முகப்புவிமர்சனம்

ரத்தம் தெறிக்காமல், குரூரம் இல்லாமல் ஒரு சைக்கோ த்ரில்லர்! - `ராட்சசன்' விமர்சனம்'- "Ratsasan" movie review

  | Saturday, October 06, 2018

Rating:

ரத்தம் தெறிக்காமல், குரூரம் இல்லாமல் ஒரு சைக்கோ த்ரில்லர்! - `ராட்சசன்' விமர்சனம்'-
 • பிரிவுவகை:
  சைக்கோ த்ரில்லர்
 • நடிகர்கள்:
  விஷ்ணு விஷால், அமலாபால், ராமதாஸ், வினோதினி, சூசன், ராதாரவி, காளிவெங்கட்
 • இயக்குனர்:
  ராம்குமார்
 • தயாரிப்பாளர்:
  டில்லி பாபு
 • எழுதியவர்:
  ராம்குமார்
 • பாடல்கள்:
  ஜிப்ரான்

சிக்னேசர் டைப்பில் கொலைகள் செய்யும் சைக்கோ கொலைகாரனைப் பிடிக்கும் போலீஸின் துரத்தல்தான் `ராட்சசன்'

சினிமா இயக்கும் கனவில் சைக்கோ த்ரில்லர் கதையுடன் காத்திருக்கிறார் அருண் (விஷ்ணு விஷால்). குடும்ப சூழல், தொடர்ந்து நிராகரிக்கும் தயாரிப்பாளர்களால் விரக்தியாகி, இறந்து போன தன் தந்தையின் எஸ்.ஐ பணியில் இணைகிறார் விஷ்ணு. சேர்ந்த உடனேயே நகரத்தில் நடக்கும் பள்ளி மாணவியின் கொலை கேஸ் விஷ்ணுவின் காவல் நிலையத்திற்கு வருகிறது. சாதாரண கொலைக்கேஸ் என டீல் செய்யும் உயர் அதிகாரியிடம் இது மனநலம் பாதிக்கப்பட்ட சைக்கோ செய்யும் கொலை எனவும், இது தொடரும் எனவும் சொல்கிறார். ஆனால், ஈகோ பிரச்சனையால் அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள். மீண்டும் அதேபோல ஒரு பள்ளி மாணவி கொலை நடக்க, விசாரணையில் தீவிரமாகிறார் விஷ்ணு. யார் அந்தக் கொலையாளி? எதற்காக இதை செய்கிறான்? அவன் மாட்டுகிறானா? என்பதை எல்லாம் சீட் எட்ஜ் த்ரில்லராக சொல்ல முயற்சிக்கிறார்கள்.

'முண்டாசுப்பட்டி' யில் காமெடியில் அசத்திய இயக்குநரா இது? என ஆச்சர்யம் தரும்படி சுவாரஸ்யமான த்ரில்லர் ஒன்றுடன் ராட்சசனாக வந்திருக்கிறார் ராம்குமார். அதை முடிந்தவரை பரபரப்பாகவும் சொல்லியிருக்கிறார்.

படத்தில் முக்கியப் பாத்திரம் விஷ்ணு விஷால்தான். அதை மிகச் சரியாக உணர்ந்து நடித்திருக்கிறார். தயாரிப்பாளர்களிடம் கதை சொல்லி சோர்ந்து போவதும், போலீஸாக எப்படியாவது கொலைகாரனைப் பிடித்துவிட வேண்டும் எனப் படபடப்பதுமாக எந்த வித அலட்டலும் இல்லாமல் தன் கதாபாத்திரத்தின் வலுவை சரியாகப் புரிந்து வெளிப்படுத்துகிறார். அடுத்ததாக கவனிக்க வைத்தது ராமதாஸ். `முண்டாசுப்பட்டி'யில் இருந்து அவர் மீது தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கும் காமெடியன் முத்திரையை இதில் அழித்து, ஒரு குணச்சித்திர நடிகராகவும் மனதில் ஆழப்பதிகிறார். குறிப்பாக கலங்கிப் போய் உடைந்து அழுகும் ஒருகாட்சி ஒன்றே போதும் அவரின் நடிப்பைக் குறிப்பிட்டுச் சொல்ல. அமலா பாலுக்கு மிக அதிக காட்சிகள் இல்லை என்றாலும், சில முக்கியமான காட்சிகளில் அவரது பயம் கதைக்குத் தேவையாக இருக்கிறது. அதை சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார். வினோதினி, ராமதாஸ் மகளாக நடித்திருக்கும் அபிராமி, ராதா ரவி, கஜராஜ், சூசன், காளிவெங்கட் ஆகியோரும் தங்கள் பங்களிப்பை நன்றாக செய்திருக்கிறார்கள்.

எளிமையாகத் துவங்கி பரபரப்பாக ஒரு ஆட்டம் செல்லத் தேவையான எல்லாம் வைத்து திரைக்கதை எழுதியிருக்கிறார் இயக்குநர். இடைவேளைக்கு முன்பான காட்சிகள் எல்லாம் முடிந்தவரை பரபரப்பாக நகர்த்தப்பட்டிருக்கிறது, சுவாரஸ்யத்திற்கும் எந்தக் குறையும் இல்லை. ஆனால், அதற்குப் பிறகான காட்சிகள் கொஞ்சம் மெதுவாக ஆரம்பிக்கிறது. அதுவரை வழக்கத்தை மீறிய ஒரு சைக்கோ த்ரில்லர் படமாக நகரும் படம், கொலைகாரனுக்கு என சொல்லப்படும் முன்கதையால் வழக்கமான ஒரு படமாக மாறிவிடுகிறது. கொலையாளி தெரிந்த பின்னும் எந்த சுவாரஸ்யத் திருப்பமும் இல்லாமல் க்ளைமாக்ஸ் வரை வளவளவென காட்சிகளை வைத்திருந்ததும் கொஞ்சம் பொறுமையை சோதிப்பதாகவே இருந்தது.

ஜிப்ரானின் பின்னணி இசையில் பதற்றத்தைக் கூட்ட நிறையவே உதவுகிறது. கொலை நடந்து முடிந்ததும் வரும் காட்சிகளாகட்டும், அந்த கிஃப்ட் பாக்ஸ் காட்டப்படுவதாகட்டும் எல்லாவற்றிலும் ஒரு பயம் தொற்றிக்கொள்ள உதவுகிறது இசை. பி.வி.ஷங்கரின் ஒளிப்பதிவும் ஒரு த்ரில்லர் படத்திற்கு உண்டான பரபரப்பை மிகவும் தரமான காட்சிகள் மூலம் அளித்திருக்கிறது. ஷான் லோகேஷ் படத்தொகுப்பு படத்தின் வேகத்தை முடிந்த அளவு கூட்ட உதவி இருக்கிறது. விக்கியின் அந்த சீட்டுக் கட்டு ஃபைட்டும் சிறப்பு.

மிகக் குரூரமாக எந்தக் காட்சியும் வைக்காமலேயே, ஒரு ப்ராப்பர் த்ரில்லருக்கான எல்லாவற்றையும் வைத்து, அதை எட்ஜ் ஆஃப் த சீட் டைப்பில் சொல்லியிருப்பது, கூடவே பெண்களின் பாதுகாப்பு பற்றிய ஒரு எச்சரிக்கையையும் சொல்லியிருப்பது என நிச்சயம் வரவேற்கப்பட வேண்டிய ஒரு முயற்சிதான் `ராட்சசன்'.

விளம்பரம்
விளம்பரம்
விளம்பரம்