முகப்புவிமர்சனம்

கிராமத்து சென்டிமென்ட் இந்த முறை கைகொடுக்கிறதா? - கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்

  | Friday, July 13, 2018

Rating:

கிராமத்து சென்டிமென்ட் இந்த முறை கைகொடுக்கிறதா? - கடைக்குட்டி சிங்கம் விமர்சனம்
 • பிரிவுவகை:
  ஃபேமிலி ட்ராமா
 • நடிகர்கள்:
  கார்த்தி, சத்யராஜ், சூரி, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, சயிஷா
 • இயக்குனர்:
  பாண்டிராஜ்
 • தயாரிப்பாளர்:
  சூர்யா
 • எழுதியவர்:
  பாண்டிராஜ்
 • பாடல்கள்:
  டி.இமான்

ஒரு கல்யாணத்தை நடத்த அம்மா, அப்பா, அக்கா, மாமா, அங்காளி, பங்காளி என ஒட்டுமொத்த குடும்பத்திடமும் சம்மதம் வாங்கப் போராடும் கடைக்குட்டி சிங்கத்தின் கதை.

தன் குடும்பமே தனக்கு எல்லாம் என வாழ்பவர் ரணசிங்கம் (சத்தியராஜ்). இரண்டு மனைவிகள், ஐந்து மகள்கள் ஒரு மகன் பேரன், பேத்தி என விசேஷம் என்றால் ஒரு ஊரே குழுமும் அளவுக்கு ஆட்கள் அவரது குடும்பத்தில். தனக்குப் பிறகு தன் குடும்பத்தையும், நம்பியிருப்பவர்களையும் பார்த்துக் கொள்ள ஆண் குழந்தை வேண்டும் என சத்தியராஜ் எங்கும் போது கடைக்குட்டி வாரிசாகப் பிறக்கிறார் குணசிங்கம் (கார்த்தி). தந்தையின் விருப்பப்படி எல்லாவற்றையும் நல்லபடியாகப் பார்த்துக் கொள்கிறார் கார்த்தி. கூட்டுக்குடும்பத்துக்குள் பிரச்சனைக்கா பஞ்சம்? முறைமாமன் சீர், சொத்துப் பிரச்சனை, பத்திரிகையில் பெயர் என அவ்வப்போது குடும்பத்துக்குள் சின்னச் சின்ன உரசல்கள் நடக்கிறது. ஆனால், அது பூதாகரமாவது கார்த்தி - சயிஷா காதலில். ஏற்கெனவே வீட்டில் இரண்டு முறைப் பெண்கள் இருக்கும் போது எதுக்கு வெளியில் இருந்து பெண் எடுக்க வேண்டும் என்று ஆரம்பிக்கிறது சண்டை. கூடவே ஊருக்குள் ஜாதி அரசியல் பண்ணும் ஒருவனுடன் ஏற்பட்ட பிரச்சனை வேறு. இந்த பிரச்சனைகளை எல்லாம் கார்த்தி எப்படி சரி செய்கிறார்? சயிஷா - கார்த்தி காதல் என்னாகிறது? சத்யராஜ் ஆசைப்பட்ட குரூப் போட்டோ எடுக்கப்பட்டதா? என நிறைய உறவுகளைச் சேர்த்து கதை சொல்லியிருக்கிறார்கள்.

ரொம்ப நாளுக்குப் பிறகு திரையில் ஒரு கும்பலாக ஒரு குடும்பத்தை, அவர்களுடைய அன்றாடங்களை, ஈரப்பதமான தரையை, வயல் வெளியை, கிராமத்தைப் பார்க்க அவ்வளவு புத்துணர்வாக இருக்கிறது. அதற்காகவே இயக்குநர் பாண்டிராஜுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.

துவக்கத்திலேயே ரேக்ளா ரேஸுடன் புழுதி பறக்க ஆரம்பிக்கிறது படம். பிறகு சொந்த பந்தம், அக்கா, மாமா, முறைப்பெண் என ஒவ்வொருதத்தருக்கும் அறிமுகம் தந்து படம் செட்டில் ஆக கொஞ்சம் நேரம் பிடிக்கிறதுதான். ஆனால், விசேஷ வீட்டில் கால் வைத்ததுபோல் ஆளாளுக்கு இழுத்து நலம் விசாரிக்கும் மனநிலையைத் தருவது இதம். படத்தில் 20 பேருக்கும் மேலான கதாபாத்திரங்களுக்கு முக்கியமான வேடம். அத்தனை பேரையும் ஆடியன்ஸ் மனதில் பதிய வைத்துக்கொள்ள ஒரு கனமான காட்சியை வைத்திருக்கிறார் இயக்குநர். சத்யராஜ், சூரி, விஜி சந்திரசேகர், பானுப்ரியா, மௌனிகா, தீபா, ஜீவிதா, யுவராணி, இந்துமதி, ப்ரியா பவானி சங்கர், அர்த்தனா பினு, சயிஷா, சரவணன், இளவரசு, ஸ்ரீமன், மாரிமுத்து, சௌந்தர் எனப் நடித்தவர்கள் பட்டியல் பெரியது. எல்லோருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள். ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு காட்சி சொல்லி அருமையாக நடித்தார் என்றால் பக்கம் பக்கமாக எழுதி முழுப் படத்தையே சொல்லவேண்டி இருக்கும்.

கார்த்திக்கு கிராமத்தான் வேடம் என்றால் பக்காவாக ஒட்டிக் கொள்கிறது. முறுக்கிய மீசை, சகதிபடிந்த உடை, அக்காக்களின் பாசத்துக்காக துள்ளி ஓடுவது என அவருக்கு முழுநிறைவைக் கொடுக்கும் வேடம். ஆக்ஷன் காட்சிகளிலும் அதிரடி காட்டியிருக்கிறார். குறிப்பகா விவசாயம் பற்றி பெருமையாக பேசும் ஒவ்வொரு காட்சிக்கும் தியேட்டர் அதிர்கிறது. சூரியின் ஒன்லைனர்கள் பல இடங்களில் கடுபையும், சில இடங்களில் சிரிப்பையும் தருகிறது. சயிஷாவுக்கு நடிக்க பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை. ப்ரியா பவானி ஷங்கர் மற்றும் அர்த்தனா பினுவுக்கு நடிப்புக்கு வேலை உள்ள கதாபாத்திரம். இரண்டு பேரும் கார்த்தி மேல் காதலாகி இருப்பது, பின் வெறுப்பைக் காட்டுவது என நல்ல நடிப்பை வழங்கியிருக்கிறார்கள். சத்யராஜுக்கு குடும்பத்தை குலையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும் என்கிற பதற்றம் உள்ளபடியான வேடம், அசால்ட்டா எல்லாவற்றையும் முடித்துவிடுகிறார்.

இமானின் பாடல்களில் சண்டக்காரி வாடி பாடல் நன்று. ஆனால் எல்லாமும் முன்பே கேட்டது போலவேதான் இருந்தது. பின்னணி இசையில் எமோஷனைக் கூட்ட நிறைய செய்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் கிராமத்தை அதன் பசுமையோடு காட்டுவதும், கூட்டுக் குடும்பத்தை அதன் பிரம்மாண்டத்தோடு காட்டுவதுமான வேலை, கச்சிதமாக செய்திருக்கிறார்.பாண்டிராஜின் பலம் வசனம்தான். ஆனால் இந்தப் படத்தில் அதுவேதான் பலவீனமும். விவசாயம் பற்றி பேசுவதாகட்டும், ஜாதி பற்றி பேசுவதாகட்டும், குடும்ப சண்டை தீர்வதற்காக பேசுவதாகட்டும் எல்லாவற்றுக்கும் வசனங்கள் நன்றாக இருக்கிறதுதான். ஆனால், ரைமிங் - டைமிங் எனப் பேசி பேசி பேசி படம் முழுக்கப் பேசிக் கொண்டே இருப்பது ஒரு கட்டத்துக்கு மேல் அலுப்பைத் தருகிறது. அதைக் கொஞ்சம் சுருக்கமாகக் கொடுத்து காட்சிகளின் மூலமும் பேச முயற்சித்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும். சில இடங்களில் ஆடியன்சை அழவைக்க வேண்டும் என ஓவர் டோஸ் சென்டிமென்ட் காட்சிகள், ஏதோ டி.வி சீரியல் பார்ப்பது போன்ற உணர்வையும் தருகிறது. அந்தக் குறைகளை சரி செய்து படத்தில் இயல்பான காட்சிகளை கூட்டியிருக்கலாம் என்று தோன்றியது.

சில குறைகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால் நல்ல பொழுதுபோக்கான குடும்பப்படமாக நிற்கிறான் இந்தக் கடைக்குட்டி சிங்கம். நிச்சயம் குடும்பத்து ஆடியன்ஸைக் கவர்வான்.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்