
  ஆக்ஷன் ட்ராமா
 • நடிகர்கள்:
  ரஜினிகாந்த், ஹூமா குரேஷி, சமுத்திரக்கனி, ஈஸ்வரி ராவ், நானா படேகர்
 • இயக்குனர்:
  பா. இரஞ்சித்
 • தயாரிப்பாளர்:
  தனுஷ்
 • எழுதியவர்:
  பா. இரஞ்சித்
 • பாடல்கள்:
  சந்தோஷ் நாராயணன்

"நிலம் உள்ளவர்கள், நிலம் அற்றவர்கள் என்கிற பாகுபாடு, தொடர்ந்து குறிப்பிட்ட மக்களின் அடையாளத்தை அழித்து அடிமைகளாகவே வைத்திருக்கும் நிலமை இன்னும் நீடிக்கிறது. இந்தியாவின் வர்த்தகத் தலைநகரமான மும்பை கூட அதற்கு விதிவிலக்கு இல்லை" என்கிற வர்ணனையுடன்தான் துவங்குகிறது படம். படம் முழுக்க பேசியிருக்கும் விஷயமும் நிலம் சார்ந்தவைதான். எந்த இடத்திலும் அதிலிருந்து நழுவாமல், கடைசி காட்சி வரை அதன் அழுத்தத்தை தக்க வைத்திருந்தது படத்தின் பெரும் பலம். கமர்ஷியல் படத்தில் இரஞ்சித்தின் கற்றவை பற்றவை ஃபார்முலா இம்முறையும் வெற்றியடைந்திருக்கிறது. சொல்லப்போனால் `கபாலி'யை விட அதிக தாக்கத்தை உண்டாக்குகிறது `காலா'.

படத்தின் டீசர், டிரெய்லர் பார்த்து நீங்கள் யோசித்திருந்த விஷயங்கள்தான் படத்தின் கதையும். காலா சேட் (எ) கரிகாலன் (ரஜினிகாந்த்) பாதுகாப்பில் இருக்கும் பகுதி மும்பை தாராவி. க்ளீன் மும்பை திட்டம் என்கிற போர்வையில் அந்த நிலத்தை வளைக்க திட்டமிடுகிறார் அரசியல்வாதி ஹரிநாத் (நானா படேகர்). அங்கு இருக்கும் சிக்கல்கள், வாழ்வியல், நிலத்தைப் பறிக்க நடக்கும் திட்டங்கள், அதை எதிர்க்கும் மக்கள் என இம்முறை நிலம் அதிகாரத்தின் அடையாளமாக இருப்பதைப் பற்றி பேசியிருக்கிறது இரஞ்சித்தின் `காலா'.

காலா (எ) கரிகாலனாக ரஜினி ஆச்சரியம் கொடுக்கிறார். எந்த அலட்டலும் இல்லாமல் அறிமுகமாகும் இன்ட்ரோ சீனிலேயே கவர்கிறார். நிலத்தைக் காக்க துடிப்பது, எதிர்த்து வரும் போதெல்லாம் கேள்வி கேட்பது, மனைவியிடம் கொஞ்சல், முன்னாள் காதலியைப் பார்த்து உறைவது, கலங்குவது என நெல்லைத் தமிழராக அசரடிக்கிறார். விசாரணைக்காக அழைத்துவரப்படும் காட்சியில் கொடுக்கும் நக்கல், மகனிடம் காட்டும் கோபம் எல்லாவற்றையும் விட, சொந்த நிலத்தை விட்டு போவதைப் பற்றி விவரிக்கும் ஒரு காட்சியில் ரஜினி குரலில் தெரியும் பதற்றம் முகத்தில் காட்டும் உணர்ச்சிகள் எல்லாம் வெறித்தனம். நானா படேகர் கதாபாத்திரம் அதுவரை மந்தமாக சென்றாலும், எதற்காக அந்த கதாபாத்திரம் எனக் காட்ட ஒரு காட்சி படத்தில் இருக்கும். அப்போது நானா தன் முகத்தில் காட்டுவது அதிகாரவர்கத்தின் குரூரத்தை. அவரது அலட்டிக் கொள்ளாத நடிப்புக்கு அந்த ஒரு காட்சியே உதாரணம். சமுத்திரக்கனியின் கதாபாத்திரத்தில், லேசாக `மெட்ராஸ்' ஜானியின் சாயலைப் பார்க்க முடிந்தது. ரஜினியின் முன்னாள் காதலியாக வரும் ஹுமா, மனைவியாக ஈஸ்வரி ராவ், மகன்களாக வரும் நிதிஷ், திலீபன், மணிகண்டன் மற்றும் அஞ்சலி பாட்டில் என கவனிக்கத்தக்க நடிப்பைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள்.

"சும்மா ரெண்டு புக்க படிச்சிட்டு வந்து போராடுறேன்னு கிளம்பிட வேண்டியது. அடிப்படைய தெரிஞ்சுக்கணும் முதல்ல", "நிலம் உனக்கு அதிகாரம்... நிலம் எங்களுக்கு வாழ்க்க", "இதை எல்லாம் சரிபண்ண கவர்மெண்ட்ல பணம் இல்லன்னு மட்டும் சொல்லாதீங்க", "அவங்க நம்மள கொல்ல மாட்டாங்க, ஏன்னா அவங்ககிட்ட அடிமையா வேலை செய்ய நாம வேணும். அதுக்கு மட்டும்தான் வேணும்" என மாஸ் ஹீரோ படத்தில் பன்ச் வசனங்களைத் தாண்டி கவனிக்கவைத்த பல வசனங்கள் இருந்தது பெரும் மகிழ்ச்சி. வசனகர்த்தாக்கள் மகிழ்நன், ஆதவன் தீட்சண்யா, இரஞ்சித் ஆகியோருக்கு வாழ்த்துகள்.

காலா முழுக்கவே நிலம் பற்றி பேசியிருக்கிறதுதான். ஆனால், இடையில் காலாவின் காதல், அதைப் பக்குவமாக எடுத்துக் கொண்டாலும் கிண்டல் செய்யும் மனைவி, ஒரே விஷயத்துக்காகப் போராடினாலும் தந்தை மகனுக்கு இடையே வரும் உரசல் என சில கலவையான விஷயங்களும் உள்ளது. ஆனால், அவை எந்த விதத்திலும் கதையின் ஓட்டத்தை பாதிக்காத வகையில் உள்ளது.

படத்தின் ஒளிப்பதிவாளர் முரளி + கலை இயக்குநர் த.ராமலிங்கம் இருவரும் தாராவியின் செட்டை நிஜ தாராவியாகவே காட்ட அத்தனை உழைத்திருக்கிறார்கள். இயல்பாக தாராவியின் தெருக்களில் கடை நிகழும் உணர்வைக் கொடுத்திருக்கிறார்கள். பாடல்களாகவும், பின்னணி இசையமைப்பாகவும் மிரட்டியிருக்கிறார் சந்தோஷ் நாராயணன். குறிப்பாக நானா படேகர் தோன்றும் காட்சிகளில் ஒலிக்கும் சத்தம், ரஜினியின் மன உணர்வுகளை வெளிப்படுத்த பயன்பட்டிருக்கும் குரல்கள் என சிறப்பாக செயல்பட்டிருக்கிறார் சந்தோஷ். வேலன்டினோவின் சவுண்ட் மிக்ஸிங்கை நல்ல சவுண்ட் சிஸ்டம் உள்ள திரையரங்குகளில் புதிய அனுபவத்தைக் கொடுக்கும். திலீப் சுப்பராயனின் சண்டைவடிவமைப்பும் அதிரடியாக இருக்கிறது. குறிப்பாக பாலத்தில் நடக்கும் சண்டைக்காட்சி செம வெயிட்டு.

படத்தின் இடைவேளைக் காட்சி கண்டிப்பாக கூஸ்பம்ஸ் கொடுக்கும் ஒன்று. பின்பு ஒரு காட்சி உண்டு, ராம கதா காலட்சேபம் ஒலிக்க... அதனூடே ஒரு சண்டைக்காட்சி. நிச்சயம் இது தமிழ் சினிமாவின் மிக முக்கியமான காட்சி. சிலிர்ப்பு நிச்சயம். படத்தின் பல காட்சிகள் சமகால அரசியலையும், அரசியல்வாதிகளையும் குறிப்பதாய் தோன்றுவதைத் தவிர்க்க முடியாதுதான். குறிப்பாக க்ளீன் இந்தியா - க்ளீன் மும்பை. ஏன் ஒரு குறிப்பிட்ட மக்களின் நிலப்பரப்பு சுரண்டப்படுகிறது?, நிலம் இல்லை என்றால் தனி மனிதனுக்கான அடையாளம் என்ன?, இந்த சதிகள் எவ்வளவு அழகாக பேக்கிங் செய்து அதை மக்களிடம் கொண்டு செல்கிறது?, அப்பகுதி மக்களின் மீது தொடர்ந்து வைக்கடும் குற்றவாளி அடையாளம் ஏன்? எனப் படம் தொடர்ந்து பல கேள்விகளை முன்வைத்துக் கொண்டே இருக்கிறது. அதனாலேயே படம் என்பதைத் தாண்டி ஒரு அரசியல் நகர்வாகவும் `காலா'வைப் பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. இவை தாண்டி படத்தின் நேரடியாக வைக்கப்படாமல் படத்தின் ஓட்டத்தோடு சொல்லப்படும் விஷயங்களும் கவனிக்க வைக்கிறது. வெள்ளையில் ப்யூர் ஈவில்லாக வரும் வில்லன், எதிர்மறையாகப் பார்க்கப்படும் கருப்பில் வரும் ஹீரோ, ராவணனாக சித்தரிக்கப்படும் ரஜினி, ராமனை (நானாவின் பெயர் ஹரி) எதிர்ப்பது இப்படி படத்தில் ரசிக்கவும் நிறைய உள்ளது.

மொத்தத்தில் இது ரஜினி படமா? இரஞ்சித் படமா? எனக் கேட்டால், அந்தக் கேள்வியே அபத்தம் எனத் தள்ளி வைத்துவிட்டு உங்கள் முன் இப்போதைய பிரச்சனைகளை ஒரு மாஸ் ஹீரோவின் குரலில் காட்டி, கற்பி, ஒன்றுசேர், புரட்சி செய்வதுதான் நம்மை மீட்டெடுக்க நமக்கான வழி என்கிறது காலா.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்