முகப்புவிமர்சனம்

ரஜினி தி ரிட்டர்ன்ஸ்.- பேட்ட விமர்சனம் - Petta Movie Review

  | Friday, January 11, 2019

Rating:

ரஜினி தி ரிட்டர்ன்ஸ்.- பேட்ட விமர்சனம் - Petta Movie Review
 • பிரிவுவகை:
  ஆக்‌ஷன்/கமர்ஷியல்
 • நடிகர்கள்:
  ரஜினிகாந்த், சிம்ரன், விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, சனத் ரெட்டி, மேகா ஆகாஷ்
 • இயக்குனர்:
  கார்த்திக் சுப்புராஜ்
 • தயாரிப்பாளர்:
  சன் பிக்சர்ஸ்
 • எழுதியவர்:
  கார்த்திக் சுப்புராஜ்
 • பாடல்கள்:
  அனிருத்

ஆக்‌ஷன்,காமெடி, காதல்,ஸ்டைல்,அதிரடி, வேட்டை என தனித்தனியாக ரஜினியை பார்க்க விரும்பும் நமக்கு,  காளி, பொல்லாதவன், முத்து, அருணாச்சலம், பாட்ஷா என மொத்த பேக்கேஜாக ரஜினியை இறக்கி இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ்.

சுருக்கமாக சொன்னால், தொண்ணூறுகளில் நாம் பார்த்து கொண்டாடிய ஒரு கலைஞனை மீண்டும் நிச்சயமாக பேட்டையில் பார்க்க முடியும்.

மிகவும் ஆக்ரோஷமான சண்டை காட்சிகளில் கூட ரஜினியால் மட்டும்தான் ஸ்டைலாக சண்டைப் போட முடியும்.  அதுதான் ரஜினியின் ஸ்பெஷாலிட்டி. 

மேலும் படிக்க -பேட்ட’ கொண்டாட்டத்தில் நடந்த சுவாரஸ்யம்

ஸ்டைல், பஞ்ச், நகைச்சுவை மற்றும் ரொமான்ஸ் என தன் நடிப்பால் மாஸ் காட்டி வந்த ரஜினியை சில ஆண்டுகளாக பார்க்கமுடியாமல் போனதால், அவரின் ரசிகர் பட்டாளம் பெரும் ஏக்கத்திற்கு உள்ளானது.  

பாட்ஷா படத்தில் ஒரு காட்சியில் மருத்துவர் ஒருவர் குறிப்பிடுவார் "நாடி நரம்பெல்லாம் கோபமும்,ரத்த வெறியும் ஊறிப் போன ஒருவனால் மட்டும்தான் இந்த மாதிரி அடிக்க முடியும்" என்பார்.   அதேபோல் நாடி நரம்பெல்லாம் ரஜினி வெறி ஏறிப் போன ஒருவனால் மட்டும் தான் இப்படி ஒரு படத்தை எடுக்க முடியும். கார்த்திக் சுப்புராஜ் பல முறை, தான் ஒரு ரஜினி ரசிகன் என குறிப்பிட்டிருக்கிறார். பேட்ட படத்தில் அவர் ரஜினியை எந்தளவிற்கு வெறிக்கொண்டு ரசித்திருக்கிறார் என்பதை பார்க்க முடியுகிறது.

ரஜினியின் அத்தனை படங்களையும் பார்த்து ரசித்து, ரஜினியை ரஜினியாகவே திரையில் ஏற்றி இருக்கிறார் கார்த்திக்.  அவருக்கு வாழ்த்துகள்.

அமைதியான ஒரு மாலை வேளையில் ஊட்டி மலைகள் சூழ்ந்த ஒரு விடுதியில் பெரும் கலவரம் நடந்து முடிந்தது போல் தொடங்குகிறது படம்.

பூட்டியிருக்கும் ஒரு அறைக்குள் மரண சத்தத்தோடு சிலர் கத்திக் கொண்டிருக்கின்றனர்.  மிருகங்களை வேட்டையாடும் வேடன் போல் இருள் சூழ்ந்திருக்கும் மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் வந்து போகிறது அந்த முகம்.  அதிரடி சண்டைக் காட்சியில் ரஜினியின் மாஸ் எண்ட்ரி, விசில் சத்தத்தால் திரையரங்கை அதிர வைக்கிறது.

சண்டை போட்டுக்கொண்டிருக்கும் ரஜினியை பின்னாலிருந்து ஒருவன் தாக்க ரஜினி மயங்கி விழுகிறார். தொலைபேசியில் யாருக்கோ அவன் தகவல் கொடுக்கிறான் “ஹாஸ்டல் வார்டன் வந்து எல்லாரையும் அடிச்சு தூக்கி சாப்டுட்டான். ஒன்னும் பிரச்சனை இல்லை .முடிச்சிட்டேன். தூக்கிட்டு வந்துடுறேன்” என பேசிக் கொண்டிருக்கும்போதே நெற்றியில் ரத்தம் வழிய சண்டைக்கு என்றே படைக்கப்பட்ட முகமாய் மிரட்டுகிறார் ரஜினி.

யார் இந்த ஹாஸ்டல் வார்டன் இந்த ஹாஸ்டல் வார்டனை அடிக்க வந்தவர்கள் யார். ஒரு ஹாஸ்டல் வார்டனை ஏன் இத்தனை பேர் அடிக்க வர வேண்டும் என்பதுதான் படத்தின் கதை.

ராகிங் செய்வதில் இரண்டாம் இடத்தில் இருக்கும் ஊட்டியில் இயங்கும் கல்லூரிக்கு ஹாஸ்டல் வார்டனாக மினிஸ்டர் சிபாரிசில் கல்லூரி விடுதிக்கு காளி(ரஜினி) வருகிறார். தில்லுமுல்லு திரைப்படத்தில் இருக்கும் குறும்பும் துடிப்பும் துறுதுறுப்பும் மாறாமல் அப்படியே இருக்கிறது காளியின் எண்ட்ரீ....கல்லூரிக்கு வேலைக்கு வரும்போது தனது உதவியாளரிடம் தரமான சம்பவம்,  இனிமேல் தான் பார்க்க போகிறாய் இந்த காளியோட ஆட்டத்தை என்று சொல்லும் போது அரங்கமே அதிர்கிறது.

கல்லூரி இருக்கும் ஊருக்குள்ளே ஒரு பெரிய மனிதர் இருக்கிறார் அவர்தான் கல்லூரிக்கு கேண்டீன் காண்ட்ராக்ட் எடுத்து இருப்பவர். அவருடைய மகன் பாபி சிம்ஹா இந்த கல்லூரியில் சீனியராக வலம் வருகிறார். அவர் அந்த கல்லூரியில் தன் பின்னால் 10 பேரை சேர்த்துக்கொண்டு கல்லூரி மாணவர்களை ராகிங் செய்து அராஜகம் செய்கிறார்.

மேலும் படிக்க -“இந்த கணத்துக்காகத்தான் காத்திருந்தோம்!”: கார்த்திக் சுப்பராஜ்

அவரை திருத்தி மாணவர்களை தன் அன்பால் தனது ஸ்டைலில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறார் ரஜினி. பாபி சிம்ஹாவின் அப்பாவுக்கும் ரஜினிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.  அந்த பிரச்சனையில் பாபி சிம்ஹா வீட்டிற்கு செல்லும் ரஜினி அவருடைய ஸ்டைலில் மிரட்டிவிட்டு எச்சரிக்கை விடுத்து வருகிறார். இதற்கிடையில் கல்லூரியில் சனத் ரெட்டியும், மேகா ஆகாஷும் காதலிக்கிறார்கள்.  அவர்களுடைய காதலுக்கு உதவி செய்ய புறப்படுகிறார் காளி.

மேகா ஆகாஷின் தாய் தான் சிம்ரன். சிம்ரனை சந்திக்கும் காளி காதலிக்கத் தொடங்குகிறார். ஆனால் ஒரு இடத்திலும் தன் காதலை அவர் வெளிப்படுத்தவில்லை. இருவருக்கும் இருக்கும் கெமிஸ்ட்ரி ரசிக்க வைக்கிறது. வயசானாலும் உங்க ஸ்டைலும் அழகும் இன்னும் அப்படியே இருக்கு என்கிற வசனம் ரஜினிக்கு மட்டுமல்ல சிம்ரனுக்கும் இந்த படத்தில் பொருந்தியிருக்கிறது. சிம்ரன், தான் வரும் ஒரு சில காட்சிகளிலே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தன்பக்கம் ஈர்க்கிறார்.

அவமானப்பட்ட பாபி சிம்ஹா தன்னுடைய ஆட்களை அழைத்துக் கொண்டு ரஜினியை தாக்க விடுதிக்குள்  நுழைகிறார்.  அதேசமயம், வடநாட்டை‌ சேர்ந்த அடியாட்கள் சிலரும் சம்பந்தமில்லாமல் நுழைகிறார்கள். பாபி சிம்ஹா உட்பட அனைவரையும் தாக்குகிறார்கள்.

வடநாட்டை சேர்ந்த அடியாட்கள் குறிப்பாக சனத் ரெட்டியை கொல்ல முயற்சி செய்கிறார்கள். பாபி சிம்ஹா உட்பட சனத்தையும் காளி காப்பாற்றுகிறார்.

யார் இந்த வட இந்தியர்கள் தேவையில்லாமல் ஏன் இந்த நேரத்தில் இறங்க வேண்டும். அதுவும் ஏன் அந்த சனத் ரெட்டியை குறிவைத்து தாக்க வேண்டும், அவர்களுக்கும் காளிக்கும் என்ன தொடர்பு, அந்த மாணவனுக்கும்  காளிக்கும் என்ன தொடர்பு, என பல கேள்விகளை எழுப்புகிறது படம்.

கல்லூரி விடுதிக்குள் நுழையும் காளி முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு எதிராக நடக்கும் ராகிங்கை தடுத்து மாணவர்களை ஒழுங்கு படுத்துகிறார்.

அப்போது காளி மாணவர்களைப் பார்த்து கண்ணீர் விட்டு ஒரு வசனம் பேசுகிறார்.  புதிதாக வருகிறவர்களை தடுப்பதும், ஒடுக்குவதுமான அரசியல்  இங்கிருந்துதான்  தொடங்குகிறது என்று கூறுகிறார் (இந்த வசனம் அவருடைய அரசியல் எண்ட்ரீ பற்றி தானோ!). 

அரசியலில் இறங்கப் போகிறேன் என்று அவர் அறிவித்த போது,  அவருக்கு எதிராக சொல்லப்பட்ட கருத்துக்களை நினைவுபடுத்தியது இம்மாதிரியான வசனங்கள்.  

தனது சொந்த ஊர் பேட்டையில், தன்னுடைய நண்பன் சசிகுமார் ஒரு இஸ்லாமியர், மாற்று மதத்தில் இருந்து காதல் திருமணம் செய்து கொள்கிறார். அதுவும் அவரின் எதிரிவீட்டில் இருக்கும் பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.

காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பெண்வீட்டு தரப்பில் அண்ணன்கள் ரஜினியின் பாதுகாப்பில் இருக்கும் ஜோடிகளை தீர்த்துக்கட்ட நினைக்கிறார்கள். ரஜினி அதை முறியடித்து எல்லோரையும் தீர்த்துக்கட்டுகிறார். அதில் ஒருவரை அசால்டாக பிழைத்து போகட்டும் என்று விட்டுவிடுகிறார். அப்படி விட்டவர்தான் பெரும் எதிரியாக மாறி  ரஜினியின் குடும்பத்தையே அழிக்கிறார்,அவரை எப்படி ரஜினி அழிக்கிறார் என்பதுதான் மீதிக்கதை. வில்லனாக வரும் விஜய் சேதுபதி,  அய்யோ! பின்னிட்டாரு. அதுவும் கலாச்சார பாதுகாவலராக, வட நாட்டு ரவுடியாக தற்போதைய அரசியலையும் அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர்.

பழைய பகையை எப்படி தீர்க்கிறார் என்கிற பழைய காண்செப்ட்டுதான் கதை என்றாலும் எந்த இடத்திலும் சலிப்பு தட்டவில்லை  படம்.

மேலும் படிக்க - இது தான் ரஜினி படம்....

காட்சிக்கு காட்சி இது ரஜினி படம் என்பதை உறுதி செய்திருக்கிறார் இயக்குனர். நவாசுதீன் சித்திக், விஜய் சேதுபதி இருவருமே வில்லன்களாக மிரட்டியிருக்கிறார்கள். ரஜினியின் நண்பனான  சசிகுமார் பக்கா மதுரைக்காரனாகவே மாறியிருக்கிறார்.   சிம்ரன், த்ரிஷா ஆகிய இருவருமே ரஜினிக்கு ஜோடியாக முதல்முறை திரையில் தோன்றினாலும், இருவருமே ரஜினிக்கு சிறந்த ஜோடிதான் என்பதை நிரூபித்திருக்கிறார்கள்.

ஒவ்வொரு காட்சியையும் பார்த்து பார்த்து செதுக்கியிருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ் . ரஜினியின் ஆட்டம், பேச்சு, நடை, உடை, ஸ்டைல், வசனம், சிரிப்பு என அனைத்திலும் முழு ரஜினியிசத்தை உணர வைக்கிறார். அனைத்து கதாபாத்திரங்களையுமே சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார். அனிருத் இசையில் பாடல்கள் தியேட்டரை அதிர வைக்கிறது. பின்னணி இசையின் மூலம் பழைய ரஜினியை உணர வைத்து விட்டார்கள். மொத்தத்தில் பேட்ட,  ரஜினி தி ரிட்டர்ன்ஸ் என்று சொன்னால் மிகையாகாது. 

 

மேலும் படிக்க - 'விஸ்வாசம்' திரைப்பட விமர்சனம்

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்