முகப்புவிமர்சனம்

நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்பட விமர்சனம் - Nenjil Thunivirunthal Movie Review

  | Monday, November 20, 2017

Rating:

நெஞ்சில் துணிவிருந்தால் திரைப்பட விமர்சனம் - Nenjil Thunivirunthal Movie Review
 • பிரிவுவகை:
  ஆக்சன் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  சந்தீப் கிஷன், விக்ராந்த், மெஹ்ரீன், சூரி
 • இயக்குனர்:
  சுசீந்திரன்
 • தயாரிப்பாளர்:
  அன்னை பிலிம் பேக்டரி
 • எழுதியவர்:
  சுசீந்திரன்
 • பாடல்கள்:
  இமான்

இன்றளவும் தமிழகத்தின் கிராமப்புறங்களில் நடக்கும் சாதிய வன்கொடுமைகளை மையப்படுத்தி சுசீந்திரன் இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த திரைப்படம் "மாவீரன் கிட்டு". அப்படம் வலுவான ஒரு கருத்தினை வலியுறுத்தினாலும் படத்தின் திரைக்கதை அமைப்பிலும், கதாபாத்திர அமைப்பிலும் இருந்த தொய்வின் காரணமாக இருதரப்பு விமர்சனங்களைப் பெற்றது. இருதரப்பு விமர்சனங்களைப் பெற்றபோதிலும் வணிகரீதியாக படம் வெற்றிபெறவில்லை. இந்நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பின் நடுவே தற்போது இயக்குநர் சுசீந்திரன் இயக்கியிருக்கும் திரைப்படம் "நெஞ்சில் துணிவிருந்தால்".

இப்படம் தமிழ், தெலுகு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது. நடிகர் சந்தீப் கிஷன், விக்ராந்த் இருவரும் நெருங்கிய தோழர்கள். சிறு வயதில் நடந்த ஒரு சம்பவத்தின் காரணமாக சந்தீப் கிஷனுக்கு தெரியாமல் அவருடைய தங்கையை விக்ராந்த் காதலித்து வருகிறார். தான் செய்யும் ஒவ்வொரு கொலைக்கும் தன் மீது சந்தேகம் வராமலும், எதற்காக அந்தக் கொலை நடைபெற்றது என்று எவருக்கும் தெரியாத வண்ணமும் திட்டமிட்டு கொலைகளைச் செய்துவருபவர் துரைபாண்டி( ஹரிஷ் உத்தமன்). திடீரென ஒரு நாள் தன்னுடைய நெருங்கிய நண்பனான விக்ராந்தை துரைப்பாண்டி கும்பல் கொலைசெய்வதற்காக திட்டமிடுவதை அறிந்துகொல்கிறார் சந்தீப் கிஷன். அதன் பிறகு என்ன நடந்தது? எதற்காக துரைப்பாண்டி சந்தீப் கிஷனை கொலைசெய்ய நினைத்தார் ? என்பதே "நெஞ்சில் துணிவிருந்தால்" திரைப்படத்தின் கதை.

இப்படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளும், மற்றபடங்களில் பார்த்ததைபோன்று அல்லாமல் இவருடைய படங்களான நான் மகான் அல்ல, பாண்டியநாடு படங்களின் காட்சியை மீண்டும் பார்ப்பதை போன்ற அலுப்பை ஏற்படுத்துகின்றது. திருப்பங்கள் மட்டும் இருந்தால் ஒரு படம் வெற்றி அடைந்துவிடும் என்ற குறுகிய நோக்கத்தில் எடுக்கப்பட்ட திரைப்படமாகவே இப்படத்தைப் பார்க்கவேண்டியுள்ளது. படத்தில் சந்தீப் கிஷன், விக்ராந்த் இருவரின் நண்பர்களாக நடித்திருக்கும் சூரி, அப்புக்குட்டி சிறிதளவு கூட படத்தின் கதைக்கு வலுசேர்க்கவில்லை. அதைபோன்றே படத்தின் கதாநாயகியாக நடித்திருக்கும் மெஹ்ரீன், ஒரு படத்திற்கு கதாநாயகி இன்றியமையாதவள் என்றநோக்கில் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக எண்ணதொன்றுகின்றது.

படத்தின் தொடக்கத்தில் சந்தீப் கிஷனின் தந்தை இறப்பதாகக் காட்டப்படும் காட்சி பெரிய அளவிலான பாதிப்பினை நமக்குள் ஏற்படுத்தவில்லை. நண்பர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து மதுபான கடையில் மது அருந்தும் பொழுது, நண்பன் என்ற சொல்லுக்கு கொடுக்கும் விளக்கம் எல்லாம் சோர்வினை மட்டுமே ஏற்படுத்துகின்றது. படத்தின் தொடக்கத்திலேயே காட்சி அமைப்பிலும், திரைக்கதை அமைப்பிலும் ஏற்படும் தொய்வு நமக்குள் சலிப்பை ஏற்படுத்துகின்றது.

இயக்குநர் சுசீந்திரன்,இசையமைப்பாளர் இமான் கூட்டணியில் பாண்டியநாடு, ஜீவா, பாயும் புலி, மாவீரன் கிட்டு ஆகிய படங்களின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை நல்ல வரவேற்பினைப் பெற்றது. ஆனால், இப்படத்தில் அந்த மேஜிக்கும் எடுபடவில்லை என்றே கூறவேண்டும். படத்தின் காட்சியமைப்பை மீறி ஒலிக்கும் பின்னணி இசை எரிச்சலடையவைக்கின்றது. படத்தில் இடம்பெற்ற எந்தப் பாடலும் மனதில் நிக்கவில்லை என்பது தான் உண்மை.

மாநகரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து நடிகர் சந்தீப் கிஷன் நடித்திருக்கும் திரைப்படம் "நெஞ்சில் துணிவிருந்தால்". சந்தீப் கிஷனுக்கு தமிழ், தெலுகு என இரண்டு மொழிகளிலும் நல்ல மார்க்கெட் இருப்பதால் அதனை மையமாக வைத்து இப்படம் இரண்டு மொழிகளிலும் உருவாக்கப்பட்டுள்ளது. சந்தீப் கிஷன் தன்னுடைய கதாப்பாத்திரத்திற்கு என்ன தேவையோ அதனைத் தருவதற்கு முயற்சி செய்துள்ளார். துரைபாண்டி என்ற கதாபாத்திரத்தில் நடிகர் ஹரிஷ் உத்தமன் சரியான அளவில் நடித்துள்ளார். பாண்டியநாடு திரைப்படம் நடிகர் விக்ராந்த்திற்கு திருப்புமுனையாக அமைந்தாலும் அதனை தக்கவைத்துக்கொள்ளும் அளவிற்கு அடுத்தடுத்த படங்கள் அமையவில்லை. தொடர்ச்சியாகவே விக்ராந்த் நடித்துவரும் கதாபாத்திரங்கள் வலுவிழந்த நிலையிலையே அமைந்து வருகின்றது. இப்படத்திலும் அவருடைய கதாபாத்திரம் சரியான முறையில் வடிவமைக்கப்படவில்லை.நடிகர் விக்ராந்த் இதுபோன்ற கதைகளை தேர்ந்தெடுப்பதைத் தவிர்த்துவிட்டு ஒரு வலுவான கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடிக்கலாம்.

படத்தின் கரு ஒரு முக்கியமான துறையின் கோரமுகத்தை காட்ட நினைத்தாலும், அதனைப் படமாக்கிய விதம், காட்சி அமைப்புகள், திரைக்கதை அமைப்பு அந்தக் கருவின் பாதிப்பை நமக்கு தரமறுக்கின்றது.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்