விளம்பரம்
முகப்புவிமர்சனம்

புரியாத புதிர் திரைப்பட விமர்சனம் - Puriyaatha Puthir Movie Review

  | Saturday, September 02, 2017

Rating:

புரியாத புதிர் திரைப்பட விமர்சனம் - Puriyaatha Puthir Movie Review
 • பிரிவுவகை:
  சைக்காலஜிக்கல் த்ரில்லர்
 • நடிகர்கள்:
  விஜய் சேதுபதி , காயத்ரி
 • இயக்குனர்:
  ரஞ்ஜித் ஜெயக்கொடி
 • தயாரிப்பாளர்:
  ஜே. சதீஷ் குமார்
 • எழுதியவர்:
  ரஞ்சித் ஜெயகோடி
 • பாடல்கள்:
  சாம்.C.S

2013ஆம் ஆண்டில் ‘சூது கவ்வும்’ மற்றும் ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படங்களை முடித்த கையோடு, அறிமுக இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் ‘மெல்லிசை’ படத்தில் நடிக்க ஒப்பந்தமானார் நடிகர் விஜய் சேதுபதி. அவருக்கு ஜோடியாக நடிக்க நடிகை காயத்ரி ஒப்பந்தமான பின், டிசம்பர் 2013இல் தொடங்கிய படப்பிடிப்பு முழுவீச்சாக ஒரே ஷெட்யூலில் 50 சதவிகிதம் முடிக்கப்பட்டது. அதன் பின்னர், நிதி நெருக்கடி உள்ளிட்ட சில காரணங்களால் படப்பிடிப்பு தாமதானது. இரண்டு ஆண்டுகள் கழித்து, ‘JSK ஃபிலிம் கார்ப்பரேஷன்’ சதீஷ் குமார் இந்த படத்தை வாங்கினார். பின்னர், படத்தின் தலைப்பும் ‘புரியாத புதிர்’ என மாற்றப்பட்டது. 4 ஆண்டுகளாக தயாரிப்பில் இருந்த ‘புரியாத புதிர்’, பல தடைகளுக்குப் பிறகு இந்த வெள்ளிக்கிழமையன்று திரைகளைத் தொட்டிருக்கிறது.

இசைக் கருவிகளை விற்கும் ஒரு கடையில் பணிபுரிந்து கொண்டே இசையமைப்பாளர் ஆக முயற்சிக்கும் கதிர் (விஜய் சேதுபதி) மற்றும் வயலின் டீச்சராக பணிபுரியும் மீரா (காயத்ரி) ஆகிய இருவரும் ஒருவரை ஒருவர் காதலிக்கிறார்கள். காதல் கை கூடி, வாழ்க்கை சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் கதிர் மற்றும் மீராவின் வாழ்க்கையில் பல பிரச்சினைகள் ஏற்படுகிறது. யாரோ திட்டமிட்டு தங்களை தொடர்ச்சியாக தாக்குவதை உணரும் கதிர், தன்னை சுற்றி நடக்கும் மர்மங்களுக்கு பதில் தேட முயல்கையில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. தன்னை சுற்றியுள்ள அனைவரையும் ஆபத்து நெருங்குகையில், கதிர் என்ன செய்கிறான்? இந்த புதிர்களுக்கெல்லாம் என்ன முடிவு என்பதே ‘புரியாத புதிர்’ படத்தின் கதை.

தினந்தோறும் எங்கோ நடந்து கொண்டிருக்கும் சைபர் கிரைம் குற்றங்களின் சங்கிலியில் எப்படி நாம் ஒவ்வொருவருமே பங்காற்றிக் கொண்டிருக்கிறோம் என்பதை சொல்ல முயற்சிக்கிறது ‘புரியாத புதிர்’. சில மாதங்களுக்கு முன் வெளியான அறிமுக இயக்குனர் ஜெயபிரகாஷ் ராதாகிருஷ்ணனின் ‘லென்ஸ்’ திரைப்படத்திலும், கிட்டத்தட்ட இதே போன்ற ஒரு கதையில் இந்த கருத்து முகத்திலடித்தாற்போல் சொல்லப்பட்டிருந்தது.

ஒரு சாதாரண காதல் திரைப்படமாக தொடங்கும் ‘புரியாத புதிர்’ படத்தின் முதல் 20 நிமிடங்கள் அயர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக, நாம் பல முறை பார்த்து சலித்த ரொமான்ஸ் காட்சிகளுடனே நகர்கிறது. ‘வேணாம் மீரா, சொல்லாத... சொல்லாம இருக்கிறதுதான், அழகா இருக்கு’ என கதிர் சொல்லும் காட்சியைப் போல, ஆங்காங்கே ஒரு சில காட்சிகள் ரசிக்கும்படி அமைந்துள்ளது. அதன் பின்னர், ஒரு சில சஸ்பென்ஸ் விஷயங்கள் கதைக்குள் நுழைந்ததும் படம் வேகமெடுக்கிறது. ஒவ்வொரு முறையும் கதிரின் அலைபேசி அதிரும்பொழுது, பார்வையாளர்களாகிய நம் மனமும் அதிர்கிறது. கதிரின் பயத்தை, நமக்கும் கடத்தி செல்கின்றன அக்காட்சிகள். பாடல்கள் நன்றாக இருந்தாலும் கூட, இரண்டு மணி நேரம் மட்டுமே ஓடும் திரைப்படத்தில் நான்கு-ஐந்து பாடல்கள் இடம்பெறுவது சலிப்பை ஏற்படுத்துகிறது. இரண்டாம் பாதியின் வேகமும், சுவாரஸ்யக் குறைவும் ஒரு கட்டத்திற்கு மேல் பொறுமையை சோதிக்கிறது. படம் முழுக்க ஒரு அபார்ட்மெண்ட்டிற்குள்ளேயே, 2 கதாபாத்திரங்களுடன் மட்டுமே நகர்வதும் அதற்கு ஒரு காரணமாகிறது. கடைசி அரை மணிநேரத்தில் வரும் ஃபிளாஷ்பேக்கும், கிளைமாக்ஸுமே படத்தைக் காப்பாற்றுகிறது; இயக்குனர் சொல்ல வந்த கருத்தை தெளிவாக எடுத்துரைப்பது, அந்த இறுதி நிமிடங்களே. கடைசியாக, மிருதுளா மீராவிடம் பேசும் வசனங்களும் சுருக்கென நெஞ்சில் தைக்கிறது.

‘புரியாத புதிர்’ திரைப்படத்தின் மிகப்பெரிய குறை – ஒரு சைக்காலஜிக்கல் திரில்லருக்கு உரிய அம்சங்களை ரொம்ப குறைவாகவே வைத்திருந்ததும், எளிதில் கணிக்கக்கூடிய பெரிதாக எந்த திருப்பங்களும் இல்லாத திரைக்கதையுமே. அதையெல்லாம் தாண்டி, படத்தைக் காப்பாற்றுவது விஜய் சேதுபதியின் நடிப்பும், டெக்னிக்கல் அம்சங்களும், படத்தின் கடைசி அரைமணி நேரமுமே!

எப்பொழுதும் போலவே, தனது கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் விஜய் சேதுபதி. 3, 4 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட படம் என்பதால், அப்போதைய விஜய் சேதுபதியைப் பார்ப்பது இன்னும் புதிதாக தெரிகிறது. எப்பொழுதும் சிரித்துக்கொண்டே சந்தோஷமாக சுற்றுவது, ‘சுவாரஸ்யமா வாழ்றது மட்டும், வாழ்க்கை இல்ல... நிம்மதியாவும் வாழணும்... எதுக்காக செத்தான்னு அவங்க அப்பா அம்மா கேட்டா என்னன்னு சொல்லுவ?’ என தன் நண்பனைத் திட்டுவது, காதலை சொல்ல வேண்டாமென காயத்ரியிடம் சொல்வது, தன்னை யார் மிரட்டுவது என தெரியாமல் கண்ணில் படுவோர் மீதெல்லாம் ஆத்திரமடைவது, ஒவ்வொரு முறையும் பயத்துடனே அலைபேசியை பார்ப்பது, காயத்ரியிடம் என்ன சொல்வதென தெரியாமல் தவிப்பது, ‘வேணாம், சொன்னா நீ தாங்கமாட்ட’ என காயத்ரியிடம் சொல்வது, கிளைமாக்ஸில் கெஞ்சி அழுவது என ஒவ்வொரு காட்சியிலுமே ஸ்கோர் செய்கிறார் விஜய் சேதுபதி. காயத்ரி ஒரு சில காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருந்தாலும், சில முக்கிய காட்சிகளில் ஒரே மாதிரியான முகபாவங்களையே வெளிப்படுத்துகிறார். கால் மணி நேரத்திற்கும் குறைவான காட்சிகளில் வந்தாலும் கூட, தனது நடிப்பால் மிருதுளா என்கிற கதாபாத்திரத்தை ரசிகர்கள் மறக்காதவண்ணம் செய்துவிடுகிறார் மஹிமா நம்பியார்.

க்ளைமாக்ஸ் மற்றும் இரண்டாம் பாதியில் வரும் ஃபிளாஷ்பேக் போலவே மொத்த படமும் ரசிகர்கள் மீது சரியான தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தால், இயக்குனர் ரஞ்சித் ஜெயக்கொடி சொல்ல வந்த கருத்து ரசிகர்களுக்கு இன்னும் சரியாக சென்று சேர்ந்திருக்கும்; ‘புரியாத புதிர்’ இன்னும் சுவாரஸ்யமான ஒரு புதிராகவும் அமைந்திருக்கும்!

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்