முகப்புவிமர்சனம்

`ரௌடி சி.எம்' விஜய் தேவரகொண்டாவின் அரசியல் ஆட்டம் எப்படி இருக்கிறது? - `நோட்டா' விமர்சனம்' - Nota Movie Review

  | Saturday, October 06, 2018

Rating:

`ரௌடி சி.எம்' விஜய் தேவரகொண்டாவின் அரசியல் ஆட்டம் எப்படி இருக்கிறது? - `நோட்டா' விமர்சனம்' - Nota Movie Review
 • பிரிவுவகை:
  பொலிடிகல் ட்ராமா
 • நடிகர்கள்:
  விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன், சஞ்சனா நடராஜன், எம்.எஸ்.பாஸ்கர்
 • இயக்குனர்:
  ஆனந்த் ஷங்கர்
 • தயாரிப்பாளர்:
  ஞானவேல்ராஜா
 • எழுதியவர்:
  ஆனந்த் ஷங்கர், ஷான் கருப்புசாமி
 • பாடல்கள்:
  சாம் சி.எஸ்

தற்காலிக முதலமைச்சராகும் ஒருவனை, சுற்றி நடக்கும் பிரச்சனைகளும், சூழ்ச்சிகளும்தான் களம்.

பார்ட்டி பாய் வருண் (விஜய் தேவரகொண்டா), வீடியோ கேம்ஸ் நிறுவனம் துவங்கும் எண்ணத்தில் உள்ள கேர்ஃப்ரீ இளைஞர். நண்பர்களுடன் தன் பிறந்தநாள் பார்டியை கொண்டாடிவிட்டு வரும் வழியில் போலீஸால் சுற்றி வளைக்கப்படுகிறார். அவரது தந்தையும், தமிழ்நாட்டின் முதலமைச்சருமான வினோதன் (நாசர்) ஊழல் வழக்கு ஒன்றில் சிக்கிக் கொள்ள, அந்தப் பதவி தற்காலிகமாக விஜய் தேவாரகொண்டவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அப்பாவுக்கு பயந்தும், கொஞ்ச நாள்தானே என்கிற தைரியத்திலும் 'வருண் ஆகிய நான்' என உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார். வழக்கில் சிக்கல் வந்து நாசருக்கு சிறை தண்டனை வழங்கப்படுகிறது. சீக்கிரமே இதிலிருந்து வெளியே வந்து தன் வீடியோ கேம் தொழிலுக்கு நகரலாம் என நினைத்த விஜய் தேவரகொண்டா முதலமைச்சராக தொடர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. பிறகு நடக்கும் பிரச்சனைகளை எல்லாம் ஒரு முதலமைச்சராக எப்படி சமாளிக்கிறார்? அவருக்கு வரும் தொல்லைகளை தருவது யார்? போன்றவற்றை சொல்கிறது படம்.

ஷான் கருப்புசாமி எழுதிய `வெட்டாடம்' நாவலை ஒரு பரபர படமாக சொல்ல நினைத்திருக்கிறார் இயக்குநர் ஆனந்த் ஷங்கர். முதல் காட்சியில் வருணின் கார் சுற்றிவளைக்கப்படும் போதே அதற்கான உற்சாகத்தையும் கொடுக்கிறார். ஆனால், முழுபடமும் அந்த உற்சாகத்தை தக்க வைக்கிறதா என்பது கேள்விக்குறியாக நிற்கிறது.

தெலுங்கு ஸ்டாராகவே தமிழ் ரசிகர்களை ஈர்த்திருந்த விஜய்க்கு இது தமிழில் நல்ல என்ட்ரி. போதை, பெண்கள், வீடியோ கேம் என விளையாட்டுத் தனமோ, பொறுப்பான சி.எம் ஆக அதிரடி முடிவுகளை எடுக்கும் காட்சியோ, ரௌடி சி.எம் ஆக மிரட்டும் காட்சியோ எல்லாவற்றிலும் பக்காவாகப் பொருந்துகிறார். பத்திரிகையாளர் மகேந்திரனாக வரும் சத்யராஜ் நடிப்பும் கச்சிதம். மிக அசட்டையாக முகத்தை துடைத்துக் கொண்டே பேசுவது, தன் காதல் கதையை உருக்கமாக சொல்வது எல்லாமே அவருக்கு அவ்வளவு அழகாக வருகிறது. நடிகனாக இருந்து முதலமைச்சரான வினோதன் கதாபாத்திரம் நாசருக்கு. சாதுர்யமாக மீடியாவின் கேள்விகளுக்கு பதில் சொல்வதும், பிறகு அந்த மருத்துவமனைக் காட்சியும் அவரின் நடிப்பைப் பற்றி சொல்ல நல்ல உதாரணங்கள். அந்த மேக்கப் மட்டும் மிக செயற்கைத் தனமாகத் தெரிவது உறுத்தல். இவ்வளவு உழைச்சும் நாம முன்னற முடியலையே என பொறுமும் கதாபாத்திரத்தில் எம்.எஸ்.பாஸ்கர். வழக்கம் போல் மிக கச்சிதமாக நடித்திருக்கிறார். சஞ்சனா நடராஜனின் நடிப்பும் குறிப்பிட்டு சொல்லும்படியான பிரமாதம். ஆனால் மெஹரீனுக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒரு ரோல்.

படத்தை முடிந்த வரை விறுவிறுவென நகர்த்திவிட வேண்டும் என நினைத்து அதை முடிந்த வரை செய்தும் இருப்பது பாராட்டுக்குரியது. தேவை இல்லாத காதல் காட்சிகள், காமெடி ட்ராக், டூயட் பாடல் என எல்லாவற்றையும் விலக்கி வைத்து கதையில் மட்டும் கவனம் செலுத்தியிருப்பது மிகப் பெரிய ஆறுதல். நிகழ்கால அரசியலையும், அரசியல்வாதிகளின் கடந்த கால செய்கைகளையும் நினைவுபடுத்தும் பல காட்சிகள் படம் நெடுகிலும் உள்ளது. ஸ்டிக்கர், ரிசார்ட், எம்எல்.ஏ பேரம், குனிந்து வளைந்து கும்பிடு போடுவது, சாமியாரை நம்பி முடிவெடுக்கும் அரசியல்வாதிகள் என நிறைய. ஆனால், அதை எந்தவிதத்திலும் படத்திற்கான சுவாரஸ்யமாகப் பயன்படுத்தாமல் காட்சிகளின் நீளத்தை கூட்ட மட்டும் பயன்படுத்தியிருப்பது மைனஸ். இடைவேளையின் போது, "இனி ரௌடி சி.எம் வருவான்" என ஆவேசமாக சொல்கிறார் விஜய். ஆனால் அதற்கு பின்பான கதை எங்கெங்கோ செல்வதும், அதில் லாஜிக்கும் இல்லாததும் மிகப்பெரிய சறுக்கல்.

சாம் சி.எஸ் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கடத்துகிறது. ஆனால், பாடல்கள் கொஞ்சம் கூட கவரவில்லை. சந்தானக் கிருஷ்ணன் ரவிச்சந்திரன் ஒளிப்பதிவும் மூர்த்தியின் கலை இயக்கமும் படத்திற்கு பலம். கலவரக் காட்சியோ, சட்டமன்றமோ காண்பிக்கும் எல்லாவற்றையும் நிஜம் போல் நம்ப வைக்க நிறைய உழைத்திருக்கிறது. டெக்னிகலாக படம் வலுவாக இருந்தாலும், எந்த அழுத்தமும் இல்லாமல் பயணிக்கும் திரைக்கதை சாதாரணமான படமாக மாற்றிவிடுகிறது.

இன்னுமும் கள அரசியலை புரிந்து, அழுத்தமான கதைக்களம் அமைத்து சரியாக சொல்லியிருந்தால் `நோட்டா'வுக்கு ஒட்டு விழுந்திருக்கும்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்