முகப்புவிமர்சனம்

ராதாமோகன் - ஜோதிகா காம்போ ரிட்டர்ன்ஸ் எப்படி இருக்கிறது? - `காற்றின் மொழி' விமர்சனம் - Kaatrin Mozhi Movie Review

  | Saturday, November 17, 2018

Rating:

ராதாமோகன் - ஜோதிகா காம்போ ரிட்டர்ன்ஸ் எப்படி இருக்கிறது? - `காற்றின் மொழி' விமர்சனம் - Kaatrin Mozhi Movie Review
 • பிரிவுவகை:
  ஃபேமிலி ட்ராமா
 • நடிகர்கள்:
  ஜோதிகா, விதார்த், லக்‌ஷ்மி மஞ்சு, குமரவேல், சான்ட்ரா, எம்.எஸ்.பாஸ்கர்
 • இயக்குனர்:
  ராதாமோகன்
 • தயாரிப்பாளர்:
  தனஞ்செயன்
 • எழுதியவர்:
  சுரேஷ் திவாரி, ராதா மோகன், பொன்.பார்த்திபன்
 • பாடல்கள்:
  ஏ.ஹெச்.காஷிஃப்

மனதுக்குப் பிடித்த வேலையை செய்ய வேண்டும் என நினைக்கும் பெண், அதற்கு தடையாக நிற்கும் குடும்ப சூழல், இது எப்படி சரியாகிறது என்பதை சொல்கிறது `காற்றின் மொழி'

வீட்டு வேலைகள், மகன், கணவனுக்கு சமையல், வார இறுதியில் வரும் உறவினர்களுக்கு பஜ்ஜி, பால்கனிக்கு பறந்து வரும் பாக்யலட்சுமியிடம் புலம்பல் என ஹோம்மேக்கராக இருக்க சலித்துப் போகிறது விஜயலட்சுமி (ஜோதிகா). லெமன் இன் த ஸ்பூன் விளையாட்டைத் தவிர வாழ்க்கையில் எதாவது சாதிக்க வேண்டும் என்கிற நினைப்பில் இருப்பவருக்கு கிடைக்கிறது ஆர்.ஜே ஆகும் வாய்ப்பு. உற்சாகமாக அந்த வேலையை ஏற்றுக் கொள்கிறார். ஆனால், அந்த வேலையின் தன்மை குடும்பத்துக்குள் சிக்கலை விளைவிக்கிறது. அந்தப் பிரச்சனை எப்படி கையாள்கிறார் ஜோதிகா? என்பதை மிக மென்மையாகவும் அழகாகவும் சொல்ல முயற்சிக்கிறது `காற்றின் மொழி'

ராதாமோகனின் ட்ரேட் மார்க் பாசிட்டிவிட்டி + ஜோதிகா சமீபகாலமாக நடித்து வரும் (36 வயதினிலே, மகளிர் மட்டும்) டைப்பிலேயே கதை என இரண்டும் கூடி வந்திருப்பதால் இந்தி `துமாரி சுலு'வை தமிழுக்கும் எடுத்து வந்திருக்கிறார்கள். இந்தியில் இருந்த தாக்கம் தமிழிலும் இருக்கிறதா என்கிற கம்பேரிசன்களைத் தவிர்த்து, எப்படி இருக்கிறது `காற்றின் மொழி'?

நடிப்பு பொருத்தவரை ஜோதிகா தனது வழக்கமான நடிப்பை இதிலும் வெளிப்படுத்துகிறார். வெகுளித்தனம், குறும்பு, குழப்பம், தைரியமாக மாறுவது என அவரின் நடிப்பை வெளிப்படுத்த இடம் உள்ள படம்தான். அதை அவரும் முடிந்தவரை சிறப்பாக செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், பல இடங்களில் ஒரு செயற்கைத்தனம் தெரிவதை உணரமுடிகிறது. விதார்த் நடிப்பு மிக கச்சிதமாக இருந்தது. மனைவியின் போக்கு ஏற்படுத்தும் கவலை, தான் வேலை செய்யும் இடத்தில் வரும் பிரச்சனைகள் இரண்டையும் யாரிடமும் சொல்லமுடியவில்லை என ஒரு போன் காலில் சொல்லி கலங்கும் இடம்போதும் அவரின் நடிப்பை பற்றி சொல்ல. குமரவேல், லக்‌ஷ்மி மஞ்சு இருவரின் கதாபாத்திரமும் நடிப்பும் நிறைவாக இருக்கிறது. எம்.எஸ்.பாஸ்கர் எப்போதும் போல் சிறப்பாக ஸ்கோர் செய்கிறார். யோகி பாபு வரும் காட்சிகள் படத்தின் நகைச்சுவை ஃப்ளேவருக்கு உதவுகிறது. அதே வேளையில் அந்தக் காட்சி, ஜிமிக்கி கம்மல் பாடல், மனோ பாலா காட்சிகள் போன்றவை படத்தில் இல்லை என்றாலும், கதைக்கு எந்த பாதிப்பும் வராது. இது போன்ற காட்சிகள் படத்தில் வருவது கொஞ்சம் பொறுமையைதான் சோதிக்கிறது. கூடவே ஜோதிகா - விதார்த் இடையிலான நெருக்கமோ, பிரச்சனைகளோ எதுவுமே ஆடியன்ஸுக்கு கனெக்ட் ஆகாததால் பெரிதாக எந்த தாக்கமும் உண்டாகவில்லை.

"நான் தனியா இருக்கேன். அவன் தனிமைல இருக்கான்" என மிகச் சொற்ப இடங்களில் பொன்.பார்த்திபனின் வசனங்கள் எடுபடுகிறது. மகேஷ் முத்துசாமியின் ஒளிப்பதிவு கலர்ஃபுல் டோனைக் கொடுத்திருக்கிறது. ஏ.ஹெச்.காஷிஃப் இசை காட்சிகளின் உணர்வைக் கடத்த ஓரளவே உதவியிருக்கிறது. கிளம்பிட்டாளே விஜய லட்சுமி பாடல் சூப்பர். எல்லோராலும் கனெக்ட் செய்துகொள்ளக் கூடிய விஷயமாக இருந்தாலும், எந்த விஷயம் பற்றியும் ஆழகாமப் பேசாமல் மேலோட்டமாகவே டீல் செய்வதால், முழுமையான உணர்வைத் தரவில்லை. ஆனாலும், தனது அழகான மேக்கிங்கால் இதை எல்லாம் எளிதில் கடந்து போக வைத்துவிடுகிறார் ராதாமோகன்.

குடும்பத்துடன் பார்க்கும் படியான, ஃபீல்குட் எண்டர்டெய்னர் படமாக மென்மையாக வருடுகிறது இந்த `காற்றின் மொழி'

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்