முகப்புவிமர்சனம்

கலகலப்பு 2 விமர்சனம் - Kalakalappu 2 Movie Review

  | Friday, February 09, 2018

Rating:

கலகலப்பு 2 விமர்சனம் - Kalakalappu 2 Movie Review
 • பிரிவுவகை:
  காமெடி ட்ராமா
 • நடிகர்கள்:
  ஜீவா, ஜெய், நிக்கி கல்ராணி, கேத்ரின் திரசா, மிர்ச்சி சிவா
 • இயக்குனர்:
  சுந்தர் சி
 • தயாரிப்பாளர்:
  அவ்னி சினிமேக்ஸ் ப்ரைவேட் லிமிட்டட்
 • எழுதியவர்:
  சுந்தர் சி, வெங்கட் ராகவன், பத்ரி நாராயணன்
 • பாடல்கள்:
  ஹிப் ஹாப் தமிழா

வருமான வரிச் சோதனையில் இருந்து தப்பிக்க முன்னாள் அமைச்சர் தர்மராஜ் (மதுசூதனன்), ஊழல் ஆதாரங்கள் அடங்கிய லேப்டாப்பைத் தன் ஆடிட்டரிடம் (ராமதாஸ்) கொடுக்கிறார். காசிக்கு செல்லும் ராமதாஸ், ஆதாரங்கள் அடங்கிய லேப்டாப்பைத் திருப்பிக் கொடுக்க பணம் கேட்டு மிரட்டுகிறார். தன் குடும்பத்தின் பண சிக்கல்களைத் தீர்க்க, தனது பூர்வீக சொத்தைக் கண்டுபிடித்து விற்பதற்காகக் காசி வருகிறார் ஜெய். அதே காசியில், ஒரு பாழடைந்த மேன்ஷனை நடத்திக் கொண்டிருக்கும் சீனு (ஜீவா), தன் தங்கைக்கு கல்யாணத்தை நடத்தி வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறார். இந்த மூன்று பிரச்சனைகளும் எப்படி இணைகிறது என்பதோடு சேர்த்து, ஜீவா - கேத்தரின் தெரசா, ஜெய் - நிக்கி கல்ராணி காதல், ராதாரவி தீட்டும் சதித்திட்டம், யோகிபாபுவின் ரிவென்ஞ், மிர்ச்சி சிவா ஏற்படுத்தும் பிரச்சனை எனப் பல சிக்கல்களை க்ளைமாக்ஸில் தீர்த்து வைத்து முடிகிறது `கலகலப்பு 2'.

என்னதான் `கலகலப்பு' படத்தின் இரண்டாம் பாகம் என்றாலும், அதற்கும் இதற்கும் சம்பந்தங்கள் குறைவு, அதே போல் காமெடியும் குறைவு. ஜீவா, ஜெய் உள்பட படத்தில் இருக்கும் நடிகர்களின், நடிப்பு பொறுத்தவரை எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால், அவர்களுக்காக எழுதப்பட்ட காமெடி காட்சிகள் பெரிதாய் எடுபடவில்லை என்பதுதான் பிரச்சனை. படம் துவங்கி கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி, அவர்களின் பின்னணி பற்றி விவரிப்பதுமாக நகர்கிறது முதல் பாதி. அதில் வரும் பல காமெடிகள் மிக சாதாரணமாகவே இருக்கிறது. அம்மாவசையில் அலறவிடும் ஜார்ஜ், மற்றவர்களுக்கு நடக்கும் பிரச்சனை எல்லாவற்றிலும் தானே போய் தலைவிட்டு மாட்டிக் கொள்ளும் விடிவி கணேஷ், மூக்கு கண்ணாடி இல்லாமல் மங்களான பார்வையுடன் மாஸ் காட்டும் ரோபோ ஷங்கர், வெடிகுண்டு திரியில் சுச்சு அடித்து அணைக்கும் சுகர் பேஷன்ட் நாய் எனப் பல கதாபாத்திரங்களை வடிவமைத்த விதம் சிறப்பு. ஆனால், அந்த கதாபாத்திரங்களால் நிகழும் எந்த நகைச்சுவையும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல், மற்றும் ஒரு காட்சியாகவே கடந்து போகிறது. ஜெய், ஜீவா, மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரின் தெரசா, ராதாரவி, யோகிபாபு, சதீஷ், மனோபாலா, ராமதாஸ், ஜார்ஜ், சிங்கமுத்து என இத்தனை பேரை வைத்துக் காமெடி செய்திருந்தும், ரசித்து சிரிக்கும் படி சுவாரஸ்யமான காமெடி காட்சிகள் குறைவுதான். அதுதான் படத்துக்கான மிகப் பெரிய மைனஸ்.

சுந்தர்.சியின் அதே சிக்னேச்சர் ஸ்க்ரீன் ப்ளேயைப் பின்பற்றி திரைக்கதை எழுதியிருக்கிறார் வெங்கட் ராகவன். அதனால், சில இடங்களைத் தவிர மற்ற நேரங்களில் எந்த சோர்வும் தராமல் படபடவென நகர்கிறது படம் . சுந்தர் சி படங்களில் வழக்கமாக தெறிக்கும் காமெடி ஒன்லைனர்களும் இதில் ஹெவியாக மிஸ்ஸாகிறது. "கட்டிங்னாலே எனக்குப் புடிக்காதுடா, அதனாலதான் நான் போலீஸ் கட்டிங் கூட வெட்டிகல", "பயப்படாத பொம்பளைக்கு உருப்படாத ஆம்பளதான் செட்டாவான். நீ பயப்பட மாட்ட, நான் உருப்பட மாட்டேன்" என மிகச் சில இடங்களில் மட்டும், பத்ரிநாராயணன் வசன காமெடிகள் சிரிக்க வைக்கிறது. காஜல் கதாபாத்திரத்தை பயன்படுத்தி கசமுசா காமெடி, கேத்ரின் தெரசா - ஜீவா, சதீஷை சாமியாராகவிடாமல் தடுக்க செல்லும் காட்சியில் வரும் இரட்டை அர்த்த வசனங்களைத் தவிர்த்திருக்கலாம்.

காசியோ, காரைக்குடியோ படம் முழுக்க யு.கே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவு, கலர்ஃபுல்லாகக் இருக்கிறது. படத்தில் தேவை இல்லாத பாடல்கள், போரான காமெடிகளை எடிட்டர் ஸ்ரீகாந்த் ட்ரிம் செய்திருக்கலாம் . ஹிப் ஹாப் ஆதியின் இசையில் முகுந்தா முராரி பாடல் மட்டும் ஒன்ஸ்மோர் ரகம். ஹாலிவுட் படங்களைக் கலாய்த்து, காரைக்குடியின் ஓட்டு வீடுகளின் மேல் சைக்கிளில் தப்பிக்கும் சிவா, அவரைத் துரத்தும் ஜீவா, ஜெய் சேஸிங் காட்சி, விலைமதிப்பற்ற வைரத்தை பாதுக்காக்க சந்தான பாரதியின் செக்யூரிட்டி சிஸ்டம், க்ளைமாக்ஸில் ரயில் நிலையத்தையே களேபாரமாக்கி நடக்கும் சண்டைக் காட்சி என சில சுவாரஸ்ய ஐடியாக்களைப் பிடித்த சுந்தர் சி, படம் முழுக்க இது போன்ற நகைச்சுவைகளைக் கொடுத்திருந்தால் உண்மையிலேயே கலகலப்பாக இருந்திருக்கும் படம்.

'கலகலப்பு', `தீயா வேலை செய்யணும் குமாரு' ரேஞ்சில் எதிர்பார்த்து போனால் கண்டிப்பாக ஏமாற்றம்தான். பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் போனால், சிரித்து என்ஜாய் செய்துவிட்டு வரலாம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்