விளம்பரம்
முகப்புவிமர்சனம்

மகளிர் மட்டும் திரைப்பட விமர்சனம் - Magalir Mattum Movie Review

  | Monday, November 20, 2017

Rating:

மகளிர் மட்டும் திரைப்பட விமர்சனம் - Magalir Mattum Movie Review
 • பிரிவுவகை:
  டிராமா
 • நடிகர்கள்:
  ஜோதிகா,சரண்யா பொன்வண்ணன், ஊர்வசி, பானுபிரியா
 • இயக்குனர்:
  பிரம்மா
 • தயாரிப்பாளர்:
  டி என்டர்டைன்மென்ட், க்ரிஸ் பிக்சர்ஸ்
 • எழுதியவர்:
  பிரம்மா
 • பாடல்கள்:
  ஜிப்ரான்

நடிகர் சூர்யாவை திருமணம் செய்த பின், கிட்டத்தட்ட 8 வருட இடைவெளிக்குப் பிறகு 2015ஆம் ஆண்டில் ‘How Old Are You’ என்கிற மலையாள படத்தின் தழுவலான ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் நடிக்க வந்தார் நடிகை ஜோதிகா. ‘குற்றம் கடிதல்’ திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரம்மா, தன் முதல் படத்திலேயே சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றார். சென்ற ஆண்டின் தொடக்கத்தில் ஜோதிகாவின் அடுத்த படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியானது. நடிகர் சூர்யா தயாரிப்பில் பிரம்மாவின் எழுத்து மற்றும் இயக்கத்தில் பெண்களை மையமாகக் கொண்ட ஒரு படத்தில் ஜோதிகா நடிப்பார் என உறுதி செய்யப்பட்டது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், பாடல்கள், டிரைலர் என இந்த திரைப்படத்தின் ஒவ்வொரு அறிவிப்புமே இது ஒரு தரமான படைப்பாக இருக்கும் என்கிற நம்பிக்கையை கொடுத்த ‘மகளிர் மட்டும்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.

கல்லூரி நாட்களில் எக்கச்சக்க குறும்போடு, எவருக்கும் அடங்காமல் சந்தோஷமாக ஆடித் திரிந்த மூன்று தோழிகளின் வாழ்க்கை, திருமணத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக மாறிப் போகிறது. கணவனையும், பிள்ளைகளையும் பார்த்துக்கொள்வதையே மட்டும் தினசரி வேலையாகக் கொண்டு, தனக்கென வாழ்க்கையில் எந்தவித ஆசைகளோ லட்சியமோ இல்லாமல் ஒரு இயந்திர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார்கள். 38 வருடங்களுக்கு பிறகு, அந்த மூன்று தோழிகளும் மீண்டும் சந்திக்கிறார்கள். அப்படி சந்திக்கையில், என்ன ஆகிறது? அவர்கள் வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் ஏற்படுகிறது? என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகிறது? என்பதை சொல்லும் திரைப்படமே ‘மகளிர் மட்டும்’.      

வெறுமனே பெண்களின் வாழ்க்கையில் உள்ள அன்றாட சங்கடங்களையும், குடும்பத்திற்காக அதிக அளவில் உழைக்கும் அவர்கள் எப்பொழுதுமே கண்டுகொள்ளப்படாமல் போவது பற்றியும் பேசும் எமோஷனல் டிராமாவாக மட்டும் இல்லாமல், ஒரு நல்ல பொழுதுப்போக்கு திரைப்படமாக அமைந்திருக்கிறது ‘மகளிர் மட்டும்’. படம் ஓடும் இரண்டே கால் மணிநேரம் முழுக்கவே, எந்தவொரு காட்சியுமே போரடிக்கவில்லை. சுப்பு, கோமு, ராணி ஆகிய மூன்று தோழிகளின் கல்லூரி வாழ்க்கையையும், நிகழ்கால குடும்ப நிலையையும், அவர்களது மூன்று நாள் பயணத்தையும் மாற்றி மாற்றி மிக சுவாரஸ்யமாக காட்டியுள்ளார் இயக்குனர் பிரம்மா. படத்தின் பல முக்கிய காட்சிகளில், நாம் திரையரங்கில் அமர்ந்து ஒரு படத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறோம் என்பதையே மறக்க செய்வதே இத்திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றி. பெரிய திருப்பங்கள் என ஏதும் இல்லாவிடினும் கூட, படம் நெடுக சுவாரஸ்யம் குறையாமல் கதை சொல்லப்பட்டிருக்கிறது. நம் நெருங்கிய நண்பர்களுடன் ஒரு நீண்ட பயணம் சென்று வந்ததைப் போன்றதொரு சுகத்தைத் தருகிறது ‘மகளிர் மட்டும்’.      

கால் டாக்ஸியின் மீது ஏறி நின்று விமானத்தை பார்க்கும் பிரபாவதி, ‘புருஷன் வேற, புள்ள வேற’ என புலம்பும் கோமாதா, கல்லூரி நாட்களில் இருந்த வாழ்க்கைக்கு நேர் எதிராக ஒரு ராணுவ முகாமில் இருப்பதைப் போல கட்டளைகளுக்கு மட்டும் அடிபட்டு வாழும் ராணி, அழகுக்கலை நிபுணர் ஆகும் கனவை மறந்து உடல்நிலை சரியில்லாத மாமியாருக்கு பணிவிடைகள் செய்யும் சுப்பு என ஒவ்வொரு கதாபாத்திரத்தின் அறிமுகம், மனைவிகள் படும் கஷ்டங்களைப் பற்றி பிரபாவதி எடுக்கும் டாக்குமெண்டரி என முதல் 15 நிமிடங்களிலேயே படத்திற்கான மனநிலையை ரசிகர்களிடம் மிகச்சரியாக உண்டாக்கிவிடுகிறார் இயக்குனர். ரத்தம் வழிய வழிய நைட்டியுடன் கர்ப்பிணிப் பெண் ஆஸ்பத்திரிக்கு செல்வது, பிரசவம் முடிந்து ஒரு சில நாட்களே ஆன மனைவியை தந்தை கால்களில் விழ சொல்வது போன்ற   சின்ன சின்ன விஷயங்களை ஆங்காங்கே காட்டிய விதத்திலும், கதை மீதான கவனத்தை குலைக்காதவாறு மனிதன் மலம் அள்ளும் அவலத்தைப் பற்றியும், தமிழீழ நினைவேந்தல் பற்றியும், உடுமலைப்பேட்டை ஆவணக்கொலை பற்றியும் வேறு சில சமூக பிரச்சினைகளைப் பற்றியும் காட்டிய விதத்திலும் ரசிகர்களின் மரியாதையை வெல்கிறார் இயக்குனர் பிரம்மா.

தோழிகளின் கல்லூரி நாட்கள், காட்சிகளாக்கப்பட்ட விதம் அட்டகாசம்! துணிகளை பரிசோதிக்க வார்டன் வரும்பொழுது தனக்கு உதவிய தோழியிடம் ‘சாகுற வரைக்கும் மறக்கமாட்டேன்டி’ என கோமாதா சொல்ல, ‘அதெல்லாம் வேணாம், நைட்டு உன்னோட அப்பளத்தை எனக்கு தருவியா’ என கேட்பது, புத்தகத்தை கிழித்து நடுவே ஓட்டையிட்டு அணில் குட்டி வளர்ப்பது, ‘இவன்லாம் ஒரு ஆளா’ என பியூனை அறைவது, வார்டன் இல்லாத சமயத்தில் சர்ச்சில் ஃபாதர் போல வேடமிடுவது, மாட்டுக்கு பிரசவம் பார்ப்பது, சுவர் ஏறி குதித்து சென்று திருட்டுத்தனமாக படம் பார்ப்பது, தங்கள் காதல் கதைகளை பகிர்ந்து கொள்வது என 1970களின் இறுதியில் நடப்பதாக காட்டப்படும் அந்த எபிசோட் முழுக்கவே ரொம்பவே அழகாக படமாக்கப்பட்டுள்ளது.

ஆங்காங்கே சில காட்சிகளில் சினிமாத்தனம் இருந்தாலும் (உதாரணம் – விபத்தில் தன் தாயை இழக்கும் ஒருவனைப் பார்த்து வருந்துவது), அம்மாவின் போஸ்டர் மேல் இருக்கும் ரத்தத் துளிகளை கார்த்திக் கதாபாத்திரம் துடைப்பது போன்ற கவிதை மாதிரியான சில நொடிகளோடு ஒவ்வொரு காட்சியையும் முடிப்பதிலும், தங்கள் மனதில் உள்ள கேள்விகளை மூன்று பேரும் கேட்கும் sand bag காட்சி போன்ற கனமான காட்சிகளை வைத்ததிலும் இயக்குனர் டச் நறுக்! ‘அவகிட்ட சொல்லாதம்மா, அவ நிறைய பண்ணிட்டாம்மா’ என லிவிங்ஸ்டன் ஜோதிகாவிடம் சொல்வது, கிளைமாக்ஸில் பானுப்ரியாவின் மகன் அழுவது போன்ற பல நெகிழ்ச்சியான தருணங்கள் நம்மையும் அறியாமல் கை தட்ட வைக்கிறது!

படத்தின் மிகப்பெரிய பலங்களில் ஒன்று – ஒவ்வொரு காட்சியையும் மெருகேற்றிடும் வசனங்கள் . ‘வீட்டுல எல்லா வேலையும் பார்த்தாலும் சும்மா இருக்கேன், சும்மா இருக்கேன்னு சொல்றியே... எனக்கு என்ன மாசா மாசம் சம்பளம் தர்றியா, இல்ல ஞாயித்துக்கிழமை ஆனா லீவு விடுறியா?’, ‘பொம்பளைங்களை எல்லாம், எங்கே வெக்கணுமோ அங்கே வெக்கணும்... அடுப்பங்கரையில வெச்சா, ஆக்கிப் போடுவா... வாசலைத் தாண்டி கூட்டிட்டுப் போனன்னு வெச்சுக்கோ, வாங்கடா பின்னாலன்னு அவ பாட்டுக்கு போய்ட்டே இருப்பா’, ‘பொண்ணுங்களோட வாழ்க்கை ஒரு மாயாஜால ஜெயில்... எட்டி ஒதைக்குற ஒதையில, ஒண்ணு கதவு திறக்கணும் இல்ல உடையணும்’, ‘பொம்பளைங்க இருக்குற வீட்டுல, சாப்பாட்டுல முடி இருக்கத்தான் செய்யும்.. எடுத்துப் போட்டுட்டு சாப்பிடனும்’, ‘பெத்தவளுக்கு சமைச்சு போட்டா, செத்ததுக்கு அப்புறம் சொர்க்கம்... கட்டினவளுக்கு சமைச்சு போட்டா, வாழும்போதே சொர்க்கம்...’ ’38 வயசுக்குள்ள 14 குழந்தை பெத்து, செத்துப் போன மும்தாஜோட கல்லறை தானே இந்த தாஜ்மஹால்?’ ‘சாமி, ஆறுன்னு எல்லாத்துக்கும் பொண்ணுங்க பேரா வெச்சு அதையும் பராமரிக்கல... பொம்பளைங்களையும் மதிக்கல’, ‘கழுத்து பூரா நகையை மாட்டிக்கிட்டு, நடுராத்திரி ரோட்டுல சுத்துறதெல்லாம் பெண் சுதந்திரம் இல்ல..’, ‘நான் இன்னொரு வேலைக்காரி இல்லையா? நான்தான் இங்கே மூத்த வேலைக்காரி’ என பானுப்ரியா சொல்வது என படம் நெடுக கூர்மையான வசனங்கள் கைத்தட்டல்கள் பெறுகிறது.

திரைக்கதை, நடிகர் தேர்வு, ஒளிப்பதிவு, இசை, கலை இயக்கம் என ஒவ்வொரு துறை சேர்ந்த வேலைகளிலுமே அப்பழுக்கின்றி மின்னுகிறது ‘மகளிர் மட்டும்’. அறிமுகமான காலத்தில் இருந்து இன்று வரை அதே குழந்தைத்தனமான, துறு துறு நடிப்பில் பட்டையைக் கிளப்புகிறார் ஜோதிகா. ஒவ்வொரு காட்சியிலுமே ரசிகர்களின் மனதை அள்ளும் ஜோ, இன்னும் நிறைய படங்களில் நடித்திட மாட்டாரா என்கிற ஏக்கத்தையும் உண்டாக்குகிறார். ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா பொன்வண்ணன் ஆகிய மூவருமே போட்டி போட்டு கோம்ஸ், ராணி, சுப்பு கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுத்துள்ளனர். மூவரில் மிக இயல்பான வெகுளியான நடிப்பின் மூலம் ஊர்வசி அதிகமாக ஸ்கோர் செய்தாலும் கூட, பானுப்ரியா மற்றும் சரண்யாவும் சற்றும் சளைக்காமல் தங்கள் பங்கிற்கு சிக்ஸர் அடிக்கிறார்கள். நடுக்காட்டில் ஓட்டப்பந்தயம் வைப்பது, வெட்கத்துடன் காதல் கதைகளை பரிமாறிக் கொள்வது, மாட்டுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொள்வது, ஒருவரையொருவர் நக்கலடித்துக் கொண்டே இருப்பது  என ஒவ்வொரு காட்சியிலும் பிரமாதப்படுத்துகிறது இந்த மூவர் கூட்டணி. ‘மெட்ராஸ்’, ‘குற்றம் கடிதல்’ திரைப்படங்களில் கவனம் ஈர்த்த பாவேல் நவகீதன், கார்த்திக் என்கிற கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்துள்ளார். நாசர், லிவிங்ஸ்டன், ஜோதிகாவின் தோழியாக வரும் மாயா கிருஷ்ணன் என அனைவருமே தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை நிறைவாக செய்துள்ளனர். மணிகண்டனின் ஒளிப்பதிவும், கிப்ரானின் இசையும் படத்திற்கு பெரும்பலம் சேர்க்கிறது. மொட்டை மாடியில் மழைக்கு நடுவே ஒதுங்கி பஜ்ஜி சுடுவதில் ஆரம்பித்து தாஜ்மஹால் வரை, ஒவ்வொரு பிரேமிலும் அழகு சேர்க்கிறார் ஒளிப்பதிவாளர் மணிகண்டன். கிப்ரானின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தை வேறு தளத்திற்கு எடுத்து செல்கிறது; ‘வாகை சூட வா’, ‘அமர காவியம்’, உத்தம வில்லன்’ வரிசையில் கிப்ரானின் சிறந்த ஆல்பங்களின் பட்டியலில் ‘மகளிர் மட்டும்’ இடம்பெறும். (மேக்கிங்கை பொறுத்தவரை சென்னை, கேரளாவில் எடுக்கப்பட்ட பல காட்சிகளை உத்தர பிரதேசம், சட்டீஸ்கர் என காட்டியதை மட்டும் இன்னும் கவனமாக கையாண்டிருக்கலாம்; சில காட்சிகளில் எல்‌ஐ‌சி கட்டிடம் உள்ளிட்ட சென்னையின் முக்கிய அடையாளங்களை காண முடிந்தது).

இந்த வருடத்தின் மிகச்சிறந்த திரைப்படங்களில் ஒன்றான ‘மகளிர் மட்டும்’, குடும்பத்தோடு பார்த்து கொண்டாட வேண்டிய அருமையான பொழுதுப்போக்கு திரைப்படம்! ஒவ்வொரு ஆணும் கட்டாயம்  பார்க்க வேண்டிய திரைப்படம்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்