முகப்புவிமர்சனம்

சக்க போடு போடு ராஜா திரைப்பட விமர்சனம் - Sakka Podu Podu Raja Movie Review

  | Saturday, December 23, 2017

Rating:

சக்க போடு போடு ராஜா திரைப்பட விமர்சனம் - Sakka Podu Podu Raja Movie Review
 • பிரிவுவகை:
  ஆக்ஷன் காமெடி
 • நடிகர்கள்:
  சந்தானம், வைபவி, விவேக், சம்பத் ராஜ், வி டி வி கணேஷ்
 • இயக்குனர்:
  சேதுராமன்
 • தயாரிப்பாளர்:
  வி டி வி கணேஷ்
 • எழுதியவர்:
  சேதுராமன்
 • பாடல்கள்:
  சிலம்பரசன்

ஒரு காலத்தில், வருடத்தில் 365 நாளும் பிஸியாக, ரஜினி விஜய் அஜீத் சூர்யா என எல்லா முன்னணி நடிகர்களுடனும் நடித்துக் கொண்டு கோடிகளில் உட்சபட்ச சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சந்தானம், ‘இனி ஹீரோவாக மட்டுமே படங்களில் நடிப்பேன்’ என முடிவெடுத்தார். ஹீரோவாக நடித்த முதல் இரண்டு படங்களான ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ மற்றும் ‘இனிமே இப்படித்தான்’ இரண்டுமே எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதற்கடுத்து வெளியான ‘தில்லுக்கு துட்டு’ திரைப்படம் ஓரளவு சொல்லிக்கொள்ளும்படியான வெற்றியை பெற்றது. பல வருடங்களாக ஒரு காமெடியனாகவே பார்த்து பழகிவிட்டதாலோ என்னவோ, தமிழ் சினிமா ரசிகர்களால் சந்தானம் அவர்களை இன்னும் ஒரு ஹீரோவாக முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில், ‘சக்க போடு போடு ராஜா’ திரைப்படம் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவும் புது அவதாரம் எடுத்துள்ளார் சந்தானம். தெலுங்கு திரைப்படமான ‘லௌக்யம்’ படத்தின் ரீமேக் ஆன இத்திரைப்படத்தை இயக்கியிருப்பவர் சந்தானத்தின் நண்பர் மற்றும் உதவியாளரான சேதுராமன்.

படத்தின் தொடக்கத்தில், கஷ்டப்பட்டு தன் நண்பனின் காதலை சேர்த்து வைக்கிறார் சந்தானம். நண்பன் திருமணம் செய்த பெண்ணின் அண்ணன் ஆன ரவுடி சம்பத் தீவிரமாக தன்னை தேடி வரவே, அவரது கண்களிலிருந்து தொடர்ந்து தப்பித்து வருகிறார் சந்தானம். இந்நிலையில் தானும் ஒரு பெண்ணை பார்த்து பிடித்துப் போய் துரத்தி துரத்தி காதலிக்கையில், அந்த பெண்ணும் சம்பத்தின் தங்கைதான் என்பது தெரிய வருகிறது. இதையெல்லாம் மறைத்து, பல கோல்மால்கள் செய்து, அந்த வில்லனின் கோபத்தை குறைத்து, அவர் வீட்டுக்குள்ளேயே நுழைந்து அவரிடம் நல்ல பெயர் எடுக்க ஹீரோ செய்யும் முயற்சிகள் தான் ‘சக்க போடு போடு ராஜா’.

வில்லனின் தங்கையை ஹீரோ காதலிப்பது, இன்னொருவர் காதலுக்கு உதவப்போய் ஹீரோ மாட்டிக்கொள்வது, வில்லனின் வீட்டில் போய் ஹீரோ நடிப்பது, நல்ல பெயர் எடுப்பது எல்லாம் எங்கோ கேவ்ளிப்பட்டதைப் போல் இருக்கிறதா? தமிழ் சினிமாவில் காலம் காலமாக பல முறை அடித்து துவைக்கப்பட்ட பழங்காலக்து கதை தான். தெலுங்கு சினிமாவிலேயே ‘ரெடி’, ‘தீ’, ‘லௌக்யம்’ என கிட்டத்தட்ட 4, 5 முறை கோனா வெங்கட் என்கிற ஒரே எழுத்தாளரால் இக்கதை வெவ்வேறு படமாக எடுக்கப்பட்டுள்ளது (தமிழிலும் கூட ‘உத்தமபுத்திரன்’, ‘மிரட்டல்’ என்கிற பெயரில் அப்படங்கள் ரீமேக் ஆகியுள்ளது). ஒரேயொரு காமெடி கதாபாத்திரத்தை மட்டும் பலிகிடா ஆக்கி படத்தின் இறுதி வரை ஹீரோ இழுத்தடிப்பது, ‘பவர் ஸ்டார்’ கதாபாத்திரம் மூலம் செய்ததைப் போல சம்பந்தமே இல்லாமல் சூட்டிங் ஸ்பாட் என நினைத்து ஆர்வக்கோளாரில் நடிக்கும் பாத்திரத்தை வைத்து காமெடி செய்வது என பல விஷயங்கள் ஏற்கனவே திகட்ட திகட்ட பார்த்ததே. இந்த கதையும், காட்சிகளும் 1990களில் வந்திருந்தால் கூட நிச்சயமாக புதிதாக தெரிந்திருக்காது.

படத்தின் திரைக்கதையும் காட்சிகள் நகரும் விதமுமே கூட அநியாயத்திற்கும் பழைய ஸ்டைலில் இருக்கிறது. படம் தொடங்கியதும் ஹீரோவின் அறிமுகக் காட்சி, அதற்கு பின் ரசிகர்களைப் பார்த்து கருத்து சொல்லும் அறிமுகப் பாடல், ஹீரோயினை பார்த்ததும் காதல், அடுத்த நொடியே வெளிநாட்டில் ஒரு பாடல் காட்சி, ‘நீ என்னை லவ் பண்ற.. லவ் பண்ணாட்டி, ஒரு நாள் முழுக்க என் கூடவே டைம் ஸ்பெண்ட் பண்ணி நிரூபிச்சுக் காட்டு’ என ஹீரோ ஹீரோயினிடம் சொல்லும் பட்டப்பழைய டெம்ப்ளேட்டிலேயே சுற்றுகிறது படம். ‘சக்க போடு போடு ராஜா’ படத்தின் மிகப்பெரிய பிரச்சினையே – படத்திலுள்ள சீரியஸ் காட்சிகள் எல்லாம், ரொம்பவே காமெடியாக தெரிகிறது; காமெடி காட்சிகள் தான், ரசிகர்களை மிகவும் சீரியஸ் ஆக்கிவிட்டது என்பது தான். படத்தின் ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரம் கூட எந்தளவிற்கு முட்டாள்கள் என்றால், ஒரு சண்டைக்காட்சியில் வில்லன் ஆட்கள் துரத்தும்பொழுது பக்கத்திலேயே கார் இருந்தாலும் கூட அதில் ஏறி தப்பிக்காமல், மெதுவாக ஓடிப்போய் தான் தப்பிப்பார்கள்.

படத்தில் இருக்கக்கூடிய ஒரே நல்ல விஷயம் – இரண்டாம் பாதியின் கடைசி 40 நிமிடங்களில் மட்டும் ஆங்காங்கே சிரிப்பை வரவழைக்கக் கூடிய சில டைமிங் காமெடிகளும், VTV கணேஷ் மற்றும் விவேக்கின் கூட்டணி காட்சிகளுமே. ஒரு நடிகனாக பார்ப்பதற்கு அழகாக தெரிந்தாலும் கூட, இப்பொழுது வரை சந்தானம் அவர்களை ஒரு சீரியஸ் ஹீரோவாக ஏற்றுக்கொள்ள முடியாத அளவிற்கே இருக்கிறார் என்பதே கசப்பான உண்மை. ‘பஞ்ச் டயலாக் பேசிட்டு அடிக்குறதெல்லாம் பழைய ஸ்டைல், பஞ்ச் டயலாக் பேசறவனை அடிக்குறதுதான் புது ஸ்டைல்’ என்பது போன்ற கர்ணகொடூரமான வசனத்தை எல்லாம் பேசிவிட்டு, மக்கள் ரசிப்பார்கள் கைத்தட்டுவார்கள் விசிலடிப்பார்கள் என அவர் எதிர்பார்ப்பாராயின் அது இந்த ஜென்மத்தில் நடக்காது. ஒரு காலத்தில் ‘லொள்ளு சபா’ நிகழ்ச்சியில் பிரபல ஹீரோக்களின் படங்களில் வரும் கிண்டலுக்குரிய விஷயங்களை எல்லாம் இப்பொழுது தானே செய்ய ஆரம்பித்துவிட்டோம் என சந்தானம் உணரவே இல்லையே? இல்லை, அதைப் பற்றியெல்லாம் கவலையே படவில்லையா? சிம்பு அவர்களின் இசையில், கடைசி இரண்டு பாடல்கள் கேட்கும்படி நன்றாக இருந்தது; ‘காதல் தேவதை தேவதை தேவதை தேவ தேவ தேவ தேவதை வந்தாளே’ என்கிற ஒரு பாடல் கம்போஸ் செய்யப்பட்ட விதத்தை கேட்கையில் பாடகருக்கோ இல்லை இசையமைப்பாளருக்கோ அஜீரண கோளாறு இருந்திருக்குமோ என்கிற சந்தேகம் எழாமல் இல்லை. படத்தின் பின்னணி இசை மிகப்பெரிய மைனஸ், பெரும்பாலான காட்சிகளில் ஒரு டி‌வி மெகா தொடர் பார்க்கும் உணர்வையே தந்தது.

சந்தானம் அவர்கள் பாடல் காட்சிகளிலும் சண்டைக்காட்சிகளிலும் தன் குறைகளை திருத்திக்கொள்ள ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார் என தெரிகிறது; ஆனால், திரையில் அதை ரொம்பவே செயற்கைத்தனமாக அளிப்பதால் எதையுமே ரசிக்க முடியாமல் போய்விடுகிறது. அது மட்டுமில்லாமல், படம் முழுக்க சந்தானம் தொட்டாலே இரும்பு கம்பியும் வளையும் அளவிற்கு ஓவர் பில்டப் செய்திருப்பதும் தாங்க முடியவில்லை. எல்லா காட்சியிலும் சந்தானம் ஆகாயத்திலேயே இருக்கிறார், கயிற்றைக் கட்டி அங்குமிங்கும் காற்றிலேயே பறக்கவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த எல்லா குறைகளுக்கும் மகுடம் சேர்க்கும் விதமாய் ‘சக்கப் போடு போடு ராஜா’வின் மிகப்பெரிய மைனஸ் – இப்படத்தின் பெண் கதாபாத்திரங்கள் நடத்தப்பட்டிருக்கும் விதம். தன்னிடம் பொய் சொன்ன ஹீரோவிடம் மன்னிப்பு கேட்க சொல்லும் ஹீரோயினை ‘பளார்’ என அறைகிறார் ஹீரோ; அறைந்தது மட்டுமின்றி 'இதோ பாரு... பட்டுத்துணி, பஞ்சு, பொண்ணு - இதெல்லாம் எப்போவுமே சாஃப்ட்டா தான் இருக்கணும்... உன்னை மாதிரி திமிர் பிடிச்சு இருக்கக்கூடாது' என ஒரு அதி அற்புதமான தத்துவத்தையும் சொல்லிவிட்டுப் போகிறார். ஹீரோயின், விவேக்கின் மனைவியாக வரும் சஞ்சனா சிங் முதல் ஒரு சில வினாடிகளே வந்து போகும் ஒரு வேலைக்காரி கதாபாத்திரம் வரை படத்தில் எல்லா பெண் கதாபாத்திரங்களுமே கவர்ச்சியாக மட்டுமோ அல்லது ஆபாச காமெடிக்கோ மட்டுமோ பயன்படுத்தப்பட்டிருக்கிறார்கள். ‘டூ பீஸ் போட்டுட்டு வந்து அவனை பீஸ் பீஸாக்குறேன் பார்’ என ஹீரோவை தன்னை பார்க்க வைக்கும் முயற்சியில் இறங்கும் கதாநாயகி, மனநலம் குன்றியவரைப் போல மட்டுமே தெரிந்தார்; ஹீரோயினுக்கு ஹீரோ மேல் காதல் வந்துவிட்டதை காட்ட, ஹீரோவை நினைத்துக்கொண்டே பாத்ரூமில் இருந்து டவலுடனே வெளியே வந்து கட்டிலில் குதிப்பதன் மூலம் ரசிகர்களுக்கு காட்டி திரைமொழியில் பல புதுமைகளையும் செய்துள்ளார் இயக்குனர். அரை மணி நேரத்திற்கு ஒரு முறை ‘என் தங்கச்சி ஓடிப்போயிட்டா, என் தங்கச்சி வீட்டுக்கு வந்திடுச்சு, என் பொண்டாட்டி அவ இல்ல இவ, அவன் பொண்டாட்டி இவ இல்ல அவ’ என்பது போன்ற விஷயங்களை வைத்தே சிரிக்க வைக்கவும் ஆற்றொணா முயற்சித்து இருக்கிறார்கள். ஆமாம், பின்ன என்ன ‘காமெடி படம்’ என்றாகிவிட்ட பின், சிரிக்க வைக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் தானே? அது தானே, நம் சினிமாவின் நியதி.
 

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்