முகப்புவிமர்சனம்

நாலு கெட்டப்பில் விஜய் ஆண்டனி... நடிப்பில் அசத்துகிறாரா? - 'காளி' விமர்சனம் - Kaali Movie Review

  | Friday, May 18, 2018

Rating:

நாலு கெட்டப்பில் விஜய் ஆண்டனி... நடிப்பில் அசத்துகிறாரா? - 'காளி' விமர்சனம் - Kaali Movie Review
 • பிரிவுவகை:
  சென்டிமென்ட் ட்ராமா
 • நடிகர்கள்:
  விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா, யோகிபாபு, ஆர்.கே.சுரேஷ், வேல ராமமூர்த்தி, நாசர், ஜெயப்பிரகாஷ், மதுசூதனன் ராவ்
 • இயக்குனர்:
  கிருத்திகா உதயநிதி
 • தயாரிப்பாளர்:
  பாத்திமா விஜய் ஆண்டனி
 • எழுதியவர்:
  கிருத்திகா உதயநிதி
 • பாடல்கள்:
  விஜய் ஆண்டனி

தன்னுடைய தாய் தந்தையைத் தேடி அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகிறார் ஹீரோ. அவரின் தேடல் என்ன ஆனது என்பதைச் சொல்கிறான் இந்தக் `காளி'.

அமெரிக்காவில் மிகப்பெரிய டாக்டர் பரத் (விஜய் ஆண்டனி). பல வருடங்களாக மாடு முட்டுவது, குழந்தை அழுவது என தனக்கு வரும் வினோதமான கனவு என்ன எனத் தெரியாமல் குழம்புகிறார். ஒருகட்டத்தில் தன்னை இத்தனை வருடங்களாக வளர்த்தவர்கள் தன்னுடைய தாய் தந்தை இல்லை எனத் தெரிகிறது. தனக்கு வரும் கனவுக்கும், தன் உண்மையான தாய் தந்தைக்கும் தொடர்பு இருப்பதாய் உணர்ந்து, குடும்பத்தைத் தேடி இந்தியா வருகிறார். ஆனால், தன்னுடைய தாயின் பெயர் பார்வதி என்றும் அவரின் ஊர் கனவுக்கரை, தன்னுடைய உண்மையான பெயர் காளி என்பதையும் தவிர வேறு எந்த தகவலும் கிடைக்காமல் போகிறது. தன் குடும்பத்துக்கு என்ன ஆனது? தன்னுடைய அப்பா யார்? அம்மா யார்? என தெரிந்து கொள்ள அவர் மேற்கொள்ளும் முயற்சிகளே படத்தின் கதையாக விரிகிறது.

அம்மா, அப்பா சென்டிமென்ட் கதை. அதனை வித்தியாசமான வகையில் சொல்லியிருக்கிறார் இயக்குநர் கிருத்திகா உதயநிதி. படத்தின் கதையை சொல்லும் விதம், அதற்குள் காதல், காமெடி, ஆக்ஷன் என எல்லாம் இருக்குமாறு சுவாரஸ்யம் சேர்த்துத் தரவும் முயற்சித்திருக்கிறார். தன் அப்பாவைக் கண்டுபிடிக்க கிராமத்தில் ஒரு கிளினிக் ஆரம்பித்து அங்கேயே தங்குகிறார் விஜய் ஆண்டனி. விசாரிக்க துவங்கும் போது ஊரின் நாட்டாமை பெரியசாமி (மதுசூதனன் ராவ்), காட்டுக்குள்ளேயே திருடனாக வசிக்கும் தலைவெட்டி (மாரி), சர்ச் ஃபாதர் ஜான் (ஜெயப்பிரகாஷ்) என மூவரின் முன் கதையும் விஜய் ஆண்டனியை வைத்து சொல்லப்படுகிறது. படத்தின் துவக்கத்தில் அம்மா சென்டிமென்ட் பாடல், ஒவ்வொரு ஃப்ளாஷ்பேகிலும் ஒரு பாடல், அதற்கு பின்பு ஒரு பாடல் இடையில் கொஞ்சம் கதை என நகர்வதுதான் படத்தின் பெரிய மைனஸ்.

நடிப்பு பொறுத்தவரை விஜய் ஆண்டனி வழக்கம் போல் அடக்கியே வாசிக்கிறார். நான்கு கெட்டப்களில் வரும் விஜய் ஆண்டனி ஒவ்வொன்றுக்கும் தோற்றத்தில் மட்டுமே வித்தியாசம் காட்டுகிறார். மற்றபடி அதே நடிப்பு, அதே மைல்ட் வாய்ஸ் என மெய்ன்டெய்ன் செய்கிறார். ரொமான்ஸ் போர்ஷனில் கொஞ்சம் பர்ஃபாம் செய்ய முயற்சித்திருக்கிறார். விஜய் ஆண்டனிக்கும், படத்தில் சின்னச் சின்ன காமெடிகளுக்கும் உதவுகிறார் கோபி (யோகிபாபு). உண்மையில் படத்தில் பல இடங்களில் தன் ஒன்லைனர்களால் சிரிக்க வைக்கிறார் யோகிபாபு. நான்கு நாயகிகளில் ஷில்பா மஞ்சுநாத் மற்றும் சுனைனாவுக்கு நடிக்க இடம் தரும் வேடம். இருவருமே அதை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அஞ்சலி போன்ற சிறப்பான நடிகையை வைத்துக் கொண்டு, விஜய் ஆண்டனியை காதலிக்கவும், அவருக்கு அடிபட்டால் மருந்து போடவும் மட்டும் பயன்படுத்தியிருப்பது உறுத்தல். வேல ராமமூர்த்தி, ஆர்.கே.சுரேஷ் இருவருக்கும் வில்லன் வேடம், எப்போதும் போல் உறுமுகிறார்கள், அடிக்கிறார்கள். நாசர், ஜெயப்பிரகாஷ், மதுசூதனன் ராவ் ஆகியோர் கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்கள்.

வித்தியாசமான கதை சொல்லல், ஒவ்வொரு கதை சொல்லத் துவங்கும் போதும் இவர்கள் தானா என சந்தேகம் கிளப்புவதுமாக படத்தை சுவாரஸ்யப்படுத்த முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், எடுத்ததெற்கெல்லாம் "28 வருஷத்துக்கு முன்னாடி என்ன ஆச்சு தெரியுமா..." என ஃப்ளாஷ்பேக் செல்லும் விதம், ஒரு கட்டத்தில் போர் அடிக்கத் துவங்குகிறது. க்ளைமாக்ஸ் வந்த பின்பும் கூட எங்கு இன்னொரு ஃப்ளாஷ்பேக் வந்துவிடுமோ என்கிற பதற்றம் வருவதை தவிர்க்க முடியவில்லை. மேலும் அதில் எந்தக் கதையிலும் ஆழம் இல்லாததால் பார்வையாளர்களுக்கு எந்த பாதிப்பும் தராமல் கடந்து போகிறது. படத்தில் காட்டியிருக்கும் ஜாதி பிரச்சனை, திருமணமான பெண்ணை காதலிப்பது என சில சீரியஸ் விஷயங்களைக் கூட மேலோட்டமாகக் கையாண்டிருப்பதும் மைனஸ்.

விஜய் ஆண்டனி இசையில் அரும்பே பாடல் ரசிக்கும்படி இருக்கிறது. ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு முடிந்தவரை படத்தை அழகாகக் கொடுத்திருக்கிறது. படத்தில் வரும் மூன்று ஃப்ளாஷ்பேக்கிற்கும் இடையே உள்ள லிங்க் கெட்டுவிடாமல் படத்தைத் தொகுத்திருக்கிறார் லாரன்ஸ் கிஷோர். தேவை இல்லாமல் வரும் பாடல்கள், பார் சண்டைக் காட்சி, அப்பாவைக் கண்டுபிடிக்க போடும் திட்டங்கள் எனப் படத்தில் பல சொதப்பல்கள் இருப்பதால் இரண்டே கால் மணிநேரப் படம் கூட, மிக சலிப்பாக நகர்கிறது. சென்டிமென்ட் ஸ்டீரியோ படங்களைத் தாண்டி, `நான்', `சலீம்', `எமன்' போல மீண்டும் வித்தியாசமான களங்களை விஜய் ஆண்டனி தேர்ந்தெடுக்க வேண்டிய நேரம் இது.

தன் குடும்பத்தைத் தேடி கிளம்பும் மகன், அதற்காகப் பலரின் கதைகளுக்குள் நுழைவது என சுவாரஸ்யமான ஒன்லைன் பிடித்தது போல, படத்தையும் சுவாரஸ்யமாகக் கொடுத்திருந்தால் அசத்தியிருப்பான் `காளி'.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்