விளம்பரம்
முகப்புவிமர்சனம்

கருப்பன் திரைப்பட விமர்சனம் - Karuppan Movie Review

  | Monday, November 20, 2017

Rating:

கருப்பன் திரைப்பட விமர்சனம் - Karuppan Movie Review
 • பிரிவுவகை:
  வில்லேஜ் ஆக்ஷன் டிராமா
 • நடிகர்கள்:
  விஜய் சேதுபதி, தான்யா, பாபி சிம்ஹா
 • இயக்குனர்:
  பன்னீர்செல்வம்
 • தயாரிப்பாளர்:
  ஸ்ரீ சாய் ராம் க்ரியேஷன்ஸ்
 • எழுதியவர்:
  பன்னீர்செல்வம்
 • பாடல்கள்:
  இமான்

கடன் மற்றும் நஷ்டங்களால் 2013ஆம் ஆண்டு வரை படத்தயாரிப்பிலிருந்து விலகியிருந்த தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் தொடர்ந்து 3 திரைப்படங்களாக ‘தல’ அஜீத்தை வைத்து தயாரித்துவிட்டு, வேறொரு நடிகரை வைத்து தயாரித்திருக்கும் முதல் திரைப்படம் ‘கருப்பன்’. ‘ரேணிகுண்டா’ புகழ் பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் இத்திரைப்படம், முழுக்க முழுக்க கிராமத்து பின்னணியில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஊர் பெரிய மனிதரான மாயி (பசுபதி) ஜல்லிக்கட்டு போட்டியில் ஜெயிக்கும் கருப்பனை (விஜய் சேதுபதி) தன் தங்கை அன்புவிற்கு (தன்யா ரவிச்சந்திரன்) திருமணம் செய்து வைக்கிறார். சின்ன வயதிலிருந்தே அவரை விரும்பி வரும் மாயியின் மச்சனான கதிர் (பாபி சிம்ஹா), இதனால் கோபமடைகிறார். எப்படியாவது கருப்பனையும் அன்பையும் பிரிக்க வேண்டும் என்பதற்காக, மாயிக்கும் கருப்பனுக்கும் இடையே மோதல்கள் ஏற்படுத்திவிட பல முறை முயற்சிக்கிறார். இந்த பிரச்சினைகளை எல்லாம் கருப்பன் எப்படி சமாளிக்கிறார் என்பதே ‘கருப்பன்’ படத்தின் கதை.

ரொம்பவே வழக்கமான கதை, கிராமத்து பின்னனியில் ஏற்கனவே பார்த்து பழகிப் போன காட்சிகள், அடுத்து என்ன நடக்கப் போகிறது என எவரும் கணிக்கக்கூடிய (திருப்பங்களே இல்லாத) ஒரு திரைக்கதை என ரொம்பவே சாதாரணமான ஒரு கிராமத்து மசாலா திரைப்படத்தை அதிகம் போரடிக்காத வண்ணம் கமர்ஷியல் கலவையாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர் பன்னீர்செல்வம். அதற்கு பெரிதும் உதவியிருப்பதும், இந்த படத்தை ஒட்டுமொத்தமாக காப்பாற்றியிருப்பதும் விஜய் சேதுபதி அவர்களின் உற்சாகமான நடிப்பே!

ஆரம்பத்தில் வரும் ஜல்லிக்கட்டு மாடு பிடி காட்சியில் உள்ள மோசமான கிராஃபிக்ஸினாலேயே, அந்த காட்சி மொத்தமும் ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. அதன் பின் வரும் ஹீரோ-ஹீரோயினின் முதல் சந்திப்பு காட்சி, ஹீரோயினுக்கு அறிவுரை சொல்லி ஹீரோ பாடும் கிண்டல் பாடல் காட்சி என 1990களில் வந்த படங்களின் பாணியில் நகரும் திரைப்படம், கருப்பன்-அன்பு திருமணக் காட்சிக்குப் பிறகே கொஞ்சம் சுவாரஸ்யமாக நகரத் தொடங்குகிறது. கதை நகர பெரிதாக உதவவில்லை என்றாலும் கூட, முதல் பாதியில் மதுக்கடையில் வரும் எம்.ஜி.ஆர்-சிவாஜி-தல-தளபதி நடனக் காட்சியும் அதை தொடர்ந்து வரும் சண்டைக்காட்சியும் ரசிக்கும்படி மாஸாகவே இருக்கிறது.

இடைவேளை வரை பரபரவென நகரும் திரைக்கதை, அதன் பின் நகராமல் ஒரே இடத்தில் சுற்றுகிறது. தேவையே இன்றி வரும் குத்துப்பாடலும், கிளைமாக்ஸிற்கு முன் வரும் சோகப்பாடலும் படத்தின் வேகத்தை பெருமளவில் குறைக்கிறது. கோபக்காரனுக்கு வாக்கப்பட்ட வெளியூர் பெண், தன் வீட்டு பெண்ணிற்காக அடங்கிப்போகும் அண்ணன் / அப்பா போன்ற கதாபாத்திரங்களும், இரண்டாம் பாதியில் வரும் சில திருப்பங்களும் ‘சொக்கத்தங்கம்’, ‘கொம்பன்’ போன்ற சில திரைப்படங்களை நினைவுபடுத்துகிறது. படத்தின் மிகப்பெரிய மைனஸாக இருப்பது வில்லன் கதாபாத்திரமும், வெறுமனே சண்டைக்காட்சிகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருக்கும் துணை வில்லன் கதாபாத்திரமுமே. பாபி சிம்ஹாவின் கதாபாத்திரம் சகுனி போல படம் முழுக்க ஏதாவது ஒன்றை செய்து கொண்டிருந்தாலும் எதுவுமே புதிதாக இல்லாததாலும் அவையெல்லாம் ஹீரோவுக்கு பெரிய சவாலாக இல்லாததாலும், அந்த கதாபாத்திரம் எங்குமே வலு சேர்க்கவில்லை.

வழக்கம் போலவே, விஜய் சேதுபதி மிகச் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அவர் இல்லாமல் இந்த படம் எப்படி இருந்திருக்கும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. கருப்பன் கதாபாத்திரத்தில் கெத்தாக படம் நெடுக வலம் வரும் அவர் குடித்துவிட்டு பொண்டாட்டியிடம் சலம்புவது, ‘அப்பனுக்கும் பையனுக்கும் என்ன பிரச்சினையோ’ என வில்லனிடம் நக்கலாக பேசுவது, ரொமான்ஸ் காட்சிகளில் மனைவியிடம் குழந்தை போல குழைவது என காட்சிக்கு காட்சி ரகளையாக நடித்திருக்கிறார். நாயகி தன்யா ரவிச்சந்திரன் தனது முந்தைய படங்களான ‘பிருந்தாவனம்’, ‘பலே வெள்ளையத் தேவா’ திரைப்படங்களை விட இதில் சிறப்பாக நடித்துள்ளார், இன்னும் கொஞ்சம் அழகாகவும் தோன்றியிருக்கிறார். விஜய் சேதுபதியின் மாமாவாக வரும் சிங்கம் புலி நகைச்சுவையுடன் கூடிய ஒரு நல்ல குணச்சித்திர வேடத்தில் தோன்றியிருக்கிறார். பசுபதியும் தன் வேடத்தில் குறையின்றி செய்துள்ளார். படம் முழுக்க பாபி சிம்ஹா வந்தாலுமே, அவரது கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இல்லாததால் எல்லா காட்சியிலும் முறைத்துக்கொண்டு மட்டுமே இருக்கிறார். காவேரி, ரேணுகா ஆகியோரது கதாபாத்திரங்களும் எந்த தாக்கத்தையுமே ஏற்படுத்தவில்லை. டி.இமானின் இசையில் எந்த பாடல்களுமே மனதில் பதியாவிட்டாலும் கூட, பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது.

பல குறைகள் இருந்தாலும் கூட காமெடி, ஆக்ஷன், கிராமத்து குடும்ப சென்டிமெண்ட் ஆகிய விஷயங்கள் பி, சி சென்டர் ரசிகர்களிடையே வரவேற்பை பெறும் என்றே தோன்றுகிறது. எந்த எதிர்பார்ப்பும் இன்றி போனால், விஜய் சேதுபதிக்காகவே இந்த கருப்பனை கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்