முகப்புவிமர்சனம்

நாச்சியார் விமர்சனம் - Naachiyaar Movie Review

  | Friday, February 23, 2018

Rating:

நாச்சியார் விமர்சனம் - Naachiyaar Movie Review
 • பிரிவுவகை:
  க்ரைம் ட்ராமா
 • நடிகர்கள்:
  ஜோதிகா, ஜீ.வி.பிரகாஷ், இவானா, `ராக் லைன்' வெங்கடேஷ்
 • இயக்குனர்:
  பாலா
 • தயாரிப்பாளர்:
  B ஸ்டுடியோஸ், EON ஸ்டுடியோஸ்
 • எழுதியவர்:
  பாலா
 • பாடல்கள்:
  இளையராஜா

வீட்டு வேலைகள் செய்து வாழ்ந்துவருபவர் அரசி (இவானா), கிடைக்கும் கூலி வேலைகளை செய்து வாழ்ந்துவருபவர் காத்து (எ) காத்தவராயன் (ஜீ.வி.பிரகாஷ்). ஷேர் ஆட்டோவில் சந்திக்கும் இந்தக் குப்பத்து ஜோடி மோதலில் ஆரம்பித்து பின் காதல் செய்யத் துவங்குகிறார்கள். இருவரின் நெருக்கத்தால் கருத்தரிக்கிறார் இவானா. இவானா மைனர் என்பதால், அவளின் தந்தை காவல்நிலையத்தில் ஜீ.வி.பிரகாஷ் மீது புகார் கொடுக்கிறார். இந்த புகார் மிக நேர்மையான, கரடுமுரடான காவல் அதிகாரி நாச்சியார் (ஜோதிகா) கைக்கு வருகிறது. புகாரின் பேரில் ஜீ.வி.பிரகாஷை பல மாத தேடுதலுக்குப் பின் கைது செய்யும் ஜோதிகா, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அவரை அடைக்கிறார். இந்தச் சூழலில் இவானாவுக்குகக் குழந்தை பிறந்ததும் தெரிய வரும் உண்மையால், இந்த வழக்கு திசைத்திரும்புகிறது. அதை மையமாக வைத்து விசாரணையைத் துவங்குகிறார் ஜோதிகா. அது என்ன உண்மை, அந்த விசாரணையின் முடிவு என்ன, ஜீ.வி.பிரகாஷ் - இவானா மற்றும் அந்தக் குழந்தையின் நிலை என்ன ஆகிறது என்பதை எல்லாம் சொல்கிறது `நாச்சியார்'.

படத்தின் மிகப் பெரிய பலம் நாச்சியாராக கம்பீரம் காட்டும் ஜோதிகா. தன் மகளிடம் மன்னிப்புக் கேட்கும் போதுகூட, தெறிக்கும் அதிகாரத் தொனி, என்ன ஏது என விசாரிப்பதற்கு முன்பே கட்டித் தொங்கவிட்டு விசாரணைக் கைதியை வெளுப்பது, உயர் அதிகாரியிடம் "தொப்பிய மறந்துட்டேன்" என்று நக்கலாகச் சொல்வது இப்படிப் படம் முழுக்க ஆக்கிரமிக்கிறது ஜோதிகாவின் நடிப்பு. இன்னொரு வலிமையான நடிப்பைக் கொடுத்திருப்பது, அரசியாக வரும் இவானா. ஜீ.வி.யை விரட்டுவது போல் கோபப்பட்டு முகத்தைத் திருப்பிக் கொண்டு சிரிப்பதாகட்டும், குழந்தை மேல சத்தியமா சொல்றேன் நான் சொல்றது எல்லாம் உண்மை எனக் கலங்குவதாகட்டும் எல்லா உணர்வுகளையும் முழுமையாய் கடத்துகிறார். கண்டிப்பாய் இவானா தமிழ் சினிமாவுக்கு நல்ல அறிமுகம். ஜீ.வி.பிரகாஷ் தன்னால் முடிந்தவரை காத்து கதாபாத்திரத்திற்கு உயிரூட்ட முயற்சித்திருக்கிறார். ஆனால், சென்னைத் தமிழில் பேசுவதில் நிறையவே தடுமாறுகிறார். குப்பத்து இளைஞனைத் தோற்றத்தில் கொண்டுவந்தாலும், பேச்சு வழக்கு மற்றும் உடல் மொழியில் முழுதாகக் கொண்டுவர முடியவில்லை.

படம் துவங்கிய உடனே, கதை எதை நோக்கிப் பயணிக்கிறது என்பதை சொல்லிவிடுகிறார் பாலா. கூடவே படம் ஓடும் 100 நிமிடம் 46 நொடிகளும் தொய்வில்லாமல் திரைக்கதை அமைத்திருந்த விதமும் நன்று. நான் லீனியராக முன் கதை, நிகழ்காலக் கதை இரண்டையும் கலந்து சொல்லியிருந்த விதமும் சுவாரஸ்யம்தான். ஆனால், கதாபாத்திரங்களுக்கு நடக்கும் எந்த பதிப்பும் பார்வையாளர்களால் உணர முடியாததில்தான் பிரச்சனை ஆரம்பிகிறது. ஜீ.வி.பிரகாஷ் - இவானா காதல் காட்சி, ஜீ.வி.பிரகாஷ் அவமானப்படுத்தப்படும் காட்சி, இவானா ஜீ.வி.பிரகாஷுக்காக மேற்கொள்ளும் பயணம் என எதிலும் உயிர்ப்பு இல்லாததால், வெற்றுக் காட்சிகளாகவே கடந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக படத்தின் க்ளைமாக்ஸ் காட்சியில் ஜீ.வி.எடுக்கும் முடிவு கதையைப் பொறுத்தவரையில் மிக அழுத்தமான ஒன்று. ஆனால், அதை காட்சியாகப் பார்க்கும் நமக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் தேமே என்று கடக்கிறது. வலுவான பிரச்சனை ஒன்றை கதையின் முக்கியத் திருப்பமாக எடுத்துக் கொண்டது போல், வலிமையான விதத்தில் சொல்லியிருந்தால் ஈர்த்திருக்கும் நாச்சியார். முதல் பாதியில் ஜீ.வி வழக்கை விசாரிக்கும் நீதிபதி, டவுசர் கிழிஞ்சிடுச்சா எனக் கிண்டல் செய்யும் நண்பன் போல பாலாவின் வழக்கமான நையாண்டிகள் ஒன்றிரண்டு காட்சிகளில் இருக்கிறது. ஆனால், இடைவேளைக்குப் பிறகு அதுவும் போய்விடுகிறது.

எளிமையான படத்தின் கதைக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாத விதத்தில் பின்னணி இசை கொடுத்திருக்கிறார் இளையராஜா. ஆனால், படத்துக்கு ஜீவன் சேர்ப்பது தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவுதான். போலீஸின் துரத்தலோ, ஷேர் ஆட்டோவின் நெரிசலோ, குப்பை மேட்டின் அழுக்கோ, ஜோதிகாவின் வன்மமான அணுகுமுறையோ அத்தனையையும் அழகாய் அள்ளி வந்திருக்கிறது ஈஸ்வரின் கேமரா.

பாலா படங்கள் என்றால் கொடூரமாகத்தான் இருக்க வேண்டுமா? என்றால், இல்லை மென்மையாகவும் இருக்கலாம் என்கிற பதிலுடன் வந்திருக்கிறது நாச்சியார். உண்மைதான், எந்த இயக்குநரும் தன்னுடைய பாணியை மாற்றி ஒரு படம் கொடுக்கலாம்தான். ஆனால், சொல்லும் கதையில் இருக்கும் உயிர், அது ஏற்படுத்தும் தாக்கம் பாதிக்கப்படாதவாறு அந்த மாற்றம் இருக்க வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு ரசிகனின் எதிர்பார்ப்பு. அந்த எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத ஒரு பாலா படமாகத்தான் இருக்கிறது `நாச்சியார்'. மோசமான படம் இல்லை என்றாலும், பாலா ரசிகராக ரத்தமும் சதையுமாய் ஒரு படம் எதிர்பார்த்துப் போனால் நிச்சயம் ஏமாற்றம் அளிக்கும். எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் போய்வந்தால், ஒருவேளை பிடிக்கவும் செய்யலாம்.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்