முகப்புவிமர்சனம்

"மகா நடிகைக்கு மகத்தான ட்ரிப்யூட்" - `நடிகையர் திலகம்' விமர்சனம் - Nadigaiyar Thilagam Movie Review

  | Friday, May 11, 2018

Rating:

 • பிரிவுவகை:
  பையோகிராபிகல்
 • நடிகர்கள்:
  கீர்த்தி சுரேஷ், துல்கர் சல்மான், சமந்தா, விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், பிரகாஷ் ராஜ், நாக சைதன்யா
 • இயக்குனர்:
  நாக் அஸ்வின்
 • தயாரிப்பாளர்:
  விஜயந்தி மூவீஸ், ஸ்வப்னா சினிமா
 • எழுதியவர்:
  நாக் அஸ்வின்
 • பாடல்கள்:
  மிக்கி ஜே.மேயர்

தெலுங்கில் படத்தின் பெயர் `மகாநடி' (மகா நடிகை). பல மொழிகளிலும் தன் நடிப்பின் மூலம் கம்பீரமாக வலம் வந்த ஒரு மகா நடிகையின் கதை... சாவித்ரியின் கதைதான் படம். தமிழில் டப் செய்யப்பட்டு `நடிகையர் திலகம்' ஆக வெளியாகியிருக்கிறது. எப்படி வந்திருக்கிறது படம்?

பயோபிக் என்றதும் `சாவித்ரி 1936ல் குண்டூர் ஜில்லாவிலுள்ள சிரவூரில் பிறந்தார்' என்ற படி சம்பிரதாயமாகக் கதை சொல்லாமல், பார்வையாளர்களைக் கைபிடித்து அழைத்துச் சென்று, யார் அவர் என்கிற தேடுதலோடு படம் ஆரம்பிக்கிறது. கதைப்படி பத்திரிகையாளர் மதுரவாணியிடம் (சமந்தா), நடிகை சாவித்ரி (கீர்த்தி சுரேஷ்) கோமாவில் இருப்பது பற்றிய செய்தி சேகரிக்கும் பொறுப்பு வழங்கப்படுகிறது. சமந்தாவுக்கு சாவித்ரியை சினிமா நடிகையாக மட்டுமே தெரியும். அவரது வளர்ச்சி, வீழ்ச்சி, தோல்வி, மீண்டுவருதல் எனப் பல தகவல்கள் கிடைக்க ஆரம்பிக்கிறது. சாவித்ரியின் வரலாற்றின் ஆரம்பப் புள்ளியையும், கோமாவுக்குச் சென்ற நாளில் என்ன நடந்தது என்பதையும் தேடுகிறார்.

சாவித்ரியின் வாழ்க்கையில் நடந்த பல முக்கியமான சம்பவங்களை எடுத்துக் கொண்டு காட்சிபடுத்தியிருக்கிரார்கள். சிறுமியாக இருந்த அவளுக்கு பிடிவாதம் அதிகம். "எனக்கு நாட்டியம் வராதுன்னு சொல்றதுக்கு அவர் யாரு" என வீம்பாக கற்றுக் கொள்ளும் பரதத்தில் துவங்குகிறது சாவித்ரியின் பயணம். தொடர்ந்து அவரின் நாடக அரங்கேற்றம், சினிமா வாய்ப்பு தேடி அலையும் பகுதி, முதல் வாய்ப்பு, ஜெமினி கணேசனுடன் அறிமுகம், தமிழ் கற்றுக் கொள்வது, வெற்றி, ஜெமினியுடன் காதல், திருமணம், குழந்தைகள், குடும்ப வாழ்க்கையில் சிக்கல், சினிமா தோல்வி, குடிக்கு அடிமையாவது என சாவித்ரி பற்றி தெரியாத நபர்களுக்கும் மிக எளிமையாக அந்த லெகசியை கடத்துகிறது படம். மிகத் தீவிரமான சாவித்ரி ரசிகர்களுக்கு இது மறக்க முடியாத அனுபவமாக இருக்கும். அவரது புகழ்பெற்ற பல படங்களின் காட்சிகள் படத்தில் ரீக்ரியேட் செய்யப்பட்டிருக்கிறது. மாயா பஜார், மிஸ்ஸியம்மா, பாசமலர், தேவதாஸ் என க்ளாசிக்ஸ் பலவும் அப்படியே இடம்பிடித்திருக்கிறது. இயக்குநர் நாக் அஸ்வினின் பல ஐடியாக்கள் படத்தை மிக சுவாரஸ்யமாக்கியிருக்கிறது.

கீர்த்தி சுரேஷ் நிச்சியமாக எல்லோரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். புகழ்பெற்ற ஒரு நடிகையின் கதையை தன் முகம் மூலம் கடத்த வேண்டிய பொறுப்பை மிக கவனமாக கையாண்டிருக்கிறார். ஒரு சில காட்சிகளில் தத்ரூபமாக சாவித்ரியைக் கண்முன் நிறுத்துகிறார். பதின் வயதிலேயே நடிக்க வந்த குறும்புப் பெண்ணின் துடுக்குத்தனம், தன் ஆதர்ச நடிகரைப் பார்த்து உறைவது, பின்பு அவருக்கே ஜோடியாக நடிக்கும் போது வசனத்தை தப்புத்தப்பாய் பேசி சொதப்புவது, தேவதாஸ் கதை படித்து தேம்பி தேம்பி அழுவது என நாம் பார்க்கும் ஒவ்வொரு காட்சியிலும் சாவித்திரி இப்படித்தான் செய்திருப்பார் என யோசித்துக் கொள்வோம். அந்த அளவு மெனகெட்டு நடித்திருக்கும் கீர்த்திக்கு வாழ்த்துகள். கீர்த்தி ஹேட்டர்ஸுக்கும், ட்ரோலர்ஸுக்கும் இந்தப் படம் ஒரு பதிலடி எனச் சொல்லலாம். அடுத்ததாக நம்மை அசத்துவது துல்கர்தான். ஜெமினி கணேசன் வேடம். "அந்த தேவதாஸ் ஜெமினி கணேசனா இருந்தா?" என சாவித்ரியிடம் ஜெமினி காதலைச் சொல்வதாய் ஒரு காட்சி வரும். அது ஒன்று போதும் என தோன்றியது. துல்கரின் போக்கிலேயே ஜெமினி கணேசனை இயல்பாகப் பார்க்க முடிந்தது. "எனக்கு காதல் மேல் நம்பிக்கை உள்ளது கல்யாணம் மேல் இல்லை... என் வாழ்வில் உள்ள ஒரே காதல் நீதான்" என புலம்பலும், "தோல்வியில் கூட எனக்கு க்ரெடிட் கொடுக்க மாட்டியா?... இது என்னாலதான்" எனத் தன்னுடைய தோல்வி நேரத்தில் மனைவி உச்சத்தில் இருப்பதன் மனக் கவலையுமாக பல இடங்களில் அட்டகாசம் செய்திருக்கிறார் துல்கர் சல்மான்.

சமந்தாவுக்கு கண்கள் விரிய ஆச்சர்யத்தோடு சாவித்ரி பற்றி செய்தி சேகரிக்கும் வேடம். திக்கித் திக்கிப் பேசுவதில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தாலும் நடிப்பில் எந்த தடங்கலும் இல்லை. கதாபாத்திரத்திற்கு தேவையானதை தெளிவாய் செய்திருக்கிறார். இன்னும் பலர் இருக்கிறார்கள். பலர் என்றால் ஒரு பட்டாளமே இருக்கிறது. விஜய் தேவரகொண்டா, ராஜேந்திர பிரசாத், தனிக்கெல்லா பரணி, பானுப்ரியா, மாளவிகா நாயர், ஷாலினி பாண்டே. மற்றும் சிறப்பு தோற்றங்களில் பிரகாஷ் ராஜ், மோகன் பாபு, நாக சைதன்யா, க்ரிஷ், ஸ்ரீனிவாஸ் அவசரலா, சந்தீப் வங்கா, தருண் பாஸ்கர், கிராஃபிக்ஸில் வரும் என்.டி.ராமா ராவ் எல்லோருக்கும் சாவித்ரியின் வாழ்வில் முக்கியப் பங்கு வகித்தவர்களின் வேடம்.

மூன்று மணிநேரத்துக்கு நெருக்கமாக படம் ஓடுகிறது. அந்த அலுப்பு இருக்கத்தான் செய்யும். ஆனால், சாவித்ரியின் சில காரியங்கள் பற்றி எடுத்தோம், கவிழ்த்தோமாய் சொல்ல முடியாது. அதற்கான ஆழத்துடன் சேர்த்து சொல்வதில் இந்த நேரம் தேவையாய் இருக்கிறது. பிரச்சனை ஒன்றுதான். சாவித்ரியின் பயோபிக் உள்ளே பத்திரிகையாளர் மதுரவாணியின் காதல் கதையையும், திக்குவாய் குணமாவதையும் சேர்த்து சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று தோன்றியது. தெலுங்குப் படத்தின் காட்சிகள் அதிகம் இடம்பெறுவதும், பைலிங்குவலாக இல்லை என்பதாலும் படம் கொஞ்சம் விலகி நிற்கிறது. இது தவிர்த்து படம் கண்டிப்பாக சாவித்ரிக்கு சரியான ட்ரிப்யூட் எனச் சொல்லலாம்.

ஒளிப்பதிவாளர் டேனியின் உழைப்பு படத்தில் சில காட்சிகளில் எக்ஸ்ட்ரீமாகவே தெரிகிறது. ஒவ்வொரு காட்சிக்கும் அத்தனை உண்மைத்தன்மை சேர்த்திருக்கிறார். கூடவே மிக்கி ஜே மேயர் இசையும் படத்துக்கு வலு சேர்க்கிறது. சாவித்ரியின் புகழ்பெற்ற பாடல்களை, ஓசைகளை படத்தில் சேர்த்திருந்தவிதம் சிலிர்ப்பு.

கீர்த்தியை சாவித்ரியாகவும், நிகழ்காலத்தை கடந்த காலமாகவும் காட்டுவதற்காக படத்தில் உழைத்திருக்கும் அத்தனை பேரும் பாராட்டுக்குரியவர்கள். சாவித்ரி, ஜெமினி கணேசன், நாகேஸ்வர ராவ், எல்.வி.பிரசாத், சிங்கீதம் ஸ்ரீனிவாசராவ் போன்றவர்களை அப்படி திரையில் பார்க்க காரணமான ஆடைவடிவமைப்பாளர், ஒப்பனைக் கலைஞர்களின் சிரத்தை பிரம்மிப்பு தருகிறது. கூடவே விஜயா வாகினி ஸ்டுடியோ, சாவித்ரியின் அரண்மனை போன்ற வீடு, மாயா பஜார் ஷூட்டிங் ஸ்பாட் எனப் பல இடங்களை மறு உருவாக்கம் செய்திருந்த கலை இயக்குநரும் வாழ்த்துக்குரியவர்.

சாவித்திரி பற்றி தெரியுமோ தெரியாதோ, படம் பார்ப்பவர்கள் ஏதோ ஒரு நல்ல வகையில், தங்கள் மனதில் சாவித்ரியை நினைத்துப் பார்க்கச் செய்த விதத்தில் படம் வெற்றி பெறுகிறது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்