முகப்புவிமர்சனம்

'மாயவன்' திரைப்பட விமர்சனம் - Maayavan Movie Review

  | Friday, December 15, 2017

Rating:

'மாயவன்' திரைப்பட விமர்சனம் - Maayavan Movie Review
 • பிரிவுவகை:
  சயின்ஸ் ஃபிக்ஷன்
 • நடிகர்கள்:
  சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷரஃ, டேனியல் பாலாஜி
 • இயக்குனர்:
  சி வி குமார்
 • தயாரிப்பாளர்:
  சி வி குமார்
 • எழுதியவர்:
  சி வி குமார்
 • பாடல்கள்:
  ஜிப்றான்

‘அட்டக்கத்தி’, ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ படங்களில் தொடங்கி ‘முண்டாசுப்பட்டி’, ‘இன்று நேற்று நாளை’, ‘இறுதிச்சுற்று’, ‘காதலும் கடந்து போகும்’, ‘அதே கண்கள்’ வரை தொடர்ந்து பல தரமான ரசனையான பொழுதுபோக்கு திரைப்படங்களை தயாரித்தும், நலன் குமாரசாமி, பா.ரஞ்சித், கார்த்திக் சுப்பராஜ் உட்பட பல திறமையான இளம் இயக்குனர்களுக்கு முதல் வாய்ப்பு அளித்தும் வரும் தயாரிப்பாளரான திரு.C.V.குமார் அவர்கள் இயக்குனராக அறிமுகம் ஆகியிருக்கும் திரைப்படம் ‘மாயவன்’. C.V.குமார் அவர்களின் இயக்கத்தில், இயக்குனர் நலன் குமாரசாமியின் திரைக்கதை மற்றும் வசனத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு 2014ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டிருக்க வேண்டும்; நடிகர், நடிகைகள் தொடர்ச்சியாக மாற்றம் மற்றும் வேறு சில காரணங்களால், 2016ஆம் ஆண்டிலேயே படப்பிடிப்பு தொடங்கியது. இந்த ஆண்டு மே மாதமே வெளியாகியிருக்க வேண்டிய இத்திரைப்படம், ‘கந்துவட்டி’ ஃபைனான்சியர் அன்புச்செழியன் பிரச்சினையால் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் கிடப்பில் கிடந்து இப்பொழுது வெளியாகியுள்ளது.

ஒரு கொலை குற்றவாளியை துரத்தி செல்கையில் காவல் துறை ஆய்வாளரான குமரனுக்கு (சந்தீப் கிஷன்) பலமாக அடிபடும் அதே வேளையில், அந்த கொலைகாரனும் இறந்து போகிறான். சில மாதங்களுக்குப் பிறகு, அச்சு அசலாக அதே பாணியில் இன்னொரு கொலையும் நடக்கிறது; தீவிர விசாரணை செய்து போலீஸ் அதிகாரிகள் அந்த கொலைகாரனை கண்டுபிடித்து பிடிக்க நெருங்குகையில், அந்த கொலைகாரனும் இறந்து போகிறான். ஒரே மாதிரியான கொலை செய்யும் பாணி, ஒரே மாதிரியான தடயங்கள், ஆனால் வேறு வேறு குற்றவாளிகள் – அவர்களும் இறந்து போகிறார்கள் என எக்கச்சக்க குழப்பத்தில் நகரும் இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க மனோநல மருத்துவர் ரம்யாவும் (லாவண்யா திரிபாதி) குமரனுக்கு உதவுகிறார். இந்நிலையில், இத்தனைக்கும் காரணம் ‘சாகாவரம்’ அடைந்து ஆயிரம் ஆண்டு காலம் வாழ நினைக்கும் வில்லன்தான் என தெரிய வருகிறது. யார் அந்த வில்லன்? எதற்காக இத்தனை கொலைகள்? எப்படி இதெல்லாம் சாத்தியம்? என எக்கச்சக்க கேள்விகளுக்கான பதில்களை படு சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார்கள்.

‘த்ரில்லர்’ திரைப்படமாக இருந்தாலும் கூட, ஒரு குறிப்பிட்ட ஜானர் பிரிவில் ‘மாயவன்’ திரைப்படத்தை சுருக்கிவிட முடியாது. விஞ்ஞானம், சாகாவரம் எல்லாம் பேசும் ‘சயின்ஸ் ஃபிக்ஷன்’ படமாக இருந்தாலும், மர்மங்களை கலையும் ‘மிஸ்டரி க்ரைம் திரில்லர்’ ஆகவே நகர்கிறது ‘மாயவன்’. 2037ஆம் ஆண்டில் கதை தொடங்கி, 2017ஆம் ஆண்டை நோக்கி பின்னோக்கி நகரும்பொழுதே ஒருவித ஆர்வம் தொற்றிக்கொள்கிறது. டைட்டில் கார்ட் போடும்பொழுது ஒரு ‘பெட்டி கேஸ்’ திருடனை பிடிக்க துரத்திப் போய், ஒரு பெரிய ஆபத்தில் ஹீரோ மாட்டிக்கொள்ளும் காட்சியில் தொடங்கி ஹீரோவின் மன அழுத்த பிரச்சினை, சீரியல் கில்லர் யார் என தொடங்கும் பரபரப்பான விசாரணையும் அடுத்தடுத்த திருப்புமுனைகளும் என கதை எங்குமே நிற்காமல் பரபரவென நகர்கிறது.

ரொமான்ஸ் காட்சிகள், தேவையில்லாத பாடல் காட்சிகள், சண்டைக் காட்சிகள், பில்டப் காட்சிகள் என எதிலுமே நேரத்தை வீணடிக்காமல், திரைப்படம் ஓடக்கூடிய இரண்டு மணி நேரம் முழுக்கவே விறுவிறுப்பாக நகரக்கூடிய ஒரு த்ரில்லர் திரைப்படமாக கொடுக்க முயற்சித்திருக்கிறார்கள்; அந்த முயற்சியில் வெற்றியும் கண்டிருக்கிறார்கள். எந்த ஒரு காட்சியிலுமே சலுப்போ, அயர்ச்சியோ ஏற்படவே இல்லை. கிளைமாக்ஸ் வரை ‘அடுத்தது என்ன?’ ‘குற்றவாளி யார்?’ என்கிற கேள்விகளுக்கான பதிலை கணிக்கமுடியாதபடி ரசிகர்களை கட்டிப்போட்டிருந்தது நலன் குமாரசாமியின் திரைக்கதையும் வசனங்களும், நேர்மையான கதை சொல்லலும் தான். ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை பொறுத்தவரை, திரைக்கதையில் அவிழ்க்க முடியாதபடி முடிச்சுக்களை போடுவதும் அவற்றை ரசிகர்கள் பார்வைக்கு அழகாக அவிழ்த்து காட்டுவதுமே ஆகும்; அதை சரியாக செய்திருக்கிறது ‘மாயவன்’. ஆங்காங்கே ஒரு சில ட்விஸ்ட்களை கணிக்க முடிந்தாலும் கூட, அவை திரையில் படைக்கப்பட்டிருக்கும் விதம் ரசிக்கும்படியே இருந்தது. இந்த வருடத்திலேயே கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கதையோடு ‘போகன்’ என்றொரு திரைப்படம் வெளியாகியிருந்தாலும் கூட, அந்த சாயல் ஏதுமில்லாமால் ரொம்பவே புதிதாக இருந்தது.

‘சாகாவரம்’ பற்றியும் அது குறித்த ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட விஷயங்களும் மிரளச் செய்கிறது. அதிலும், படம் முடிந்த பின் ‘சாகாவரம்’ ‘மரணத்தை வெல்வது’ பற்றியெல்லாம் உலகத்தின் பெரும் பணக்காரர்கள் பேசியிருப்பதையும், அது குறித்த ஆராய்ச்சிகளில் அவர்கள் செய்யும் முதலீடுகள் பற்றியும் பார்க்கையில் ஒருவித பயம் ஏற்பட்டதை தவிர்க்க முடியவில்லை தான். இரண்டாம் பாதியில் வரும் தொழில்நுட்ப விளக்கங்கள் ஏற்றுக்கொள்ளும்படியோ, நம்பும்படியோ இல்லாமல் வெறும் ‘ஃபேண்டஸி’ விஷயமாக மட்டுமே தோன்றுமளவிற்கு இருந்தது; சில முக்கிய காட்சிகளில் லாஜிக் குறைகளும் சினிமாத்தனமும் இருக்கவே செய்தது.

சந்தீப் கிஷனின் ஒட்டு மீசை, முதல் அரைமணிநேர காட்சிகளில் லாவண்யா த்ரிபாதியின் ஒட்டாத உதட்டசைவு என சில விஷயங்கள் உறுத்தினாலும் கூட, இரண்டு பேருமே சிறப்பாக நடித்துள்ளனர். காவல் அதிகாரியாக சந்தீப் கிஷன், பக்குவப்பட்ட நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ‘மாநகரம்’, ‘மாயவன்’ போல சுவாரஸ்யமான திரைப்படங்களை தொடர்ந்து தேர்ந்தெடுத்தால், சந்தீப்பிற்கு தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்காலம் உண்டு. டேனியல் பாலாஜி, ‘மைம்’ கோபி, பகவதி பெருமாள், ஜெயப்பிரகாஷ், ஜாக்கி ஷெராஃப் என அனைத்து குணச்சித்திர நடிகர்களுமே மிகையின்றி நடித்திருந்தார்கள். ஒரேயொரு காட்சியில் தோன்றிய இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் கூட அசத்தியிருந்தார். கிப்ரானின் இசையில் ‘மெல்ல மெல்ல சொல்லவா’ பாடல் முதல்முறை கேட்ட மாத்திரத்திலேயே, மனதில் ரீங்காரமிட ஆரம்பித்துவிட்டது. கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவும், லியோ ஜான் பாலின் படத்தொகுப்பும் படத்தின் முக்கிய பலம்.

மொத்தத்தில், ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை சீட்டின் நுனியில் அமர வைக்கக்கூடிய விறுவிறுப்பான த்ரில்லர் இந்த ‘மாயவன்’. கண்டிப்பாக, திரையரங்கில் ஒரு முறை பார்த்து ரசிக்கக்கூடிய திரைப்படம்.


 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்