விளம்பரம்
முகப்புவிமர்சனம்

​​​நிபுணன் திரை விமர்சனம் - Nibunan movie review

  | Friday, July 28, 2017

Rating:

​​​நிபுணன் திரை விமர்சனம் - Nibunan movie review
 • பிரிவுவகை:
  க்ரைம் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  அர்ஜுன், பிரசன்னா, வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், வைபவ்⁠⁠⁠⁠
 • இயக்குனர்:
  அருண் வைத்தியநாதன்
 • தயாரிப்பாளர்:
  அருண் வைத்தியநாதன்
 • எழுதியவர்:
  அருண் வைத்தியநாதன்
 • பாடல்கள்:
  நவீன்

தமிழ் சினிமாவின் மிக ஸ்டைலிஷான நடிகர்களில் முக்கியமான ஒருவர் 'ஆக்ஷன் கிங்' அர்ஜுன். 50 வயதிற்கும் மேலாகியும் கூட, இன்றும் தனது உடம்பை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வெகு சில நடிகர்களில் ஒருவர் அர்ஜுன். ஒரு பத்து ஆண்டுகளுக்கு முன், தமிழில் 'ஜேம்ஸ் பாண்ட்' பாணியிலான படம் ஒன்றை எடுக்க ஏதும் திட்டமிருந்திருந்தால், சந்தேகமேயின்றி இவரது பெயரும் பரிசீலிக்கப்பட்டிருக்கும். இருப்பினும் தனது 35 வருட கேரியரில் 'சங்கர் குரு', 'ஜென்டில்மேன்', 'ஜெய் ஹிந்த்', 'குருதிப் புனல்', 'முதல்வன்', 'ஏழுமலை', 'கிரி', 'மருதமலை', 'கடல்' என இவரது திறமைகளை சரியாக பயன்படுத்தி வெளிவந்த திரைப்படங்கள் விரல்விட்டு எண்ணிடக்கூடிய அளவிலேயே இருந்தன என்பதும் மறுக்க முடியாத உண்மை. 2009இல் வெளியான 'அச்சமுண்டு அச்சமுண்டு!' திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அறிமுக இயக்குனர் அருண் வைத்தியநாதன் இயக்கத்தில் தனது 150வது படமான 'நிபுணன்' திரைப்படத்தை நடித்து முடித்திருக்கிறார் அர்ஜுன். 'நிபுணன்' படத்தின் டிரைலரைப் பார்க்கையில், ஒரு சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக இருக்குமென்கிற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அந்த எதிர்பார்ப்பை 'நிபுணன்' பூர்த்தி செய்திருக்கிறதா, அர்ஜுனின் சிறந்த படங்களின் வரிசையில் இத்திரைப்படம் சேருமா? தெரிந்து கொள்ள, தொடர்ந்து படியுங்கள்!

தன் கண்முன்னே பணியில் இருக்கும்பொழுதே காவல் அதிகாரியான தன் தந்தை ரவுடிகளால் வெட்டிக்கொள்வதைப் பார்த்து மனதளவில் பாதிக்கப்படும் ரஞ்சித் காளிதாஸ் (அர்ஜுன்), தானும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக வேண்டும் என முடிவெடுக்கிறார். தனது தந்தை ஏன் கொல்லப்பட்டார் என தெரியாத அவர், தன்னிடம் வரும் எந்த போலீஸ் கேஸிலுமே தீர்வு காணப்படாமலோ குற்றவாளி கண்டுபிடிக்கப்படாமலோ இருக்கக்கூடாது என கடுமையாக உழைக்கிறார். குற்றம் நடந்த இடத்தில் கிடைக்கும் மிகச்சிறிய தடயங்களையும் வைத்தே, மிகப்பெரிய வழக்குகளின் முடிச்சுகளை எல்லாம் அவிழ்க்கும் ரஞ்சித் காவல்துறையின் மிகச்சிறந்த குற்றவியல் நிபுணராக பல வழக்குகளை கண்டுபிடிக்கிறார். இந்நிலையில், சென்னை நகரத்தையே பதைபதைக்க வைக்கும் 'சீரியல் கில்லர்' ஒருவனைப் பிடிக்க அவர் முயற்சிக்கையில், தன் உடல்நலக்குறைவு உட்பட பல பிரச்சினைகளையும் மரணம் வரையிலான அச்சுறுத்தல்களையும் சந்திக்க நேரிடுகிறது. தன் துணை அதிகாரிகள் ஜோசப் (பிரசன்னா) மற்றும் வந்தனா (வரலஷ்மி சரத்குமார்) உதவியோடு, அந்த சீரியல் கில்லரை ரஞ்சித்தால் பிடிக்க முடிந்ததா இல்லையா என்பதே 'நிபுணன்' திரைப்படத்தின் கதைச் சுருக்கம். 

தேவையில்லாத பாடல் காட்சிகள், கதைக்கு சம்பந்தமில்லாத நகைச்சுவை பகுதி என படத்தை அதன் போக்கிலிருந்து விலக்கக்கூடிய எந்த வித கமர்ஷியல் சமரசங்களுக்கும் இடம்கொடுக்காமல் நேர்மையாக தன் படத்தை எடுக்க முயற்சித்திருக்கும் இயக்குனர் அருண் வைத்தியநாதனுக்கு வாழ்த்துக்கள். ஆனால், கதையிலோ அவை காட்சிகளாக சொல்லப்பட்ட விதத்திலோ, எதிலுமே புதிதாக பெரிதும் எதுவுமில்லை என்பதே 'நிபுணன்' திரைப்படத்தின் மைனஸ். இரண்டாம் பாதியில் வரும் ஒரு சின்ன பிளாஷ்பேக்கைத் தவிர, திரைக்கதையோ படத்தில் வரும் பிரதான திருப்புமுனை காட்சிகளோ பார்வையாளர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றே சொல்ல வேண்டும். ஒரு தசாப்தத்திற்கு முன் வந்த கமர்ஷியல் படங்களைப் போல, முதல் காட்சியில் 'உங்க டீம்ல இருக்குறவங்கள்லயே, பெஸ்ட் ஆளு எனக்கு வேணும்' என உயர் அதிகாரி கேட்க, அதைத் தொடர்ந்து வரும் ஹீரோவின் அறிமுகக் காட்சியில் தொடங்கி பல இடங்களில் கிளிஷேக்கள் நிரம்பிக் கிடக்கிறது. 

'யுத்தம் செய்', 'துருவங்கள் 16', 'குற்றம் 23' என கடந்த 6, 7 ஆண்டுகளில் வெளியான சிறந்த க்ரைம் த்ரில்லர் படங்களின் திரைக்கதை யுக்திகளை ஒட்டியே இப்படத்தின் திரைக்கதை பாணியும் அமைந்திருந்தாலும் கூட, 'நிபுணன்' திரைப்படத்தில் ரசிகர்களை பதற்றமாக்கும் அளவிற்கு வெகு சில காட்சிகளே உள்ளன. ஆட்டுத் தலை, மாட்டுத் தலை, 4840-4864, ரத்தக் கறை படிந்த சட்டை என வேண்டுமென்றே கொலையாளி விட்டுச்செல்லும் சில துப்புக்களை வைத்து அவனைக் கண்டுபிடிப்பதின் மூலம் ஆங்காங்கே ரசிகர்களை சுவாரஸ்யப்படுத்தினாலும் கூட, முதற்பாதியின் வேகமும் ஹீரோவின் குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளும் அயர்ச்சியையே ஏற்படுத்துகிறது. இடைவேளை முடிந்து இரண்டாம் பாதியில் வேகமெடுக்கும் திரைக்கதை, பிளாஷ்பேக்கிற்கு பின் மீண்டும் தடுமாறத் தொடங்கிவிடுகிறது. த்ரில்லர் படங்களுக்கே உரிய வகையிலான ரொம்பவே சாதாரணமான  கிளைமாக்ஸுடன் படத்தை முடித்திருப்பதும், மற்றொரு ஏமாற்றம். பொதுவாக ஹீரோவுக்கு இருக்கும் குறையை பின்னணியாகக் கொண்டு நகரும் ஆக்ஷன் த்ரில்லர்களில் ('வெற்றி விழா', 'கஜினி', 'அபூர்வ சகோதரர்கள்' போன்ற படங்களில்) அந்த உடல்நலக் குறையைக் கொண்டே திரைக்கதையை சுவாரஸ்யப்படுத்த எக்கச்சக்க வாய்ப்புகள் இருக்கும். ஆனால், அது இப்படத்தில் சரியாக பயன்படுத்தப்படாமல் போனதால், கதைக்கு தேவையில்லாத ஒரு விஷயம் போல் ஆகிவிட்டது என்பதே உண்மை.     

முதன்மை கதாபாத்திரமான ரஞ்சித் காளிதாஸ் தவிர, மற்ற அனைத்து பாத்திரப் படைப்புகளுமே வலுவின்றி காணப்படுவதும் அவை மீதான நம்பகத்தன்மையையும் படத்திலுள்ள பிரச்சினையின் தீவிரத்தையும் குறைத்துவிடுகிறது. எந்நேரமும் ஜோக்கடித்துக் கொண்டேயிருக்கும் ஜோவின் எல்லா ஜோக்கிற்கும் ரஞ்சித் சிரிக்கிறார், நமக்குத்தான் சிரிப்பு வருவதில்லை. அதனாலேயே என்னவோ, கேஸில் கிடைத்த தடயங்கள் பற்றி ஜோசப் சீரியஸாக பேசும்பொழுது கூட சுவாரஸ்யமாக தோன்றவில்லை. ஜேக் தி ரிப்பர், கொலையாளி வேதியியலில் அனுபவம் உள்ளவன் என்பதைப் பற்றியெல்லாம் பேசுவதைத் தாண்டி வந்தனாவுக்கும் பெரிதளவில் முக்கியத்துவம் இல்லை. ஒரு கட்டி முடிக்கப்படாத அடுக்குமாடியில் வரும் ஆரம்ப சண்டைக்காட்சியில் தொடங்கி க்ளைமாக்ஸில் பணயக் கைதி ஆக மாட்டிக்கொள்வது வரை, பல காட்சிகளில் ரஞ்சித்தை பலசாலியாக காட்டுவதற்காக இவர்கள் இருவரும் டம்மியாக காட்டப்பட்டதால் ஹீரோவைத் தவிர வேறு எந்த கதாபாத்திரமுமே சோபிக்க வாய்ப்பின்றி போய்விடுகிறது. 

'நிபுணன்' படத்தின் பிளஸ் பாய்ண்ட்களை பட்டியலிட வேண்டுமெனில், அவற்றில் முதன்மையானது 'ஆக்ஷன் கிங்' அர்ஜுனின் நடிப்பு. ஆக்ஷன் காட்சிகள் மட்டுமின்றி காதல் காட்சிகளிலும் ரொம்பவே துறுதுறுவென இருக்கும் அர்ஜுனை, நீண்ட நாட்களுக்குப் பிறகு பார்க்க முடிந்தது. மொத்த படத்தையும் தன் தோள்களில் சுமக்கும் பொறுப்பிருப்பதை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார். 'இது வரைக்கும் லாஸ்ட் வார்னிங், லாஸ்ட் வார்னிங்ன்னு 10 தடவைக்கு மேல சொல்லிட்டான்' என கிண்டலிப்பது, தன் உடல்நிலை மற்றும் குடும்பம் குறித்தும் கவலைப்படுவது, எவ்வளவு முயற்சித்தும் கொலையாளியைக் கண்டுபிடிக்க முடியவில்லையே என ஓய்வற்று கிடப்பது என தன் பங்கினை நிறைவாக செய்துள்ளார் அர்ஜுன். 'லூசியா' கன்னட படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய ஸ்ருதி ஹரிஹரனில் தொடங்கி வரலஷ்மி சரத்குமார், பிரசன்னா வரை எல்லா துணை நடிகர்களுமே நடிப்பதற்கு பெரிய ஸ்கோப் ஏதுமில்லாத வேடங்களில் வந்து போகிறார்கள். அர்ஜுனின் தம்பியாக வரும் வைபவ் இன்னும் ரொம்ப பாவம், எந்தவித முக்கியத்துவமே இல்லாத ஒரு பாத்திரத்தில் தோன்றியுள்ளார். ஒரு சில காட்சிகளைத் தவிர, அரவிந்த் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு கூட ரொம்ப சாதாரணமாகவே தோன்றியது. நவீன் அவர்களின் இசையில் பாடல்கள் சுமாராக இருந்தாலும் கூட, பின்னணி இசை இப்படத்தின் முதுகெலும்பைப் போல மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது  என்றே சொல்லவேண்டும் (ஆங்காங்கே, ரொம்பவே சத்தமாய் இருப்பதை மட்டும் குறைத்திருக்கலாம்). 
 
மொத்தத்தில், பெரிதாக போரடிக்கும் காட்சிகள் எதுவும் இல்லாவிடினும் கூட, ரசிகர்களை கட்டிப்போடும் வகையிலோ கவரும் வகையிலோ அதிக காட்சிகளும் இல்லாத ஒரு சுமாரான த்ரில்லர் 'நிபுணன்'.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்