முகப்புவிமர்சனம்

யாரை எல்லாம் எதிர்க்கிறார் இந்த கார்ப்பரேட் க்ரிமினல்? - 'சர்கார்' விமர்சனம் -Sarkar Movie Review

  | Tuesday, November 06, 2018

Rating:

யாரை எல்லாம் எதிர்க்கிறார் இந்த கார்ப்பரேட் க்ரிமினல்? - 'சர்கார்' விமர்சனம் -Sarkar Movie Review
 • பிரிவுவகை:
  பொலிடிகல் ட்ராமா
 • நடிகர்கள்:
  விஜய், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி, பழ.கருப்பையா, ராதாரவி, யோகிபாபு
 • இயக்குனர்:
  ஏ.ஆர். முருகதாஸ்
 • தயாரிப்பாளர்:
  சன் பிக்சர்ஸ்
 • எழுதியவர்:
  ஏ.ஆர்.முருகதாஸ், ஜெயமோகன்
 • பாடல்கள்:
  ஏ.ஆர்.ரஹ்மான்

பொலிட்டிகல் க்ரிமினல்ஸை அழிக்கும் கார்ப்பரேட் க்ரிமினலின் கதை

ஜிஎல் நிறுவன சிஇஓ சுந்தர் ராமசாமி (விஜய்). எந்த நாட்டுக்கு சென்றாலும் போட்டி கம்பெனிகளை காலி செய்துவிட்டுதான் அங்கிருந்து கிளம்புவார். அவர் இந்தியா வருவதைக் கேள்விப்பட்டு லீடிங் கம்பெனிகள் நகம் கடிக்கிறது. ஆனால், இந்தியா இறங்கியதும் "நான் எந்தக் கம்பெனியையும் வாங்க வரவில்லை. என்னோட ஓட்டை பதிவு செய்ய வந்திருக்கிறேன்" என்று பேட்டி தந்துவிட்டு வாக்களிக்க செல்கிறார். ஆனால் அவரது ஓட்டு கள்ள ஓட்டாக ஏற்கெனவே பதிவாகியதை அறிந்ததும் கொதித்துப் போகிறார். தன்னுடைய ஓட்டு பதிவு செய்தபின்தான் தொகுதி முடிவுகளை அறிவிக்க வேண்டும் என நீதிமன்றம் சென்று, வெற்றியும் பெறுகிறார். நான்கு நாட்களில் அவரது வாக்கு பதிவு செய்யப்பட வேண்டும் என தீர்ப்பாகிறது. இதனால் தேர்தலில் வெற்றி பெறும் நிலையில் இருக்கும் மாசிலாமணியின் (பழ.கருப்பையா) அ.இ.ம.மு.க கட்சிக்கு சில பாதிப்புகள் உண்டாகிறது. ஒருகட்டத்தில் மொத்த தமிழகத்துக்கும் தேர்தலை மறுபடி நடத்ததும் நிலை ஏற்படுகிறது. இந்த அரசியல் ஆட்டத்தில் பொலிட்டிகல் க்ரிமினல்களை ஜெயித்தாரா கார்ப்பரேட் க்ரிமினல்? என்பதுதான் மீதிக்கதை.

விஜய் என்ற அதிரடி ஹீரோவுக்கு பக்காவான ஆடுகளம். ஆக்ஷன் மற்றும் மாஸை ஏற்றியிருக்கிறார்கள். லைட்டாய் நரைமுடி, காதில் கடுக்கன், கூல் ட்ரெஸ்ஸிங் என ஸ்டைலிஷ் தளபதியாய் அமர்களப்படுத்தியிருக்கிறார். பிரச்சனைகளை டீல் செய்யும் போது நிதானமாக, மக்களிடம் பேசும் போது காட்டும் ஆவேசம் என கமர்ஷியல் ஹீரோவின் அத்தனை அம்சங்களும் இருக்கிறது. ஆனால் இந்த பேகேஜில் விஜயின் வழக்கமான ஹூமர் மட்டும் மிஸ்ஸானது சின்ன குறை. கீர்த்தி சுரேஷுக்கு பெரிய பங்கு இல்லை. அழகாக வந்து ஒரு பாடலுக்கு மட்டும் ஆடிவிட்டு செல்கிறார். அரசியல்வாதியாக பழ.கருப்பையா, அவரது வலதுகையாக ராதாரவி இருவரும் சிறப்பான பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். வரலட்சுமி கதாபாத்திரமும், அவரது நடிப்பும் கவனிக்கும் படி இருந்தது. யோகிபாபுவுக்கும் குட்டியூண்டு ரோல்தான். நடிகர்கள் அனைவருமே தங்கள் பங்கை நிறைவாகவே செய்திருக்கிறார்கள்.

கள்ள ஓட்டு துவங்கி கமலின் ட்வீட் வரை பலவற்றையும் படத்துக்குள் சுவாரஸ்யமாக தொகுத்திருக்கிறார்கள். பழ.கருப்பையா மலையாளியாக இருப்பது, இடுப்பு வரை குனிந்து வணக்கம் வைக்கும் படி எல்லாரும் மிரளணும் என்பது, ஓட்டுக்கு பணம், மிக்ஸி க்ரைண்டர் என முகத்தைப் பதிய வைக்கும்படி ஸ்டிக்கர் ஒட்டிய இலவசங்கள், மருத்துவமனை, தெருவுக்கு கட்சி தலைவர்களின் பெயர்கள், மருத்துவமனை வீடியோ, 'செத்து போயிட்டா எல்லாரும் தியாகி ஆயிடறாங்களே' என்பது என கடந்தகால, சமகால அரசியல் சிக்கல் எல்லாவற்றையும் படத்திற்குள் பயன்படுத்தியிருந்த விதம் சிறப்பு.

"யாரும் சாகக்கூடாதுன்னு நினைக்கறவங்கதான் பிரச்சனைய தீர்பான். இங்க சாகக் கூடாதுனு நினைக்கறவன் ஃப்யர் இஞ்சினதான் நிறுத்துவான்", இங்க ஒரு பிரச்சனைக்குத் தீர்வு, இன்னொரு பிரச்சினைதான். அதைபத்தி பேசிட்டு பழைய பிரச்சனைய மறந்திடுவோம்" என எடுத்துக் கொண்ட களத்துக்கு தகுந்தபடி முருகதாஸ் - ஜெயமோகன் வசனங்கள் கவனிக்கிறது. படத்தின் திரைக்கதையில் பெரிய தொய்வு ஏதும் இல்லாமல் நகர்த்தியிருந்த விதமும் நன்றாக இருந்தது. இரண்டே முக்கால் மணிநேர படமும் பரபரப்பாக நகர்கிறது.

அந்தப் பத்திரிகையாளர் கொல்லப்பட்டது ராதாரவி கண்முன்புதான். ஆனால், அந்த பிரச்சனை நடக்கும்போது அவர் எதுவுமே தெரியாதது போல் இருப்பது ஏன்? கார்ப்பரேட் கம்பெனிகள் ஆரம்பத்தில் பதறுவது ஓகே. அடிக்கடி டிவியில் அவரைப் பார்த்து 'கத்துக்கணும்யா... இவங்கிட்டயிருந்து கத்துக்கணும்' ரேஞ்சுக்கு அடிக்கடி வருவது ஏன்? எனப் பல கேள்விகள் சுற்றியடிக்கதான் செய்கிறது. படமும் நாயகனின் சூப்பர் ஹீரோ சாகசங்களாக நகர்வதால், இயல்பிலிருந்து விலகியிருப்பதாக ஒரு உணர்வும் ஏற்படுகிறது. சுவாரஸ்யமான சினாப்சிஸ் என்றாலும், பவுண்ட் ஸ்க்ரிப்ட் ஏனோ முழுமை இல்லாதது போன்ற உணர்வையே தருகிறது.

ரஹ்மானின் பாடல்களில் ஒருவிரல் புரட்சி, தீம் மியூசிக்காக வரும் டாப்புடக்கர் ஆகியவை கவனிக்க வைக்கிறது. ஆனால், பின்னணி இசை படத்துக்குத் தேவையானதை கொடுத்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் கிரீஸ் கங்காதரன் ஒளிப்பதிவில் பிரமாதப்படுத்தியிருக்கிறார். ராம் - லக்ஷ்மன் சண்டைக்காட்சிகள் படத்தின் ஹைலைட்களில் முதன்மையானது. ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு படத்தினை முடிந்தவரை விறுவிறுப்பாகக் கொடுத்திருக்கிறது.

ட்ரேட் மார்க்காக பல மொமண்ட்களை இதிலும் கொண்டுவந்திருக்கிறார் முருகதாஸ். ஆனால், இன்னும் கச்சுதமாகக் கொடுத்திருந்தால் 'ஐயம் வெயிட்டிங்' ட்ரையாலஜி அட்டகாச சரவெடியாய் வெடித்திருக்கும். ஆனால், உறுதியாக விஜய் ரசிகர்களுக்கு ரகளை விருந்து இந்த 'சர்கார்'.

  விளம்பரம்
  விளம்பரம்
  விளம்பரம்