விளம்பரம்
முகப்புவிமர்சனம்

குரங்கு பொம்மை திரைப்பட விமர்சனம் - Kurangu Bommai Movie Review

  | Friday, September 01, 2017

Rating:

குரங்கு பொம்மை திரைப்பட விமர்சனம் - Kurangu Bommai Movie Review
 • பிரிவுவகை:
  டிராமா த்ரில்லர்
 • நடிகர்கள்:
  வித்தார்த், டெல்னா டேவிஸ், பாரதிராஜா
 • இயக்குனர்:
  நித்திலன் சுவாமிநாதன்
 • தயாரிப்பாளர்:
  ஸ்ரேயா ஸ்ரீ முவீஸ்
 • எழுதியவர்:
  நித்திலன் சுவாமிநாதன்
 • பாடல்கள்:
  அஜனீஷ் லோக்நாத்

‘மின்னலே’, ‘சண்டைக்கோழி’, ‘லாடம்’, ‘திருவண்ணாமலை’ போல பல படங்களில் ஹீரோவின் நண்பன், துணை வில்லன் என சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த விதார்த் 2010ஆம் ஆண்டு இயக்குனர் பிரபு சாலமனின் ‘மைனா’ திரைப்படம் மூலம் கதாநாயகனாக அறிமுகம் ஆனார். நல்ல நடிப்புத் திறன் இருந்தும் கூட, கமர்ஷியல் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்கிற ஆசையில் தொடர்ந்து சொதப்பலான மசாலா படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல், நல்ல படங்களில் நடிப்பதே தன்னை மக்களிடம் கொண்டுசேர்க்கும் என்பதை உணர்ந்து ‘ஆள்’, ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’ போன்ற கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கதை தன்னை சுற்றியே நடக்காவிட்டாலும், நல்ல கதைகளில் தான் ஒரு அங்கமாக இருக்க வேண்டுமென முடிவு செய்தார். தொடர்ந்து புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பளித்தும் வந்தார். அந்த வகையில் ‘நாளைய இயக்குனர் – சீசன் 3’யில் பல தரமான குறும்படங்களை இயக்கி ‘டைட்டில் வின்னர்’ ஆகவும் வென்ற நித்திலன் அவர்கள் இயக்கத்தில் ‘இயக்குனர் இமயம்’ பாரதிராஜாவுடன் இணைந்து விதார்த் நடித்திருக்கும் திரைப்படம் ‘குரங்கு பொம்மை’.

உள்ளூர் கடத்தல் சந்தையின் மன்னன் ஆன ஏகாம்பரம் (பி.எல்.தேனப்பன்) நடத்தி வரும் மரக்கடையில் பல வருடங்களாக வேலை பார்த்து வருகிறார் அவரது பால்ய நண்பன் சுந்தரம் (பாரதிராஜா). ஒரு முக்கியமான கடத்தல் பண்டத்தை பத்திரமாக கொண்டு வர நம்பிக்கையான ஆட்கள் யாரும் கிடைக்காத நிலையில், சுந்தரத்தை அனுப்புகிறார் ஏகாம்பரம். குரங்கு பொம்மை படம் போட்ட ஒரு பையில் பொருளை வைத்துக் கொண்டு வரும் சுந்தரம், திடீரென மாயமாகிறார். ஏகாம்பரத்தின் ஆட்கள் அவரைத் தேடிக்கொண்டிருக்கும் வேளையில், எங்கெங்கோ கை மாறி அந்த குரங்கு பொம்மை பை சுந்தரத்தின் மகனின் கைகளில் வந்து சேர்கிறது. அப்பாவின் கைகளில் இருந்த பை மகனிடம் எப்படி வந்தது? கடத்தல் பொருள் என்ன ஆனது? சுந்தரம் என்ன ஆனார்? என்கிற கேள்விகளுக்கெல்லாம் சுவாரஸ்யமாக பதில் சொல்கிறது இரண்டாம் பாதி.

‘நிலக்கதவுக்குத் தானே... இது வேணாம், மகமாயி மாதிரி... கால்ல படும்’ என சொல்லும் பாரதிராஜா, ஊனம் இல்லை என தெரிந்தும் பிச்சை போடும் விதார்த், உடைந்த கடிகாரத்திற்கு பக்கத்தில் சுவற்றில் நம்பர் எழுதி மாட்டியிருக்கும் கஞ்சா கருப்பு, திருடத் தெரியாத திருடன் என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் குணத்தையும் சில நொடிகளிலேயே நமக்கு உணர்த்திடும் வகையில் அறிமுகப்படுத்தும் விதத்திலேயே ஈர்க்கிறார் அறிமுக இயக்குனர் நித்திலன். படத்தின் முதல் 30 நிமிடங்கள் முழுக்க கதாபாத்திரங்களின் அறிமுகக் காட்சிகளாகவே நகர்வதால் சற்றே சலுப்பு ஏற்பட்டாலும், மையக் கதாபாத்திரங்கள் அனைத்தும் நமக்கு அறிமுகமாகி கதையின் அங்கமாக ஆன பின்னர் ஒவ்வொரு காட்சியுமே ‘அடுத்து என்ன நடக்குமோ’ என்கிற ஆர்வத்தைத் தூண்டுகிறது. படம் முழுக்கவே மிகவும் மெதுவாக நகர்ந்தாலும் கூட, படம் ஓடும் மொத்த ஒன்றே முக்கால் மணிநேரமும் அந்த ஆர்வம் குறையாமல் நகரும்படி திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது.

ஒரு சின்ன டிவிஸ்டோடு முடியும் முதல் பாதி, அந்த பரபரப்பை ரசிகர்கள் மீதும் பரவவிடுகிறது. இரண்டாம் பாதி முழுக்க பல கேள்விகளுக்கான பதில்களைத் தேடி படத்திலுள்ள கதாபாத்திரங்களோடு சேர்ந்து ரசிகர்களாகிய நாமும் ஓடிக்கொண்டிருக்க, கிளைமாக்ஸுக்கு சில நிமிடங்களுக்கு முன்னால் கிடைக்கும் அந்த பதில் பார்வையாளர்களிடையேயும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

ஒரு சாதாரண கதையை non-linear narration மூலம் முன்னும் பின்னுமாக சொல்லி திரைக்கதை முடிச்சுகளை அவிழ்த்து, இன்னும் புத்திசாலித்தனமாக பார்வையாளர்களுக்கு அளித்த விதத்தில் ஒரு நல்ல டிராமா திரில்லராக ஜெயிக்கிறது ‘குரங்கு பொம்மை’. மகள் கல்யாணத்திற்காக வைத்திருந்த பணத்தைத் தொலைத்துவிட்டாரே என முதல் சில காட்சிகளில் பார்வையாளர்களை பரிதாபப்பட வைத்துவிட்டு, பின்னர் ஃபிளாஷ்பேக் வரும்பொழுது மகள் கல்யாணத்திற்கு பணத்தை ஏற்பாடு செய்ய முடியாததால் இவர்தான் ஒரு வேளை கடத்தல் பொருளை திருடிவிட்டாரோ என நினைக்க வைத்துவிட்டு, பின்னர் கடைசியாக உண்மையில் என்னதான் நடந்தது என்பதை பரபரப்பு குறையாமல் சொல்வதற்காக ‘நான் கடவுள்’ கிருஷ்ணமூர்த்தி உட்பட சில கதாபாத்திரங்களையும், சில கிளைக் கதைகளையும் கச்சிதமாக கையாண்டுள்ளார் இயக்குனர் நித்திலன்.

பெரியவர்கள் எல்லோரும் திருமணப் பேச்சை பொய்களால் அலங்கரித்துக் கொண்டிருக்க, மாப்பிள்ளையும் பெண்ணும் தங்கள் உண்மை நிலையை வெளிப்படையாய் பேசிக்கொள்ளும் காட்சியில் ஆரம்பித்து, ஆங்காங்கே ‘டைரக்டரின் டச்’ பளிச்சிடுகிறது. குரங்கு பொம்மை படம் போட்ட பையைத் தேடியே நகரும் கதையில் விதார்த்தின் காதல், ஹீரோயினுடனான பஸ் ரொமான்ஸ், பஸ்ஸிலேயே வரும் பாடல் ஆகியவை நெருடலாகவோ, கதைக்கு அன்னியமாகவோ தெரியாத வகையில் கையாளப்பட்டுள்ளது. அவ்வப்பொழுது ‘அந்த பை என்னுடையது தான்’ என ஒவ்வொருவராக பொய் சொல்லி விதார்த்துக்கு போன் செய்யும் காட்சிகளும் ரசிக்கும்படி உள்ளது. மடோன் அஸ்வின் எழுத்தில் ‘இந்த மாதிரி ஆளுங்ககிட்ட ஏமாறுறதுல ஒரு சுகம் இருக்கு, சார்..’ ‘இங்க பக்கத்துல ஏதாவது நல்ல போலீஸ் ஸ்டேஷன் இருக்குமா?’ ‘ஹெல்மெட் ஆ, பைக் மட்டும்தான் இருந்துச்சு’ போன்ற இயல்பான வசனங்கள் படத்துக்கு ப்ளஸ். இரண்டாம் பாதியில் சின்ன சின்ன லாஜிக் குறைகள், ஒரு சில அமெச்சூரான காட்சிகள், சற்றே சினிமாத்தனமான கிளைமாக்ஸைத் தவிர படத்தில் பெரிய குறைகள் என ஏதுமில்லை.

‘ஆயுத எழுத்து’, ‘பாண்டிய நாடு’ படங்களைத் தொடர்ந்து, ஒரு நடிகராக தன் கேரியரில் பாரதிராஜா அவர்களுக்கு இது மிகவும் முக்கியமான திரைப்படம். சொல்லப்போனால், அவர் இது வரை நடித்ததிலேயே மிகச்சிறந்த கதாபாத்திரம் என்றே சொல்ல வேண்டும். இத்தனைக்கும் படத்தில் ஒரேயொரு காட்சியைத் தவிர, அவருக்கு அதிக வசனங்கள் கூட இல்லவே இல்லை. வயதான, உடல் தளர்ந்து வேகமாக நடக்கவோ சத்தமாக பேசவோ கூட திராணியில்லாத முதியவர் வேடத்தில் வாழ்ந்திருக்கிறார் பாரதிராஜா; உடல் மொழி, வசன உச்சரிப்பில் கூட நிறைய வேறுபாடு காட்ட முயற்சித்திருக்கிறார். தனக்கும், ஏகாம்பரத்திற்குமான நட்பு எப்படிப்பட்டது என்பதைப் பற்றி நெகிழ்ந்து பேசும் காட்சியில் கைத்தட்டல்களை அள்ளுகிறார்! தொடர்ந்து நல்ல நல்ல கதைகளாகவே பார்த்து பார்த்து தேர்வு செய்து நடிக்கும் விதார்த், படத்திற்கு படம் நல்ல நடிகராகவும் மெருகேறி வருகிறார். ரொம்ப சீரியஸான காட்சிகளில் கூட, தேவைக்கு அதிகமாக உணர்ச்சிகளைக் கொட்டிவிடாமல் சிறப்பாக நடித்துள்ளார். ‘குற்றமே தண்டனை’, ‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘குரங்கு பொம்மை’ போல தரமான படைப்புகளையே கொடுத்து வரும் விதார்த்தின் உழைப்பு மக்களாலோ பத்திரிக்கைகளாலோ இதுவரை அதிகம் பாராட்டப்பட்டதோ, கவனிக்கப்பட்டதோ இல்லை என்பது வருத்தமே! இளங்கோ குமாரவேல் போன்றதொரு திறமையான நடிகரை பல படங்களில் ‘உப்புமா’ ரோல்களில் பார்த்துவிட்டு, இதைப் போன்ற நல்ல கதாபாத்திரங்களில் பார்ப்பதே ஒரு வித மகிழ்ச்சியளிக்கிறது. அவரது நடிப்புப் பசிக்கு பெரும் விருந்தே அளிப்பதைப் போன்ற இந்த பாத்திரத்தில், சிரமமே இன்றி பட்டையைக் கிளப்பியிருக்கிறார் குமாரவேல். இப்படத்தின் நடிகர்களைப் பொறுத்தவரையில் மைனஸாக தெரியும் ஒரே ஒருவர், ஹீரோயின் டெல்னா டேவிஸ். துருதுருவென இருக்கும் அவரது நடிப்பு, பல சமயங்களில் செயற்கையாகவே தெரிகிறது; அவரது மேக்கப்பும் மைனஸாகவே தெரிந்தது. தேனப்பன்.பி.எல், காவல் அதிகாரியாக வரும் பாண்டியன், திருடனாக வரும் அறிமுக நடிகர் கல்கி, மகளின் திருணத்தை நடத்தி முடிக்க பணத்தை ஏற்பாடு செய்ய முடியாமல் மனைவியிடம் திட்டு வாங்கும் ‘நான் கடவுள்’ கிருஷ்ணமூர்த்தி, பாலா சிங் உட்பட அனைவருமே தங்கள் பங்கை சிறப்பாக செய்துள்ளனர். இரண்டு மெலடி பாடல்கள் மற்றும் இடைவேளைக்கு பிந்தைய காட்சிகளின் பின்னணி இசையில் கவனம் ஈர்க்கிறார் அஜனீஷ் லோக்நாத் (ரங்கித்தரங்கா, கிரிக் பார்ட்டி, உளிடவரு கண்டந்தே போன்ற புகழ்பெற்ற கன்னட படங்களின் இசையமைப்பாளர் இவர்); முதல் பாதியின் பின்னணி இசை தான் அதிக சத்தமாக, காட்சிகளோடு ஒட்டாமல் ரொம்ப சுமாராக ஒரு மைனஸாக இருந்தது. உதயகுமாரின் ஒளிப்பதிவும், அபிநவ் சுந்தர் நாயக்கின் படத்தொகுப்பும் கதையின் சீரான ஓட்டத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஒரு சில குறைகளைத் தாண்டி, ‘குரங்கு பொம்மை’ ஒரு நல்ல டிராமா திரில்லராக பார்வையாளர்களைக் கவரும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்தின் சிறந்த படைப்புகளுள் ஒன்றாகவும், ‘மாநகரம்’ ‘துருவங்கள் பதினாறு’ ‘8 தோட்டாக்கள்’ ‘ஒரு கிடாயின் கருணை மனு’ ‘உறியடி’ போல புதுமுக இயக்குனர்கள் இயக்கி சமீபத்தில் வெளியாகி தடம் பதித்த படங்களில் ஒன்றாகவும் ‘குரங்கு பொம்மை’ இருக்கும்! அறிமுக இயக்குனர் நித்திலனின் அடுத்தடுத்த படங்கள் இன்னும் சிறப்பான முயற்சிகளாக இருக்கும் என்கிற நம்பிக்கையையும் தருகிறது ‘குரங்கு பொம்மை’.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்