விளம்பரம்
முகப்புவிமர்சனம்

கதாநாயகன் திரைப்பட விமர்சனம் - Kathanayagan Movie Review

  | Monday, November 20, 2017

Rating:

கதாநாயகன் திரைப்பட விமர்சனம் - Kathanayagan Movie Review
 • பிரிவுவகை:
  காமெடி
 • நடிகர்கள்:
  விஷ்ணு விஷால், கேத்ரீன் திரசா, பரோட்டா சூரி, ஆனந்தராஜ்
 • இயக்குனர்:
  முருகானந்தம்
 • தயாரிப்பாளர்:
  விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ், பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ்
 • எழுதியவர்:
  முருகானந்தம்
 • பாடல்கள்:
  ஷான் ரோல்டன்

சென்ற ஆண்டு வெளியான ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் –பரோட்டா சூரி கூட்டணியுடன் சேர்ந்து தனது சொந்த தயாரிப்பில் கிட்டத்தட்ட அதே போல ஒரு காமெடி படத்தை கொடுக்க நினைத்துள்ளார் நடிகர் விஷ்ணு விஷால்.

சின்ன சின்ன விஷயத்திற்கும் கூட பயப்படும் சுபாவம் கொண்டவர் தம்பிதுரை (விஷ்ணு). தாசில்தார் ஆபீஸில் வேலை பார்க்கும் இவர், எதேச்சையாக ரோட்டில் பார்க்கும் ஒரு பெண் (கேத்ரின் தெரசா) மீது காதல் வயப்படுகிறார். தனது உயிர் நண்பரான அண்ணாதுரை (பரோட்டா சூரி) உதவியோடு, அந்த பெண்ணின் மனதில் இடம்பிடிக்க முயற்சிக்கிறார். இதற்கிடையில், ஒரு லோக்கல் ரவுடியிடம் ஒரு பிரச்சினையிலும் மாட்டிக்கொள்கிறார். தம்பிதுரையின் இந்த பயந்த சுபாவத்தைப் பார்த்த ஹீரோயினின் அப்பா, ஒரு தைரியசாலிக்குத்தான் தன் பெண்ணை கட்டிவைப்பேன் என சொல்லிவிடுகிறார். ஒரு மருத்துவப் பரிசோதனையில் தனக்கு ஒரு கொடிய நோய் இருப்பது தெரிய வர, தம்பிதுரை மேலும் உடைந்து போகிறார். தம்பிதுரை குணமடைந்தாரா? தன் காதலியை மணந்தாரா? ரவுடியுடனான பிரச்சினை என்ன ஆனது ஆகிய பல கேள்விகளுக்கு நகைச்சுவையாக பதிலளிக்கப்பட்டுள்ளது.

படம் ஆரம்பித்த பொழுதிலிருந்தே, ஒரு முறையான கதை என எதுவுமே இல்லாமல் காட்சிகளாக மட்டுமே எங்கெங்கோ அலைகிறது ‘கதாநாயகன்’. ‘கதை, திரைக்கதை எல்லாம் எதற்கு... தியேட்டருக்கு வருபவர்களை ஏதோ நான்கு காட்சியில் மட்டும் சிரிக்க வைத்தால் போதும்’ என்கிற மெத்தனப் போக்கே படம் முழுக்க தெரிந்தது. காட்சிகள் படமாக்கப்பட்ட விதமும் கூட, அநியாயத்திற்கு அமெச்சூராக தெரிகிறது.

முதல் பாதி முழுக்க சுவாரஸ்யமான காட்சி என்றோ அல்லது சிரிக்க வைக்கக்கூடிய காட்சிகள் என்றோ, ஒன்று கூட இல்லை. அதிலும், ஹீரோயினை காதலிக்க ஐடியா தருகிறேன் என சூரி முயற்சிப்பதும், விஷ்ணுவும் கேத்ரின் தெரசாவும் பேசிக்கொள்ளும் முதல் முக்கால்மணி நேர காட்சிகளும் சகித்துக்கொள்ளவே முடியாத அளவிற்கு இருக்கிறது. ஒரு சில படங்களில் முதல் 10 நிமிடங்களையோ, 15 நிமிடங்களையோ பார்க்கத் தவறிவிட்டால் கூட புரியும் இல்லையா? அந்த வகையில், ‘கதாநாயகன்’ திரைப்படத்தை இடைவேளைக்கு பின்னால் இருந்து பார்த்தால் கூட எந்த குழப்பமும் இல்லாமல் புரிந்துகொள்ள முடியும். நாய் துரத்த ஓடி வரும் ஹீரோவின் அறிமுக காட்சி, ‘இப்படியெல்லாம் கூட ஒரு லூசு பொண்ணு இருக்குமா’ என நினைக்க வைக்கும் ஹீரோயினின் அறிமுகக் காட்சி, சிரிப்பையே வரவழைக்காத அண்ணாதுரை-தம்பிதுரையின் பள்ளிக்கால ஃபிளாஷ்பேக், விஜய் கல்லையாவை அடிக்கும் வில்லனின் அறிமுகக் காட்சி, ஹீரோவின் குடும்பம் சார்ந்த காட்சிகள், காரணமே இல்லாமல் வரும் பாடல்கள், எதற்கெடுத்தாலும் வரும் டாஸ்மாக் காட்சிகளும் பாடல் காட்சியும் என முதல் பாதி முழுக்க எக்கச்சக்க குறைகளாக நிரம்பிக் கிடக்கிறது. சிரிக்க வைக்க வேண்டிய காட்சிகள் எல்லாம், பெரும்பாலும் கடுப்பேற்றவே செய்கின்றன. ஹீரோயின் தோன்றும் காட்சிகள் எதுவும் நன்றாக இல்லை என சொல்வதை விட, இப்படத்திற்கு ஹீரோயினே தேவையில்லை என்று சொல்லலாம்.

இரண்டாம் பாதியில் ஆனந்தராஜ் தோன்றும் 15-20 நிமிடங்களும், கிட்னி திருடும் காட்சியும், கிளைமாக்ஸும் மொ,ட்டை ராஜேந்திரன் இன்னிசை நிகழ்ச்சி நடத்தும் காட்சியுமே இரண்டாம் பாதியை காப்பாற்றுகிறது. ஏற்கனவே சுவாரஸ்யமே இன்றி மொக்கையாக நகரும் படத்தை, மேலும் சூரை மொக்கையாக காட்டுகிறது இப்படத்தின் வசனங்களும், பாடல் வரிகளும்! ‘பொறுப்பா லவ்வுக்கு ஐடியா கொடுக்காம, பருப்பு மாதிரி ஏமாத்தி, வெறுப்பு ஏத்துறியா?’, ‘படிக்க சொல்லிக் குடுத்தவனைக் கூட திட்டலாம், ஆனா குடிக்க சொல்லிக் குடுத்தவனைத் திட்டலாமா?’, ‘லவ்வு ஒரு ஃபீலு, அதை புரிஞ்சுக்காட்டி நீ ஃபெயிலு’, ‘சண்டேன்னா பாட்டில எடு, டயர்ட் ஆனா வூட்ல படு’, ‘நீ முக்கியமான ஆளு, இப்போ காத்து போன வீலு’ – இவையெல்லாம் இப்படத்தில் வரும் வசனங்கள் மற்றும் பாடல் வரிகளுள் சில. ‘வயசானவங்களை ‘டா’ போட்டு கூப்பிடுறதும், வயசு பொண்ணுங்களை ‘டி’ போட்டு கூப்பிடுறதும் தான் என் பழக்கம்’ என படத்தில் வில்லன் சீரியஸாக பேசும் வசனம் கூட அதே ரீதியிலேயே இருக்கிறது.

விஜய் சேதுபதியின் கௌரவத் தோற்றம் கூட பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாமல், அயர்ச்சியையே ஏற்படுத்துகிறது. இரண்டு கேங்கை சேர்ந்த ஆட்கள் தன்னை துரத்தும்பொழுது, ஹீரோ அவர்களிடமிருந்து தப்பிக்கும் ட்விஸ்ட் எல்லாம் கடந்த 10, 15 ஆண்டுகளில் பல படங்களில் பார்த்து சலித்தது. உண்மையிலேயே படத்தில் ரசிக்கும்படியும், வயிறு வலிக்க சிரிக்கும்படியும் அமைந்த காட்சிகள் – ஆனந்தராஜைத் தேடி பரோட்டா சூரி அவர் வீட்டிற்கே செல்லும் அந்த காட்சி தான்.

நடிகர் நடிகைகள் பற்றியோ, இசை-ஒளிப்பதிவு-கலை உள்ளிட்ட டெக்னிக்கல் அம்சங்கள் குறித்தோ எல்லாம் புகழ்ந்து சொல்ல பெரிதாக எதுவுமே இல்லை. சூரியின் ‘புஷ்பா புருஷன்’ காமெடி மற்றும் ரோபோ சங்கரின் ‘காலையில 6 மணி’ காமெடிக்காகவும் மட்டுமே ஓடிய ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்’ ஹிட்டான தெம்பில், கிட்டத்தட்ட அதே மாதிரியாக இன்னொரு படமெடுத்தால் அதுவும் ஓடும் என எப்படி நம்பினார்களோ?

‘வெண்ணிலா கபடிக் குழு’, ‘ஜீவா’, ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’ என வித்தியாசமான கமர்ஷியல் கதைகளை தேர்ந்தெடுக்கும் நடிகரான விஷ்ணு கூட, பி, சி சென்டரில் மட்டும் தொடர்ந்து நோகாமல் ஹிட் படங்கள் கொடுத்திட திராபையான கதைகளாக தேர்ந்தெடுத்து நடித்து வருவது இன்னும் வருத்தமளிக்கிறது!

கதை, திரைக்கதை, காட்சிகள் என எதை பற்றியுமே கவலைப்படாமல் ‘கொஞ்ச நேரம் சிரித்தால் மட்டும் போதும்’ என நினைப்பவர்களுக்கு மட்டுமானால், இந்த ‘கதாநாயகன்’ ஒர்க் அவுட் ஆகலாம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்