முகப்புவிமர்சனம்

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம் - Oru Nalla Naal Paathu Solren Movie Review

  | Friday, February 02, 2018

Rating:

ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் விமர்சனம் - Oru Nalla Naal Paathu Solren Movie Review
 • பிரிவுவகை:
  காமெடி ட்ராமா
 • நடிகர்கள்:
  விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹாரிகா கோனிடெல்லா, காயத்ரி, டேனியல் ஆனி போப், ரமேஷ் திலக், ராஜ்குமார்
 • இயக்குனர்:
  ஆறுமுககுமார்
 • தயாரிப்பாளர்:
  அம்மே நாராயணா என்டர்டெய்ன்மெண்ட், 7Cs என்டர்டெய்ன்மெண்ட்
 • எழுதியவர்:
  ஆறுமுககுமார்
 • பாடல்கள்:
  ஜஸ்டின் பிரபாகரன்

கர்னூலின் எமலிங்கபுரத்திலிருக்கும் காட்டுக்குள், தன் கூட்டத்தினருடன் வசித்து வருகிறார் எமன் (விஜய் சேதுபதி). அந்தக் கூட்டத்தினரின் ஒரே தொழில் திருடுவது. அதிலும் அடிதடியில் ஈடுபடக்கூடாது, கொலை செய்யக் கூடாது, பெண்கள் - குழந்ததைகளை மிரட்டக் கூடாது, அரசியல் பண்ணக்கூடாது, கஷ்டப்பட்டு நேர்மையாக உழைத்துத்தான் திருடவேண்டும் என்கிற கொள்கையோடு திருடுகிறார்கள். இந்தக் கூட்டத்தினருக்கு குறி சொல்லும் எமரோசம்மா (விஜி சந்திரசேகர்) விஜய் சேதுபதிதான் திருடச் செல்ல வேண்டும் எனக் குறி சொல்ல, உதவிக்குப் புருஷோத்தமன் (ரமேஷ் திலக்) மற்றும் நரசிம்மனுடன் (ராஜ் குமார்) காட்டிலிருந்து கிளம்புகிறார். ஊர் ஊராக திருடிக் கொண்டிருக்கும் போது, ஒரு வீட்டில் சௌமியாவின் (நிஹாரிகா) புகைப்படத்தைப் பார்த்ததும், திருட வந்த ப்ளானை மாற்றி நிஹாரிகாவைக் கடத்த ஸ்கெட்ச் போடுகிறார் விஜய் சேதுபதி. நிஹாரிகா யார், விஜய் சேதுபதி யார், கௌதம் கார்த்திக் இந்தக் கதைக்குள் எப்படி நுழைகிறார்? எதற்காக திருட வந்தவர்கள் கடத்தல் திட்டம் போடுகிறார்கள்? போன்ற கேள்விகளுக்கு ஒரு நல்ல சீன் பார்த்து பதில் சொல்லுகிறது படம்.

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக், நிஹாரிகா இந்த மூன்று பேரை மையமாக வைத்தே நகர்கிறது கதை. அதற்கு ஏற்றது போல மூவரின் நடிப்பும் சிறப்பு. எப்போதும் போல அசால்டாக வந்து அசத்துகிறார் விஜய் சேதுபதி. ராஜ்குமார் செய்யும் தொல்லைகளை எரிச்சலுடன் எதிர்கொள்வது, நிஹாரிகாவைப் பார்த்து அசட்டு சிரிப்பு சிரிப்பது, கௌதம் கார்த்திக்கை டீல் செய்வது என முழுக்க முழுக்க காமெடியில் கவர்கிறார். துடுக்குத் தனமாக ஏதாவது செய்வது, வம்பு வந்தால் டேனியலைக் கோர்த்துவிட்டு தப்பிப்பது என கௌதமின் காமெடிகளும் சிரிக்க வைக்கிறது. நிஹாரிகா தமிழில் நல்ல அறிமுகம். தன்னை சுற்றி என்ன நடக்கிறது எனப் புரியாமல் குழம்புவதும், தப்பிக்கத் திணறுவதுமாய் கொடுக்கப்பட்ட வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார். விஜய் சேதுபதியின் உதவியாளர்களாக வரும் ரமேஷ் திலக், ராஜ்குமார், கௌதம் கார்த்திக் நண்பனாக வரும் டேனியல் ஆனி போப், விஜய் சேதுபதியை ரகசியமாக காதலிக்கும் காயத்ரி ஆகியோரின் நடிப்பும் படத்துக்கு பலம். குறிப்பாக விஜய் சேதுபதியை டார்ச்சர் செய்யும் ராஜ்குமார், கௌதம் கார்த்திக்கால் டார்ச்சராகும் டேனியல் ஆனி போப் இருவரின் காமெடி காட்சிகளும் பட்டாசு.

காட்டுக்குள்ளே ஒரு கூட்டம், அங்கு செய்யப்பட முன்று சத்தியங்கள் அதனால் ஏற்படும் விளைவுகள் என நம்பகத்தன்மை மிகவும் குறையும் ஆபத்து இருந்தாலும், அதை காமெடியை வைத்தே சரி கட்டியிருக்கிறார் இயக்குநர் ஆறுமுககுமார். அதுதான் படத்தில் மைனஸும் கூட, ஊரையே ஒளித்தும், இடம் மாற்றியும் வைத்திருக்கும் கூட்டத்தினர், கடத்தலுக்கு சொல்லப்படும் காரணம், குறும்புத்தனமான கௌதம் கார்த்திக் மீது நிஹாரிக்காவிற்கு காதல் வருவது இப்படிப் படத்தில் சில பிரச்சனைகள் உண்டு. ஆனால், அந்தக் குறைகளை எல்லாம் காமெடிகள் மூலம் மறக்கடிக்க வைக்கிறார் இயக்குநர். மிக எளிமையான கதாபாத்திரங்கள், எளிமையான கதை என்பதால் ஒவ்வொன்றையும் விளக்கமாகக் காட்ட வைத்திருக்கும் சில காட்சிகள் அலுப்பு தருக்கிறது. அதனாலேயே படத்தின் நீளம் பெரிய பிரச்சனையாகிறது.

காட்டுக்குள்ளே ஒரு மினி கிராமம், எமன் சிலை, நாற்காலி என அங்கிருக்கும் ஒவ்வொரு பொருளிலும் கலை இயக்குநர் ஏ.கே.முத்து ரசனையான உழைப்பு தெரிகிறது. நிஜமாகவே அந்த இடத்துக்குள் உலவி வந்த உணர்வைத் தருகிறது ஸ்ரீ சரவணின் ஒளிப்பதிவு. ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்களை விட பின்னணி இசை கவர்கிறது. டிரெய்லரில் வரும் ராமன், ராவணன் உதாரணம் படத்தில் குப்பன், சுப்பனாக சென்சார் செய்யப்பட்டிருக்கிறது. அது இல்லாமல் இருந்தாலும் படத்தில் எந்த பாதிப்பும் இருந்திருக்காது. அதுபோன்ற அவசியமற்ற காட்சிகளைக் குறைத்து ட்ரிம் செய்திருக்கலாம். சில காமெடிகள் அர்த்தமற்றதாய் இருப்பதால், படத்தின் தன்மை நீர்த்துப் போகிறது. கூடவே சில காட்சிகள், கதையை விட்டு விலகுவதால், ஒழுங்கே இல்லாமல் நகர்கிறது திரைக்கதை. அதை இன்னும் சுவாரஸ்யமாக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், எந்த லாஜிக்கும் வேண்டாம், ஜாலியாக சிரித்து வர வேண்டும் என நினைப்பவர்களுக்கு கண்டிப்பாக இந்தப் படம் சிறப்பான பொழுதுபோக்கைத் தரும்.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்